Thursday, 29 September 2016


வாழ்க்கையின் தூரங்கள்

தொலைதூரத்தில் இருக்கும்
வாழ்க்கையை
நோக்கி
நான்
நடக்க நடக்க

அது
ஓடி ஓடிப் போய்
ஏமாற்றுகிறது என்னை

தொட்டுவிடத்
துடிப்பது என்னமோ
மனம்தான்

தொடவிடாமல்
போக்குக் காட்டுவது என்னமோ
வாழ்க்கைதான்

எத்தனை ஆயுள்களை
இயற்கை கொடுத்தாலும்
வாழ்க்கையின் தூரத்தைக்
கடக்க முடியாது
எவரும்.

இடையில் வந்தோம்
இடையில் செல்வோம்
வாழ்க்கையின் தூரமோ
நீண்டுகொண்டே…
நீண்டுகொண்டே… 

கிட்டே வந்து
மனக்குருவி அலறுகிறது :
“உனக்குப்
பின்னாலும் பிணங்கள்
முன்னாலும் பிணங்கள்
நீ
இப்போதோ
எப்போதோ?”

வாழ்க்கைப் பயணத்தில்
தட்டுத் தடுமாறி நடக்கிறோம்
அணுத்துளி தூரம் மட்டுமே

நரைவந்து
திரைவந்து
மொத்த அனுபவமே
நான்தான் என்று
கர்வப்படுகிறது
ஒவ்வொரு வீட்டிலும்
ஒரு கிழம்!

- கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment