எழுத்து
ஒலிக்கு
உருவம் உண்டெனச் சொல்கிறது
எழுத்து
“அ” எழுதிக்
குறளைத் தொடங்கிய
வள்ளுவனை
வாழ வைப்பதும்
எழுத்துதான்
மொழியைப்
பேசும் ஓவியம் ஆக்கியதும்
அதுதான்
உயிரை
நிராகரித்துவிட்டு
உடல் நடக்க முடியாது
எழுத்தை
நிராகரித்துவிட்டுபு்
புத்தகம் எழுத முடியாது
நெல் தட்டில்
“அ” எழுதித் தொடங்குகிறது
தமிழர் கல்வி
மொழி சொல்லித் தந்த
தாயை
இறைவி ஆக்கவில்லை நாம்
எழுத்தறிவித்தவரையே
இறைவனாக்கி
அறிவாலயம் கட்டுகிறோம்
காற்றில்
கரைந்து போகும்
பேச்சு
வரலாற்றில்
சாகா வரம்பெறும்
எழுத்து
கடந்த காலத்தைக்
கண்முன் எழுப்புவது
எழுத்து
நிகழ்காலத்தை
எதிர்காலத்துக்கு அஞ்சலிடுவது
எழுத்து
வருங்காலத்தை
வடிவமைக்கப் போவதும்
எழுத்து
நேற்றுவரை
இருவிரல்
எழுத்து
இன்று
பத்துவிரல் எழுத்து
கணினி முன்
நாளை
எழுத்தாகவே மாறும்
பேச்சொலி
எல்லா தேசங்களையும்
இணைக்க
ஒரு நதி உண்டு
அது
அறிஞர்களின் எழுத்துநதி
- கோ. மன்றவாணன்