எல்லைக்கோடு
எல்லைக்கோடுகளில் அதிர்வை
எப்பொழுதும்
ஏற்படுத்திக்கொண்டே செல்கிறது
எந்நொடியிலும் தாக்கத் தயாராக
நீட்டப்பட்டிருக்கும்
நீள்துப்பாக்கிகளின்
நீண்ட ஊர்வலம்
எல்லை தாண்டிப் பறக்கும்
சுதந்திரப்புறா ஒன்று
சொல்லிவிட்டுப் போகிறது
எல்லைக்கோடுகளும்
பிரிவினைக் கோடுகளே….!
பக்கத்து வீட்டுக்குழந்தை
பசியாக இருக்கும் போது
ஜன்னல் வழியாக
இன்னமுது ஊட்டுகிற தாய்மனது
பிரித்தெறியத் துடிக்கிறது
எல்லை வேலிகளை !
அடுத்த வீட்டு மல்லிகை வாசம்
என் வீட்டுப்
பூசை அறைக்குள் !
கற்றுக்கொள்ள வேண்டும்
மல்லிகையிடமிருந்து
எல்லையற்ற வாசத்தை
எல்லையற்ற நேசத்தை!
எல்லைக்கோடுகளில்
முள்வேலியை நடும்போதே
வலிக்கவில்லையா
ரத்தம் வழியும்
உன் கைகளும்?
ரத்த சகதியில்
நாசங்கள் ஆயின போதும்
தேசங்கள்!
அட
சொந்த தேசத்துக்குள்ளும்
பிரிவினைச் சுவர்கள்
சிறிய மனசுக்குள்
பெரிய திருக்கோவிலைக் கட்டினாராமே
பூசலார் நாயனார்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
எந்நாடும் என்நாடே எம்மக்களும் என்மக்களே”
என்றோர் உலகத்தை
உன் மனதுக்குள் கட்டிப்பார்….
எல்லையற்று விரிந்துபோக வேண்டும் மனது
எல்லைகள் இல்லா உலகம் காண !
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment