Showing posts with label நூல் மதிப்பீடு. Show all posts
Showing posts with label நூல் மதிப்பீடு. Show all posts

Sunday, 1 October 2023

இரா. இராதாகிருஷ்ணன்

 

இளமை எனும் பூங்காற்று... 

இரா. இராதாகிருஷ்ணன் பக்கமே வீசுகிறது.


இரா. இராதாகிருஷ்ணன்

 

கடலூர் மாநகராட்சியில் வன்னியர்பாளையம் என்றொரு பகுதி உள்ளது. ஒரு காலத்தில் இங்குக் கிளை பரப்பாத அரசியல் கட்சிகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அரசியல் சிந்தனை தீப்பற்றி எரிந்த மண் இது. இதைக் கடலூரின் கிரேக்க பூமி என்று நீதிபதி மகிழேந்தி விவரிப்பார். இங்குதான் இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்து வளர்ந்தார். இங்குப் பிறந்ததாலோ என்னவோ “ஏன்?” என்ற கேள்வி கேட்காத ஒருநாள்கூட இவர் வாழ்வில் இருந்ததே இல்லை.

இவர் எடுக்கும் முயற்சிகளையும், வென்று முடிக்கும் செயல்களையும் பார்த்தால்... இவரே ஒரு நடமாடும் தன்னம்பிக்கை நூலகம் என உறுதியாகச் சொல்லலாம்.

இன்றைய சிந்தனைகூட இவருக்குப் பழைமை ஆனதாகத் தோன்றுமோ என்னமோ... நாளைய உலகுக்கு இன்றே தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்.

இவருக்கு எண்பத்து ஐந்து வயது என்றால் யாரும் நம்ப மாட்டீர்கள். உடை அழகையும் நடை அழகையும் உற்று நோக்கினால் இருபது வயது இளைஞராகவே திகழ்கிறார். அது என்னவோ தெரியவில்லை... இளமை எனும் பூங்காற்று எப்பொழுதும் இராதாகிருஷ்ணன் பக்கமே வீசுகிறது.

வடிநிலம் என்ற பெயரில் கடலூர் மாவட்ட வரலாற்றைச்  சிறப்பாக எழுதி உள்ளார். இதற்காக அவர் ஆற்றிய களப் பணிகளும் தகவல் தேடல்களும் ஏராளம்.

பல நூல்களை எழுதித் தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகிறார். தேநீர்க் கோப்பையுடன் இவரின் நூலைப் படிக்கத் தொடங்கினால், தேநீர் பருக மறந்து விடுவோம். நாவில் விழுந்த தேன், தானாகவே நழுவித் தொண்டையில் இறங்குவதுபோல், இவரின் எழுத்து நடை எளிமை ஆனது; இனிமை ஆனது.

“முதலில் இருந்து” என்ற இவரின் தன்வரலாற்று நூலைப் படித்தால் இவரின் உயரம் காணலாம்.

சின்னம்சிறு பருவத்தில் பெரியார் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, அவரோடு சென்றுவிட்டார். 'படி' என்ற அவரின் அறிவுரை ஏற்றுத் திரும்பி வந்து படித்தார். அரசுப் பணியில் சேர்ந்தார். பல உயர் பதவிகளை வகித்தார். 39 ஆண்டுக் காலம் அரசுப் பணி ஆற்றினார். திரு. வெ. இறையன்பு, திரு. உ. சகாயம் போன்ற அதிகாரிகளிடம் பணியாற்றிப் பாராட்டுகள் பெற்றார்.

ஒருவர் 1330 திருக்குறள்களையும் பின்பற்ற முடியாமல் போகலாம். ஏதேனும் ஒரு குறளைத் தேர்ந்து எடுத்து, அதன்படி வாழ்ந்தாலே போதும். உயர்வு நிச்சயம். அப்படி ஒரு குறளுக்கு வாழும் முறையால் உரை எழுதி வருகிறார் நம் இராதாகிருஷ்ணன். அந்தக் குறள் இதுதான்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி,தன்

மெய்வருத்தக் கூலி தரும்.

 

கோ. மன்றவாணன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


பழ. ஆறுமுகம்

கவிஞர் பழ. ஆறுமுகம் அவர்களுக்குப்

பாராட்டு உரை

 

சிலருக்கு உணவுகூடத் தேவை இல்லை. கவிதை எழுதிப் பசியை மறந்துவிடுவார்கள்.

சிலருக்குக் காற்றுகூடத் தேவை இல்லை, கவிதைப் புத்தகம் இருந்தால் போதும். அதையே (சு)வாசித்துக் கொள்வார்கள்.

அந்தச் சிலரில் ஒருவர்தான் பழ. ஆறுமுகம்.

உயிரும் உடலும் சேர்ந்து இருப்பது இயற்கை. கவிதையும் உடம்பும் சேர்ந்த அதிசயம் பழ. ஆறுமுகம்.

பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் கவிதையும் ஆறுமுகமும் என்று சிவன் சிவாஜியே வந்து சாட்சி சொல்லிவிடுவார்.

இப்படிக் கவிதைக்காக வாழும்.... கவிதையால் வாழும் பழ. ஆறுமுகம் அவர்கள் எழுதி உள்ள “பாட்டருவி” என்ற கவிதை நூலைப் படித்தேன். மெய்யாகவே தமிழ் அருவியில் குளித்து மகிழ்ந்தது போல் மனம் குளிர்ந்தது.

உவமைக் கவிஞர் சுரதா, புதுக்கவிஞர் மு. மேத்தா, முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி போன்ற கவி ஆளுமைகளின் தலைமையில் கவி பாடி, புகழ் சூடி உயர்ந்து நிற்பவர் பழ.ஆறுமுகம்.

ஒரு கவிதையில்....

செருப்புத் தைக்கும் தொழிலாளரின் வறுமை வாழ்வை விளக்குகிறார். அவருக்கு என்ன வருவாய் கிடைக்கும் என்றால், “விழிவடிக்கும் கண்ணீரே வருவாய்.” என்கிறார்.

அதே கவிதையில்,

ஓலையிலே மனுஎழுதிக் கொடுத்த போதும்

ஒருபயனும் இருந்ததில்லை; ஓட்டை வீழ்ந்த

சேலையினால் சுவர்எழுப்பிச் சேர்ந்து வாழ்வோம்!

சீலைகூட உடுக்காத குழந்தை ஆவோம்! என்று

ஏழைகளின் வாழ்வைப் படம் பிடித்துச் சொல்லி இருக்கிறார். 

ஒருவர் கவிஞர் என்றால், அவருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணம்,  கருணை. அது நிறையவே இருக்கிறது பழ. ஆறுமுகம் அவர்களிடம். அதனால்தான் அவர் கவிதைகளில் மனிதம் ஆராதிக்கப் படுகிறது.

இந்த நூலைப் படிப்பதற்கு முன் அறிந்தேன், இவர் பழ. ஆறுமுகம் என்று.

படித்த பிறகு உணர்ந்தேன், இவர் தமிழின் நூறுமுகம் என்று! 

பாட்டருவி நூலைப் படியுங்கள். உங்கள் பாராட்டைப் பதுக்கி வைக்காமல் பழ. ஆறுமுகம் அவர்களிடம் சொல்லுங்கள். பாராட்டு ஒன்றுதானே கவிஞன் சேர்த்து வைக்கும் சொத்து,சுகம்! 


கோ. மன்றவாணன்

 

Saturday, 4 June 2022

மனத்தை வெளுக்கும் மருந்து




மனத்தை வெளுக்கும் மருந்து

கோ. மன்றவாணன்

யாப்பு இலக்கணத்தில் மணிமுடியாக ஒளிர்வது வெண்பா. அதில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா போன்ற வகைகளும் உண்டு. குறிப்பாக நேரிசை வெண்பாதான் பெரிதும் கோலோச்சி வந்துள்ளது.

வெண்பா பாடுவது மிகவும் கடினம் என்று பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தொடக்கத்தில் எழுதும் போது தளை பார்த்து எழுத வேண்டி இருக்கலாம். எழுத எழுத இயல்பாகவே தளை தட்டாமல் வெண்பா தானாகவே வரும். தேனாகவே சுவை தரும்.

திரைப்பட நடிகரும் உரையாடல் எழுத்தாளருமான கிரேசி மோகன் பொறியியல் படித்தவர். மிக எளிமையாக இனிமையாக வெண்பாக்களை எழுதிப் பலரையும் கவர்ந்தார். பேச்சு வழக்கில் வெண்பாக்களை எழுதிப் பேர் வாங்கினார் ஆகாசம்பட்டு சேசாசலம். வெண்பா எவ்வளவு எளிமையானது இனிமையானது என்பதை மெய்ப்பித்தவர்கள் இவர்கள்.

நளவெண்பா எழுதியவரை வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி என்று தமிழ் இலக்கிய உலகம் இன்றும் புகழ்ந்து கொண்டாடுகிறது. நம் காலத்தில் பேராசிரியர் சுப்புராமன் என்பவர் அறிவியல் விதிகளை வெண்பாவில் எழுதி அசத்தி இருக்கிறார்.

அந்த வகையில் கடலூர் மண்ணுக்கும் வெண்பாவுக்கும் அண்மைக் கால வரலாறுகள் சில உண்டு.

கரூரில் பிறந்து இருந்தாலும் கடலூரில் வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் கரூர் சேதுராமன். திருக்குறள் போலப் புதுக்குறள் என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதில் திருக்குறளை மிஞ்ச வேண்டும் என்பதற்காக 1331 குறள்களை எழுதி உள்ளார். தன்னுடைய நாள்குறிப்புகளை வாழ்வின் இறுதிவரை வெண்பாவில் எழுதி வந்தார். அவ்வாறு எழுதிக் குவித்தவை பல்லாயிரம் வெண்பாக்கள்.

நாட்டரசன் கோட்டையில் பிறந்தாலும் கடலூரில் வாழ்ந்து தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வருபவர் கவிஞர் க. காத்தப்பன் ஆவார். இவரும் 3333 குறள்களைக் கொண்ட காத்தப்பர் குறள் என்ற நூலை வெளியிட்டு உள்ளார். ஏராளமான வெண்பாக்களை எழுதி உள்ளார். பல்வேறு இதழ்கள் தந்த ஈற்றடிகளுக்கு இவர் எழுதிய வெண்பாக்கள் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வெண்பா ஐயாயிரம் என்றொரு நூலையும் வெளியிட உள்ளார்.

‘கண்ணுடைய நாயகியாம் காண்’ என்ற ஒரே ஈற்றடி கொண்டு 4000 நேரிசை வெண்பாக்கள் எழுதி இருக்கிறார். இன்னும் எழுதுவார் என்று நினைக்கிறேன். ஒரே ஈற்றடிக்கு ஏற்ப இத்தனை பாக்களுக்கும் எப்படி இவரால் எதுகை அமைக்க முடிந்தது என்று வியக்காமல் இருக்க முடியாது. இந்த அருஞ்செயலை முறியடிக்க இனி யாராலும் முடியாது.

புதுவை மாநிலம்  கலிதீர்த்தாள் குப்பம் கிராமத்தில் பிறந்து இருந்தாலும் கடலூரில் வாழ்ந்து கவிதைத் தொண்டு ஆற்றியவர் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி. வெண்பூக்கள் என்ற தலைப்பில் ஓர் அரிய நூலைப் படைத்து உள்ளார். எத்தனை வகை வெண்பாக்கள் இருக்கின்றனவோ அத்தனை வகையிலும் எழுதி இருக்கிறார். நூலாக ஆவதற்கு முன்பு, சங்கப் பலகை என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்தினார். வெண்பூக்களில் அதாவது வெண்பாக்களில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சங்கப் பலகையில் பேசச் செய்தார். தமிழ் அறிஞர்கள் சொன்ன குறைகளை நீக்கியும் அறிவுரைகளைப் பின்பற்றியும் வெண்பூக்களை வெளியிட்டார். சங்க(க்) காலத்தில் இப்படித்தான் புலவர்கள் கூடிப் பாடல்களின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து உள்ளனர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். சமுத்திரம் என்ற சமற்கிருதச் சொல்லுக்கு உரிய தமிழ்ச்சொல்லான கடலைக் குறிக்கும் கடலூரில் வாழ்ந்தார். இங்குதான் பெரும்பாலான நூல்களை எழுதினார். அந்த நூல்களில் ஒன்றுதான் உலகியல் நூறு. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

மேற்சொன்ன கவிஞர்கள் வரிசையில் கடலூர் மண்ணில் பிறந்த தமிழ் இயலன் அவர்களும் வந்து சேர்கிறார். இயற்பெயர் தனசேகரன் என்றாலும் நாள்தோறும் தமிழ்ச்செல்வம் சேர்க்கும் தமிழ்சேகரன் இவர்.

கொரொனா காலத்தில் உலகம் முடங்கிப் போனது. ஆனால் இவர் முடங்கவில்லை. முன்னிலும் சிறந்து செயல்பட்டார். வலையரங்கு வழியாக நாள்தோறும் தமிழ் சார்ந்த கூட்டங்களை நடத்தினார். நடத்தியும் வருகிறார். இவர் நடத்தும் தமிழ்நிகழ்வுகள், ஆயிரத்தைத் தொட உள்ளன.

இவர் தமிழ்ப்பணி செய்யாத நாளில்லை. இவர்போல் தமிழ்ப்பணி செய்ய ஆளில்லை என்று சான்று அளிக்கலாம்.

தமிழுக்காக வாழும் இவருக்குத் தமிழக அரசு விருது அளிக்கும் நாள் விரைவில் வரும். தமிழுக்கான உயர் அமைப்புகளில்  தலைமை தாங்கும் காலமும் வரும்.

இவர் எழுதி வெளியிட்டு உள்ள “நண்பா உனக்கொரு வெண்பா” என்ற நூல் தமிழ் அன்பர்கள் இடையே பெரும் அளவில் பேசு பொருளாக உள்ளது. அந்நூல் குறித்து என்னுள் எழும் கருத்துகளை இங்கே பதிவிடுகிறேன்.

‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்பில் நாள் ஒன்றுக்கு ஒரு வெண்பா” என்ற கணக்கில் நூறு நாள்களில் நூறு வெண்பாக்களை எழுதி முடித்துள்ளார். அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டு உள்ளார். இப்படி நூல் எழுதுகிற போது கடவுள் வாழ்த்தாக ஒரு பாடலைச் சேர்த்து, நூற்று ஒரு பாடல்களாக வெளியிடுவது முற்காலப் புலவர்களின் வழக்கம். தேவை அற்ற அந்த வழக்கத்தைத் தவிர்த்து உள்ளார். முதல் பாடலில் உலகம் என்ற சொல்லை இடம்பெற வைப்பதும் பழங்கால வழக்கம். அதனையும் விலக்கி உள்ளார்.

முதல் வெண்பாவிலேயே தமிழைப் பாடுகிறார். தமிழை வாய்மொழியாகப் பார்க்காமல் வாழ்வியலாகப் பார்க்கிறார். வாழ்ந்தும் காட்டுகிறார். வாழ வழியும் காட்டுகிறார். தமிழ் உயர, தமிழன் உயர்வான் என்ற பாவாணர் கருத்து இங்கே நினைவுக்கு வருகிறது.

நூலில் நூறு வெண்பாக்கள் உள்ளன. அதனால் ‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்புப் பொருத்தம் உடையதா எனச் சிலர் கேட்கக் கூடும். முகநூல், வினவி ஊடாக ஒவ்வொரு நாளும் ஒரு வெண்பா எழுதி இருக்கிறார். நண்பருக்கு நாளும் ஒரு வெண்பா என்று தொடர்ந்து எழுதி வந்ததால், இந்தத் தலைப்புப் பொருத்தம் உடையதுதான். தென்கச்சி சாமிநாதன் ‘இன்று ஒரு தகவல்’ எனப் பேசி வந்தார். நூலாகும் போது அதில் பல தகவல்கள் இருந்தாலும் ‘இன்று ஒரு தகவல்’ என்ற தலைப்பில்தான் வெளியானது. ‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்பில் உள்ள எதுகை எடுப்பாகவும் சிறப்பாகவும் உள்ளது. தலைப்புக்கு ஒரு கவர்ச்சியையும் தருகிறது.

தன்முன்னேற்ற வாழ்க்கைக்கும் சமூக மேன்மைக்கும் தமிழ் உயர்வுக்கும் பயன்படும் கருத்துகளை நண்பருக்குச் சொல்லும் வகையில் வெண்பாக்களை அமைத்து இருக்கிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும் போது, நம் வாழ்வில் சந்தித்தவை நினைவுக்கு வரும். நம்மைச் சரிசெய்து கொள்ள ஊக்கம் தரும்.

எப்போதும் நேர்ப்பாங்காகச் சிந்திப்பவர் தமிழ் இயலன். அவரின் முன்னேற்றத்திற்கு இதுவே அடிப்படை என்று கருதுகிறேன். மென்போக்குக் கொண்டவர் இவர் என்றாலும் தமிழுக்குத் தீங்கு வருகுது என்றால் போர்வாளைத் தூக்கிவிடுகிறார்.

வீட்டுப் பணியில் இருவரும் என்ற தலைப்பில் ஒரு வெண்பா இருக்கிறது. அதை ஏற்று நடந்தால் போதும். இல்வாழ்க்கை நல்வாழ்க்கை ஆகும். அந்த வெண்பா இது.  

ஆக்கிடும் வேலைகள் அன்புடன் செய்திட;

தேக்கிய குப்பை பெருக்கிட; – ஊக்கமாய்த்

தூக்கிப் பிடித்திட; தாய்மையைப் போற்றிட

வாக்குரைக்கும் ஆண்களுக்கென் வாக்கு.

ஒரு நூலோ ஒரு கவிதையோ படித்தால் நம்முள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இந்த வெண்பா படித்தேன். அந்த நாளில் இருந்து வீட்டு வேலைகளில் நானும் சமப்பங்கு வகிக்கிறேன். சில நாள்களில் முழுப்பங்கும் ஏற்கிறேன். இது இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். துடைப்பம் ஏந்திக் குப்பையை அகற்றுவது பெண்களுக்கே உரியது அன்று. அது ஆண்களுக்கும் உரியது என்பதையும் உணர்த்துகிறார். ‘ஏணை அசைத்தலும் கூடும்; அது யார் அசைத்தாலும் ஆடும்’ என்ற பாவேந்தர் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

சாலை ஓரத்து ஏழை வணிகர்களிடம் பேரங்கள் பேசாதே என்று நண்பருக்கு அறிவுறுத்துகிறார். பெரும் வணிக வளாகங்களில் பேரம் பேசினால் மதிப்புக் குறைவு என்று நினைப்பவர்கள், வீதி ஓரத்துப் ஏழைப் பாட்டியிடம் அடாவடி பேரம் பேசுவது சரிதானா முறைதானா என்று ஏழை வணிகர்களுக்காகக் குரல் எழுப்புகிறார். அந்த வெண்பாவைப் படித்த பிறகு அன்றாட வாழ்வில் தத்தளிக்கும் ஏழை வணிகர்களிடம் பேரம் பேச நா எழாது.

மனித இலக்கண வழுவாகத் திருநர்களைக் கருதக் கூடாது. அவர்களை மனித இலக்கண வகையாக அறிய வேண்டும். புறத்தினர் மட்டும் அல்ல, பெற்றோரே மூன்றாம் பாலினரை ஒதுக்குகின்றனர். அந்நிலை மாற வேண்டும்.  ஆண்பெண் சமன்மையை உடலிலேயே உயர்த்திப் பிடிக்கும் அவர்களுக்கு நட்பைத் தரவேண்டும்... கல்வியைத் தரவேண்டும் என்கிறார்.

மனித நேயத்தையுத் தாண்டி உயிர்நேயத்தை வளர்க்கும் நோக்கில் ‘சிற்றுயிர் ஓம்பு’ என்ற வெண்பாவைப் படைத்து இருக்கிறார். இந்த வெண்பாவுக்குப் பொருத்தமாகவே நூலின் முகப்பு ஓவியம் உள்ளது. இந்த உலகம் மனிதருக்கு மட்டும் சொந்தம் இல்லை. செடி கொடிகளுக்கும் சொந்தம். சின்ன சின்ன உயிரினங்களுக்கும் சொந்தம். தமிழ் இயலன் சொல்லும் உயிர்நேயத்தை உள்வாங்கி நடந்தால் உலகம் நன்மை அடையலாம்.

ஒரு நூலகம் போல நம் மூளை அறிவு நிரம்பி இருக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு வெண்பா உண்டு. அப்படி இருந்தால் எந்தத் தேர்விலும் எந்த நேர்விலும் நமக்கு வெற்றி உண்டு. நாளை உலகை ஆளப் போகும் இன்றைய மாணவர்களுக்கான அறிவுரை இது. 

அடுக்கிய நூல்கள் அறிவுதரல் போலச்

சொடுக்கினால் மூளையது செய்திதர வேண்டும்

நடுக்கமிலா அப்பயிற்சி நாம்பெற்றுச் சொல்வோம்

எடுத்ததெலாம் வெற்றியே என்று


வெற்றிச் சூத்திரத்தை வெண்பாவில் வடிக்கிறார் இப்படி : 

உன்னால் முடியும் உயர்கனவே நீபெறுவாய்

உன்கனவை நெஞ்சில் உரமேற்று! – பின்னர்த்

தொடர்செயலால் பெற்றிடலாம் தொய்விலா வெற்றி

தடம்பதித்து வானம் தொடு.

உழவன் உழைப்பில் அழகாகிறது இந்த உலகு என்று உணர்த்துகிறது இந்த வெண்பா. 

உணர்ந்தே அளவாய் உணவைச் சுருக்கி

உணவே இலார்க்கென உண்ணக் கொடுக்கும்

உழவன் உழைப்பே உலகென்(று) உணரும்

அழகியலில் வாழ்கிறது அன்பு.

வெண்பாக்களில் பல சித்து வேலைகள் செய்து அசத்தி இருக்கிறார்கள் நம் புலவர்கள்; தமிழை உசத்தி இருக்கி்றார்கள் நம் கவிஞர்கள். இவரும் பதினைந்து சீர்களிலும் ஒரே எதுகை வர ஒரு வெண்பா எழுதி இருக்கிறார். அருணகிரிநாதர் சந்தம்போல் ஓசை நயம் துள்ளுகிறது. உள்ளத்தை அள்ளுகிறது. தமிழ் இயலன் அவர்களின்  வெண்பாத் திறனுக்கு இது ஓர் எடுத்துக் காட்டு. சந்தம் துள்ளும் அந்த வெண்பா இதுதான்.

             பெற்றாரும் உற்றாரும் பெற்றளிக்கும் பற்றுடையார்

கற்றோரின் சொற்றிறனும் குற்றமிலா நற்றுணையார்

சுற்றத்தால் உற்றிசைந்து சுற்றிடுவார் வெற்றியைத்தான்

முற்றாகப் பெற்றிடுவார் மற்று.

ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு பேராற்றல் உள்புதைந்து இருக்கும். அந்தத் திறனை ஊக்குவிப்பதும் பழக்குவதும் நம் கடமை. அவ்வாறு செய்தால் குழந்தைகள் வெற்றி பெறுவார்கள் என்று வெண்பாவால் அன்பாகச் சொல்கிறார்.

பயணத்திசை என்று ஒரு நூலைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டார் தமிழ்இயலன். அந்த நூலின் அட்டைப் படத்தில் தம் இரு பிள்ளைகளின் படங்களை ஓவியமாக்கி இருந்தார். நண்பா உனக்கொரு வெண்பாவிலும் முல்லை, பண்பு ஆகிய சொற்களின் ஊடாகத் தம் மக்கள் தமிழ்முல்லையையும் பண்பரசனையும் காவியமாக்கி இருக்கிறார். தமிழ்இயலன் அவர்களின் பிள்ளைப் பாசம், சிலப்பதிகாரக் காலத்துக் காவிரி போல் பொங்கிப் பெருகிப் பாய்கிறது. அன்பு பொங்கும் அந்த வெண்பா :

             குழந்தைகளைப் பாராட்டி அன்புசெய்; நாளை

அழகாகப் பூத்திடுமே முல்லை மலர்ச்சோலை!

நண்பர்போல் வைத்திடு நம்பிக்கை; பின்மகிழ்வாய்ப்

பண்புமனம் வீசுவதைப் பார்த்து!

நீடு வாழவும் நிறைவாக வாழவும் உடலையும் உள்ளத்தையும் பயிற்சியின் மூலம் பாதுகாக்க வேண்டும் என்கிறார். அதற்கு ஒரு வெண்பாவை அளிக்கிறார். படியுங்கள்; பயிற்சி செய்யுங்கள்.

             உலவுதல் நற்பயிற்சி உள்மூச்சை நோக்கல்

பலசெயலில் ஒன்றில் பதிந்துமனம் ஒன்றல்

நலமளித்தே வாழ்தல் நடுவுநிலை கொள்ளல்

கலங்கரை ஆக்கிடுமே காண்.

மாற்றுத் திறனாளி என்று குறிப்பிடுகிறோம். இவரோ மாற்றும் திறனாளி என்கிறார். மாற்றும் திறனாளி என்ற தலைப்பே, சிறகு ஏதும் இல்லாமலேயே சிந்தனை உயரத்தை எட்டிப் பிடிக்கிறது.

வெண்பா ஒவ்வொன்றுக்கும் அழகாகத் தலைப்பு இட்டு இருக்கிறார். ஒவ்வொரு வெண்பாவுக்கும் ஒற்றை வரியில் பொருளுரை சொல்வதுபோல் அந்தத் தலைப்புகள் உள்ளன.

ஊழல் என்பது நாட்டின் புற்றுநோய். இதை ஒழிக்க முடியவில்லை. கையூட்டு வாங்கினேன் கைது செய்தார்கள். கையூட்டுக் கொடுத்தேன் விட்டுவிட்டார்கள் என்ற நிலையில்தான் நம் ஊழல் ஒழிப்பு உள்ளது. ஊழல் வழக்கில் இருந்து விடுபெற ஆளும் கட்சிக்குத் தாவுதலும் ஓர் உத்தியாக உள்ளது. “ஊழல் வழக்கில் இருந்து விடுதலை செய்தால் உன் உண்டியலைப் பணத்தால் நிரப்புகிறேன்” என்று திருப்பதி வேங்கடவனிடம் வேண்டுகிறார்கள். கடவுளுக்கே கையூட்டுக் கொடுக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க வேறு வழி தெரியவில்லை கவிஞருக்கு. அதனால் அறம் பாடுகிறார். அந்த வெண்பா இது.

             ஆழ்ந்திட்ட ஊழல்நீ ஆணிவேர் ஆனதனால்

தாழ்ந்துதான் போனதே தாய்நாடு – சூழ்ந்துநின்று

வாழவிடாது ஏழையரை வாட்டி வதைக்கின்ற

ஊழலே நீமறைந்து ஓடு!

தடைச்சட்டம் இருந்தாலும் சாக்கடைக் குழிக்குள் ஏழைத் தோழர்களை இறங்க வைத்து வேலை வாங்குவதை இன்றும் பார்க்கின்றோம். அருவருப்பு, நாற்றம், நோய்த்தொற்று, உயிர்போக்கும் நச்சுஆவி, ஆகியவற்றிற்கு இடையே பணியாற்றுகிறார்கள். அவர்களின் கைகளில் மலர் தரச் சொல்கிறார் நம் மனிதநேயக் கவிஞர். அந்த வெண்பா...

             சாக்கடை அள்ளும் சரிநிகர் தோழனுக்குப்

பூக்கள் கொடுப்பாய்ப் புகழ்சேர்த்து! – தூக்கமிலாத்

தூயோர் பணியினைத் தூற்றியே வாழ்ந்திடும்

தீயோரைத் தீயால் திருத்து!

இந்த வெண்பாவில் சாக்கடை அள்ளும் தோழரைச் சரிநிகர் தோழன் என்று நமக்கு இணையாக உயர்த்திச் சொல்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். அழுக்கு, குப்பை, சாக்கடை அள்ளும் அவர்களைத்  தூயோர் என்று போற்றுகிற முரண் அழகையும் கவனியுங்கள். நேர்மையானவர்களைத்தாம் தூயவர்கள் என்கிறோம் நாம். சாக்கடை அள்ளுபவர்களைத் தூயவர்கள் என்கிறார் தமிழ்இயலன்.

என்ன விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நல்லதைச் செய்வோம்; நல்லதைப் பெறுவோம் என்பதை உணர்த்துகிறது இந்த வெண்பா. 

கூடும் மழையைக் குறைசொலக் கூடாதே

வாடும் நிலையும் வருந்தும் நிலையுமே

வந்திடக் காரணம் வாழ்வியல் மாந்தரிங்குத்

தந்ததையே வானம் தரும்.

எல்லாம் இங்கு மாறும். உலகம் ஒவ்வொரு நாளும் புதிதாய் உருமாற்றிக் கொள்ளும். நாமும் நல்ல மாற்றங்களுக்கு ஏற்பப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்று நாள்தோறும் புதுப்பொலிவுடன் இருக்கச் சொல்கிறார் தமிழ் இயலன். இப்படி இயங்குவதுதான் முன்னேற்றம். மாறாமல் இருந்தால் வளர்ச்சி இல்லை. இதை உணர்த்தும் இனிய வெண்பா இது. 

பதிந்திருக்கும் பூமிப் படிமங்கள் மாறும்

குதித்திங்கே ஓடுகிற காட்டாறும் மாறும்

எதிலுமே மாற்றத்தை ஏற்றுத்தான் நாளும்

உதிக்கும் புதிய உலகு

குடி, போதையால் இளைஞர் திரள் பாழ்பட்டுப் போகிறது. போதைப் பழக்கம் இல்லை என்றால் நம் குடும்பங்கள் வளமாக வாழும். போதையை ஒழித்து நல்ல பாதையை அமைக்க வழி சொல்லும் பாடல் இது. 

படித்திட்ட நற்குறளின் பாடம் மறந்தே

குடித்தே அழியுதொரு கூட்டம் – கடிந்தும்

குடியாட்சி செய்யும்  குறைபட்ட நாட்டில்

குடியாட்சி வேண்டுமெனக் கூறு.

குடியாட்சி என்ற சொல்லை இரு பொருள்களில் பயன்படுத்தி இருப்பது சிறப்பு. குடிதான் ஆட்சி செய்கிறது என்ற நிலைமாறிக் குடிமக்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்கிறார்.

மன்னிப்புக் கேட்பதை மதிப்புக் குறைவாக நினைக்கிறார்கள் பலர். ஆனால் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார் தமிழ் இயலன். 

தவறு நிகழலாம் தன்னல வாழ்வில்

தவறின் பொறுத்தருள வேண்டலே நன்று

வெறுப்பினை நீக்கிட வேறுவழி இல்லை

பொறுத்தருளக் கேட்பதைப் போன்று.

பல்லால் நாய் துரத்துவது போல் சொல்லால் துரத்தும் சிலர் உண்டு. அவர்களிடம் இருந்து விலகிச் செல் என்கிறார் இன்னொரு வெண்பாவில். ஆக... நடைமுறை வாழ்க்கையின் ஊடே, நல்வழி காட்டுகிறார் நம் கவிஞர்.

கோபுரம்போல் உயர்ந்தவர்களாக இருந்தாலும் கோபத்தால் வீழ்ந்தவர்கள் பலர் உண்டு. ஒவ்வொருவர் இடத்திலும் கோபம் இருக்கிறது. அதனை அடக்கி ஆளத் தெரிய வேண்டும். அதற்கான வழி சொல்கிறார். 

சினம்வரும் நேரம் சிறிதாய் அமைதி

உனக்கு வழங்கிடும் உள்ளொளி நன்மை

இனம்போற்றும் அந்த இனிய அமைதி

மனத்தை வெளுக்கும் மருந்து.

ஆக.... நண்பா உனக்கொரு வெண்பா என்ற இந்த நூல் நம் மனத்தைத் தூய்மை செய்கிறது. மன ஆளுமையை வளர்க்கிறது. வாழக் கற்றுத் தருகிறது.

பள்ளியில் அறவுரை வகுப்பு உண்டு. அதுபோல் இந்நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவும் அறவுரை வகுப்புதான்.

இந்த நூலுக்கு ஒரே வரியில் மதிப்புரை சொல்லலாம்.  அதற்கும் தமிழ் இயலனின் ஈற்றடி உதவுகிறது. அந்த ஒருவரி மதிப்புரை இதுதான் : “இந்த நூல், மனத்தை வெளுக்கும் மருந்து.”

ஆரஞ்சு பழம் விற்பவர் சுவைத்துப் பார்க்க ஒருசுளை தருவார். அதுபோல்தான் சில வெண்பாக்களை உங்களுக்குச் சொன்னேன். நூறு வெண்பாக்களையும் சுவைக்க நூலைப் படியுங்கள்.

வெண்பா எழுதும் வேறுசிலர், புரியாத புலவர் நடையைப் பயன்படுத்துகிறார்கள். அது இந்தக் காலத்துக்கு ஒத்துவராது. தமிழ் இயலன் அவர்களின் மொழியில் புரியாத சொல் ஏதும் இல்லை. அகர முதலியைப் புரட்ட வேண்டியதும் இல்லை. உரைநூல் தேவை இல்லை. 

அனைவருக்கும் புரியும் சொற்கள்.

யாவரும் ஏற்கத் தகுந்த கருத்துகள்.

நடைமுறைப் படுத்தக் கூடிய அறிவுரைகள்.

வானைச் சிமிழுக்குள் வைத்துக் காட்டும் சுருக்கமான கூறுமுறைகள்


இவை எல்லாம் தமிழ் இயலன் அவர்களின் வெண்பாக்களில் உள்ள சிறப்புக் கூறுகள்.


வெண்பாவை இவர் காதலிக்கிறாரா... வெண்பா இவரைக் காதலிக்கிறதா... என்று பிரித்து உணர முடியவில்லை. தலைப்புகளில் கூடத் தளை தட்டவில்லை. சிறு தவறும் தலை நீட்டவில்லை.

வாழ்வியலைச் சொல்லித் தரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய நூல் இது.

பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியப் பட்டப் படிப்புகளில் பாடமாகச் சேர்க்கத் தகுதி வாய்ந்த நூல் இது.

நூலை எழுதிய கவிஞர் தமிழ் இயலன் அவர்களுக்கு வாழ்த்து மாலைகள் நூறு சூட்ட வேண்டும். அச்சாரமாக ஒன்று சூட்டுகிறேன். 

நூறென வெண்பாக்கள் நூல்முழுதும் நூற்றவரே

சாறென நம்தமிழைத் தந்தவரே – ஆறென

ஓடும் கருத்துகளில் உன்மேன்மை நான்அறிந்தேன்

நாடும் உனைப்புகழும் நன்று.  

 

 

 

 

 

Wednesday, 2 March 2022

தமிழ்ப் பல்லவி

 



தமிழ்ப்பல்லவி

கோ. மன்றவாணன்

 

கரோனா தீநுண்மி காலத்தில் அச்சு இதழ்களின் விற்பனை வெகுவாகச் சரிந்துவிட்டது. பரபரப்பாக வந்த பல பருவ இதழ்களை விகடன் குழுமமே நிறுத்திவிட்டது. அச்சு இதழை நிறுத்தியதோடு மின்னிதழாக மாற்றிக் கொண்டது கல்கி.

கடையில் விற்பனை ஆகும் நிலையில் சிற்றிதழ்கள் இல்லை. அவை 100 அல்லது 200 சந்தாதாரர்களை நம்பியே உள்ளன. ஊரடங்கு காரணமாக அச்சுக் கூடங்கள் இயங்க முடியாத நிலையில் அந்த இதழ்களும் தொடர்ந்து வரவில்லை.

மிகப்பெரும் நிறுவனங்களே நாளிதழ்களின் பக்கங்களைக் குறைத்துவிட்டன.

நினைத்தபோது கடைகளுக்குச் சென்று எந்த நாளிதழையும் வாங்கும் நிலை முன்பு இருந்தது. தற்போது இல்லை. வழக்கமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே நாளிதழ்களைக் கடைக்காரர்கள் வருவித்துக் கொள்கிறார்கள். வாடிக்கையாளராய் இல்லாதவர்கள் குறிப்பிட்ட சில நாளிதழ்களைக் கடையில் வாங்க முடியாது.

நூலகச் செயல்பாடுகளும் முடங்கி உள்ளன. நூலக ஆணைகளை நம்பி வெளிவந்த இதழ்களும், செய்வன அறியாமல் தத்தளிக்கின்றன.

அச்சு இதழ்கள் மூலமாகவும் கொரோன பரவும் என்ற அச்சம் காரணமாக இதழ்களைத் தொடவே சிலர் அஞ்சுகிறார்கள்.

தடம் என்ற பெயரில் தரமான அழகான இலக்கிய மாத இதழை விகடன் நிறுவனம் நடத்தி வந்தது. பொருள் இழப்போ... விற்பனை குறைவோ... என்ன காரணமோ... தெரியவில்லை. கரோனா காலத்துக்கு முன்பே அந்த இதழை நிறுத்தி விட்டனர். 

எத்தனையோ இடர்களைத் தாங்கியபடி இதழ்களை நடத்திக்கொண்டு இருந்தவர்களின் தன்னம்பிக்கையைத் தகர்த்துவிட்டது கரோனா.

இத்தகைய சூழ்நிலையில்தான் பல்லவி குமார் அவர்கள் தமிழ்ப்பல்லவி இதழைத் தொடங்கி இருக்கிறார். அந்த இதழை எனக்கு அனுப்பியும் இருந்தார். முடியாது என்ற நிலையில் முடியும் என்று செயல்படுவதுதான் தன்னம்பிக்கை. அது நிறையவே பல்லவி குமார் அவர்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். காலாண்டு இதழ் என்பதால் கால அவசரகதி ஏதும் இருக்காது. நிதானமாக இதழ்ப்பணிகளை மேற்கொள்ளலாம் என்று அவர் திட்டமிட்டு இருப்பார் என்று கருதுகிறேன்.

தமிழ்ப்பல்லவியின் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று அறிய முடிகிறது. மக்கள் ரசனைக்கு ஏற்ப இதழ்கள் நடத்துபவர்கள் ஒவ்வொரு பக்கத்தின் மூலையிலும் நகைச்சுவை அல்லது துணுக்குச் செய்திகளை வெளியிடுவார்கள். தமிழ்ப்பல்லவியிலோ பக்க மூலைகளில் தரமான ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வெளியிடுகிறார்கள். அதனால் ஒவ்வொரு பக்கத்திலும் இலக்கிய விறுவிறுப்பு எகிறுகிறது.

சிறுகதைகள், கவிதைகள், கலை, இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் என இதழ்களின் பக்கங்கள் யாவும் பூத்துப் புன்னகைக்கின்றன. ஆங்கிலம், இந்தி, மலையாளம் எனப் பிற மொழிகளில் இருந்து கவிதைகளையும் சிறுகதைகளையும் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். பாரதியார் எண்ணத்துக்கு ஏற்பவே கலைச்செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.

தரமான இலக்கிய இதழ் இது என்று தமிழ்ப்பல்லவிக்குத் தரச்சான்று தரலாம்.

எனக்கு அனுப்பிய இதழில் வேர்கள் மு. இராமலிங்கம் என்பவர் எழுதிய நினைவில் நின்ற வாழ்க்கைச் சுவடுகள் என்ற கட்டுரை உள்ளது. ஒரு காலத்தில் அச்சு இதழ்களைப் படிக்கும் ஆர்வம் எப்படி இருந்தது என்பதை அந்தக் கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது. அந்தக் கட்டுரையில்  இருந்து சில வரிகள்....

“என் தந்தை என் பெயரில் கோகுலத்துக்குச் சந்தா கட்டி இருந்தார். என் பெயருக்குப் பத்திரிகை வருவது எனது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. இது தவிர, பஞ்சாயத்து நூலகத்தில் சிறுவர் நூல்கள் படிக்கக் கிடைத்தன.”

”உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்பொழுது நண்பர் ஒருவர் முத்து காமிக்ஸ் புத்தகங்களை வகுப்புக்கு எடுத்து வருவார். கடைசிப் பெஞ்சில் அமர்ந்து பாடப் புத்தகத்திற்கு உள்ளே மறைத்து வைத்து அந்தக் காமிக்ஸ் புத்தகங்களைப் படித்துவிட்டு ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்கியதும் உண்டு. அபூர்வமாகக் கிடைக்கும் கைச்செலவுக்கான காசுகளை, காமிக்ஸ் புத்தகங்களையும் அணில் போன்ற சிறுவர் இதழ்களையும் வாங்குவதற்குச் செலவிட்டது இன்றும்கூட நினைவில் உள்ளது. நான் உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டில் சீர்காழியில் தங்கிப் படிக்க நேரிட்டது. அப்போது சீர்காழி பொது நூலகத்தில் மூன்று ரூபாய் கட்டி உறுப்பினராகிப் புத்தகங்களை  எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். டால்ஸ்டாயின் அன்னா கரீனா அந்த நூலகத்தில் படிக்கக் கிடைத்தது.”

“பொன்னியின் செல்வனின் பைண்ட் செய்யப்பட்ட பாகங்களைப் பள்ளி விடுமுறை நாள்களில் படித்ததில் இருந்துதான் எனது தீவிர வாசிப்பு ஆரம்பம் ஆனது. கல்கியின் விறுவிறுப்பான கதை சொல்லும் பாணியில் கவரப்பட்டு அவருடைய தீவிர வாசகராக மாறினேன். புத்தமங்கலம் என்ற ஊருக்குச் சென்று கல்கி பிறந்த வீட்டைப் பார்த்து வரும் அளவுக்குக் கல்கி பைத்தியம் பிடித்து இருந்தது.”

”தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கல்கி இதழ் சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் வெளிவந்தது. கல்கி மீது இருந்த தணியாத தாகத்தால் இதழ் வெளிவரும் ஒவ்வொரு வியாழனும் புத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த சீர்காழிக்குச் சென்று கல்கியை வாங்கி வருவேன். லிப்ஃகோ வெளியிட்ட பெரிமேசன் துப்பறியும் நாவல்கள் வாங்கியது உண்டு. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள புத்தகக் கடையில் கணையாழி கிடைக்கும்.”

குறிஞ்சிவேலனின் சேகரிப்பில் இருந்த தீபம் இதழின் மொத்த தொகுப்பையும் படித்ததோடு மட்டும் அல்லாமல் கண்ணதாசன், ஞானரதம், கணையாழி போன்ற பிற இதழ்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

“குமுதம் இதழில் இருந்து மாலைமதி என்ற மாத நாவல் வெளிவந்தது. அதன் ஆரம்ப வெளியீடுகளில் இருந்து 50 நாவல்கள் வரை வாங்கி எனது நூலகத்தைத் தொடங்கினேன்.”

இவ்வாறான அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்கும். 

இப்படி அந்தக் காலத்தில் புத்தக வாசிப்புத் தீவிரமாக இருந்தது. பெண்களும் வார மாத இதழ்களை வரவழைத்துப் படித்துவந்த வசந்த தருணம் அது.

வேர்கள் மு. இராமலிங்கம் சொன்ன நூல்வாசிப்பின் நறுமணக் காலம்  இன்று இல்லை. 

இந்நிலையிலும் விடாப்பிடியாகச் சிலர், இலக்கிய இதழ்களை அச்சில் கொண்டு வருகின்றனர். தங்களைத் தேய்த்துத் தமிழை மணக்க வைப்பவர்கள் இவர்கள். இயன்றவர்கள் அந்த இதழ்களுக்குச் சந்தா செலுத்திப் படிக்கலாம். கொடுமுடி தேடி மூச்சிரைக்க மலையேறும் இவர்களுக்குத் தென்படும் சுனைநீர் அது.

தமிழ்ப்பல்லவி.... அநுபல்லவி, சரணங்கள் ஆயிரம்... என்று தொடர வேண்டும்.

தமிழ்ப் பல்லவியின் முகவரி :

ஆசிரியர் : பல்லவி குமார், 9/1A, இராஜவீதி, கூட்டுறவு நகர், பெரியார் நகர் (தெற்கு), விருத்தாசலம் – 606001. கடலூர் மாவட்டம். அலைபேசி : 9942347079. தனி இதழ் ரூ. 20. ஆண்டுச் சந்தா ரூ. 100.



Thursday, 6 May 2021

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (முதல் முதலமைச்சர்)


ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்

(முதல் முதல் அமைச்சர்) 

நூல் மதிப்பீடு : கோ. மன்றவாணன்


நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்குச் சுற்றியுள்ள ஊர்களை எல்லாம் கையகப்படுத்தும்போது…. வள்ளலார் வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் ஆகிய ஊர்கள் எப்படி தப்பித்தன என்று யாரேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? ஓமந்தூர் பெரிய வளைவு இராமசாமி ரெட்டியாரின் கடும் முயற்சிதான் அதற்குக் காரணம்.

அப்படியா… யார் அவர்? என்றுதான் இன்றைய தலைமுறையினர் கேட்பார்கள்.

விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாநிலத்தின் முதல் முதல் அமைச்சராக இருந்த பெருமைக்கு உரியவர் அவர். உங்கள் ஊர் நூலகத்தில் தேடினால் ஓமந்தூராரைப் பற்றி ஒரு புத்தகமும் கிடைக்காது. அத்தி பூத்ததுபோல் அவரைப் பற்றி விவசாய முதலமைச்சர் என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன் சோமலெ ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதைப் பார்க்கும் பாக்கியம்கூட நமக்குக் கிடைக்காது.. வேறு யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இந்நிலையில்

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (முதல் முதலமைச்சர்) என்ற பெயரில் புதிதாக ஒரு நூல் 2021 பிப்ரவரியில் வெளிவந்து உள்ளது. இந்த அரிய நூலை எழுதியவர் கோவி. ஜெயராமன். மொத்தமே 83 பக்கங்கள் கொண்ட வரலாற்று நூல்.

பொதுவாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால்அவரைப் போல் உலகில் யாருமே இல்லை என்பது போல மிகுஉயர்வு நவிற்சியாக எழுதுவதே வழக்கமாக உள்ளது. அதிலும் அவர் தன் சாதிக்காரர் என்றால் அவரைத் தெய்வமாகவே சித்திரித்துவிடுகிறார்கள். ஆனால் கோவி. ஜெயராமன் எழுதிய இந்த நூலில் எதையும் மிகைப்படுத்தாமல் எழுதி இருக்கிறார். தேவை இல்லாத சொல் என்று எதுவும் இல்லை.

வரலாற்றுச் செய்திகளை உள்ளது உள்ளபடி எழுதினால் சுவை இருக்காது. விறுவிறுப்பு இருக்காது எனச் சொல்வோர் உண்டு. ஓமந்தூராரின் வரலாற்றுத் தகவல்களைக் கோவி. ஜெயராமன் உள்ளது உள்ளபடிதான் எழுதி இருக்கிறார். படிக்க நூலைக் கையில் எடுத்தேன். படித்து முடித்த பிறகே மேசையில் வைத்தேன்அந்த அளவுக்கு இந்நூல் உயிரோட்டமாக இருந்தது.

ஒவ்வொரு பத்தியிலும் இடம்பெற்ற வரலாற்றுத் தகவல்களைப் படிக்கப் படிக்க ஆர்வம் கூடிக்கொண்டே போனது. இவரின் ஒரு பத்தியைப் பிறர் எழுதினால் கண் காது மூக்கு வைத்து அவற்றில் போலி ஆபரணங்களைப் பூட்டி ஆறு பக்கங்களுக்குமேல் எழுதி ஆரவாரம் செய்து இருப்பார்கள்.

ஓமந்தூரார் வரலாற்றைப் பன்னிரண்டு தலைப்புகளில் பகிர்ந்து எழுதியுள்ள முறை நன்று,  அந்தத் தலைப்புகள் வருமாறு :

1. குடும்பம்,

2. கட்சி, அரசியல் பணிகள்,

3. விடுதலை இயக்கமும்  சிறைவாழ்க்கையும்,  

4. சென்னை மாகாண முதல்வர்,

5. நெஞ்சுக்கு நேர்மை,

6. விவசாய முதல்வர்,

7. ஆன்மீக அரசியல்,

8. தாழ்த்தப்பட்டோருக்கு நீதி,      

9. தமிழுக்குத் தொண்டு,

10. கடலூர் அஞ்சலை அம்மாளும் வடலூர் ஓமந்தூராரும்,

11. வடலூர் தவவாழ்வு,

12. நான் கண்ட ஓ.பி.ஆர்.

ஓமந்தூராரைப் பற்றிய செய்திகளும் அவரைச் சுற்றி நடந்த வரலாற்றுச் செய்திகளும் அடுத்துவரும் தலைமுறைகள் அறிய வேண்டியவை. தந்தை, தாய், மனைவி, மகன் ஆகியோர் அடுத்தடுத்து இறந்த நிலையில் அவர் ஒரு வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டைத் துறவியாகவே வாழ்ந்து இருக்கிறார். ஆன்மீக அரசியல் என்று ஒரு முழக்கம் தற்காலத்தில் முன்வைக்கப்படுகிறது. அதை முன்னரே செயலில் காண்பித்தவராக ஓமந்தூரார் இருந்துள்ளார். துறவிகளோடு தொடர்ந்து நல்லுறவு வைத்திருந்தாலும் அரசு நிர்வாகத்தில் அவர்களின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை.

நூல் மதிப்புரையின் ஊடாக, நூல்தலைவனைப் பற்றி வாசகர்கள் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகச் சில துளிகள்…

ஓமந்தூரார் அதிகம் படிக்கவில்லை. இருந்தாலும் திண்டிவனத்தில் உள்ள வால்டர் ஸ்கட்டர் உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார். அப்போது அவருடன் படித்துக் கொண்டிருந்த மாணவர் 1907 பிப்ரவரி 13 ஆம் தேதி காஞ்சி காமகோடி பீடத்தின் அதிபதி ஆனார். ஸ்ரீ ஜெகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்தான் அந்த மாணவர். அலிகார் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய திரு. சையது அகமதுகான் என்பவரும் இவருடன் படித்த சக மாணவரே.

(இணையத்தின் பல பதிவுகளில் ஓமந்தூராரை வழக்கறிஞர் எனத் தவறாகக்  குறிப்பிட்டுள்ளார்கள். சரி பார்க்காமல் தமிழ் இந்து நாளிதழிலும் அவரை வழக்கறிஞர் என எழுதி உள்ளார்கள். எந்தப் பொருள் ஆனாலும் இணையம் சொல்வன எல்லாம் உண்மை என்று பேதை நெஞ்சம் நம்புகிறதே…)

ஓமந்தூராருடைய இயற்பெயர் இராமசாமி. இவருடைய வீட்டின் பெயர் பெரிய வளைவு. இரண்டையும் இணைத்து ஓமந்தூர் பெரிய வளைவு இராமசாமி ரெட்டியார் என்று அழைக்கப்பட்டார். சுருக்கம் கருதி ஓமந்தூரார் என்றும் ஓபிஆர் என்றும் பின்னாளில் அழைக்கப்ட்டார். இவருடைய தந்தையார் பெயர் முத்துராம ரெட்டியார். ஆனால் தந்தையாரின் தலைப்பெழுத்து ஓபிஆர் என்பதில் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

அமாவாசை தோறும் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாரத மாதா படத்தையும் காந்தி படத்தையும் கைகளில் ஏந்திக்கொண்டு தெருத் தெருவாக சுதந்திஎழுச்சிப் பாடல்களைப் பாடியபடி கதர்த் துணிகள் விற்றுள்ளார். இதைப் படிக்கும்போது அந்தக் காலத்து இளைஞர்களிடம் பொங்கி எழுந்த சுதந்திர உணர்வை ஊகிக்கலாம். 

1921இல் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் கடலூரில் பிரம்ம ஞான சபை மாநாட்டை நடத்திக் கொடுத்துள்ளார். அம்மையாரோடு உரையாடியும் உள்ளார்.

1922  முதல் திண்டிவனம் காங்கிரஸ் கட்சித் தலைவராகச் செயல்பட்டார். 1930 முதல் 1937 வரை தென்னார்க்காடு மாவட்டக் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். 1938 இல் நடந்த சென்னை மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற சத்தியமூர்த்தியைவிட 35 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார். அடுத்த முறையும் தலைவராக ஓமந்தூராரே தொடர வேண்டும் என்று காமராசர் இராஜாஜி ஆகியோர் வற்புறுத்தினர். ஆனால் இவர் மறுத்துவிட்டார்.

1938, 1946 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரை முதலமைச்சராக இருக்கச் சில மாதங்களாகப் பலரும் வற்புறுத்தினார்கள். இவர் சம்மதிக்கவில்லை. பின்னர் திருவண்ணாமலை பெருந்துறவி ரமணர் அவர்களின் ஆலோசனை கேட்டே முதலமைச்சராக இருக்க இசைவு தந்தார். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே 23-03-1947 இல் சென்னை மாநில முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு ஏற்ப… முதல் அமைச்சர் ஆனாலும் சாதாரண மனிதரைப் போல் நடந்துகொண்டார்.

இந்தியா விடுதலை பெற்ற போது, 1947 ஆகஸ்ட் 15 அன்று காலை கோட்டையில் தேசியக் கொடியை ஓமந்தூரார் ஏற்றினார். பதவி ஏற்பு உறுதிமொழி கூறி  சுதந்திர இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷாரான ஐசிஎஸ் அதிகாரிகள் விரும்பினால் இந்தியாவில் தொடர்ந்து பணியாற்றலாம் என்று சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்டுக்கொண்டார்ஆனால் ஓமந்தூரார் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் உங்கள் பணி எங்களுக்குத் தேவை இல்லை. புறப்படுங்கள் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

காந்தி அடிகள் இறந்த போது துடிதுடித்துப் போனார். அப்போது இவர் முதல் அமைச்சராக இருந்தார். தில்லிக்கு நேரில் சென்று திருச்சாம்பலை வாங்கி வந்தார். அதைக் கரைக்கும் முன்பாகத் தன் வீட்டு வழிபாட்டு அறையில் வைத்து வணங்கினார். மேல்சட்டை அணியாமல் திருச்சாம்பல் கலசத்தைக் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று கடலில்  கரைத்தார்.

சென்னை மாநிலத்தின் இலச்சினையாக உள்ள திருவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தைத் தேர்வு செய்தவர் இவரே. கோபுரம் ஒரு சமயச் சின்னம். மதச்சார்பற்ற அரசில் இதை அனுமதிக்கக்  கூடாது என்று சிலர் நேருவிடம் முறையிட்டனர். ஓமந்தூராரிடம் நேரு விளக்கம் கேட்டார். திராவிடக் கட்டடக் கலையின் அடையாளம்தான் கோபுரம் என்று பதில் அளித்தார். மேலும் காந்தியின் நண்பர் சி.எப்.ஆண்ட்ரூஸ் திருப்பத்தூரில் கோபுரத்துடன் ஒரு தேவாலயத்தைக் கட்டி இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

காந்தி அடிகளுடனும் நேருவுடனும் பலமுறை கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார். அவற்றை நேரடியாகவும் வெளிப்படுத்தினார். இது தொடர்பான தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. பட்டை தீட்டப்பட்ட வைரம் என்று பாராட்டுவது வழக்கம். ஆனால் நேருவோ, ஓமந்தூராரைப் பட்டை தீட்டப்படாத வைரக்கல் என்று பாராட்டினார். அப்படிச் சொன்னதற்கு ஓமந்தூராரின் கண்டிப்பும் கறாரும் முரட்டுப் பிடிவாதமும் காரணங்களாக இருக்கலாம்.

கம்யூனல் ஜிஓ என்றும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்றும் அந்தக் காலத்தில் குறிப்பிடப்பட்ட இடஒதுக்கீடு சம்பந்தமாக சில திருத்தங்களையும் இவர் கொண்டுவந்தார். அதன்படி மொத்த பதவிகள் 14 என்றால் பிராமணருக்கு 2, கிறிஸ்தவருக்கு 1, இஸ்லாமியருக்கு 1, ஆதி திராவிடருக்கு 2, பிற்பட்டோருக்கு 2, பிராமணர் அல்லாத மற்றவர்களுக்கு 6 என்ற விகிதத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று உத்தரவு இட்டார். பிராமணருக்கும் இடஒதுக்கீடு சலுகையை வழங்கி இருக்கிறார்.

தன்  ஆட்சிக் காலத்தில் வேளாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இவர்தான் விவசாய முதல்வர்விவசாயத்தில் அதிக அனுபவ ஞானம் கொண்டவர். விவசாயச் சீர்திருத்தமும் சம நிலையும் என்ற புத்தகத்தையும் எழுதி உள்ளார்.

முதல்வராக இருந்த காலத்தில் அவர் இயற்றிய சட்டங்களும் திட்டங்களும் செயல்பாடுகளும் சரித்திரம் பேசும் சாதனைகளாக மாறிவிட்டன.

ஓமந்தூராரின் கண்டிப்பு கறார் தன்மை, நேர்மை, பிடிவாதம் காரணமாக பல எதிர்ப்புகளும் எழுந்தன. அவரைப் பதவியில் இருந்து விலக வைக்க முயற்சிகள் நடந்தன. 06-04-1949 அன்று முதல் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். அன்றே அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு ஊர் திரும்பிவிட்டார்.

அரசாங்க அலுவலகப் பணியாளர் பெறும் ஊதியத்திற்கும் விவசாயக் கூலியாள் பெறும் ஊதியத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைச் சுருக்க வேண்டும் என்பதில் வலுவான கருத்துக் கொண்டிருந்தார். இவரின் இந்தச் சிந்தனையை இன்று முன்னெடுப்பார் யாரும் இல்லை.

ரமணர் நோய்வாய்ப்பட்டு இருந்த காலத்தில் அவருடனே இருந்து சேவை செய்தார். இவரின் மடியில்தான் ரமணர் உயிர் துறந்தார். அரசியலில் இருந்து விலகி வடலூரில் வாழ்ந்த போது, பல உயர்பதவிகள் தேடி வந்தன. ஏற்கவில்லை.

ஓமந்தூரார் நிறுவிய வள்ளலார் குருகுலம் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தவர் இந்த நூலாசிரியர். ஓமந்தூராரின் கண்காணிப்பில் வளர்ந்தவர். அந்தச் சமயத்தில் வடலூர் ஞான சபையில் திருப்பணிகள் நடந்தன. அப்பணிகளை மேற்பார்வையிட ஓமந்தூரார் ஞான சபைக்குச் செல்லும்போது அவருக்கு உதவும்பொருட்டு மாணவனாக இருந்த கோவி. ஜெயராமன் ஒருமுறை சென்றார். ஜோதி தரிசன அறையின் கீழ் உள்ள நிலவறையில் ஓமந்தூரார் படி இறங்கிய போது அவரைத் தாங்கியவாறு சென்றார். அந்த நிலவறையில்தான் வள்ளலார் தியானம் செய்வது வழக்கமாம். அது குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைபோல் இருந்ததாம். ஞான சபையின் நுழைவாயிலில் இருக்கும் யானைச் சிற்பங்களின் காதுகள் வழியாக அந்தப் பாதாள அறைக்குள் வெளிக்காற்று நுழையும்படி கட்டுமானத்தை வள்ளலார் அமைத்துள்ளார் என்று வியக்கிறார் நூலாசிரியர். அந்த நிலவறையில் யாரையும் அனுமதிப்பது இல்லை. அந்நிலையில் வள்ளலார் தவம்புரிந்த நிலவறையைக் காணும் வாய்ப்பைப் பெற்றதைப் பெருமையாகச் சொல்கிறார் கோவி. ஜெயராமன்.

இந்த வரலாற்று நூலை இப்படி முடிக்கிறார்.

“நான் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்த போது ஓமந்தூரார் உயிரோடு இருந்திருந்தால் அவருடைய ஆசி எனக்குக் கூடுதலாகக் கிடைத்திருக்கும். அதன்வழியே என் வளர்ச்சி இன்னும் உயர்நிலை அடைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளே இன்றும் உள்ளது.”

முடிவாக….

இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, இன்றைய அரசியல்வாதிகள் மீது உங்களுக்குக் கோபம் ஏற்படலாம்.

…………………………………………………………………………..

நூல் : ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (முதல் முதலமைச்சர்)

நூல் :ஆசிரியர் : கோவி. ஜெயராமன்

வெளியீடு : பெண்ணைப் பதிப்பகம், 12, கல்லூரி ஆசிரியர் நகர், உண்ணாமுலைச் சாவடி, கோண்டூர் அஞ்சல், கடலூர் – 607006. விலை : ரூபாய் 70 பக்கங்கள் : 83

நூல் ஆசிரியர் அலைபேசி : 9442746411

குறிப்பு : நான் படிக்க விரும்பிய போது இந்த நூலைக் கொடுத்து உதவிய எழுத்தாளர் வளவ. துரையன் அவர்களுக்கு நன்றி.

 

நன்றி :

திண்ணை இணைய இதழ்

02-05-2021