இணை(த)யத்தில்
வாழும் எம்தமிழ்
மொழி
முகிழ்ப்பது
என்பதே
இயற்கையின்
இன்னருள்தான்!
மொழிமட்டும்
இல்லையேல்
உலகம்
ஊமைகளின்
மவுனவெளி
ஆகி இருக்கும்.
சிந்தனைக்குத்
தேர்
கிடைத்திருக்காது
சீர்
கிடைத்திருக்காது
மொழி
இல்லையேல்.
உலகம்
ஒருநாள்
சிலிர்த்துப் போனது…
தமிழ்பிறந்த
நாள்தான் அது!
ஆதாமோ
ஏவாளோ
ஆதி
மனிதன் யாரோ
அவர்களைப்
பேச வைத்தது தமிழ்
நாவில்
தேன்சுவையாய்த்
தித்தித்தது
தமிழ்
விரல்
ஏரோட்டி
மண்ணில்
முகம்பார்த்தது
தமிழ்
கல்
கல் எனக் கற்கச் சொல்லி
கல்லில்
உளிகொண்டு
ஒளிஎழுதி
பல்லாயிரம்
ஆண்டுகள் கடந்தும்
நிலைத்து
நிற்பது தமிழ்
பாடம்
பண்ணிய
பனைஓலைகளில்
உலக
இலக்கியம் படைத்து
மொழிகளின்
அரசியாய்
முடிசூட்டிக்கொண்டது
தமிழ்
நிலவில்
கால்பதித்த
நீல்ஆம்ஸ்டார்ங்
போல்
முதன்முதலில்
இந்தியாவில்
அச்சுப்பொறியில்
அரசநடை
போட்டது தமிழ்
காகிதங்கள்
மணம்வீசின
தமிழைத்
தழுவிக்கொண்டதால்!
படையெடுப்பு
மொழிகளால்
கற்பிழக்காமல்
கன்னியாய்த்
தமிழ்
புதுப்புது
தொழில்நுட்பங்கள்
எல்லாம்
தமிழை
அடிதொட்டு வணங்கி
தம்மை
உயர்த்திக்கொள்கின்றன
இன்று
இணையத்தில்
உலாவந்து
உலகை
ஆளுகிறது தமிழ்
தமிழ்
இணையத்தில் சிறப்பதால்
தமிழ்
இதயத்தில் சிரிப்பதால்
சாவேது
மூப்பேது
தமிழுக்கு!
-
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment