வானமே
எல்லை
நிலவு
கால்பந்து ஆகலாம்
நீ
உதைத்து விளையாட!
விண்மீன்கள் வளர்க்கலாம்
உன்
வீட்டுத் தொட்டியில்!
உன் காதலிக்கு
மேலாடை தைக்கலாம்
மேகத்தைக் கத்தரித்து!
சுற்றுலா செல்லலாம்
கிரகம் விட்டுக்
கிரகம் தாவி!
விண்வீடுகளில்
விளக்கு ஏற்றலாம்
சூரியனில்
நெருப்புத் தொட்டு!
காய்நிரப்பி
பல்லாங்குழி விளையாடலாம்
வான்பள்ளத் தாக்குகளில்!
தலைமை தாங்கத்
தமிழை அழைக்கலாம்.
வானின் உச்சியில்
மலர்மேடை போட்டு!
குளோனிங் ஆடுபோல
உருவாக்கலாம்
இன்னொரு வானத்தை!
நீ
எதையும் சாதிக்கலாம்
நம்பிக்கையின் கைப்பிடித்துச் சென்று!
நீ
வாழ்வில் உயர
வானமே எல்லை!
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment