Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Thursday, 28 February 2019

நிகழ்ந்தும் நிகழாத...


















நிகழ்ந்தும் நிகழாத.....

கோ. மன்றவாணன்

ஜெகதீசன் வேகமாக வந்து என் கடைவாசலில் தன் வாகனத்தை அவசர அவசரமாக நிறுத்திய போது ஸ்டாண்ட் சரியாக விரியாததால் வாகனம் கீழே சரிந்தது. அதை அவர் கவனிக்காமல் படியேறி என் கடைக்குள் வந்தார். கண்கள் அழுது அழுது சிவந்து போனதுபோல் தெரிந்தது. “என்னாச்சு ஜெகதீசுக்கு” என்று என்மனம் பதற, நான் இருக்கைவிட்டு எழுந்து அவரை நோக்கி வந்து, “என்ன ஜெகதீஷ்... ஒரு மாதிரி இருக்கீங்க? என்ன நடந்துச்சு?” என்று கேட்டேன்.

அதற்கு அவர் பதில் சொல்லாமல் “வாங்க ஸ்கூலுக்குப் போலாம்” என்று விரைவுப்படுத்தியதோடு கீழே விழுந்துகிடந்த வண்டியை நிமிர்த்தி ஸ்டார்ட் செய்தார். நான் பின்னிருக்கையில் அமர்ந்தேன். வழக்கத்தைவிட அதிவேகமாக வண்டியை ஓட்டினார். அந்த வேகத்தில் நான் கீழே விழுந்துவிடுவேனோ என்று அச்சமாக இருந்தது. ஆனால் அதை அவரிடத்தில் தெரிவிக்கவில்லை. அவர் பையனும் என் பையனும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அவருடைய அவசரத்தைப் பார்க்கும்போது அவர் பையனுக்கு ‘ஏதோ ஆயிடுச்சு” என்று மட்டும் மனசு சொல்லியது. 

கம்மியம்பேட்டைப் பாலம் வழியாகச் சென்று, செம்மண்டலத்தில் கிழக்குப் புறமாகத் திரும்பினார். எதிரே வேகமாக வந்த டவுன் பஸ் டிரைவர் சாமர்த்தியமாப் பிரேக் அடித்து நிறுத்தியதால் நாங்கள் மோதாமல் நிலைதடுமாறி வாகனத்தோடு சாய்ந்தோம். “யோவ் அறிவிருக்காயா? நீ வந்து மோதிடுவே. போலீசுல பெரிய வண்டின்னு என் பேர்ல வழக்குப் போடுவாங்க. நான்தான் ஜாமின் கீமின்னு செலவு பண்ணனும். வருஷக் கணக்கா கோர்ட்டுக்கு நடக்கணும்” என்று கோபமாகப் பேசினார். பஸ்ஸூக்குள் இருந்தவர்களும் எங்களைப் பார்த்துத் திட்டினார்கள். என்ன திட்டினார்கள் என்று இப்போது நினைவுக்கு வரவில்லை. 

பரபரப்பிலும் பதற்றத்திலும் வாகனத்தை ஓட்டிய தன்மேல்தான் தவறு என்பது ஜெகதீசனுக்குத் தெரியாமல் இல்லை. எங்கள் மனக்கவலையில் அந்த வசவுகள் எதுவும் எங்களுக்குள் இறங்கி இரசாயன மாற்றம் ஏதும் செய்யவில்லை. மீண்டும் வாகனத்தைத் தூக்கி நிறுத்தி ஸ்டார்ட் செய்து புறப்பட்டோம். கடலூரின் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றான ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நுழைவுக் கேட்டின்மேல் மோதிவிடுவதுபோல் போய்நின்றது ஜெகதீசன் ஓட்டிய வண்டி. “தமிழ்ச்சங்கத்துல பொறுப்பாளர்களாக இருந்துட்டுப் பிள்ளைகள இங்கிலீஷ் மீடியத்துல படிக்க வைக்கறீங்களே” என்று எங்களைப் பிறர் குத்திக்காட்டுவது நினைவுக்கு வந்து போனது. 

எங்கள் அவசரத்தையும் பதற்றத்தையும் கவனித்த வாட்ச்மேன் வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே அனுமதித்தார்.

பள்ளி முதல்வர் நடராசன் எங்கள் பதற்றத்தைப் புரிந்து உட்காரச் சொன்னார். நாங்கள் உட்காரவில்லை.

“சார், பையனப் பாக்கணும்”
“இரண்டு பேர்ல யாருடைய பையன்?”
“ரமேஷ் சார் பையன் பாரத்” என்றார் ஜெகதீசன்

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. வயிற்றின் வலப்புறத்தின் உள்ளிருந்து அஞ்சாறு தவளைகள் துள்ளிக் குதித்து ஓடுவன போல் இருந்தது. கைவிரல்களின் நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை. சட்டென்று முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் வியர்வைப் பொங்கியது. பயம் என் குரலைக் கம்மி செய்தது. கணீரென்று மேடையில் பேசிய என்குரல் பயத்தால் ஒடுங்கிப் போனது. பேச முயன்ற போது ஒலிக்குப் பதிலாகப் பெரும்பாலும் காற்றுதான் வந்தது. பள்ளி முதல்வர் அங்கிருந்த ஆசிரியைகளிடம் சொல்லி என்னை ஓர் அறைக்கு அழைத்துப்போய் அமர வைத்தார்கள். தண்ணீர் கொடுத்தார்கள். குடிக்க மறுத்துவிட்டேன். ஏசி போட்டார்கள். எனினும் என் வியர்வை அடங்கவில்லை.

சுதாகரித்து ஜெகதீசனிடம் கேட்டேன். ”என்னாச்சு என் மகனுக்கு?”
“எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க”

அய்யோ என்று அலறுவது தெரிகிறது. ஆனால் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. கண்ணீர் மலமலவென வழிந்தது. சேரில் இருந்து சரிந்து கீழே விழுந்தேன்... புரண்டேன். அந்தத் தகவல் பொய்யாகி விடாதா என்று கடவுளிடம் வேண்டினேன். செடல் போட்டுக்கொள்வதாக பஸ் ஸ்டாண்ட் நாகம்மாளிடம் உறுதி சொன்னேன். ஒரு வயது இருக்கும்போது அவனுக்கு இதயத்தில் ஓட்டை. சென்னைக்குச் சென்று மருத்துவர் செரியன் அவர்களிடம் காட்டினேன். அவர் சிகிச்சை அளித்தார். அந்த இதயக் கோளாறுதான் மறுபடியும் ஏற்பட்டு இப்படி ஆகிவிட்டதோ என்று கருதிய போது, என் இதயத்தில் ஈட்டிகள் இறங்கின.

சற்று நேரத்தில் பாரத் வகுப்பறையில் இருந்து அழுதபடியே ஓடி வந்தான். உடன் ஒரு ஆசிரியரும் அவன் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து ஓடி வந்தார்.

“என் டாடிக்கு என்னாச்சு” என்ற பயத்தில் வந்தவனைப் பார்த்ததும் தளர்ந்து சுருண்டு கிடந்த எனக்கு எப்படித்தான் தெம்பு வந்ததோ, பட்டென எழுந்து அவனைக் கட்டிப்பிடித்துத் தூக்கி முகம் தலை எல்லாம் முத்தம் இட்டேன். கண்ணீரும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு மனோபாவத்தில் உணர்ச்சியின் உச்சி முகட்டில் நான் இருந்தேன். அந்த அனுபவத்தை எந்த எழுத்தாளராலும் விவரிக்க முடியாது என்றுதான் நம்புகிறேன்.. 

இதைப் பார்த்ததும் ஜெகதீசனுக்கும் மகிழ்ச்சிதான். கூடவே ஒரு தர்ம சங்கடமும் பிடுங்கித் தின்னும் அவமானமும், தீர விசாரிக்காமல் எனக்கு அதிர்ச்சியைத் தந்துவிட்ட தத்தளிப்பிலும்  அவர் தவித்ததை உணர்ந்தேன். ஆனால் அவர்மீது கோபம் ஏதும் இல்லை. நல்லெண்ணத்திலும் என்மீது உள்ள உண்மையான அக்கறையாலும்தான் அவர் அப்படிச் செய்தார் என்பது எனக்குப் புரியாமல் இல்லை. அவரின் தர்ம சங்கடத்தையும் தவிப்பையும் போக்கும் வகையில் அவரின் இருகைகளையும் பற்றி அணைத்துக்கொண்டேன்.

நானும் ஜெகதீசனும் இளம்வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். நான் ஓவியத்தைத் தொழிலாகவும் எழிலாகவும் செய்து வருகிறேன். ஜெகதீசன் வேளாண் துறையில் சாதாரண ஊழியராகப் பணியாற்றுகிறார். துறையின் துணை இயக்குநர்கள் இணை இயக்குநர்கள் ஆகியோரிடம் பரிந்துரைத்து வேளாண் திட்டங்கள் குறித்த சுவர் விளம்பரம், ஃபிளக்ஸ் விளம்பரம் ஆகிய ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுத் தந்து எனக்கு எப்போதும் உதவுகிறார்.

அன்று அலுவலகத்தில் இருந்த ஜெகதீசன் செல்பேசியில் வாட்ஸ் அப் தகவல் ஒன்று வந்தது. அனுப்பி இருந்தவர் ஸ்ரீதேவி. “ரமேஷ் அவர்களின் மகன் ரயில்மோதி இறந்துவிட்டார்.” இந்தத் தகவலைப் படித்ததும் அதிர்ந்துதான் போனார்.

“ரமேஷிடம் எப்படிப் போன் போட்டுப் பேசுவது? அவருக்கு இந்தத் தகவல் தெரியுமா? ஒரு வேளை தெரியாமல் இருந்தால் நாம் சொல்லி அவருக்கு அதிர்ச்சியில் ஏதாவது ஆகிவிடுமா?” என்று பதைபதைத்துள்ளார்.  என்ன செய்வது என்று தெரியாமலும் புரியாமலும் “டெத் ஒண்ணு. அவசரமாகப் போறேன்”னு அலுவலகத்தில் சொல்லிவிட்டுத்தான் வாகனத்தில் வேகமாக வந்திருக்கிறார். ஆனால் அவர் வாட்ஸ்அப்பின் தகவலை முழுமையாக உள்வாங்கவில்லை. ரமேஷ் மகன் இறந்துவிட்டார் என அவர் மனதில் பதிந்து, பள்ளியில்தான் அந்தத் துயர்நிகழ்வு நடந்ததாக அவசர கதியிலும் மனப்பதற்றத்திலும் காட்சியை அவராகவே வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

லுவலகத்தில் பணியில் இருந்த போது ஸ்ரீதேவியின் செல்போனில் வாட்ஸ்அப் ஒலி எழும்பியது. அவர் வணிகவியல்தான் படித்தவர் என்றாலும் சங்க இலக்கிய அறிவாற்றலில் பல தமிழ்ப்பேராசிரியர்களுக்கு மேம்பட்டவர். இலக்கிய வட்டத்தில் நல்ல பெயர் உண்டு. அதனால் அவருக்கு நட்பு வட்டமும் பெரிதாக இருந்தது. வாட்ஸ் அப் செய்தியைத் திறந்து பார்த்தவருக்குப் பெருத்த அதிர்ச்சி. “ரமேஷ் அவர்களின் மகன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.” இதுதான் அந்தச் செய்தி. ரமேஷ் ஓவியர் மட்டுமல்ல நல்ல கவிஞரும் கூட. சமூக நற்பணி மன்றங்கள் அனைத்திலும் அவரின் குரல் ஒலிக்காமல் இருந்ததில்லை. எல்லாருக்கும் நல்லவராக வாழ்வது என்பது இயலாத ஒன்று. ஆனால் எல்லாருக்கும் நல்லவராய் வாழ்ந்து காட்டும் அதிசய மனிதர் அவர். எந்த நேரமானாலும் யார் என்ன உதவி கேட்டாலும் ஓடிவந்து உதவும் குணமும் அவருடையது என்ற ரமேஷின் குணச்சித்திரம் ஸ்ரீதேவியின் மனத்தில் அழுத்தமாக வரையப்பட்டிருந்தது.

ரமேஷ் என்ற பெயரைப் பார்த்ததும் அதிர்ந்த ஸ்ரீதேவி அந்தத் தகவலை மற்ற இலக்கிய அன்பர்களுக்கு முன்னகர்த்தினார். அந்த நேரத்தில் பாண்டியன் அவர்களிடமிருந்து போன் வந்தது. அவர் பேசத் தொடங்குவதற்கு முன்பாகவே ஸ்ரீதேவி,

“சார்... ரமேஷ் மகன் ரயிலில் விழுந்து இறந்துட்டானாம். என்னென்னு விசாரிச்சிங்களா?”

“விசாரிச்சிட்டுச் சொல்றேன்” என்றவர் போனை வைத்துவிட்டார். காத்திருந்து பார்த்தும் பாண்டியனிடமிருந்து விசாரிப்புத் தகவல் எதுவும் வரவில்லை. அலுவலகத்தில் அவசர வேலைகள் இருந்தன. அவற்றைச் செய்ய ஸ்ரீதேவிக்கு மனம் ஓடவில்லை. “வேற யாரை விசாரிக்கலாம்“ என்று யோசித்தபடி செல்போனில் இருந்த காண்டாக்ட் பகுதியில் தேடினார்.

அந்த நேரம் சொல்லி வைத்தாற்போல் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர் வந்தார். அவரை விசாரித்த போது சொன்னார். ”நீங்க நினைக்கிற மாதிரி இறந்து போனது ஓவியர் ரமேஷ் மகன் இல்லீங்க. கம்யூனிஸ்ட் கட்சி ரமேஷ் மகன்தான் ரயிலில் விழுந்து இறந்துட்டார்.”

இதைக் கேட்ட ஸ்ரீதேவிக்கு இன்னும் அதிர்ச்சி. கம்யூனிஸ்ட் ரமேஷின் மனைவி அவருக்கு நெருங்கிய தோழி. அனிச்சம் இலக்கியக் கூடல் நிகழ்ச்சிக்கெல்லாம் ரமேஷ் குடும்பத்துடன் வருவார். அவருடைய பையன் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் டீ பிஸ்கெட் பரிமாறுவதற்கு உதவி இருக்கிறான். ஸ்ரீதேவியின் மனக்கண்ணில் அவனின் சூரிய முகம்  ஒளிர்ந்தது.

காலையில் வீட்டைவிட்டு சைக்கிளில் சென்றவன் இன்னும் வரவில்லை என்று நேற்று இரவு 2 மணிவரை கடலூரில் உள்ள எல்லா இடங்களிலும் கம்யூனிஸ்ட் ரமேஷ் தன் மகனைத் தேடித் தேடி அலைந்து பார்த்திருக்கிறார். பல நண்பர்களும் தேடி ஓய்ந்துபோனார்கள். அவனுடைய நண்பர்கள் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று விசாரித்துப் பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.

விடிகாலை 3 மணியளவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, எப்படியும் தன் மகன் வந்து சேர்வான் என்ற நம்பிக்கையில் கண்ணயர்ந்தார் ரமேஷ். ஆனா அவருடைய மனைவி மட்டும் தூங்காமல் அழுது அழுது கண்களும் முகமும் வீங்கிப் போயிருந்தது.

அவருடைய பையன் 12 ஆம் வகுப்பு படித்தான். மூன்று முறை தேர்வு எழுதியும் அவனால் தேர்ச்சி அடைய முடியவில்லை. அதுபற்றி எதுவும் கோபமாகப் பேசியதில்லை ரமேசும் அவருடைய மனைவியும். பிள்ளைகளின் உளவியல் தெரிந்து நடக்கக் கூடியவர்கள். பெற்றோர் பிள்ளைகள் அணுகுமுறை, ஆசிரியர் மாணவர் அணுகுமுறை பற்றியெல்லாம் கல்வி நிகழ்ச்சிகளில் பேசி இருக்கிறார் ரமேஷ்.. அதனால் அவர் அவனை அடித்ததும் இல்லை. கண்டித்ததும் இல்லை.

“ஒருவேளை கடிதம் எதுவும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறானா” என்று வீட்டில் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார். அலமாரியில் துணிமணிகளை எல்லாம் அவசர அவசரமாகச் சரித்துத் தள்ளித் தேடினார். கடிதம் எதுவும் இல்லை. கீழே தள்ளிய பொருட்களை எடுத்து உள்ளே வைக்காமல் அலமாரியை மூடிவிட்டு வந்து படுக்கையில் சாய்ந்தார்.

காலை ஆறு மணிக்கு ரமேஷ் செல்போன் மூன்றுமுறை அலறி ஓய்ந்தது. யாரும் அதை எடுத்துப் பேசவில்லை. வெளியில் கிடந்த துணிமணிகளை எடுத்து உள்ளே வைப்பதற்காக அலமாரியைத் திறந்த ரமேஷின் மனைவியின் கண்களில் கணவரின் செல்போன் தெரிந்தது. அவசரத்தில் தன் செல்போனை அலமாரியில் வைத்துவிட்டு மறந்துவிட்டிருக்கிறார் என்று தெரிந்தது. அதில் மூன்று மிஸ்டுகால் இருந்ததைப் பார்த்து, “என்னங்க... போன அலமாரியில வைச்சிட்டீங்க. மூணு மிஸ்டுகால் வந்துருக்கு. என்னன்னு கேளுங்க” என்று சொல்லி ரமேஷிடம் கொடுத்தார்.

முக்கியமான தகவலாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டார்.

“சார்.. நான் ரமேஷ் பேசுறேன்.”
“சார்... நாங்க ஸ்டேசனிலிருந்து பேசறோம். பல தடவை உங்கள தொடர்புகொள்ள முயற்சி செஞ்சோம். நீங்க எடுக்கல.”
“சார்... பையனைத் தேடி அலைஞ்சதுல கொஞ்சம் தளர்ந்துபோய் படுத்துட்டேன். ஏதாவது தகவல் கிடைச்சுதாங்களா?
“இல்ல சார். ஆனா... டீ சர்ட்டும் பள்ளிக்கூட யூனிபார்ம் பேண்ட்டும் போட்ட ஒரு சின்ன வயசுப் பையனோட பாடி ஆஸ்பிட்டல இருக்குது. ரயில்வே போலீசார் சொன்னாங்க. நிச்சயமாக ஒங்க மகனா இருக்க மாட்டான். எதுக்கும் ஒருதடவை போய் பாத்துட்டு வந்துடுங்க.”

ரமேஷின் கையிலிருந்து செல்போன் நழுவிய நிலையில் அதை சுதாகரித்துப் பிடித்துக்கொண்டார்.

“என்னங்க பேசினிங்க? ஏதாவது தகவல் கிடைச்சுதுங்களா?”
...........
“என்ன பேச மாட்றீங்க? நம்ம பையனுக்கு எதாவது ஆயிடுச்சா?”
“எதுவும் ஆவாதும்மா.”
“கொஞ்சம் இரு. ஒரு இடத்துக்குப் போயிட்டு வந்துடுறேன்.”
“எங்கப் போறீங்க? நானும் வரேன்”
“இரும்மா... கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்.”
“எங்கப் போறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க. எம்மனசு அமைதியா இருக்காது?”
“இல்லம்மா... கட்சி ஆபிசுக்குப் போயிட்டு வந்துடுறேன்.”

மருத்துவமனை ஊழியர் அய்யாசாமிக்குப் போன் செய்து மருத்துவமனைக்கு வரும்படிச் சொல்லிவிட்டுத் தனது ஹோண்டா சைனில் பறந்தார்.

மருத்துவமனை ஊழியர்கள் சங்கத் தலைவர் அய்யாசாமி காத்திருந்தார். “மார்ச்சுவரியைப் பார்க்கணும்” என்றார் அவரிடம். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மார்ச்சுவரிக்கு ரமேசை அழைத்துச் சென்று காண்பித்தார் அய்யாசாமி.

ஒரேஒரு பாடிதான் கிடத்தப்பட்டிருந்தது. கிடத்தப்பட்டிருந்தது என்று சொல்வதைவிட ஒரு மனித படத்தைத் துண்டுதுண்டாக வெட்டி, பிறகு ஒன்று சேர்ப்பதுபோல் உறுப்புகள் அடுக்கப்பட்டிருந்தன. தலை தனியாக இருந்தது. கைகளும் கால்களும் துண்டுத்துண்டுகளாகச் சிதைந்து கிடந்தன. உள்ளே நுழைந்ததும் கிழிந்து சிதைந்த டீ சர்ட்டும் பேண்டும் ரமேசை நிலைகுலையச் செய்துவிட்டது. அது தன்மகனின் டீ சர்ட்டுதான். அந்தப் பேண்ட் அவன்படித்த பள்ளிக்கூட சீருடைதான்.

ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற உடல்பருமனும் மனபலமும் கொண்ட ரமேஷ் வாய்விட்டுக் கதறி அழுதார். அவரை அருகில் இருந்த அய்யாசாமி தாங்கிப் பிடித்துப் பிணவறையிலிருந்து வெளியில் அழைத்துவர முயன்றார். ஆனால் அவர் மீறி மீறி உள்ளே சென்று பார்த்துக் கதறினார். அங்கிருந்த மற்ற ஊழியர்கள் சமாதானம் சொல்லி அவரை வெளியே அழைத்து வந்தார்கள். அவர் அழுவதைப் பார்த்து அய்யாசாமியின் கண்களிலும் கண்ணீர்த் திவலைகள். வெறுங்கையால் துடைத்துக் கண்ணீரை மறைக்க முனைந்தார்.

“எம்மகன் மேல ஒரு துரும்புகூட விழாம பாத்துக்கிட்டிருந்தேனே. அவன எதிர்த்து ஒரு வார்த்த கூட  நான் சொன்னதில்லையே. ரயில்முன் விழ எப்படித் துணிஞ்சான்? என்ன கஷ்டம் பட்டிருப்பான்?” என்று சொல்லிச் சொல்லி அழுதவரை சமாதானப்படுத்த முடியாத நேரம் அது. அழுது தீர்த்த பிறகுதான் சமாதானப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்த அய்யாசாமி, “போஸ்ட்மார்ட்டம் முடிச்சு நாங்க கொண்டாந்துடுறோம். டூவீலரை நான் எடுத்துட்டு வரேன். நீங்க இந்த ஆட்டோவுல வீட்டுக்குப் போங்க” என்று ஒருவாறு சொல்லி ஒப்பேத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வியக் கூடத்தில் உட்கார்ந்திருந்தேன். ஒரு பூங்குடுவைக்குள் கொத்தாகச் செருகப்பட்டிருந்த தூரிகைகளில் ஒன்றை எடுத்து வண்ணம் தோய்த்து வெள்ளட்டையில் ஓடவிட்டேன். என்ன வரையப் போகிறேன் என்ற திட்டம் எதுவும் எனக்கில்லை. வரைந்தபின்தான் உணர்ந்தேன். என்னை அறியாமல் நான்வரைந்தது ஒரு சிறுவனின் படம். அதுவும் நான் அடிக்கடி கடந்துபோகும் திருப்பாதிரிப்புலியூர் ரயில்பாதையில்... அடிபட்டுச் சிதைந்து கிடக்கும் சிறுவனின் படம். எப்படி இதை நான் வரைந்தேன் என்று இன்றுவரை புலப்படவில்லை. நான் வரைந்த படத்தைப் பார்த்து நானே அழுதேன்.  படமாக வரையப்பட்ட சிறுவன் எனக்கு வேண்டியவன் இல்லை. என் கண்களில் ஏன் நீர்பெருக்கெடுக்கிறது? அப்போது எழுத்தாளர் வளவ. துரையன் வந்தார். நான் கண்ணீரைத் துடைத்து மறைத்தேன். அதை அவர் கவனித்திருக்க முடியாது. மேசையின் மீது விரித்து வைத்திருந்த சிறுவனின் படத்தைப் பார்த்த அவர், “அட படம் தத்ரூபமாக இருக்கிறது” என்று பாராட்டியதோடு இதை அடுத்த ‘சங்கு” இதழுக்கு அட்டைப்படமாக வச்சிடுங்க. படத்துக்கேற்ப கதையோ கவிதையோ எழுதித் தந்துடுறேன்” என்றார். அவருக்கு வீட்டிலிருந்து போன் வந்தது. “ரமேஷ்... வீட்டுல கூப்புடுறாங்க. நான் அப்பறம் வந்து பாக்குறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். மீண்டும் நான் படத்தைப் பார்த்தேன். படத்தில் இருந்த சிறுவன் என் மனதுக்குள் நுழைந்து என்னமோ பண்ணுகிறான் என்பது தெரிகிறது. எத்தனையோ படம் வரைந்துள்ளேன். எதுவும் இதுபோல் என்மனதைப் பாதித்ததில்லை. படத்தைச் சுருட்டி வைத்தேன். அந்தப் படம் மனதுக்குள் விரிந்தது. அந்தச் சிறுவன் என்னிடம் பேசுவதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது.

ரயில்மோதி இறந்தது என் மகன் இல்லை என்பதில் நான் எல்லையில்லாத சந்தோஷம் அடைந்தேன் என்பது உண்மைதான். இதுபோன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட யாரும் மகிழ்ச்சி அடையத்தான் செய்வார்கள். உள்மனம் என்னை விரல்நீட்டிக் குற்றம் சுமத்தியது. “மகன் இறக்கவில்லை என்று மகிழ்கிறாய். தன்மகன் எனக்கருதி இறந்த யாருடைய மகனுக்காகவோ அழுது புரண்டாய். இப்போதும் அந்த யாரோ ஒருவரின் மகன் இறந்து கிடக்கிறான். ஏன் அவனுக்காக இப்போது கவலைப்படவில்லை. தன் வீட்டில் நடந்தால் அது துக்கம். அடுத்த வீட்டில் நடந்தால் அதைத் துக்கமாக ஏன் கருதுவதில்லை. என்ன இருந்தாலும் ஓர் அரைமணிநேரம் இறந்த சிறுவனை மகனாகக் கருதி அந்தத் துயரை... துக்கத்தை... வலியை நீ அடைந்திருக்கிறாய். இன்னும் அடக்கம் செய்யாமல்  அந்தச் சிறுவன் பிணமாகத்தான் கிடக்கிறான். இந்த நேரத்தில் நீ மகிழ்ச்சியாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்” என்று நீதிக்கூண்டில் ஏறி மனசாட்சி உரக்கப் பேசியது.

ஜெகதீசன் இப்போது என் கடைக்கு வந்தார். அவர் அமைதியாக இருந்தார். “இப்பத்தான் எனக்கு நிம்மதி” என்றார். ஆனால் எனக்கு நிம்மதி இல்லை என்பதை அவர் அறிய மாட்டார். மேலும் சொன்னார்.

“ரயிலில் அடிபட்ட சிறுவனின் இறுதி ஊர்வலம் அஞ்சு மணிக்காம். அந்த இன்னொரு ரமேசும் எனக்கு நண்பர்தான். போய் பாத்துட்டு வந்துடலாமா?.”

நான் எதுவும் சொல்லவில்லை. கடையை விட்டு இறங்கி ஜெகதீசனுடன் புறப்பட்டேன். திருப்பாதிரிப்புலியூர் சுரங்கப்பாதை தாண்டியதும் வண்டியை நிறுத்தச் சொன்னேன். பூக்கடையில் நிறைய மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. இருந்ததிலே பெரிய மாலையை பேக் செய்யச் சொன்னேன். என்ன விலை என்று ஜெகதீசன் கேட்டார். 350 ரூபாய் என்றார். பேரம் பேசிய ஜெகதீசனைத் தடுத்தேன். பூக்கடைக்காரர்கள் அதிகம் விலை சொல்வது வழக்கம்தான். பேரம் பேசி வாங்குவதும் அங்கு இயல்பான நடைமுறைதான். நான் பூக்கடைக்காரர் கேட்ட விலையை அப்படியே குறைக்காமல் கொடுத்துவிட்டு மாலையை வாங்கிக்கொண்டேன். நான் சாதாரணமாகப் பஸ்நிலையத்தில் கூறுகட்டிக் கொய்யாப்பழம் விற்கும் பாட்டிகளிடம் அடாவடியாகப் பேரம் பேசி மிகக்குறைந்த விலையில் வாங்குபவன்தான். பேரம் பேசுவதில் நான் தேர்ந்தவன் என்பதால் என் நண்பர்கள் எந்தப் பொருள் வாங்கப் போனாலும் என்னை அழைத்துக்கொண்டு போவார்கள். இது ஜெகதீசனுக்கும் தெரியும் என்பதால் என் நடவடிக்கையை விநோதமாகப் பார்த்தார்.

கம்யூனிஸ்ட் ரமேஷ் வீட்டுத் தெருவில் நுழைந்தோம். ஏராளமான கூட்டம். ட்ரம் மற்றும் கிளாரினெட் வைத்து ஒரு இசைக்குழு சோக இசையைக் காற்றில் கரைத்தபடி இருந்தது. “நாதர்முடி மீதிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே” என்று பாடிக் கொண்டிருந்தார். அதில் “நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு” “நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு” என்று உச்ச ஒலியில் வாசித்தார். அதைக் கேட்டதும் கண்ணுக்குள் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்துவிட்டது. கண்ணில் அழுகையோடும் கையில் மாலையோடும் வீட்டுக்குள் நுழைந்த நான், சிறுவன் கிடத்தப்பட்டிருந்த குளிர்ப்பெட்டியின் மீது மாலையை வைத்து அதன்மீதே விழுந்து அழுதேன். இறந்த சிறுவன் வீட்டாருக்கு நான் உறவினன் இல்லை. அந்தச் சிறுவனை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. கம்யூனிஸ்ட் ரமேஷ் எனக்குப் பழக்கமில்லை. ஆனால் பீறிட்டு வந்த அழுகையைத் தடுக்க என்னால் முடியவில்லை.

மகனைப் பறிகொடுத்த துயரத்தில் இருந்த கம்யூனிஸ்ட் ரமேஷ், என்னைத் தாங்கிப் பிடித்து அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்காரவைத்தார். அப்போதும் என் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

நான் ஏன் இப்படி அழுகிறேன் என்று யாருக்கும் தெரியவில்லை. எனக்கும்தான்.

தினமணி கதிர், 28-10-2018

Sunday, 26 November 2017






நறுமுகையும் முத்தரசியும்

------கோ. மன்றவாணன்-------

“ஏய் முத்துலட்சுமி... இந்தச் சாக்கடை எத்தன நாளா அடைச்சிக்கிட்டு இருக்கு. சொன்னாத்தான் செய்வீயா?”

“பாக்கலம்மா...”

“என்ன பாக்கலம்மா. இதெல்லாம் நாங்கதான் பாக்கணுமா... நீ பாக்கமாட்டீயா?”

“இல்லம்மா...”

“என்ன இல்லம்மா நொள்ளம்மா. சாக்கடையை ஒழுங்காக் கிளீன்பண்ணு”

“ஒடம்பு முடியலம்மா நாளக்கிச் செய்றேம்மா”

“அதுவரிக்கும் நாத்தம் குடலத்தின்னனுமா. கொசு வேற முட்டப்போட்டு டெங்கு சிக்கன்குனியான்னு நோய் வருதுங்கறாங். இப்பவே செய்யு” என்று கடும்உத்தரவு பிறப்பித்துவிட்டுக் கூடத்துக்குள் போனாள் திலகா.


ந்த வீட்டில் முத்துலட்சுமி இரண்டு மூணு வருஷமா வீட்டுவேலை பார்க்கிறாள். வீட்டுவேலை செய்கிற எல்லாப் பெண்களின் கணவன்களைப் போலவே அவளுடைய கணவனும்  வேலை எதற்கும் போகாமல் அவள்கிட்டேய பணம்வாங்கிக் குடிப்பதுதான் தினப்பலன்.

காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வந்துவிட வேண்டும். வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும். வீட்டுக்கு முன் வாசல் வழியாக அவள் வரக்கூடாது. பின்வாசல் வழியாகத்தான் வரவேண்டும். முந்தியநாள் பயன்படுத்திய பத்துப்பாத்திரங்களை எல்லாம் கழுவ வேண்டும். பாத்திரத்தில் ஏதாவது ஒட்டி இருந்தால் வீட்டம்மாவின் கடுஞ்சொல் சுடுஞ்சொல் எல்லாம் மனசைப் பாடாய்ப்படுத்தும். “ஏம்மா இப்படி ஏசுறீங்கன்னு” கேட்டால் அந்த நேரமே வேலை போய்விடும்.

மரம் செடி கொடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்ற வேண்டும். தினமும் வீடு முழுவதும் பெருக்கி  லைசால் நனைத்த நூல்பஞ்சால் தரைமுழுவதையும் துடைக்க வேண்டும். என்னதான் தரையைச் சுத்தமாகப் பெருக்கித் துடைத்தாலும் “என்ன நறநறன்னுது” என்று கேட்பார் வீட்டய்யா செல்வம். ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒட்டடை வேறு அடிக்க வேண்டும். வீட்டய்யா டிரைவர் வைத்திருக்கவில்லை. போர்ட்டிகோவில் இருக்கும் அவருடைய பழைய காரையும் அவள்தான் தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.

மாதம் 1 ஆம் தேதிதான் அவளுக்கும் சம்பள நாள். எந்த 1ஆம் தேதியிலும் அவள் கைநீட்டிச் சம்பளம் வாங்கியதில்லை. இன்று சம்பளம் தருவாங்க இன்று சம்பளம் தருவாங்கன்னு பல நாள்கள் எதிர்பார்த்துத் தலைசொறிந்து நிற்பாள். வீட்டய்யாவோ வீட்டம்மாவோ அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவளாகவும் சம்பளம் கேட்க மாட்டாள். “கேட்டா தப்பா நெனச்சுக்குவாங்களோ”ன்னு அவளுக்குப் பயம். ஏழு எட்டுத் தேதியில்தான் சம்பளம் தருவார்கள். சில மாதங்களில் பதினொன்று பன்னிரண்டு தேதிகூட ஆயிடும்.


சாக்கடையைச் சுத்தம் செய்துவிட்டு வந்தாள்.

ஓர் உயர் அதிகாரி போன்ற தோரணையில் தோட்டத்துக்கு வந்து ஆய்வு செய்தாள் வீட்டம்மா. “கழிதண்ணி ஏன் வேஸ்டா போவுது. அத வாழமரத்துக்குப் பாய்றமாரி வாய்க்கா பண்ணிவுடு” என்று சொன்னாள். அதையும் செய்தாள்.

வீட்டுக்குப் பின்புற ஜன்னல் விளிம்பில் அவளுக்கென வைத்திருந்த டம்ளரில் காபி ஊற்றிவிட்டு உள்ளே போனாள் வீட்டம்மா.

அங்கேயே குத்துக்காலிட்டு அதைக் குடித்தாள். அதுதான் அவளுக்கு கர்த்தர் இளைப்பாறுதல் தரும் நேரம். கொஞ்சம் காபி ஸ்டிராங்கா இருந்தா தேவலை  என நினைத்தாள்.

இளைப்பாறுதலை முடிவுக்குக் கொண்டுவர உள்ளே இருந்து அழைப்பு வந்தது.

“முத்துலட்சுமி...”

“இதோ வந்துட்டம்மா”

“இந்த டைனிங் டேபிள் கீழே காபி சிந்திடுச்சு. அதைச் சுத்தமா துடைச்சிட்டுப் போ”

இப்போது அவள் நிறைமாத கர்ப்பிணி. பெரிய டைனிங் டேபிள் அது. காபி ஆறாக ஓடி ஒருபுறம் இருந்து மறுபுறம் எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்கு. அவளால் குனிந்து நிமிருவது சிரமாக இருந்தது. அப்படியே தரையோடு உட்கார்ந்து உள்ளே நுழைந்து துடைத்தாள்.

தானும் ஒரு பெண்ணாக இருந்தும் வீட்டம்மா கர்ப்பிணி என்று அவள் மீது இரக்கப்படவில்லை. எல்லா வேலையையும் வாங்கினாள்.

“முத்துலட்சுமி”

“என்னம்மா... இதோ வந்துட்டம்மா...”

சமையல்கட்டிலிருந்து வந்த வீட்டம்மா, “ஃபிரிஜ்ல தக்காளி இல்ல... இப்பத்தான் பாத்தேன். ரொம்ப அர்ஜெண்ட்.ஓடிப்போய் தெருமுனையில இருக்கற கடையில ஒருகிலோ தக்காளி வாங்கிட்டு வா. சீக்கிரம் வா.

நடக்கவும் முடியாம இருக்கிற அவள் எப்படி ஓடிப்போய் ஓடிவருவாள்?

ஐம்பது ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டு பின்வாசல் வழியே வந்து வீட்டைச் சுற்றி வெளியே வரும்போது நாய்க்குச் சோறு வைக்கிற தட்டில் கால்வைத்து விழப்போனவள் நல்ல வேளையாக கேட் கிரிலைப் பிடித்துச் சுதாகரித்துக்கொண்டாள். அப்போது சரிந்த முந்தானையைச் சரிசெய்த படியே கடையை நோக்கி முடிந்தவரை விரைந்தாள்.


ந்த வீடே மகிழ்ச்சியில் திளைத்தது. அன்றுதான் லக்னோவில் உள்ள தன் மகளுக்குப் பெண் குழந்தை பிறந்தது எனத் தொலைபேசியில் தகவல் வந்தது. ஆமாம் செல்வம் தாத்தாவாகிவிட்டார். அவர் ஒரு பெரிய எழுத்தாளர். மேடைப் பேச்சாளர். அவரின் கிடுக்கிப்பிடியில் சிக்காத அரசியல்தலைவர்களே இல்லை. தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் பங்குபெறுவார்.

செல்வத்திடம் மாப்பிள்ளை பேசினார். “பொண்ணு அனுஷ நட்சத்திரத்துல பொறந்திருக்கா. ந, நி, நு, நே என்ற எழுத்துகளில் தொடங்கும் ஒரு நல்ல பேரைச் சொல்லுங்க மாமா” என்றார்.

ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்ததுபோல் உடனடியாக “நறுமுகை” என்று சொல்லி, அருகிலிருந்த தன்மனைவியைப் பார்த்து குறுநகை செய்தார்.

“டிவி சீரியல்ல பிரியமானவளில் வரும் ஒரு குழந்தையோடப்  பெயர்தான் அது. என்னமோ புதுசா நீங்களே கண்டுபிடிச்சிட்டமாரி கெத்தா பாக்றீங்க” என்று போட்டு உடைத்தாள் அவருடைய மனைவி திலகா.

தனக்குப் பேத்தி பிறந்ததையும் அக்குழந்தைக்கு நறுமுகை எனப் பெயர்சூட்டி இருப்பதையும் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் சேதி பரப்பினார்.  

5.5 இஞ்ச் சைசில் இருந்த ஆண்டிராய்ட் போனில் என்ன கமெண்ட்ஸ் வருகிறது எத்தனை லைக் வருகிறது என்பதைப் பேராவலோடு பார்த்துக்கொண்டிருந்தார். இடையிடையே முகநூலில் வாழ்த்துரைத்த அத்தனை பேருக்கும் ஏற்கனவே காப்பி பண்ணித் தயாராக வைத்திருந்த “நெஞ்சினிக்கும் நன்றி” என்பதை பேஸ்ட் பண்ணியபடி இருந்தார்.

நறுமுகை என்று தமிழ்ப்பெயர் வைத்ததற்காகவே நிறைய வாழ்த்துகள் குவிந்தன. பாராட்டியவர்களில் எத்தனை பேருடைய குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் இருந்திருக்கும் என்று நீங்கள் கேள்வி கேட்டால் என்னிடத்தில் பதில் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் பெயர் வைப்பதே சாதனை ஆகிவிட்டது என்பது மட்டும் புரிகிறது.

சிலர் அவருடைய வீ்ட்டுக்கே அகர்வால் ஸவீட்பாக்ஸோடு வந்து பாராட்டிவிட்டுப் போனார்கள். அப்படி வந்த ஒவ்வொருவருக்கும் கையடக்கத் திருக்குறள் நூலை வழங்கினார். அது அவருடைய வழக்கமும் கூட.

அப்பொழுதுதான் கவனித்தார். அந்தக் கூடத்தில் பொருட்கள் கலைந்திருந்தன. பெருக்காமல் இருந்ததற்கான அடையாளமாகத் தரையில் பழைய பேப்பர்கள் சிதறிக் கிடந்தன.

“எங்க அந்த முத்துலட்சுமி? வீடே குப்பையா கிடக்குது. குழந்தை பிறந்த சேதி கேட்டு நிறைய பேரு வராங்க. அவங்க என்ன நெனப்பாங்க?”

“அவ நேத்திலிருந்து வரலைங்க. சொல்லிட்டும் போவல அந்தக் கழுதை. நானேதான் எல்லா வேலயையும் செஞ்சிக்கிட்டிருக்கேன்.”

“அவ வருவான்னு நா நெனக்கல. வேற ஆளத்தான் பாக்கணும்.”

அப்போது ஜெகதீசன் ஒரு சால்வையைக் கொண்டுவந்து அவருக்குப் போர்த்தினார். “தாத்தாவாயிட்டீங்க பாராட்டுகள்” என்றார்.

“தாத்தா ஆவது கூட ஏதோ ஒரு பெரிய பதவியைப் பிடிச்சிட்ட மாதிரி நெனைக்கிறாங்க. விட்டா தெருவுல ட்யூப் லைட் கட்டி மைக் வச்சு கொடி தோரணம் கட்டி கட்அவுட் செய்து விழாவே நடத்திடுவாங்க போலிருக்கே” என்று உங்களுக்குத் தோன்றலாம்.

“ஜெகதீசன் உங்களால எனக்கொரு வேல ஆகணுமே”

“சொல்லுங்க ஸார். என்ன வேலென்னாலும் செஞ்சிடலாம்”

“இல்ல... நம்ம வீட்ல வேலக்காரி வரல்ல. ஒரு நல்ல வேலக்காரி கிடச்சா நல்லாருக்கும்.”

“அதுக்கென்னங்க.... நம்ம ஆறுமுகங்கிட்ட சொல்லிடுறேன். உடனே ஏற்பாடு பண்ணிடுவான்.”

“வேலக்காரின்னா பிராமணாளா இருந்தா தேவல.”

“வேலக்கி பிராமணாள் யாரும் வரமாட்டாங்கய்யா.”

“தெனமும் பேப்பர்ல வீட்டு வேலைக்குப் பிராமணப்பெண் தேவைன்னு வெளம்பரம் வருதே...”

“வெளம்பரம் வரும். ஆனா பிராமணப்பெண் வரமாட்டாங்க”

“அப்படின்னா பிள்ளைமார் செட்டிமார்ல மட்டும் ஆளப் பாருங்க.”

“நிறைய ஆள் இருக்காங்க ஸார் இதுக்கு ஏன் கவலப்படுறீங்க. நாளக்கியே பாருங்க ஒங்க வீட்ல நீங்க கேட்டமாரியே வேலக்காரி இருப்பா”


சொன்னபடியே அடுத்த நாளே அவர் வீட்டுக்கு புதுவேலைக்காரப்பெண் வந்துவிட்டாள். புது துடைப்பம் ஒன்றை எடுத்துக்கொடுத்து வேலையைத் தொடங்கி வைத்தார் வீட்டம்மா திலகா.

பேத்தி பிறந்ததைவிடவும் பேத்திக்கு நறுமுகை என்று பெயர் வைத்ததால் அவருக்குக் குவிந்த பாராட்டுகளில் மகிழ்ந்து தலைகால் புரியாமல் இருக்கிறார் செல்வம்.

இன்றும் அவர் முகநூலில் மூழ்கி இருக்கிறார். பேத்தி நறுமுகை பிறந்ததால் இன்னும் அவருக்கு வாழ்த்து கமெண்டுகளும் லைக்குகளும் தொலைபேசி அழைப்புகளும் வந்தபடியே இருக்கின்றன.

“திலகா இங்க வாயேன். இந்தக் கமெண்ட்ஸ் பாரேன்.”

ராஜன் அனுப்பி இருந்தார்.

“மேடை வேறு வாழ்க்கை வேறு என்றில்லாமல் கொள்கைப் பிடிப்போடு தமிழில் பெயர் வைத்த தங்களைத் தமிழ்த்தாயே நன்றியோடு வாழ்த்துகிறாள்.”

அடுத்து அன்று காலையில் வந்த அவரது கட்சி நாளிதழில் வெளியான விளம்பரத்தையும் காட்டினார். அதில் மைக் முன்னால் கைநீட்டிப் பேசுவது போன்ற செல்வத்தின் படம் பளிச்சென இருந்தது.

நறுமுகை எனப் பேத்திக்குப் பெயர்சூட்டி
நம்தமிழை வாழ வைத்த எங்கள் வழிகாட்டி
செந்தமிழ்க் காவலர்
செல்வம் அவர்களை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறோம் என்று கவிதைபோல எழுதி இருந்தார்கள்.

அவளும் அதைப் படித்துவிட்டு “இந்தப் புகழ்ப்போதை எப்போதான் தெளியுமோ உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு உள்ளே போக முனைந்த போது  “அம்மா...” என்று குரல் கேட்டது.

வெளியில் வந்து பார்த்தாள்.

முத்துலட்சுமியின் கணவர்தான் வந்திருந்தார்.

வேண்டா வெறுப்பாய் அவரைப் பார்த்து “என்ன...” என்று அழுத்திக்  கடுமையாகக் கேட்டாள்.

“முத்துலட்சுமிக்குக் கொழந்த பொறந்திருக்கு. அதான் வேலக்கி வர முடியல. சொல்லிட்டுப் போலாம்ன்னுதான்...”

எந்த எதிர்வினையும் இல்லாமல் இருந்தாள் திலகா.

“கொழந்தைக்கு முத்தரசின்னு பேரு வச்சிருக்கோம்மா. இந்தாங்கம்மா சாக்லெட்டு எடுத்துக்குங்க”

இதைக் கேட்டவாறே வெளியே வந்த செல்வம் காட்டமாகச் சொன்னார்.

“முத்துலட்சுமியை இன்னமே வேலக்கி வரவேணாம்ன்னு சொல்லு. நாங்க வேற ஆள வச்சிக்கிட்டோம். கெளம்பு... கெளம்பு...”

சட்டெனத் திலகாவின் கையைப் பிடித்திழுத்துக்கொண்டு உள்ளே போய்ச் சோபாவில் சாய்ந்தார். பகல்வேளையில் விளக்குகள் எரிந்தும் அவர் முகம் இருட்டாகவே இருந்தது.

தன் கணவரின் இந்தத் திடீர் நடத்தைக்கு முத்துலட்சுமி காரணமல்ல என்பது மட்டும் புரிந்தது திலகாவுக்கு.

                        -திண்ணை இணைய இதழ் 05-11-2017




Tuesday, 30 August 2016


பசியாக இருக்குமோ…
கோ. மன்றவாணன்
9944006276

     மொட்ட மாடியில என்னமோ சத்தம் கேக்குது. என்னான்னு போய்ப் பாருங்கஎன்ற என் இல்லத்து ராணியின் கட்டளையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடித்து மனதைச் சிதறடித்துவிடும். எனவே கதவைத் திறந்து வெளியில் வந்தேன்.

       வெளிப்புறத்தில் இருந்துதான் மாடிக்குப் படிகள் உள்ளன. மெதுவாகச் சத்தம் காட்டாமல் மாடிக்குச் சென்று பார்த்தேன்.  நாலைந்து சிறுவா்கள் மாங்காய்ப் பறித்துக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் திடுதிப்பென என்னைத் தள்ளிவிடாத குறையாகக் கீழே இறங்கி ஓடினார்கள். மதில் பக்கத்திலேயே தயாராக நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார்கள். அவர்கள் பறித்த மாங்காய்கள் அங்கங்கே சிதறிக்கிடந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து இல்லத்தரசியிடம் அறிக்கை சமர்ப்பித்தேன்.

       தெண்டம்  தெண்டம்… அந்தப் பசங்கள புடிக்கத் துப்பில்ல ஒங்களுக்கு. விட்டுவிட்டு வந்து கத சொல்றீங்க கத. புடிச்சுக் கட்டி வச்சிருக்க வேணாமா?என்று வார்த்தைகளை வாரி வீசினார். வேறு யாரு? என் மகாராணியார்தான்.

       அணில் சாப்பிட்டுப்போறத ஆசையா சாப்பிடப் பறிச்சிருக்கானுவ.

           அணில் சாப்பிடலாம்ங்க. அதுக்கு அதுதான் விதி. அணில் என்ன வேலைக்குப் போயி சம்பாதிச்சு வந்தா சாப்பிட முடியும்.

       சரி விடு சின்னப் பசங்க.

      என்ன சின்னப் பசங்க? இன்னைக்கு மாங்கா திருடுறவன் நாளைக்கு நகைநட்ட திருடுவான். இந்த மாதிரிப் பசங்கள சும்மா விடக்கூடாது

       அதுக்கு நாம என்ன செய்றது.           சின்ன வயசுல இதெல்லாம் சகஜம்தான். ஏன் நானே சின்ன வயசில  ஒரு வீட்டுத் தோட்டத்துல வேலியை லாவகமா விலக்கிட்டு, கைய உட்டு, பட்டு ரோஜா செடிய திருடிட்டு வந்து எங்க வீட்டுல நட்டிருக்கேன் தெரியுமா… அதனால நான் என்ன இப்ப திருடனாவா ஆயிட்டேன்?

       அதனாலதானோ என்னவோ திருடனுக்கு ஆஜராவற வக்கீலா ஆயிட்டீங்க என்று சொன்ன என் மனைவி, சொரட்டுக்கோல எடுத்துக்கிட்டு என் பின்னாலேயே வாங்க என்ற ஆணையை பிறப்பித்துவிட்டு, ஒரு சாக்குப்பையோடு மாடிக்குப் போனாள். நானும் பின்தொடா்ந்தேன்.

       கைக்கு எட்டிய மாங்காய்களை என் மனைவியின் வளைக்கரம் வளைத்துப்போட்டது. வாங்கரிவாளுக்கு எட்டிய மட்டும் மாங்காய்க் காம்புகளைத் திருகி மாங்காய்களை விழச்செய்தேன். விழுந்த மாங்காய்களை நானும் என் மனைவியும் எடுத்துச் சாக்குப்பையில் நிரப்பினோம். அந்த மூட்டையைப் படியில் தேய்த்தவாறே இருவரும் சோ்ந்து இழுத்துவந்து வீட்டுக்குள் போட்டோம்.

       த்தோ பாருங்க இப்படியே விட்டா எல்லா மாங்காயையும் திருடிட்டுப் போயிடுவாங்க. யாருகிட்டயாவது விலைபேசி மரத்துல இருக்கற மாங்காய பறிச்சிட்டுப் போ சொல்லுங்க

       எங்க போயி ஆளத் தேடறது?

       ம்க்கும்… அதெல்லாம் நான்தான் சொல்லணும்?

       யாராவது மொத்தமா மாங்கா பறிச்சிட்டுப் பணம்கொடுக்குற ஆளு இருந்தா சொல்லுங்க. வீட்டு மரத்துல நிறைய மாங்கா இருக்கு என்று தெரிந்தவா்களிடம் எல்லாம் சொல்லி வைத்தேன்.
      
***
       நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலை ஆறு மணிக்கு அழைப்பு மணி ஒலித்தது. வெளியில் வந்து பார்த்தேன்.

       மாங்கா தரீங்களா?
       ஆமா… தர்றதுதான். யார் சொல்லி அனுப்புனது?
              “யாரும் சொல்லலீங்களே… நானாத்தான் வா்றேன்.
              “சரி என்ன வெல சொல்றே?
       மரத்துல மாங்கா ஒண்ணும் அதிகமா இல்லீங்களே
      அதுக்கு நான் என்ன பண்ணுவேன். இருக்குற மாங்காய பறிச்சிட்டுப் போ. சீக்கிரம் வெலய சொல்லு
       நானூறு ரூவா தர்றன். அதுக்கே எனக்கு நஷ்டம்தான் என்று இழுத்தார்.
       கடையில கிலோ 20 ரூபா விக்குது. நீ என்னா இவ்வளவு கம்மியா கேக்குற?
       அது வேற மாங்காங்க. இது ஓடாது.
       யோவ் நாங்க இந்த மாங்காயைச் சாப்பிடுறோம் அவ்வளவு டேஸ்டா இருக்கு
       அதோ பாருங்க… மாங்காய் கருப்படிச்சிருக்கு. யாரு வாங்குவாங்க?
       சரி என்ன சொல்றே
       நானூறுன்னு நான் சொன்னதே அதிகங்க.
      
     இதைக்கேட்டபடி உள்ளே இருந்துவந்த என்மனைவி ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டுப் பறிச்சிட்டுப் போ என்று சொன்னார்.

      என் மனைவி சொன்ன விலையைக் கேட்டு, வியாபாரி அதிர்ச்சி அடையவில்லை. நக்கலாக சிரித்துக்கொண்டே சொன்னார்.

       ஆமாம்மா… இரண்டாயிரம்கூடக் கேளுங்க… அப்படியே விட்டுவையுங்க. அழுகித்தான் போவும். இந்த நானூறுகூடத் தேறாது.

            “நானூறுக்கெல்லாம் தர முடியாது. என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டேன். வியாபாரி வாசலிலே நின்றுகொண்டிருந்தார்.

       சார்… சார்… என்று வியாபாரியின் குரல்கேட்டு மீண்டும் வெளியில் வந்தேன்.
        சார்… யோசித்துச் சொல்லுங்க சார். காய் ஒண்ணும் அதிகம் தேறாதுங்க.
        யோசிக்கறதுக்கு என்னய்யா இருக்கு. பத்து மூட்ட காய் வரும்.
       அட நீங்க ஒண்ணு. இரண்டு மூட்ட கூட வராது. ஒன்றரை மூட்ட வர்றதே ரொம்ப பெரிசு
       நான் ஒன்றும் பேசவில்லை. அவரே பேசினார்.
       சார்… ஒங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நானூத்தைம்பது ரூவா தர்றேன்.
       வேணாம் வேணாம் நீ கிளம்பு. ஊங்கிட்ட பேசிக்கிட்டு இருக்க முடியாது. எனக்கு நெறய வேல இருக்கு.

       அப்படியும் அவர் விடுவதாயில்லை. ஒரு வழியாக ஐநூறுக்கு முடிவானது. நூறு ரூபாய் முன்பணமாகக் கொடுத்தார். சாக்கு எடுத்துக்கொண்டு  வருவதாகச் சொல்லிப் போனார். ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தார். கூடவே ஒரு பையனும் வந்தான். அவன் அவருடைய மகனாக இருக்கக் கூடும். நான் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. முனையில் வலைக்கூடை கொண்ட ஒரு நீண்ட வாங்கரிவாளை அவர்கள் வைத்திருந்தார்கள். அவரும் அந்தப் பையனும் மாடிக்குப் போனார்கள். சார்… நீங்க கீழேயே இருங்க. பறிச்சிட்டு வந்து சொல்றோம் என்றார் வியாபாரி. நானும் வீட்டுக்குள்ளே நாளிதழ் படித்துக்கொண்டிருந்தேன். மாங்காய் விழும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தோட்டத்தில் கீழே விழுந்த மாங்காய்களை அந்தப் பையன் பொறுக்கிச் சாக்குப்பையில் போட்டுக்கொண்டிருந்தான். அருகே இருந்த எலுமிச்ச மரத்தின் மீது மாங்காய் விழுந்து எலுமிச்சம் பழங்கள் வேறு கீழே விழுந்துகொண்டிருந்தன. சன்னல் வழியாக எட்டிப் பார்த்து அந்தப் பையனிடம் சொன்னேன்.

            “ஏய் எலுமிச்சம் பழத்த எல்லாம் வெல பேசல்ல. அதெல்லாம் எங்ககிட்ட கொடுத்துட்டுப் போவணும்.

            “அது எங்களுக்கு எதுக்கு சார்? அத பொறுக்கி அப்படியே கொடுத்துட்டுப் போறோம் என்று நாணயத்தைத் தம்பட்டம் அடித்தான்.

       கொண்டுவந்த சாக்குப்பைகளில் பறித்த.. விழுந்த மாங்காய்களை நிரப்பினார்கள். பன்னிரண்டு மூட்டைகள் நிரம்பி, பதிமூன்றாவது மூட்டையில் பாதியளவு மாங்காய்கள் இருந்தன.

            “யோவ்… ஒன்றரை மூட்டக்கூட வராதுன்னு சொன்ன… இப்ப 13 மூட்ட வா்றது.

            “சார்… ஒங்ககிட்டெல்லாம் அப்படிப் பேசினாத்தான் இறங்கி வருவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா? என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான். என் ஏமாளித்தனம் என் முகத்திலேயே எழுதி இருக்குறத அவன் படிச்சிருக்கான் போலிருக்கு என்று மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டேன். ஆனாலும் பிடி கொடுக்காமல்,

            “13 மூட்ட மாங்கா வந்துடுச்சி. ஆயிரம் ரூபாயாய கொடுக்கணும்என்று கண்டிப்பாகச் சொன்னேன்.

            “பேசனது பேசனதுதான். ஐநூறுக்குப் பேசி முடிச்சாச்சு. இப்பக் கூட கேக்குறது ஒங்களுக்கே நல்லா இருக்கா சார்

       இதை எதிர்வீட்டுக்காரர் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு வியாபாரியிடம் மேற்கொண்டு பேசவில்லை. எப்படியாவது ஒழியுது என்று விட்டுவிட்டேன்.

       டிவிஎஸ் 50ல் இரண்டிரண்டு மூட்டைகளாக வைத்துக்கட்டி மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்வதாகச் சொல்லிச் சென்றார்கள். கடைசி நடையின் போது, மீதிப் பணத்தைத் தருவார்கள் என்று வாசல்படியிலேயே நின்றுகொண்டிருந்தேன்.

       சார்… இந்த மூட்டையை போட்டுட்டு வந்து பைசல் பண்றோம்.

            “யோவ்… இப்பவே கொடுத்துட்டுப் போய்யா.

       சார்… நாங்க சின்ன வியாபாரிங்க. மொத்த வியாபாரிக்கிட்ட போடுறோம். த்தோ… அரை மணிநேரத்துல பணத்தை வாங்கிட்டு வந்து கொடுத்துடுறோம். உங்க பணம் எங்களுக்கு எதுக்கு சார்.

       அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே என்று நம்பினேன். வியாபாரி விர்ரென்று பறந்தார். பையனைக் காணவில்லை. அவன் எப்பொழுது போனான்? எப்படிப் போனான்? என்று தெரியவில்லை.

       தோட்டத்தைச் சுற்றி வந்தேன். விழுந்த எலுமிச்சப் பழங்களில் ஒன்றைக்கூடக் காணோம். ஐம்பது பழங்களாவது தேறும். அவற்றையும் மூட்டையிலேயே வைத்துக் கட்டிக்கொண்டு போய்விட்டிருக்கிறார்கள். ஓஸ் பைப்பையும் காணவில்லை. அதன் மதிப்பு ஐநூறு ரூபாய் இருக்கும்.

       பணம்கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற வியாபாரி, மூன்று மணிநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.

            “என்னங்க… மீதி நானூறு ரூபாய வாங்கினீங்களா?
            “கொண்டுவந்து தர்றதா சொல்லிப் போன ஆள இன்னும் காணல
        “அப்ப நாமந்தான் போங்க. அவன் அட்ரஸ கேட்டீங்களா? கேட்டிருக்க மாட்டீங்களே… நீங்களும் ஒரு வக்கீலு? எனக்கென்னு வந்து வாச்சீங்களே
    “அப்படியே அட்ரஸைக் கேட்டாலும், ஏமாத்த நெனக்கறவன் சரியான அட்ரஸையா சொல்லிட்டுப் போவான்?

       ஒரு வாரம் ஓடிப் போனது. மார்க்கெட்டில் எல்லாம் விசாரித்துப் பார்த்துவிட்டேன். அப்படி ஒருவரை யாருக்கும் தெரியவில்லை.

***
       மரத்தில் அணில்கள் கிறீச் கிறீச் என்று ஓயாமல் சத்தம் போட்டுக்கொண்டிருக்கின்றன.

       பசியாக இருக்குமோ…