Thursday, 29 September 2016



நோக்கு

பிய்ந்து போன
பேனர் விரிப்பில்
படுத்துக் கிடக்கிறது ஒருகுடும்பம்
பாதை ஓரத்தில்

தலைவியின்
கிழிந்த உடையில் இருந்து
எட்டிப் பார்க்கின்றன
இளமைத் திமிறல்கள்.

கைநீட்டித் தொடத்
தாவுகிறது
ஒரு காம நோக்கு

பாதையை
ஆக்ரமித்ததாய்க்
தடிகொண்டு விரட்டப் பாயுகிறது
ஒரு காவல் நோக்கு

பாதையே வீடான
பாரதத்து வறுமையை
நவீன கவிதையில் சொல்ல
வார்த்தை தேடுகிறது
ஒரு கவிநோக்கு

ரோட்டோர வாசிகளுக்கு
ஓட்டில்லை
என்பதை அறிந்து
நாய்களைப் பார்ப்பதுபோல் பார்த்து
நகர்ந்து போகிறது
ஒரு அரசியல்வாதி நோக்கு


இரவில்
நகரத்து அழகு
கெட்டுப் போவதாக
நாளிதழ் ஆசிரியர்களுக்கு
நறுக்கென
கடிதம் எழுத மெனக்கிடுகிறது
ஓர் ஓய்வூதியர் நோக்கு

வாழ்வில்லம் தராத
இந்நாட்டை
உயிராய் நேசி என
ஊருக்குச் சொல்லிவிட்டு
வெளிநாடு பறக்கிறது
தேசத் தலைவர்களின் நோக்கு

ஒருநாள்
இந்த நிலைமைக்கெல்லாம்
மாறுதல் உண்டு என
கொடிதூக்கி
கோஷம் எழுப்ப
கூடவே உண்டியல் ஏந்த
கூப்பிடுகிறது ஒரு புரட்சி நோக்கு

அதோ
சாலையில் தூங்கும் பெண்மார்பில்
தன் துப்பட்டாவைப் போர்த்திக்
கடந்து செல்கிறது
அம்மாவின்
கைப்பிடித்து நடந்து வந்த
ஒரு சிறுமியின் நோக்கு

- கோ. மன்றவாணன்

                                           

No comments:

Post a Comment