எப்படி
மறப்பேன்?
அவளின்
நினைவுகளையே
சுவாசித்து
சுவாசித்து
என் உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் நான்
எப்படி மறப்பேன்?
அவளின்
முதுகுபின் தொங்கும் தாவணிபோல்
அவளைப்
பின்தொடர்ந்து சென்ற
என் காலத்தை
எப்படி மறப்பேன்?
பாலுக்குள்
கலந்திருக்கும் சர்க்கரைபோல்
பெருங்கூட்டத்தில்
அவள் கரைந்து இருந்தாலும்
என் விழி
அவளை
அதே நொடியில் கண்டறிந்து
ஆனந்தக் கூத்து ஆடியதை
எப்படி மறப்பேன்?
வீட்டைத் தாண்டி
வெண்ணிலா வரும் எனத்
தெருமுனையில்
ஒரு தவச்சாலையையே அமைத்து
நொடிகளை
நூற்றாண்டுகளாக்கி
ஏங்கி நின்ற நேரத்தை
எப்படி மறப்பேன்?
என்
விடைத்தாளில்
அனைத்துப் பக்கங்களிலும்
அவள் பெயரையே எழுதி
வெற்றி இறுமாப்போடு
வெளிவந்த பொழுதை
எப்படி மறப்பேன்?
கணவன் அருகிருக்க
கையில் மகவிருக்க
ஆட்டோவை விட்டு
அவள் இறங்கி வந்து
என்
உலகத்தைப் பல துண்டுகளாக
உடைத்துப் போட்டுப் போனதை
எப்படி மறப்பேன்?
-
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment