Sunday, 15 November 2026


 


அறத்தின் குரல் 

நக்கீரன்


அப்போது நான் திருப்பாதிரிப்புலியூர் ஆனைக்காரன் தெருவில் எளியதோர் அச்சகம் நடத்தி வந்தேன். நான் குடியிருந்த "கோட்டையும்" அதுதான். காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை. இந்த ஏழையின் கோட்டையிலும் கதவுகள் இல்லை. என் அச்சகத்துக்கு மூன்றாவது வீட்டில்தான் நக்கீரன் வசித்து வந்தார்.

அது சின்ன தெரு. ஒரு காலத்தில் ஆனைகள் இருந்தனவோ என்னவோ…. என் காலத்தில் எருமைகளைத் தெருவில் கட்டி வைத்திருந்தார்கள். மழையானாலும் வெயிலானாலும் வாய்திறந்து புகார் தெரிவிக்காத ஜீவன்கள் அவை. அவை போல் மக்கள் இருக்க வேண்டும் என்பதே ஆள்வோரின் ஆசை! அந்தத் தெருவின் நடுவில் கிளைஎனப் பிரியும் இன்னொரு தெரு உண்டு. அதற்குப் பெயர் எருமைராஜ அக்ரகாரம். 

அந்தச் சின்னஞ்சிறிய தெருவுக்குள் திடீரென்று இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் சீறிப் பாய்ந்து வந்தன. எல்லாமே அம்பாசிடர் கார்கள். இப்போது இருப்பதுபோல் விதவிதமான கார்கள் அப்போது இல்லை. ஒவ்வொரு காரிலும் இடம் கொள்ளாத அளவுக்கு ஆட்கள் இருந்தனர். கார் சன்னலின் வெளியே இடுப்புவரை உடல்நீட்டி உரக்கக் கத்தியபடி வந்தனர். சடசடவென்று இறங்கி, நக்கீரன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். கதவு சாத்தப்பட்டு இருந்தது. தடதடவென்று தட்டினார்கள். உடைக்க முயன்றார்கள். சிலரின் கைகளில் ஆயுதங்கள் இருந்தன.

தெருவில் உள்ள வீட்டினர், என்ன ஏது என்று தெரியாமல் வெளியில் வந்து பார்த்துப் பயந்துபோய்த் தம் வீடுகளை, உள்புறமாகப் பூட்டிக் கொண்டனர். என் கோட்டைக்குத்தான் கதவுகள் இல்லையே…! 

"நக்கீரன் ஒழிக… நக்கீரன் ஒழிக…" என்று வாய்கிழியும் அளவுக்குக் கத்தினர். அசிங்கமான வார்த்தைகளால் நக்கீரனைத் திட்டிக் கோபாராதனை காட்டினார்கள். அந்த வசவுகளைக் கேட்டால் யாருடைய காதும் கூசும். யாருடைய நெஞ்சும் அதிரும்.

நல்ல வேளை. அன்று அந்த வீட்டில் யாரும் இல்லை. இருந்திருந்தால்….. நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது.

பிறகுதான் மெல்ல மெல்ல விபரங்கள் வெளிவந்தன. வாடகைக் கார் நிலையத்தில் ஓய்வான நேரங்களில் ஓட்டுநர்கள் சிலர் சீட்டு ஆடுவார்கள். அது குறித்து யாரோ காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துவிட்டார். புகாரைக் கொடுத்தது நக்கீரன்தான் என ஓட்டுநர்களுக்கு யாரோ தவறான தகவல் தந்துவிட்டார். அந்த ஆத்திரத்தில்தான் ஓட்டுநர்கள் ஒன்றுதிரண்டு, அடியாட்களையும் அழைத்துக் கொண்டு, நக்கீரன் வீட்டுக்குப் படை எடுத்து வந்துவிட்டனர். 

அந்தக் காலங்களில் அரசு அதிகாரிகளை… ஏன், காவல் துறையினரைக் கூடக் கண்டித்துப் பிரச்சாரத் தட்டிகளைச் சாலை சந்திப்புகளில் மரங்களிலோ கம்பங்களிலோ கட்டி வைத்து விளம்பரப் படுத்துவார் நக்கீரன்.

இந்த ஓட்டுநர்கள் படையெடுப்பைப் பற்றி… நக்கீரன் அவர்களிடமே கேட்டேன் நான். அதற்கு அவர், 

"ஓட்டுநர்கள் மீது நான் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. அவர்களால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களை நான் எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை. ஓட்டுநர்கள் எல்லாரும் ஏழை எளிய மக்கள். அவர்களுக்கு ஆதரவாகவே இந்த நக்கீரன் இருப்பானே தவிர, எதிர்க்க மாட்டான். காவல் துறையில் உள்ள யாரோ ஒருவர், என் மீது கொண்ட தனிப்பட்ட வஞ்சம் காரணமாக ஓட்டுநர்களுக்குத் தவறான தகவல் தந்து ஏவிவிட்டார்."

அதன் பிறகும் நக்கீரன் அதே வீட்டில்தான் வசித்தார். ஊரில் நடந்தபடிதான் இருந்தார். ஓட்டுநர்கள் அவர் மீது எந்தக் கோபமும் கொள்ளவில்லை. இது குறித்தும் நக்கீரனிடம் கேட்டேன். 

அவர் சொன்னார்.

"ஓட்டுநர்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது. அநாவசியமாக நக்கீரன் மீது கோபம் கொண்டு தாக்க முயன்றோமே என்று வருத்தப் பட்டார்கள்."


கருத்தாகப் பேசும் நக்கீரனுக்குக் கருத்த மேனி. மனமோ வெள்ளையோ வெள்ளை. தன் மனத்தை வெளியில் காட்டும் விதத்தில் எப்பொழுதும் தூய வெள்ளை ஜிப்பா மற்றும் வேட்டி அணிந்து இருப்பார். வயப்படுத்தும் காந்தக் கண்களும்... எதிரொலிக்கும் சிரிப்பும் அவருக்கே உரியவை. 

எங்குப் போனாலும் நடந்தேதான் போவார். அந்தக் காலக் கட்டத்தில் அவர் சைக்கிள்கூட ஓட்டி, நான் பார்த்தது இல்லை. பின்னொரு காலத்தில் கருப்பு வண்ணத்தில் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியதை அதிசயமாகப் பார்த்ததும் உண்டு. அவரை, யார் சந்தித்தாலும்… அவர், யாரைச் சந்தித்தாலும்… முகம் மலர்ந்துவிடுவார். யாரையும் அவர் எதிரியாகக் கருதுவதே இல்லை. "எதிரியாகவே" இருந்தாலும் நேரில் பார்த்தால் கட்டி அணைத்துக் கொள்வார். அவர் காட்டும் அன்புக்கு அணை போட… கல்லணை கட்டிய கரிகாலன் வந்தாலும் முடியாது. அத்தகைய உயர்ந்த உள்ளம் அவருடையது. 

தமிழ்மீது அவருக்கு அளவற்ற பற்று உண்டு. தமிழுக்கும் அவர்மீது அன்பு உண்டு. திருத்தமான தமிழில்தான் பேசுவார். அதில் நாடகத்தனம் அறவே இருக்காது. தன் பெற்றோர் இட்ட ஜெயராமன் என்ற பெயரை, நக்கீரன் என்று தமிழில் மாற்றிக் கொண்டார். ஜெயராமன் என்ற பெயர் அவருக்கே நினைவிருக்காது. நக்கீரன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. நாட்டில் நகரில் நடக்கும் அநியாயங்களை அட்டூழியங்களை நேருக்கு நேர் நின்று தட்டிக் கேட்பதனால், நக்கீரன் என்ற பெயரும் அவருக்குப் பொருந்திவிட்டது. முடிக்கு மணம் இல்லை என்று வாதம் புரிந்தார் சங்க காலத்து நக்கீரன். ஒரு தவறு செய்தால்… முடியரசானாலும் குடியரசானாலும் விடமாட்டேன் என்று வீதிக்கு வந்து போராடினார் எங்க(ள்) காலத்து நக்கீரன்!

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. விடுமுறை நாள்களிலும் மாலை நேரங்களிலும் ஏதாவதொரு வேலைக்குச் செல்வேன். கடலூர் துறைமுக நகர் அப்பாவுச் செட்டித் தெரு எதிரில் பெருமாள் தையல் கடை இருக்கும். ஆறுக்குப் பத்துதான் அதன் பரப்பளவு. அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன். தேநீர் வாங்கிவந்து கொடுப்பது; தையல் தொடர்பான பொருள்களை வாங்கி வந்து தருவது; காஜா எடுப்பது போன்ற வேலைகளைத்தாம் செய்து வந்தேன். தையல் கடையில் வேலை செய்த போதும்… கருமச்சம், காயவடு போலக் கிழிந்த டவுசரே என் அடையாளம்!

பெருமாள் தையல் கடையில் நான் காஜா எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது வெள்ளை ஜிப்பா, வேட்டியுடன் ஒருவர் வந்தார். அவர் கைகளில் துண்டறிக்கைகள் இருந்தன. அவருடன் குண்டாக கருப்பாக இன்னொருவரும் வந்தார். பெருமாள் தையலர் எம்ஜிஆர் கட்சி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அப்போதுதான் தொடங்கி இருந்தார்கள். அ.தி.மு.க. கூட்டம் சம்பந்தமான அறிக்கைகள்தாம் அவை. அவற்றில் சில துண்டறிக்கைகளைப் பெருமாள் தையலரிடம் கொடுத்தார். பிறகு அரசியல் பேசினார்கள். அந்த வயதில் அந்த அரசியல் எனக்குப் புரியவில்லை. இந்த வயதில் இன்றைய அரசியல் எனக்குப் பிடிக்கவில்லை. தேநீர் வாங்கிவர என்னை அனுப்பினார்கள். தாடி டீக்கடையில் இருந்து தேநீர் வாங்கிவந்து தந்தேன். அருந்தியபின் அவர்கள் விடைபெற்றனர். அப்போது சிறுவனாக இருந்த என்னைப் பார்த்து அவர் புன்னகைத்தார். அவர் வேறு யாரும் அல்லர். நக்கீரன்தான். அவருடன் வந்தது அவருடைய நண்பர் இரணியன். ஓவியக் கவிஞர் ரமேஷின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் பொன்வேலை செய்துவந்தார் அவர். இரணியன் எனப் பெயர் வைப்பதற்கே ஒரு துணிவு வேண்டும். கொள்கை உறுதி வேண்டும். 

அ.தி.மு.க. தொடங்கிய போது, முதன்முதலில் கடலூருக்குப் பொறுப்பாளராக… கடலூர்த் தொகுதி அமைப்பாளராக எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டவர்தான் நக்கீரன். அவரின் அயராத உழைப்பால்… கடலூர் எங்கும் அதிமுக கிளைகள் விரிந்தன. எல்லாருடைய நெஞ்சிலும் எம்ஜிஆர்தான் இருக்கிறாரோ எனும் அளவுக்கு, அ.தி.மு.க. மக்களிடம் செல்வாக்குப் பெற்றது. காலம் பார்த்து… காய்கள் நகர்த்திப் பணம் படைத்தவர்கள் அ.தி.மு.கவில் நுழைந்துவிட்டனர். அவர்கள் தம் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள… கொள்ள…. நக்கீரனை ஒதுக்கிவிட்டனர் மெல்ல… மெல்ல…! யாரோ சொன்னாங்க… என்னென்னு?  "அரசியல்ல இதுஎல்லாம் சகஜம்ன்னு"

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப் பூர்வமான நாளேடு தென்னகம். அந்த இதழில் நக்கீரன் பணியாற்றியதாகத் தெரிகிறது. திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான மதியழகனின் தம்பி, கிருஷ்ணசாமிதான் தென்னகத்தின் ஆசிரியர். பிறகொரு காலத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் நடத்திய சமநீதி இதழில் துணை ஆசிரியராகப் பணி ஆற்றினார். முன்னோடி என்ற இதழையும் நடத்தினார். இதில் இருந்து அவரின் எழுத்து ஆர்வத்தை ஊகித்து அறியலாம். இதழ்களில் அறிவுப் பூர்வமாக எழுதுவதிலும், மேடைகளில் ஆணித் தரமாகப் பேசுவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். 

அவருடைய பேச்சைப் பல தடவை நான் கேட்டு இருக்கிறேன். ஒரு விரல் அசைத்து, எச்சரிக்கை விடுக்கும் தோரணையில் பேசுவார். ஆதாரத்தோடு பேசுவார். அச்சமற்றுப் பேசுவார். பொதுநலத்துக்காக மட்டுமே பேசுவார். ஆனால் கண்ணியக் குறைவாக ஒரு சொல்கூட அவர் நாவில் இருந்து உதிர்ந்ததே இல்லை. 

நகர்நலம் வேண்டி ஏராளமான பொதுக்கூட்டங்களை நடத்தினார். அவர் அமைக்கும் மேடைகளில் பொதுநலச் செம்மல் பண்டரிநாதன், வழக்கறிஞர் கனக ரத்தினம், வழக்கறிஞர் ஸ்ரீராமுலு, வழக்கறிஞர் அரிகரதாஸ், வாட்ச் கடை செல்வம் ஆகியோரை அழைத்துப் பேச வைப்பார். இவர்கள்தாம் அன்றைய நட்சத்திரப் பேச்சாளர்கள். அதிகாரிகளை நச்சரித்த / எச்சரித்த பேச்சாளர்கள். 

நக்கீரனின் அப்பா பெயர் பரசுராமன். அம்மா பெயர் ராஜம்மாள். இரவும் பகலும் சந்திக்கும் அந்திமுனை போல… திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியும் போடிச் செட்டித் தெருவும் சந்திக்கும் முனைதான் இவர்களின் பூர்வீகம். இவர்களுக்கு இந்திராணி, ஜெயராமன், மங்கையர்க்கரசி, வத்சலா, மீரா, ஜெகநாதன் ஆகிய ஆறு பிள்ளைகள். இரண்டாவதாகப் பிறந்த ஜெயராமன்தான் நம்முடைய நக்கீரன். பிறந்த நாள்  26-10-1944.

இளமையில் புலமை என்ற பெருமையோடு வளர்ந்தார். நன்றாகப் படித்தார்.  கம்மியம்பேட்டையில் உள்ள தூய வளனார் உயர்நிலைப் பள்ளியில்தான் எஸ்எஸ்எல்சி முடித்தார். பெற்றோருக்குப் பெரிதும் மகிழ்ச்சி. பெருமையும்கூட. "பையன் அரசு வேலைக்குச் செல்வான். நம் குடும்பத்தைக் காப்பாற்றுவான்" என்று நம்பிக் கொண்டிருந்தனர். ஜெயராமன் வேலைக்குப் போனதும் வறுமையின் கொடுமை முடிந்துவிடும் என்று ராஜகனவில் நடைபோட்டனர். அது போலவே நில அளவைத் துறையில் அரசு வேலையும் கிடைத்தது. வேலூரில் பயிற்சி பெற்று வேலையில் தொடர்ந்தார்.

பொதுவாழ்வில் நாட்டமும் போராடும் வேகமும் கொண்ட அவருக்கு அரசு வேலை ஒத்துவரவில்லை. பொதுத்தொண்டு ஆற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் அரசு வேலையில் இருந்து விலகிவிட்டார். பொதுத்தொண்டுக்காக வேலையை விட்டதைச் சிலர் பாராட்டலாம். தியாகி பட்டம் சூட்டலாம். ஆனால் நான் அதைப் பாராட்டப் போவதில்லை. நக்கீரன் செய்த முட்டாள்தனம்தான் அந்தப் பணிவிலகல். அந்தப் பணியில் இருந்தும் பொதுப்பணி; தமிழ்ப்பணி ஆற்றி இருக்க முடியும். 

எத்தனையோ நல்ல மனிதர்கள் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்புகளைப் புறம் தள்ளிவிட்டுத் தங்களையும் வருத்திக் கொண்டனர். தம் குடும்பத்தினரையும் தத்தளிக்க விட்டனர். பொதுநலம் என்ற பெயரில் பொறுப்பற்று நடந்துகொண்டனர் என்றே அத்தகையோரை நான் குற்றம் சாட்டுவேன். தன்மானத்தோடு தலைநிமிர்ந்து நிற்கும் வகையில், தம் வாழ்வாதாரத்துக்குத் தகுந்த வழியை ஏற்படுத்திக்கொண்டுதான் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும்.

வேலையை விட்டதும், பெற்றோரின் கனவு மாளிகையில் இடிகள் விழுந்தன. இருந்தாலும் தன் பிள்ளை என்பதால் மனத்தைச் சமாதானப் படுத்திக் கொள்ள முயன்றனர். இடிந்து போய் இருந்த அந்தத் தருணத்திலும் அவர்கள் மீது பேரலை ஒன்று வந்து மோதியது. அந்தப் பேரலை, நக்கீரனைப் பெற்றோரிடம் இருந்து பிரித்துச் சென்றது.

இளமை கொலுவிருக்கும் பருவத்தில் காதலில் விழவில்லை என்றால் அவன் மனிதனே இல்லை. நக்கீரன் என்ன விதிவிலக்கானவரா? அஞ்சலாட்சி மீது காதல் கொண்டார். பெற்றோர் எதிர்த்தனர். அஞ்சலாட்சியா? அன்னை தந்தை ஆட்சியா? என்ற நிலை வந்தது. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை… ஏன், எந்தக் காலம் என்றாலும் இளமனம் காதல் பக்கமே சார்ந்துவிடும். அஞ்சலாட்சியை மணந்தார். தனிக்குடும்பம் நடத்தினார். காதலித்தவரையே கைபிடிக்கும் நக்கீரனின் காதல் அறத்தை நான் ஆதரிக்கிறேன். பெற்றோர் பார்வை வேறு அல்லவா? அது ஓர் இருண்ட காலம் என்பதால்… "காதல் என்பது பாவம்" எனக் கருதிப் பெற்றோர் மட்டும் அல்லர்; உடன் பிறந்தவர்களும் நக்கீரனோடு தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. 

நக்கீரன் - அஞ்சலாட்சி இணையருக்கு அன்புக்கரசி, மணிமேகலை, சித்தார்த்தி என முத்தமிழ் போல் மூன்று மகள்கள். வேலவன் என ஒரு மகன். மகள்கள் அனைவருக்கும் மணவாழ்க்கை அமைந்துவிட்டது. 

வாழ்வில் பல காலம் வறுமையில் வதங்கினாலும், வசதியான வாழ்க்கையும் நக்கீரனுக்குச் சில காலம் வாய்த்தது. திண்டிவனம் பக்கத்தில் கனிமம் வெட்டி எடுக்கும் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்தார்.

அந்தச் சமயத்தில் அவருடைய பொருளாதாரம் மேம்பட்டது. பொதுஅமைப்புகளுக்கு நன்கொடை வழங்கும் வகையில் அவருக்கு வருமானம் வந்தது. வரி வாக்கு அளிப்போர் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கிப் பரபரப்பாக நடத்தினார். அந்தக் காலத்தில்தான் நக்கீரனின் பொதுநலப் பணிகள் மிக அதிகமாக நடந்தன. கடலூரில் எங்குத் திரும்பினாலும் அவருடைய தட்டிப் பரப்புரைகளும் சுவர் பரப்புரைகளும் மக்களை விழிப்புணர்வு பெற வைத்தன.

"கழித்துக் கட்டிய" வெள்ளைத் தாள்களை எங்கிருந்தோ வாங்கி வருவார். அவை தாறுமாறான அளவுகளில் இருக்கும். தான் எழுதும் அறிக்கைகளை / கட்டுரைகளை அந்தத் தாள்களில் அச்சிட்டுத் தருமாறு என்னைப் பணிப்பார். தாள்களை வெட்டி ஒழுங்கு செய்து, அச்சிட்டுத் தந்திருக்கிறேன். ஒரு முறையா? இரு முறையா? பலமுறை!

எம்ஜிஆரை எதிர்த்து எஸ்.டி.சோமசுந்தரம் தொடங்கிய நமது கழகம் என்ற கட்சியிலும் அவர் செயல்பட்டார். அந்தக் கட்சியின் சார்பில் 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கடலூர்த் தொகுதியில் போட்டி இட்டார். அப்போது அவருடைய விளம்பர உத்தி பெரிதும் பேசப்பட்டது. சுவர் தோறும் பெருக்கல் வாய்ப்பாடு போல் தேர்தல் விளம்பரம் இருக்கும். ஒருவர் நான்கு பேருக்கு நக்கீரன் பற்றிச் சொல்லி வாக்குகள் சேர்க்க வேண்டும். அதுபோல் அந்த நான்குபேர் வாக்குகள் சேர்க்க வேண்டும். இப்படியாக ஒரு கணக்கு விளம்பரம் இருக்கும். (அந்த விளம்பரங்களை எழுதிப் பெற்ற ஊதியத்தில் குத்துவிளக்கு வாங்கித் தன் குருநாதர் திருமணத்தின் போது பரிசு அளித்ததாக நினைவுகூர்கிறார் ஓவியக்கவிஞர் ரமேஷ்) 

பொதுநலத் தொண்டையும் நேர்மையையும் மதித்து, மக்கள் வாக்கு அளிப்பார்கள் என்ற மூடநம்பிக்கையில் அவரும் மூழ்கிப் போனார். நக்கீரன் போட்ட கணக்குத் தப்புக் கணக்கு ஆனது. தோல்வியைத் தழுவினார். தேர்தலில் நிறைய செலவு செய்திருந்தார். மீண்டும் வறுமையின் பக்கமே வந்து விழுந்தார்.

சிப்காட் வேதியியல் தொழிற்சாலைகள் தொடங்கிய காலத்தில், அவற்றால் வரும் ஆபத்துகளை அவர்தான் மக்களுக்குச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதைக் கேலி பேசியவர்களும் இருந்தார்கள். அவரைப் பைத்தியக்காரன் என்று பழித்து ஏசியவர்களும் இருந்தார்கள். சமுதாயத்தில் உயர்ந்து நின்ற ஒருவரே, அப்படிப் பேசியதைக் காதுபடக் கேட்டுக் கண்கலங்கி நின்றிருக்கிறேன். அவர் எச்சரித்தது போலவே... சிப்காட் தொழில்வளாகத்தால் கடலுார் பாழ்பட்டுக் கிடப்பதைப் பார்க்கிறோம் நாம்! 

தொண்டுக்கு என்றே அலைவான். கேலிக்கு ஆளாவான். அவன் கடவுளில் பாதியடி ஞானத் தங்கமே என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம்…. என் நினைவில் நக்கீரன் வருவார். பண்டரிநாதன் வருவார். பேச்சுரிமைக் கழகத்தின் செல்வம் வருவார். பொதுநலத் தொண்டர்கள் வருவார்கள்.

இறுதிக் காலத்தில் நக்கீரன் பெரிதும் மனம் உடைந்து போய் இருந்தார். இயற்கை மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டு, மூலிகைப் பொடிகளை அவரே தயாரித்து, தெருத் தெருவாகச் சென்று விற்பனை செய்து வந்தார். அப்படித் தொழில்செய்வது தாழ்வில்லை என்றாலும், அவரைப் பார்த்துப் பரிதாபப் பட்டவர்கள் உண்டு. அவருக்காகவே சிலர் அந்த மூலிகைப் பொடிகளை வாங்கினார்கள்; நானும் வாங்கி இருக்கிறேன்… நக்கீரன் பயனுற வேண்டும் என்று!

ஒரு காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட திருக்குறள் பேரவையில் பொறுப்பாளராக இருந்தார். குறள்நெறி பரப்பப் பெரிதும் தொண்டு புரிந்தார். கடலுாரில் செயல்பட்ட இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து உதவினார்.  

பல ஆண்டுகளுக்கு முன், கடலுார் பாபா பள்ளியைச் சுற்றிலும் மழைவெள்ளம் வடியாமல் இருந்தது. தண்ணீரை வடியச் செய்ய ஒரு கருவியைக் கண்டுபிடித்தார். அந்தக் கருவியைச் செய்ய இரண்டாயிரம் ரூபாய் செலவு ஆகும் என்றார். பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலன் மூலமாகப் பாபா பள்ளித் தாளாளரை அணுகி இசைவு பெற்றார். கருவியைச் செய்து வெள்ளத்தை வடிய வைக்கும் பணியை அவரே செய்தார். அது அவ்வளவாக வெற்றியைத் தரவில்லை. ஆனாலும் அது ஓர் அறிவியல் முயற்சி! பல தோல்விகளைக் கடந்துதான் அறிவியல் வெற்றிகள் அமைந்தன. 

ஏதாவது புதிது புதிதாகச் சிந்தித்துக்கொண்டே இருந்தார். இலக்கியம், அரசியல், இதழியல், பொதுத்தொண்டு, இயற்கை மருத்துவம், அறிவியல் கருவியாக்கம் என அவருடைய சிந்தனைகள் வளமாக வலம் வந்தன. சிந்தனைகளுக்குச் செயல் வடிவங்களும் தந்தார். பொதுநலமே தன்நலம் என்று வாழ்ந்தார். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்,  ஒளியைத் தந்து, இருளில் வாழ்ந்தவர்களில் இவரும் ஒருவர். 



நக்கீரனை இளம்பருவத்தில் பார்ப்பது போல… அவரின் மகன் வேலவன் இருந்தார். மகன் தன்னைக் காப்பாற்றுவான்; கரைசேர்ப்பான் என்றே நினைத்திருந்தார். 

இரயில் விபத்தில் சிதறிப் போன மகனின் சிதைந்த உடலைப் பார்க்கும் ஒரு தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்? அந்தக் கொடுந்துயரை நக்கீரன் அனுபவித்தார். அதன்பின் அவர், தனக்குள் செத்துக்கொண்டார். ஒரு நடைப்பிணம் போல் நடமாடினார். 

எப்போதும் முகம்மழித்துக் கருப்பு வைரம்போல் மின்னிய நக்கீரன், கடைசி நாள்களில் தாடியோடு இருந்தார். சோகத்தின் விழுதுகள் போலவே இருந்தது அந்தத் தாடியும். 

ஒருவரால் இனிப் பயன் இல்லை என்றான பின், ஒருவரால் நமக்குச் சுமைதான் என்றான பின், அவரை ஒதுக்குவது சமூக நடைமுறை ஆகிவிட்டது. 

வீடும் உறவும் விலகி இருந்தன நக்கீரனை விட்டு. நாடும் நட்பும்கூட பாவனை செய்தன… நக்கீரனைப் பார்த்தும் பார்க்காதது போல்!

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

என்ற பாட்டுக்கு விளக்கம்தான் நக்கீரனின் கடைசி கால வாழ்க்கை!

வாழ்நாளின் கடைசியில் தன் தம்பி ஜெகநாதன் நடத்திய சுற்றுலா அமைப்பகத்தில் தங்கி இருந்தார். அவர் பெற்றோர் வசித்த இடம்தான் அது. அந்த இடத்தில் இருந்துதான் பெற்றோரைப் பிரிந்து சென்றார். கைவிடப்பட்ட நிலையில் தவித்த அவரை, அதே இடத்தில் கொண்டுவந்து சேர்த்தது காலம். பிரிந்து சென்ற மகனைப் பெற்றோரே அரவணைத்துக் கொண்டதுபோல் இருந்தது அந்த வாழ்விடம்.

சேவை செய்தே தேய்ந்த நட்சத்திரம், 2017 டிசம்பர் 4 ஆம் நாள் அன்று உதிர்ந்துவிட்டது. 

நக்கீரனின் படத்திறப்பும் நினைவேந்தலும் மஞ்சக்குப்பம் தூய வளனார் மேல்நிலைப் பள்ளி அருகே இருக்கும் சிறு கட்டடத்தில் நிகழ்ந்தது. இருந்த போது விலகி ஒதுங்கியவர்களும்… இறந்த போது வந்து போற்றினார்கள். என்ன பயன்?

எந்தத் தொண்டையும், யாருடைய உழைப்பையும் எளிதாக மறந்துவிடுவது நமக்கு இயல்பாகிவிட்டது. அப்படித்தான் நக்கீரனை மறந்துவிட்டோம். அல்லது மறந்து வருகிறோம். 

மறத்தல் தகுமோ?


கோ. மன்றவாணன்





Saturday, 8 February 2025

ஞாயிறாய் ஒளி வீசும் தமிழ் அறிஞர்


 

ஞாயிறாய் ஒளி வீசும்

தமிழ் அறிஞர்



முன்சொல் கேளீரோ...

 

தமிழில் இப்படி ஒரு மொழி அறிஞர் இவருக்கு முன் இல்லை. இவருக்குப் பின்னும் இல்லை. எனினும் பாவாணரை அடிஒற்றி மொழியியல் ஆய்வாளர்கள் மிகச் சிலரே உள்ளனர்.

உரிய அளவில் பாவாணரைப் போற்றிக் கொண்டாடத் தவறிவிட்டது தமிழ் உலகம் என்பதில் வருத்தம் உண்டு. தமிழ்படித்த பலருக்கே பாவாணரைத் தெரியவில்லை என்பது பெருந்துயர்.

பாவாணர் யார்? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கும் இந்நுால்.

பாவாணரின் வாழ்வும் பணியும் குறித்து அறிமுகம் செய்கிறது இந்த மின்நுால்.

இந்த வரலாற்றுக் கட்டுரையைச் சங்கொலியில் வெளியிட்ட மக்கள் நேயர் வைகோ, திராவிட வரலாற்று ஆய்வாளர் க. திருநாவுக்கரசு ஆகியோர்க்கு இந்த நேரத்தில் நன்றி.

இந்நுாலைப் படிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தமிழ்ப்பேரறிஞரைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் நேரமும் இருந்தால் படியுங்கள்.

பணிவுடன்


கோ. மன்றவாணன்.

  

 


ஞாயிறாய் ஒளி வீசும்

தமிழ் அறிஞர்

 

ஒருவரை நிரந்தரமாக மறந்துவிடுவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று பொன்னாடை போர்த்துவது; இன்னொன்று நுாற்றாண்டு விழா கொண்டாடுவது என்று கண்ணதாசன் சொன்னதுபோல், தேவநேயப் பாவாணர் மறக்கப்படக் கூடியவர் அல்லர்.

     இவர்  போன்ற மொழிநுால் அறிஞர்கள் இந்த உலகில் மிகமிகக் குறைவு. இவர்க்கு இணையான மொழிநுால் அறிஞர்கள் இதுவரை இல்லை. இனிப் பிறக்கப் போவதும் இல்லை என்ற அளவுக்கு மொழி அறிவில் முத்திரை பதித்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

 


வாழ்க்கைக் குறிப்பு

     திருவள்ளுவர் ஆண்டு 1933 சுறவம் (தை), திங்கள் 26 ஆம் நாள் (07-02-1902) அன்று திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள பெரும்புத்துார் என்ற ஊரில் பாவாணர் பிறந்தார். அவரின் இயற்பெயர் தேவநேசன்.

     அவரின் தந்தையார் பெயர் ஞானமுத்து. தாயார் பரிபூரணம் அம்மையார். தம் ஐந்தாம் அகவையில் தந்தையைப் பறிகொடுத்தார். அடுத்த சில காலத்திற்குள் அன்னையையும் இழந்தார். அதன்பின் தன் மூத்த அக்காவின் பாதுகாப்பில் வளர்ந்தார்.

     பாவாணரின் முதல் மனைவி எசுதர் ஆவார். மணவாள தாசன் என்ற ஆண்மகவை ஈன்ற பிறகு எசுதர் இறந்துவிட்டார். அதன்பிறகு தன் அக்காள் மகள் நேசமணியை மணந்துகொண்டார். தேவநேசன் – நேசமணி இணையர்க்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.

     வறுமைப் புயல்காற்று வீசிய போதும் கல்வி விளக்கை அணையாமல் பாதுகாத்துக் கொண்ட பாவாணர், பள்ளிப் படிப்பு முதல் பல்கலைக் கழகப் படிப்பு வரை கல்வியில் சிறந்து விளங்கினார்.

     பாவாணர், பல்வேறு ஊர்களில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் தமிழாசிரியர் பணியைத் தனித்திறத்தோடு ஆற்றினார். அவர், ஓராண்டு நடுநிலைப் பள்ளியிலும்; இருபத்து இரண்டு ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளியிலும்; பன்னிரண்டு ஆண்டுகள் கல்லுாரியிலும்; ஐந்தாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பணி புரிந்தார்.

 

 கல்வித் தகுதி

    

     தமிழ்ப் புலமைக்காகக் கீழ்க்காணும் கல்விப் பட்டங்களைப் பாவாணர் பெற்று இருந்தார்.

     1.    மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்

     2.    திருநெல்வேலித் தென்இந்தியத் தமிழ்ச்சங்கப்   புலவர்

     3.    சென்னைப் பல்கலைக் கழக வித்துவான்

     4.    பி.ஓ.எல். என்னும் கீழ்க்கலைத் தேர்வு

     5.    கலை முதுவர்

 

     இவற்றில் 1924 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வு எழுதியவர்கள் பலர். ஆனாலும் அந்த ஆண்டு பண்டிதர் தேர்வில் வெற்றி பெற்றவர் பாவாணர் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.

     இதே போல் 1926 ஆம் ஆண்டில் திருநெல்வேலித் தமிழ்ச் சங்கப் புலவர் தேர்வு எழுதியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். அந்த ஒருவர் நம் பாவாணர்தான்.

     அந்தக் காலத்தில் புலவர் – பண்டிதர் – வித்துவான் தேர்வுகள் மிகவும் கடுமையாக இருக்கும். அவற்றில் தேர்ச்சி பெறுவது என்பது எளிதல்ல. அத்தகைய தேர்வுகளிலும் வென்று சிறந்து விளங்கியவர் பாவாணர்.

 


பாவாணர்

என்ற பெயர்

    

     அன்றைய காலக் கட்டத்தில் ஒருவரைத் தமிழாசிரியராகப் பணியில் அமர்த்த வேண்டுமானால், “இவர் தமிழ் கற்பிக்கத் தக்கவர்” என்று புகழ் பெற்ற புலவர் ஒருவர் சான்று அளிக்க வேண்டும்.

     அந்த அடிப்படையில் பண்டிதர் மாசிலாமணி என்பவர், “இவர் தமிழ் கற்பிக்கத் தகுந்தவர்” என்று ஒரு சான்றிதழைத் தேவநேசனுக்கு (பாவாணருக்கு) வழங்கினார். அந்தச் சான்றிதழில் தேவநேசனைத் “தேவநேசக் கவிவாணன்” என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் குறிப்பிட்ட “கவிவாணன்” என்னும் பெயரே பின்நாளில் “பாவாணர்” என்று தமிழில் மாற்றப்பட்டு அவருக்கே உரிய சிறப்புப் பெயராக நிலைத்து வருகிறது.

 

முதல் கட்டுரை

 

     1931இல் “செந்தமிழ்ச் செல்வி” என்னும் இதழில்தான் பாவாணரின் முதல் கட்டுரை வெளியானது. அதன் தலைப்பு, “மொழி ஆராய்ச்சி”. அன்று தொடங்கி, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகச் “செந்தமிழ்ச் செல்வியில்” ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் குவித்தார். பாவாணரின் அறிவுத் திறம் வெளிப்படுவதற்குச் “செந்தமிழ்ச் செல்வி” பெரிதும் துணை புரிந்தது.

     பாவாணர் தம் எழுத்து வல்லமையாலும் ஆய்வுத் திறத்தாலும் 35க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டு உள்ளார்.  அந்த ஒவ்வொரு நூலும் ”முனைவர்” பட்டத்துக்கு உரியது. அத்தனையும் தமிழுக்குக் கிடைத்த அரிய கருவூலங்கள்.

  மறுக்க முடியாதபடி- மறக்க முடியாதபடி- தமிழின் அனைத்துப் பெருமைகளையும் நிலை நிறுத்திய பெருமை பாவாணரின் நூல்களுக்கு உண்டு.

          இத்தனை நூல்கள் எழுதித் தொண்டாற்றிய பாவாணர், எந்த ஒரு நூலிலும் தன் ஒளிப்படத்தை (Photo) வெளியிட்டுக் கொண்டதில்லை.

          தமிழ்தான் அவர் முகம் என்பதால், தனியாக ஒளிப்படம் எதற்கு?

 


பன்மொழிப் புலமை

    பாவாணரின் பல்வேறு ஆற்றல்களில் ஓங்கி நிற்பது, அவருடைய பன்மொழிப் புலமை.

     மொழி ஆராய்ச்சியில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் தேவநேயப் பாவாணர். அதனால்தான் “மொழிநுால் மூதறிஞர்” என்றும் மொழி ஞாயிறு” என்றும் பாராட்டப்படுகின்றார்.

     மொழி ஆராய்ச்சி செய்வது என்பது எளிதான ஒன்றன்று. எல்லாராலும் செய்யக் கூடியதும் அன்று. மொழி ஆய்வு செய்வதற்கு- வரலாறு, மாந்தர் இயல், அரசியல், தொல்லியல், பொருளியல் போன்ற பல்துறை அறிவு தேவைப்படுவதோடு பன்மொழிகளையும் அறிந்து இருக்க வேண்டும்.

     அதற்காக அவர் பல்வேறு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சீனம், சமற்கிருதம், அரபு, ஆங்கிலம், செருமன், பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம், மராட்டியம், இந்தி  உள்ளிட்ட 23 மொழிகளில் இலக்கண இலக்கியப் புலமையைப் பெற்று இருந்தார். அவருடைய ஆய்வுகளில் 58 மொழிகளில் இருந்து எடுத்துக் காட்டுகளைக் கையாண்டு இருக்கிறார்.

     அவர் இத்தனை மொழிகளை அறிந்து இருந்தார் என்றால், அவருடைய முயற்சி எத்தகையது? அவருடைய ஆற்றல் எத்தகையது? அவருடைய அளவிட முடியாத அறிவு எத்தகையது? என்று எண்ணிப் பார்க்கும் போது வியப்பின் உச்சிக்கே சென்றுவிடுகிறோம்.

 

 பாடல் – இசை

    

     பாவாணர் இளமையிலேயே பாடல் எழுதும் திறம் படைத்தவராக இருந்தார். பல்வேறு யாப்புகளில் ஏராளமான பாக்கள் எழுதி உள்ளார். இசைப் பாடல்கள் எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். “இசைத்தமிழ்க் கலம்பகம்” “இசையரங்கு” “இன்னிசைக் கோவை” ஆகியவை பாவாணரின் இசைப்பாடல் தொகுப்புகள் ஆகும்.

     இசைப் பாடல்கள் எழுதுவது மட்டும் இன்றி, அவற்றைத் தாமே வாய்விட்டுப் பாடுவதிலும் சிறந்து விளங்கினார்.

     இந்தி எதிர்ப்புப் பாடல்களையும் தமிழ் உணர்வு ஊட்டும் பாடல்களையும் தெருதோறும் பாடிச் சென்று தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தார். தமிழர்களைக் கிளர்ச்சியுறச் செய்தார்.

     மன்னார்குடியில் இருந்த யாழ்புலவர் இராச கோபாலரிடம் முறையாக இசை பயின்றார். கின்னரம் (பிடில்), வீணை, இசைப்பெட்டி (ஆர்மோனியம்), மத்தளம் ஆகிய இசைக் கருவிகளை நேர்த்தியாக இசைப்பதில் தேர்ச்சி பெற்று இருந்தார்.

     தம் துணைவியார் மறைந்த போது துயரத்தில் மூழ்கிய பாவாணர் கின்னரத்தின் துணையைத்தான் நாடினார்.

 

  

தமிழா…?

மதமா…?

    

   கிறித்துவ மதத்தைச் சார்ந்த பாவாணர், மதத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தமிழுக்கே முதல் இடம் கொடுத்தார். அவருடைய பிள்ளைகளுக்கு அவர் சூட்டிய அழகு தமிழ்ப் பெயர்களே அதற்குச் சான்று. அந்தத் தமிழ் மணக்கும் பெயர்கள் இதோ…

     மணவாள தாசன்

     நச்சினார்க்கினிய நம்பி

     சிலுவையை வென்ற செல்வராயன்

     அருங்கலை வல்லான்

     மடம் தவிர்த்த மங்கையர்க்கு அரசி

     மணிமன்ற வாணன்

     பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்

 


சொல்லாக்கம்


    

இக்காலத்தில் ஆங்கிலப் போலித் தனத்துக்குத் தமிழன் அடிமை ஆகிவிட்டான். அதனால் தமிழ், தமிங்கிலம் ஆனது.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ் நுால்களில் தமிழைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை இருந்தது. திட்டமிட்ட சமற்கிருதக் கலப்பால் தமிழ் “மணிப்பவழ நடை” போட்டு நொண்டிச் சறுக்கியது.

இந்த இழிநிலையைத் துடைத்து எறிவதற்காக….

சமற்கிருதம் மற்றும் பிற மொழிகள் துணையின்றித் தமிழ் தனித்து இயங்க வல்லது என்று தமிழ் அறிஞர்கள் மெய்ப்பித்துக் காட்டினர்.

திராவிட இயக்கத் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களின் எழுத்திலும் பேச்சிலும் தூய தமிழ்ச் சொற்களைக் கையாண்டனர்.

இயக்கத் தோழர்கள் பலர், பெற்றோர் சூட்டிய பிறமொழிப் பெயர்களைத் துறந்து தமிழ்ப்பெயர்களைச் சூட்டிக் கொண்டனர்.

அப்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர், தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பியது.

எனவே தமிழ் மறுமலர்ச்சி பெற்றது.

சமற்கிருதத்தின் பிடியில் சிக்கி மூச்சுத் திணறிய தமிழ் மீட்டு எடுக்கப்பட்டது.

தமிழை மீட்டு எடுப்பது மட்டுமன்று. அந்தத் தமிழைப் புதுப்பிக்கும் பணியையும் செய்வதுதான் தமிழ் வளர்ச்சிக்குப் பெருமை சேர்க்கும் என்பதை உணர்ந்தவர் பாவாணர். தமிழுக்குப் புதுப்புதுக் கலைச் சொற்களைப் படைத்து அளித்தார் அவர்.

அந்தக் காலத்தில் பல தமிழ்ச் சொற்களே, வேற்று மொழிச் சொற்களாகக் கருதப்பட்டன. அத்தகைய சொற்களுக்கு வேர் மூலம் கண்டு, அவை தமிழ்ச் சொற்களே என விளக்கம் அளித்து, நுாற்றுக் கணக்கான தமிழ்ச்சொற்களை மீட்டுத் தந்தவர் பாவாணர்.

என்று தோன்றியது என்று தெரியாத தொன்மை வாய்ந்தது நம் தூய தமிழ்மொழி. உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் உயிரோடு உலா வரும் மொழி தமிழ். கணினி காலத்துக்கு ஏற்பவும் தன்னைத் தக்க வைத்துக் கொண்ட மொழி, தமிழ்மொழி. இந்த மொழி இன்னும் இளமையோடும் இனிமையோடும் வாழ வேண்டுமானால், நாளுக்கு நாள் வளர்ந்துவரும் அறிவியலுக்கு ஏற்ப- வாழ்வியலுக்கு ஏற்பப் புதிய புதிய சொற்களைத் தமிழுக்குப் படைத்து அளிக்க வேண்டும்.

“சென்சஸ்” என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் “சிசுபால விருத்த ஸ்திரி புருஷ விருத்தி சங்கியா” என்ற நீ… ண்…ட…. தமிழ் அல்லாத சொல்தொடரைத் தமிழில் புகுத்திய கொடுமை தமிழ்நாட்டில் நிகழ்ந்தது. சென்சஸ் என்ற அந்தச் சொல்லுக்குப் பாவாணர் தந்த தமிழ்ச் சொல் “குடிமதிப்பு”

புதிய சொற்கள் ஆயிரக் கணக்கில் சேரச் சேர மொழி மேலும் மேலும் வளம் அடையும். அதற்காகத்தான் பாவாணர் அல்லும் பகலும் உழைத்தார். இன்றும் அவர் அடிஒற்றிப் புதிய புதிய சொல்லாக்கங்கள் தமிழுக்கு வந்த வண்ணம் உள்ளன. மருத்துவக் கலைச் சொற்கள், பல்துறைக் கலைச் சொற்கள் எல்லாம் தனித்தமிழில் படைக்கப் படுகின்றன.

இப்படிப் புதிய சொற்களை உருவாக்குவதற்குப் புதிய மலர்ச்சாலை அமைத்து வழி காட்டியவர் பாவாணர்.

 

சொல்லாக்க

வழிமுறைகள்

    

தமிழில் புகுத்தப்பட்ட பிறமொழிச் சொற்களுக்கு உரிய சரியான பொருத்தமான தமிழ்ச் சொற்களை அறிவதில் அவர் மூன்று வழிமுறைகளைப் பின்பற்றினார்.

 

1.     பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்தே சரியான சொற்களைக் கண்டுபிடித்துப் பயன்படுத்துதல்.

2.      சிற்றுார்ப் புறங்களில்… மலைப்பகுதிகளில்…     குறிப்பிட்ட வட்டாரங்களில் மக்கள் பேசும்    வழக்குத் தமிழில் இருந்து சரியான சொற்களைக் கண்டுபிடித்துப்   பயன்படுத்துதல்.

3.                     புதயதாகச் சொற்களைப் படைத்து அளித்தல்

 

புதிய கலைச் சொற்களை உருவாக்குவதில் ஏறத்தாழ இருபது முறைகளை வகுத்துக் கொடுத்து உள்ளார். தமிழுக்கு எட்டு இலக்கம் (இலட்சம்) சொற்களைத் தொகுத்தும் உருவாக்கியும் தருவேன் என்று ஒருமுறை பாவாணர் சொல்லி உள்ளார். இதில் இருந்து, மொழித்துறையில் எத்துணை ஈடுபாட்டுடன் அவர் உழைத்து இருக்கிறார் என்பதை நாம் உறுதியாக உணர முடியும்.

தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சிற்றுார் மக்களிடத்தில்… மலைவாழ் மக்களிடத்தில் தங்கி இருந்து- அவர்களோடு பழகிப் பேசி- அவர்களின் இயல்பான பேச்சில் இருந்து  அரியபல தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து தொகுத்து உள்ளார் பாவாணர். இதற்காக அவர், குடும்பத்தை மறந்து, வருமானத்தைத் துறந்து, எத்தனை இரவு பகல் செலவிட்டு இருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்.

 

 ஒரு நிகழ்ச்சி

     

சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவதற்காகப் பாவாணரை ஓர் அன்பர் அழைத்துச் சென்றார். அப்படி அழைத்துச் செல்லும் போது, வழியில் ஒரு பாம்பாட்டி மக்களைக் கூட்டி வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருந்தார். அதைக் கண்ட பாவாணர், அந்தப் பாம்பாட்டியின் நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு நின்று இருந்து பாம்பாட்டியின் பேச்சை உன்னிப்பாகக் கவனித்தார். பாம்பாட்டி, நிகழ்ச்சியை முடித்துக் காசு வாங்கிக் கொண்டு “மூட்டை” கட்டும்வரை பாவாணர் அங்கேயே இருந்தார்.

இதுபற்றி அன்பர், “எவ்வளவோ பெரிய அறிஞர் நீங்கள். இப்படித் தெருவில் நின்று  பாம்பாட்டியின் வித்தையைப் பார்க்கிறீர்களே” என்று கேட்டார்.

“தம்பி, ஏட்டில் காணக் கிடைக்காத அரியபல தமிழ்ச் சொற்களை இந்தப் பாம்பாட்டி இயல்பாகப் பேசக் கூடும். எனவேதான் அந்தப் பாம்பாட்டியின் பேச்சை உன்னிப்பாகக் கேட்டேன். பாம்பாட்டி பேசியதில் இருந்து, இன்றுகூட சில சொற்களைக் குறித்துக் கொண்டேன். இவை தமிழுக்கு வலுவூட்டும்” என்றார்.

 

 சொல்லுக்கு


வரலாறு

    

இந்த உலகில் பிறந்த எல்லாருக்கும் வரலாறு உண்டு. அதுபோல் மொழியில் தோன்றிய ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வரலாறு உண்டு.

ஒவ்வொரு சொல்லும் எப்படித் தோன்றி வளர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்து விளக்குவதே சொல்பிறப்பியல் ஆகும். அத்தகைய அரிய துறையில் தனித்த பேரரறிவும் பேராற்றலும் பெற்று இருந்தவர் பாவாணர்.

எனவே, செந்தமிழ்ச்    சொற்பிறப்பியல் அகரமுதலியை உருவாக்குவதே தம் வாழ்நாளின் குறிக்கோள் ஆகக் கொண்டிருந்தார் பாவாணர்.

அதற்குப் பொருள்செலவு மிகுதி ஆகும். ஏழை அறிஞரால் எப்படி இந்தப் பணியை நிறைவேற்ற முடியும்? இதற்காகப் பாவாணரின் மாணவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒரு திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தினார்.

     அதன்படி, தமிழ் அன்பர்கள் மாதம் தோறும் கொடுத்து வந்த குறிப்பிட்ட தொகையைக் கொண்டு அப்பணியைச் செய்து வந்தார்.

     இந்த நிலையில் 1974 ஆம் ஆண்டில் அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தை” உருவாக்கி, அதற்குப் பாவாணரை இயக்குநராக அமர்த்தினார். இந்தத் திட்டம், பாவாணருக்காவே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆனால் அந்தப் பணி முழுமை அடையவில்லை என்பது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பேரிழப்பு ஆகும். அவர் முடித்து வைத்திருந்த அகர முதலியின் ஒரு பகுதியைக் கூட நூலாகப் பார்க்கும் வாய்ப்புப் பாவாணருக்குக் கிடைக்கவில்லை. பாவாணர் மறைந்த பிறகே, “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியின் முதல் மடலத்தின் முதல் பகுதி வெளியிடப்பட்டது.

 


சிறப்புக் குறிப்புகளில்

சில…

 

1. இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது திருவேங்கடமும் திருத்தணியும் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற எல்லை காக்கும் போராட்டத்தில் பாவாணர் ஈடுபட்டார்.

2.     இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது இயன்றவரை பங்கு கொண்டார். தம் வீட்டில் தமிழ்க்கொடி ஏற்றினார். இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். “இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?” மற்றும் “The Language Problem of Tamilnadu and its Logical Solution”  ஆகிய நூல்களை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

3.      ஆட்சிச் சொல் தொகுப்பில் பங்கேற்றார்.

4.  தொடக்கத்தில் ஆங்கிலப் பற்று மிக்கவராக இருந்தார். எருதந்துறை (ஆக்சுபோர்டு) பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருந்தார்.

5.  சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதியின் குற்றம் குறைகளை அம்பலப்படுத்தி அதனை நூலாகவும் வெளியிட்டார்.

6.    தமிழ், உலகின் முதல்மொழி என்பதையும் செவ்வியல் மொழி என்பதையும் உலக மொழிகள் பலவற்றுடன் ஒப்பிட்டுக் காட்டி, ஆய்வு நோக்கில் நிலை நிறுத்தும் “The Primary Classical Language of the World” என்ற ஆங்கில நூலை எழுதி உள்ளார்.

 7.    பல அறிஞர்கள் எழுதுவார்கள்… பேசுவார்கள். அத்தோடு சரி. செயல்பட மாட்டார்கள். ஆனால் பாவாணர் தம் எண்ணங்களையும்  செயல் திட்டங்களையும் நிறைவேற்ற “உலகத் தமிழ்க் கழகம்” என்ற அமைப்பை நிறுவி, அதன் தலைவராக இருந்து பணி ஆற்றினார். தமிழகம், ஆந்திரம், கருநாடகம், புதுச்சேரி முதலிய பல இடங்களில் ஏராளமான உலகத் தமிழ்க் கழகக் கிளைகள் செயல்பட்டன.

8. 1943இல் திருச்சியில் “தமிழ்ப் புலவர் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

9.    தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடு நடத்தினார்.

10.   முதன்மொழி என்ற மாத இதழை நடத்தினார்.

11.   தென்மொழி ஏட்டின் சிறப்பு ஆசிரியராக இருந்தார்.

12.  பாவாணரின் அனைத்து நூல்களும் நாட்டு உடைமை ஆக்கப்பட்டு உள்ளன.

 

பாவாணரின்

ஆய்வு முடிவுகளில் சில…

 

1.    மாந்தன் பிறந்தகம், குமரிக் கண்டமே.

2.    உலக முதல் மாந்தன் தமிழனே.

3.    தமிழ், குமரிக் கண்டத்தில் தோன்றிய ஞால முதல்        மொழி.

4.    தமிழ், திராவிட மொழிகளின் தாய்.

5.    தமிழ், உலக மொழிகளுக்கு மூலம்.

6.    சமற்கிருதத்தில் ஐந்தில் இரு பகுதி தமிழ்.

7.   தமிழில் கலந்துள்ள வடசொற்கள் எல்லாம் தேவை அடிப்படையில் விரும்பிக்      கடன் கொண்டவை அல்ல. அவை, தமிழைக் கெடுப்பதற்கு என்றே ஆரியரால்      புகுத்தப்பட்டவை.

8.    பிறமொழித் துணை இன்றித்  தமிழ் தனித்து இயங்கும்; தழைத்து ஓங்கும்.

9.    மொகஞ்சோதரா, அரப்பா நாகரிகம் பழந்தமிழ்   நாகரிகமே.

 

இறுதிப் பேச்சும்


இறுதி மூச்சும்

    

     கம்ப ராமாயணம், மகா பாரதம் மற்றும் இலக்கியங்களில் இருந்து கதை சொல்லுவோர்… நயம் பாராட்டுவோர்தாம் இந்த நாட்டில் “தமிழ் அறிஞர்களாக” வலம் வருகின்றனர். அவர்கள் போல் அல்லாமல், உண்மையாகவே தமிழ் அறிஞராக வாழ்ந்து, தமிழ் அறிஞர் என்பதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார் பாவாணர்.

     இறுதியாக அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு ஆகும். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சிறப்பாக நடத்திய மாநாடு அது. அந்த மாநாட்டில் “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். அதன்பின் பாவாணருக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

     16-01-1981 அன்று வைகறை 0-30 மணிக்குப் பாவாணரின் உயிர் பிரிந்தது. ஆனால், “பாவாணரின் தமிழ்” நம்மைவிட்டுப் பிரியாது.

     அன்றைய தமிழக முதல்வர்  எம்.ஜி.ஆர். அவர்கள், சென்னை மாவட்ட மைய நுாலகத்துக்குத் தேவநேயப் பாவாணர் நூலகம் எனப் பெயர் சூட்டினார்.

 

 

பாவாணரின்


நினைவைப் போற்ற…

 

1.    தாய்மொழியாம் தமிழ்மீது பற்றுக் கொள்வோம்.

2.    குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டுவோம்.

3.    பிறமொழி கலவாது தமிழ் பேசுவோம். எழுதுவோம்.

4.   புதிய சொற்களைப் படைத்துத் தமிழை மேலும் மேலும் வளப்படுத்துவோம்.

5.    மொழி ஆய்வுப் பணி தொடரத் துணை நிற்போம்.

6.    தமிழ்வழிக் கல்விக்கு வழி செய்வோம்.

7.    அனைத்துத் துறைகளிலும் தமிழை உயர்த்துவோம். நாமும் உயர்வோம்.

 

 


தமிழ்அயரத் தாழ்ந்தான் தமிழன்; அவனே


தமிழ்உயரத் தான்உயர்வான் தான்.

                     - பாவாணர்