Wednesday, 14 September 2016


இன்று புதிதாய்ப் பிறந்தோம்!


           ஒவ்வோர் ஆண்டு மட்டுமல்ல
           ஒவ்வொரு நாளும்
           உங்களுக்குப்
           புதுநாளாக…
           புத்துணர்வு நாளாகப் பிறக்கும்

           எதிர்மறை எண்ணம்
           எதனையும்
           நுழைய விடாதீர்கள்
           உங்கள்
           உள்ளக் கோட்டைக்குள்

           நல்லதே நினைப்போம்
           நல்லதே செய்வோம்
           நல்லதே நடக்கும்
           என்றபடி
           மனதைப் பழக்குங்கள்

           பிறகு
           இடரே வந்தாலும்
           இடறி விடுவீர்கள் 

           மனம் ஒரு குரங்கு
           மற்றவர்க்குத்தான்,
           உமக்கல்ல!

           மனம் ஒரு குழந்தை
           அதைத்
           தூக்கிவைத்துக் கொஞ்சுங்கள்
           மகிழ்ச்சியும்
           மலர்ச்சியும்
           வாழ்க்கை முழுவதும்
           வண்ணங்கள் தீட்டும்.

           போனதை எண்ணிப்
           புலம்பிக்கொண்டிருந்தால்
           பொழுது இருக்காது
           புதியதாய் வாழ! 

           மறுபடியும் துளிர்விடும்
           பட்ட மரத்தைப்
           பாருங்கள்

           அது சொல்லும் :

           “முடிந்துவிடவில்லை
           வாழ்க்கை
           மீ்ண்டும் புதியதாய்”   

           நேற்றை நினைத்துக்
           கூட்டுக்குள் முடங்குவதில்லை
           குருவி

           புலர்ந்ததும் பறக்கும்
           புதிய பறவையாய்
           புதிய வெளியிலே          

           ஒவ்வொரு நாளும்
           உன்வானம்
           புதிதாகத்தான் விரியும்

           ஒவ்வொரு நாளும்
           உன்பூமி
           புதிதாகத்தான் சுற்றும்

           ஒவ்வொரு நாளும்
           உன்முகம்
           புதிதாகத்தான் புன்னகைக்கும்

           ஒவ்வொரு நிமிடமும்
           உன் உள்ளம்
           புதிதாகத்தான் துள்ளும்

           அப்படியாக-
           ஒவ்வொரு நாளும்
           புதிதாய்ப் பிறந்துபார்

           ஆகா…
           அதுதான் பிறவிசுகம்!


                        - கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment