Friday, 1 November 2019

பின்வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்...


    






பின் வரிசையில்
எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்.

கோ. மன்றவாணன்


பாழடைந்த நூலகக் கட்டடங்களில் பள்ளிக்கூடக் கொட்டகைகளில், யாருடைய மாடியிலோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் என்பது   காலங்காலமாய் இருந்துவந்த நிலைமை. அன்று இலக்கியம் பேசியவர்கள் ஏழைகளாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவில் செலவு குறைவாகவும் சீர்மை நிறைவாகவும் நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார்கள். தம் கைப்பணத்தைச் செலவழித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் நன்றிக்குரியவர்கள்தாம். அவர்கள்தாமே இலக்கியத்தையும் தமிழையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு வழங்கியவர்கள்.

இப்போது இலக்கிய விழாக்கள் மிகுபொருள் செலவில் நடத்தப்படுகின்றன. இவற்றிலும் நூல் வெளியீட்டு விழாக்களுக்குக் கூடுதல் கவுரவம். இருப்பினும் எளிமையாக விழா நடத்தும் அமைப்புகளே தொடர்ந்து இயங்குகின்றன.

சரியோ... தவறோ... தற்காலத்தில் நூல் வெளியீட்டு விழாக்கள் செல்வச் செழிப்போடு நிகழ்கின்றன. நவ நாகரிகமாக வடிவமைக்கப்பட்ட உணவகங்களில்- குளிரும் கூடங்களில் நூற்புகழ் பேசப்படுகிறது. மிகச்சில நவீன இலக்கியச் சந்திப்புகளில் கோப்பைகள் மலர்ந்து வழிகின்றனவாம். இதுவும் இலக்கிய வளர்ச்சிதானோ?

புகழ்பெற்ற சில எழுத்தாளர்களைத் தவிர, புத்தகங்களை விற்றுப் பணம்சேர்க்க வேண்டும் என்று எந்த எழுத்தாளரும் நினைப்பதில்லை. அட்டை வடிவமைப்புக்கும் அழகான அச்சிடலுக்கும் அதிகம் பணம்செலவிட அவர்கள் தயங்குவதில்லை. புத்தக அச்சீட்டுக்கு ஆகும் செலவைவிடப் பன்மடங்கு செலவில் வெளியீட்டு விழாவை நடத்துகிறார்கள். இவ்விழாக்கள் புகழுக்காகவா புத்தகத்துக்காகவா என்று புரியாமல் போய்விடுகின்றன.

புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஆகும் செலவில் பத்துவகை புத்தகங்கள் அச்சிடலாம் என்கிறார் பதிப்பக நண்பர். விழாச்செலவைத் தவிர்த்துப் புத்தகங்களையே அன்பளிப்பாக அள்ளித் தந்துவிடலாம் என்கிறார் இன்னொரு நண்பர். ஆடம்பரத் திருமணமும் ஆடம்பர நூல்வெளியீட்டு விழாவும் தற்கவுரவம் காட்டத்தான் என்கிறார் மற்றொரு தோழர். “பணம் படைத்தவர்கள் விழா கொண்டாடுகிறார்கள். உனக்கு ஏன் பற்றி எரிகிறது” என்று என்னை நான் கேட்டுக்கொண்டேன்.

கவிஞர் ஒருவரின் கவிதைநூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பரவலாகப் புகழ்வாய்ந்த எழுத்தாளர் ஒருவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். விழாவுக்குப் பத்து நாள்கள் முன்பே புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்களாம். ஆனால் அவரோ புத்தகத்தைப் படிக்கவே இல்லை போலும். புத்தகத்தைப் பற்றிப் பேசவும் இல்லை. நூலாசிரியரைப் போற்றவும் இல்லை. அந்த எழுத்தாளர் தம் புத்தகங்களைப் பற்றியும் தம் பெருமைகளைப் பற்றியும் பேசிவிட்டுச் சென்றார். அவ்வாறு பேசியதற்காக அந்தப் பெருந்தகை பெற்றதோ பெருந்தொகை.

புத்தக வெளியீட்டு விழாக்களில் பொன்னாடை போர்த்துகிறார்கள். பொன்னாடைக்குப் பதிலாகப் புத்தகங்கள் வழங்கினால் என்ன என்று பலரைக் கேட்டிருக்கிறேன். பொன்னாடையைப் போர்த்தியபடி போட்டோவுக்குப் புன்னகைத்தால்தான் கவுரவம் என்று கருதிக்கொள்கிறார்கள். அந்தப் பொன்னாடைகள் பயன்படுத்தத் தோதானவை அல்ல. அவற்றை மடித்து வைத்து, மற்றொருவருக்குப் போர்த்துகின்றனர் என்பது இலக்கிய உலகில் சர்வ சாதாரணமப்பா.  தனக்குப் போர்த்திய பொன்னாடை எத்தனைத் தோள்மாறி வந்தது என்று எந்தப் பெருமகனாலும் கணிக்க முடியாது. சூடிய பூ சூடற்க என்பதுபோல், போர்த்திய சால்வை போர்த்தற்க என்றொரு புதுமொழி இனி உலவலாம்.
     
மதிப்புணர்வின் அடையாளமாக மனங்கவர்ந்த புத்தகங்களை வழங்குவதுதான் நூல்வெளியீட்டு விழாவுக்குப் பெருமை சேர்ப்பதாகும். புத்தக வெளியீட்டு விழாவிலேயே நூல் வழங்கும் வழக்கம் வரவில்லை என்றால் பொதுவிழாக்களில் யார் நூல்வழங்கிச் சிறப்பிப்பார்கள்?
  
திருமண விழாக்களில் மொய்வைப்பது போலவே புத்தக வெளியீட்டு விழாக்களில் எழுத்தாளர்களின் தீவிர நண்பர்கள் சிலர் பணம்கொடுத்து நூல் வாங்குவார்கள். ஆனால் அவர்கள் அதைப் படிக்க மாட்டார்கள் என்பது பரவலாகிவிட்ட புதுப்பழக்கம். நூல் வெளியீட்டு விழாவுக்கு வரும் பிரமுகர்கள், நானூறு ரூபாய்க்கு பொன்னாடை வாங்கிவந்து போர்த்திவிட்டு, நூறு ரூபாய் கொடுத்து நூல்வாங்காமல் போய்விடுகிறார்கள்.
     
பொதுநூலகத் துறை பொதுவாகப் புத்தகங்களை வாங்குவதில்லை என்ற முறையீடு இருந்தாலும், கண்டிப்பாகக் கவிதைப் புத்தகங்களை வாங்குவதில்லை. தேநீர் குடிக்கும் நேரப் பொழுதில் கவிதை நூல்களைப் படித்து முடித்துவிட முடிகிறது. பத்துப் பதினைந்து நிமிடப் பேருந்து பயணத்தில் கவிதைகளைப் புரட்டிப்போட்டுவிட முடிகிறது. நானும் கவிதை நூல்களை வாங்குவதில்லை. புத்தகச் சந்தையில் புத்தகம் வாங்குவதுபோல் நடித்துவிட்டு, அங்குள்ள கவிதைப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்துவிட்டு வந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. சில பதிப்பாளர்கள், கண்ணாடித் தாளில் புத்தகத்தைப் பொதிந்து வைத்துவிடுகிறார்கள். பணம் கொடுத்தால்தான் இந்த மாதிரியான புத்தகங்கள் திறக்கும். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்பது புத்தகக் கடைக்காரர்களுக்கு மிகவும் பொருந்தும். இதனாலோ எதனாலோ கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தும் தீராததால் வற்புறுத்தித் திணிக்கிறார்கள் நம் கவிஞர்கள்.
     
அச்சகத்தில் இருந்து வந்த புத்தகக் கட்டுகளை வீட்டில் வைக்க இடமில்லாமலும்- விற்காத புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருக்க மனம் பொறுக்காமலும்- அப்படியே தூக்கிச் சென்று எடைக்குப் போட்ட அவல நிகழ்வுகளைக் கேள்விபட்டிருக்கிறேன்.
     
கவிதைநூல் அறிமுகங்களைத் தம் நண்பர்கள் மூலம் பிற ஊர்களில் நடத்தச் செய்கிறார்கள்.  அதற்கு மறுபயனாக அந்த நண்பர்களின் நூல்களுக்குத் தங்கள் ஊர்களில் அறிமுக நிகழ்வுகள் நடத்துகிறார்கள். பண்டமாற்று முறைபோல் இவ்விழாக்கள் நடக்கின்றன. என் பெருமையை நீ பேசினால் உன் பெருமையை நான் பேசுகிறேன் என்று ஒப்பந்தம் போட்டதுபோல் இத்தகைய விழாக்கள் உள்ளன. எனினும் இதன்மூலமும் இலக்கியம் பேசப்படுகிறது; தமிழ் உயர்த்தப்படுகிறது என்பதில் எல்லையிலாத மகிழ்ச்சி.
     
சிறப்பான நூல்களை எழுதிவைத்தும், வெளியிட வசதி வாய்ப்பற்ற தரமான ஒன்றிரண்டு எழுத்தாளர்கள், இதுபோன்ற விழாக்களில் பின்வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்.

திண்ணை 27-10-2019






Wednesday, 30 October 2019

தீபம்
















எந்த
இருட்டுக்குள்ளும்
தீபம் ஏற்றி வைப்பவர்களையே
திசைகள் வரவேற்கும்

ஏற்றி வைப்பதோடு
எதுவும் முடிந்துவிடுவதில்லை

திரியை
உயர்த்திக்கொண்டே இரு

நெய்யிட்டவாறு
நீ இரு

காற்று
ஊதி அணைக்கலாம்
கவசம் அமைத்துக்
காவல் காத்திரு

இருளை
ஓடி ஓடி விரட்டுகிறது
ஒற்றை மின்மினிப் பூச்சி

கோடி கோடி மின்மினிகளின்
கூட்டம் நீ

கோ. மன்றவாணன்

Friday, 25 October 2019

யார் மனிதன்?

யார் மனிதன்?

மனிதன் யாரெனக்
கண்டறியும் கருவியொன்று இல்லையெனக்
கவலையுறுகிறான் கடவுளும்.

சிறப்பு தரிசனத்தில்
சிலை அருகில் வருபர்களை
உற்றுப் பார்த்த அவன்
உதட்டைப் பிதுக்கவும் அஞ்சுகிறான்.

கடவுளே தானெனச் சொல்லி
உண்டியலை நிரப்பிக்கொள்கிறவர்களை
ஓரமாக நின்று பார்த்து
ஒருமுறை தன்னைச் சோதித்துக்கொள்கிறான்.

அனைத்துக்கும் ஆசைப்படு என்ற
அருளுரைக்குப்
பொருளுரை எழுதுவோரின்
பூசை அறைக்குள்ளிருந்து தப்பியோடத் துடிக்கிறான்.

கீழிறங்கி வந்து தேடி அலைந்தபின்
ஒப்புக்கொள்கிறான்
“மனிதனை
இன்னும் நான் படைக்கவில்லை” என்று!


-கோ. மன்றவாணன்
























Friday, 18 October 2019

மனம் வருந்துவதா? மன்னிப்புக் கேட்பதா?
















மனம் வருந்துவதா...?
மன்னிப்புக் கேட்பதா...?

-கோ. மன்றவாணன்-

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கடவுள்கூட இல்லை என்பதுதான் உலகம் முழுவதும் தொன்றுதொட்டுவரும் கருத்துரிமை நிலை. ஆனாலும் கருத்துரைப்பதில் நனிநாகரிகம் மிளிர வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற மனப்பான்மை இருந்தால்தான் மற்றவரை மதித்து உறவாட முடியும்.

தவறான கருத்துரைத்த ஒருவர், எதிர்ப்புகள் வரும்போது “அதற்காக வருந்துகிறேன்” “என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றெல்லாம் சொல்கின்றனர். வருத்தம் தெரிவிப்பது எங்களுக்குத் தேவையில்லை. மன்னிப்புத்தான் கேட்க வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் வற்புறுத்துகிறார்கள். மன்னிப்புக் கேட்பதா வருந்துவதா என்றால்... இந்த இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல் உரை எழுதுகின்றனர் சிலர். இரண்டும் ஒன்றல்ல என்றும் வேறுவேறு என்றும் விரிவுரை எழுதுகின்றனர் சிலர்.

பொதுவாக மன்னிப்புக் கேட்பது என்பது அவமானக்குறியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் பலரும் மன்னிப்புக் கேட்க விரும்புவதில்லை. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வரும்போது, “வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று சொல்லி, மீசையில் மண்ணொட்டவில்லை என்று மிகுமகிழ்ச்சி அடைகிறார்கள்.

மன்னிப்பு என்பது கேட்டுப் பெறுவதாக இருக்கக் கூடாது. மன்னிப்புக் கேட்க  வேண்டும் என்று வற்புறுத்துவதும் போராட்டம் நடத்துவதும், தவறு செய்தவர்களைத் திருத்தாது. தங்கள் கால்களில் விழவைத்து அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்மைதான் அதில் ஓங்கி நிற்கும்.   மன்னிப்புக் கேட்டால்தான் மன்னிப்பேன் என்பது, அதிகாரத் திமிராகவே ஆணவப் போக்காகவே பார்க்கப்படும். தவறு செய்தவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எந்த அருளாளரும் அறிவுறுத்தவில்லை. அப்படியே மன்னிப்புக் கேட்பதாக இருந்தாலும்... அது, தவறுகளை உணர்ந்து, வருந்தி, யாருடைய வற்புறுத்தலுமின்றி நிகழ வேண்டும்.

மன்னிக்கும் பண்பு நம் உயிரோடு ஒட்டி இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் மன்னிக்கிறவர்கள்தாம் கடவுளின் பிரதிபலிப்புகள். கூலி கேட்டுக் கொடுப்பதாக மன்னிப்பு இருக்க முடியாது.

ஒருவரை மன்னிக்க வேண்டுமானால் அதற்குமுன் அவரிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். அன்பின் நீட்சிதான் அருள்பொழிவு. அன்பு அற்ற மனம் யாரையும் மன்னிக்காது.

தவறு செய்தவர்களைத் தாக்க நினைப்பதைவிட... உண்மை எதுவென உணரும் வாய்ப்புகளை, திருந்தும் வாய்ப்புகளை அவர்களுக்குத் தரவேண்டும்.

தவறு செய்தவர்களுக்குத் தண்டனைதான் தரவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறீர்களா? அவர்களை எப்படித் தண்டிக்க வேண்டும் என்பதை வள்ளுவர் சொல்கிறார். தவறு செய்தவர்களே நாணும் அளவுக்கு அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் செய்த தீமையையும், தாம் செய்த நன்மையையும் மறந்துவிட வேண்டும். இதுவே தண்டிக்கும் முறையாகும். இதை உணர்த்தும் இனிய குறள் இதுதான்.   

      இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
      நன்னயம் செய்து விடல். 

ஒருவரை ஒருதடவை மன்னிக்கலாம். இருதடவைகூட மன்னிக்கலாம். திரும்பத் திரும்ப மன்னித்துக்கொண்டே இருப்பதா என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்காக இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஒருகதை.

முனிவர் ஒருவர் குளக்கரையில் அமர்ந்திருக்கிறார். ஒருதேள் அவரைக் கொட்டுகிறது. அதைப்பிடித்து அருகில் விடுகிறார். திரும்பவும் அந்தத் தேள் அவரைக் கொட்டுகிறது. அப்போதும் அவர் அதைப்பிடித்து அருகில் விடுகிறார். திரும்பத் திரும்ப அந்தத் தேள் அவரைக் கொட்டுகிறது. அவரும் திரும்பத் திரும்ப அந்தத் தேளைப் பிடித்து அருகில் விடுகிறார். அப்போது அருகில் இருந்த சீடர் கேட்கிறார். அந்தத் தேள் முதலில் கொட்டிய போதே அதை அடித்திருந்தால் தங்களை இவ்வாறு பலதடவை கொட்டி இருக்காதே என்கிறார். அதற்கு அந்த முனிவர் சொல்கிறார். கொட்டுவது தேளின் குணம். அதை மன்னித்துக் காப்பாற்றுவது எனது குணம். இப்படித்தான் அருளாளர்களின் குணம் இருக்கும். ஆக எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கலாம். அந்தத் தேள் வேண்டுமானால் திருந்தாமல் இருக்கலாம். ஒருநாள், தவறு செய்தவர்கள் வெட்கப்பட்டுத் திருந்தும் வாய்ப்புகள் உண்டு.

பேசிய கருத்திலிருந்து பின்வாங்காமலே வாய்ச்சொற்களால் மன்னிப்புக் கேட்டுவிடலாம். அதனால் என்ன மெய்ப்பயன்? வருந்துவது என்பது அதிலிருந்து வேறுபட்டது. மனம் சம்பந்தப்பட்டது.
     
      கவிஞர் வாலி எழுதினார்.
      தவறு செய்தவன் திருந்தி ஆகணும்
      தப்புச் செய்தவன் வருந்தி ஆகணும்.


ஒரு தப்புக்காக மன்னிப்புக் கோருவதைவிட, மனம்வருந்துவதுதான் உள்ளார்ந்தது.

மன்னிப்புக் கேட்டால் யாராவது “மன்னித்தேன்” என்று சொல்கிறார்களா? இல்லையே! அப்போது அவர்கள் அகம்பாவமாக வெற்றி மிதப்பில்தான் திளைக்கிறார்கள். தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்கிறார்கள். நம் மக்களுக்கு மன்னிக்கத் தெரியவில்லை. மன்னிக்கத் தெரிந்தவர்கள் மனிதர்களுள் புனிதர்கள்.  அதனால்தான் “மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோவிலடா” என்று கண்ணதாசன் சொன்னார்.

வருந்துகிறேன் என்று வாயளவில் சொல்லி, எதிரிகளின் வாயடைக்கும் உத்தியைக் கையாளவும் வாய்ப்புண்டு.  அப்படி இருந்தால் அதுவும் தப்புதான். வருந்துகிறேன் என்பதில் உள்ளபடியே மனம்வருந்த வேண்டும். உதட்டு வார்த்தைகள் ஊரை ஏமாற்ற உதவலாம். உள்ளத்தின் வார்த்தைகள்தாம் உலகையும் உங்களையும் உயர்த்தும்.

மன்னிப்புக் கேட்பதால் ஒருவரின் கோபத்தில் இருந்து சற்று மீளலாம். தண்டனையிலிருந்து தப்பலாம். அவரால் காரியம் ஆக வேண்டி இருப்பதாலும் மன்னிப்புக் கேட்கக் கூடும். அத்தகைய மன்னிப்புக் கோருவதில் ஆதாய நோக்கே இருக்கும். என்னைப் பொறுத்தவரை மன்னிப்புக் கேட்பதைவிட மனம்வருந்துவது சரியானது. உள்ளம் வருந்தினால் தவறோ தப்போ கரையோ களங்கமோ கழுவப்பட்டுவிடும்.

எந்தக் கருத்துக்கும் எதிர்கருத்து இருப்பது இயற்கையே. நதியின் பாதையை ஒழுங்கமைத்துச் செல்வன அதன் இருகரைகள். அதுபோல்தான் எந்தக் கருத்துக்கும் இருதரப்புகள் இருக்கும். கருத்தோட்டத்துக்கு மேலும் வலு சேர்ப்பனவாக அவை அமைய வேண்டும். பகை வளர்த்தால் துயரத்தைத்தான் அறுவடை செய்ய முடியும்.

சட்டங்களால் வரையறுக்கப்பட்ட பெருங்குற்றங்கள் குறித்தோ... அவைகுறித்த தண்டனைகள் குறித்தோ எதிர்நிலை இல்லை. அத்தகைய சட்டங்களும் தண்டனைகளும் தேவையே. ஆனாலும் சட்டத்திலும் மன்னிக்கும் பிரிவுகள் உண்டு.

மன்னிப்பது என்பது பிழைசெய்பவர்களின் கையில் இல்லை. வருந்துவதும் திருந்துவதும் மட்டுமே தப்புச் செய்தவர்களை நல்லவர்களாக மாற்றும்.

வெளியீடு :
தினத்தந்தி 17-10-2019


மதுரை


















புத்தக ஏடுகளை விழுங்கியது
பொற்றாமரைக் குளம்...
புனல்வாதம் நிகழ்ந்த போது!

கொற்றவனின் கொடிமீனைக்
கூசச் செய்தன
மீனாட்சியின் விழிச்சுடர்கள்

கள்ளழகர்
கடந்த கால நதியைத் தேடிவந்து
ஏமாறுகிறார் ஆண்டுதோறும்

ஒவ்வொரு கவிதைப் போட்டியிலும்
தாங்க முடியவில்லை
தருமிகளின் ஆதிக்கம்

நக்கீரன் இல்லாததால்
தனக்குத் தானே பட்டம் சூடித் திரிகிறார்கள்
தமிழ்க்கவிஞர்கள்

சங்கம் வைத்துத்
தமிழ்வளர்த்த மதுரையில்
பெரிய எழுத்து இந்தி

கோவில் மண்டபத்தில்
இன்னமும் சில பாட்டிகள் இருக்கிறார்கள்
பிட்டுக்கு மண்சுமந்த சிவனைக் காண

கோ. மன்றவாணன்


Wednesday, 9 October 2019

சாம்பலாய் முடியும் உடல்




















நேற்று எரியூட்டிய சடலத்தின்
சாம்பலைக்
கொண்டு வந்தார்கள்.

கைப்பிடிச் சாம்பலில்
பூதக் கண்ணாடி வைத்துப்
பார்த்தேன்

கடமையைச் செய்யக்
கையூட்டு வாங்கிய
கைகளைத் தேடினேன்

பார்வையாலும் பெண்களைப்
பாலியல் துன்புறுத்தல் செய்த
கண்களைத் தேடினேன்

வெறி ஏறஏற மதுசுவைத்து
நல்லோரை ஏசிய
நாவினைத் தேடினேன்

காசை விட்டெறிந்து
கடவுளெனத் தன்னைப் புகழ்வதில்
சிலிர்த்த
செவிகளைத் தேடினேன்

அதிகாரத் திமிரில் நடந்த
அந்தக் கால்களைத் தேடினேன்

அடுத்தவர் சொத்துகளை
அபகரித்த
அந்த
ஆசை ஒளிந்திருந்த இடம் தேடினேன்

நொடிப்பொழுது வீசிய காற்று
விழுங்கிச் சென்றது
அந்தச் சாம்பலையும்.

-கோ. மன்றவாணன்.

Thursday, 3 October 2019

பெட்டி பெட்டியாய்க் காந்தி

















சுதைமண் காந்தியின்
தடியைப் பிடுங்கித்
தலையை உடைக்கிறார்கள்

காந்தி பதாகையில்
குறிதவறாது சுட்டுக்
குருதியோடச் செய்கிறார்கள்

காந்தி சாலையில்
பிராந்திக் கடைகளைத் திறந்து
ஆடுவோமே – கள்ளு
போடுவோமே என்கிறார்கள்

காந்தி விழா கொண்டாடியதாகப்
பொய்க்கணக்கெழுதிப்
பொருளாதாரத்தை உயர்த்துகிறார்கள்

காந்தியாக நடிக்கக்கூட
இந்தியர் எவருமில்லை

காந்தி பிறந்த நாளைக்
கோலாகலமாய்க்
கொண்டாடுகிறார்கள்
தொலைக்காட்சியில் குத்தாட்டம் பார்த்து

அது எப்படி?
பணத்தாளில் புன்னகைக்கும் காந்தியைப்
பாதுகாக்கிறார்களே
பெட்டி பெட்டியாய்...

-கோ. மன்றவாணன்    

Tuesday, 1 October 2019

புத்தரின் புன்னகை


















பணம்கொட்டினால்
திருப்பதி உண்டியல் நிரம்பிவிடுகிறது
ஆனால்
ஆசையின் உண்டியல் நிரம்புவதே இல்லை

ஜீவ நதிகளும்
ஜீவ சமாதியாகிறது
வயது கடந்தாலும்
வற்றுவதே இல்லை
காமநதி

பதவி பறிக்கப்
பாவ ஏணியில்
ஏறுவதை யாரும் நிறுத்துவதே இல்லை

ஆயிரம் துயர்கள் வரும் எனினும்
யாரும் விடத் தயாரில்லை
ஆசையை

கல்லாப் பெட்டியின் மீது
புத்தர் பொம்மை
புன்னகையைக் காணவில்லை

-கோ. மன்றவாணன்


Thursday, 19 September 2019

தேநீர் நேரம்















எல்லாரும் வாருங்கள்
இளைப்பாறுதல் தருவேன் என்கிறார்
வட்டாட்சியர் அலுவலகத்தின் எதிரில் இருக்கும்
தேநீர்க் கடையின் உரிமையாளர்

சர்க்கரையில் மொய்க்கும் ஈக்கள் போலவே
தேநீர்க் கடையில்
சுவைஞர்கள்

சர்க்கரை இல்லாத... சர்க்கரை போட்ட...
அரை சர்க்கரை, கால் சர்க்கரை
ஸ்டார்ங்காக
லைட்டாக
மீடியமாக என்றெல்லாம்
நேயர் விருப்பங்கள் இடைவிடாமல்
நாயர் தேநீர்க் கடையில்...

நிறைவேறுகின்றன விருப்பங்கள்
நினைவு தவறாமல்

சாய்ந்துவிழும் அருவியென
மேல்குவளையிலிருந்து
கீழ்க்குவளையில் பாயும் தேநீர் சங்கீதத்தைக்
கேட்டுக்கொண்டே இருக்கலாம்

ஆனாலும்
அரசு அலுவலரைப் பார்க்க
எந்த நேரம் சென்றாலும்
தேநீர் அருந்தச் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.

கோ. மன்றவாணன்



Tuesday, 17 September 2019

மழைமேகம்
















காற்றை வருடிக்கொடுக்கிறது
விசிறியாய் விரிந்த
மயில்தோகை 

வாடும் பயிர்களின் வேண்டுதல்கள்
கேட்டிருக்குமோ
கூடி முடிவெடுக்கிறது முகில்கூட்டம் 

தெருக்கள் தாண்டிய பின்னே
திடீரென ஞாபகப்பூவுக்குள் விரிகிறது
வீட்டுக்குள் இருக்கும் குடை 

முகில் உருகிவந்து அணைத்துக்கொள்ளும்
தகவலை
நெல்வயலுக்கு
முன்கூட்டியே சொல்லிச் செல்கிறது குளிர்காற்று 

கூடு நோக்கிப் பறக்கிறது
குருவிக் கூட்டம் 

எவ்வளவு மழை பெய்தாலும்
நனைவதில்லை
மேகம்.

-கோ. மன்றவாணன்

Monday, 9 September 2019

அதிரூபன் தோன்றினானே...


















அச்சுறுத்துகிறது
கரும்பாம்புகளோ என மிதந்து நெளியும்
இரவுக் கடல்

திகைக்க வைக்கிறது
திசைகளைப் பறிகொடுத்துக் கிடக்கும்
புவி

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
கருஞ்சாந்து
நிரம்பி வழிகிறது

வாழ்க்கையின்
எந்தப் பக்கம் திரும்பினாலும்
முட்டுகிறது
இருட்டால் பிசைந்து எழுப்பிய சுவர்

காத்திருந்தேன்... நம்பிக்கையுடன்
காத்திருந்தேன்... பொறுமையுடன்

அதோ
கையில் விளக்கோடு
அதிரூபன் தோன்றினானே....

கோ. மன்றவாணன்

அரசியல்




















பொய்கள் அமோகமாக விற்கும்
பெருஞ்சந்தை இது

நேற்று நடந்து சென்றவர்
இன்று
இன்னோவா காரில் பயணிக்கிறார்
இதுபோல் இல்லை
இலாபம் கொழிக்கும் தொழிலொன்று

வெள்ளுடை வேந்தர்களாக
வீதிவலம் வருகிறார்கள்
தேசம் அழுக்காகிறது

மாறுவேடம் தரித்தது
மன்னராட்சி
வாரிசுகளுக்கே அரசாட்சி

இனி,
காமராசர் கக்கன் வரலாறுகளின்
சாம்பலும் கிடைக்காது
ஊரெங்கும் ஊழல்தீ

கோ. மன்றவாணன்

சிரிப்பு


















சிரிக்கும் தருணங்களில்
ஓடி ஒளிந்துகொள்கிறது
எந்த நோயின் வலியும்

அழகின் உச்சத்தைக் காணலாம்
காந்தியின் சிரிப்பிலும்
மோனலிசா புன்னகையிலும்

இளம்பெண்ணின் கண்ணும் சிரிக்கும்
இதயத்தில் காதல் மலர்ந்தால்

யார் சொன்னார்
மனிதருக்கு மட்டுமே சிரிப்புச் சொந்தமென்று
கொடியின் சிரிப்புதானே பூக்கள்

நம்
வெள்ளைச் சிரிப்பையும்
கொள்ளையடித்துவிட்டார்களே
அதிகாரப் படையெடுத்துவந்து

கோ. மன்றவாணன்

Monday, 2 September 2019

பறவை



















சிறகு விரித்துப் பறக்கிறது
மனம்
வானத்தின் உயரம் போதவில்லை.

எவ்வளவு உயர உயரப் பறந்தாலும்
மண்ணுக்கு வரவேண்டி இருக்கிறது
உயிர் வளர்க்க

வானமே வீடாக வாழ்ந்த பறவையைப்
பொற்கூண்டில் அடைத்துப்
பழம்நறுக்கித் தந்தாலும்
அது
விரும்புவது என்னவோ
விடுதலையைத்தான்

விடுதலை என்பது வேறொன்றுமில்லை
சிறகு வரித்தலே
சிந்தனையின் எல்லையையும் தாண்டி.

கடல்தாண்டிப் பறக்கும்
புறாவைப் பார்த்துப்
பொறாமைப்படுகிறேன் நானும்.

கோ. மன்றவாணன்


கருப்பு


















இரவு
கருப்பாய் இருப்பதால்தான்
பேய் நடமாடுகிறது

நிலாத்துணை அற்ற
தென்னந்தோப்பு ஓசையும்
அச்சுறுத்துகிறது

ஜன்னல் கதவு திறந்து மூடுகிறது
இருட்டுக்கு
நீளக் கைகள் எப்படி முளைத்தன?

தொப்பென்று குதிக்கிறது
கருப்புப் பூனையொன்று
கண்களில் தீச்சட்டி ஏந்தி

என் மனசுக்குள்
அவிந்து போயின
அனைத்து விளக்குகளும்

கருப்புக் கயிறு கட்டினால்
காத்துக் கருப்பு அண்டாது என்ற
பூசாரி
போதையில் உருண்டு கிடக்கிறார்

அப்போதுதான் தடவிப் பார்த்தேன்
என் மணிக்கட்டில் வளையமிட்டிருந்த
கருப்புக் கயிறு
எங்கோ அறுந்து விழுந்துவிட்டிருக்கிறது

இருட்டில்  தேடுகிறேன்
அவசர அவசரமாக
அந்தக் கயிற்றை

-கோ. மன்றவாணன்

இனிமேல் மழைக்காலம்











குளம்
காத்திருக்கிறது
பறவைகள் வருமென்று

வயல் பொறுத்திருக்கிறது
மறுபடியும்
பசுமை குலுங்குமென்று

பூமியின் நா
நீண்டு கிடக்கிறது வான்நோக்கி

அருவியின் கால்பதிந்த மலைப்பாறையும்
அண்ணார்ந்து பார்க்கிறது

மழைநீரில் சூடு தணிக்கச்
சூரியனும்
முந்தி வந்து நிற்கிறான்

இனிமேல் மழைக்காலம்
என்ற அறிவிப்பை
நம்பி...

கோ. மன்றவாணன்