இலவசம்
எனும் வசியம்
“ஆளுக்கொரு
கத்திக்குத்து
இலவசம்”
என்று
அறிவித்துப்
பாருங்கள்….
அடுத்த
நொடியே
வயிற்றைக்
காட்டியபடி
வரிசையில்
நிற்பார்கள்
எங்கள்
மக்கள்.
ஒரு பட்டுப்புடவை
வாங்கினால்
ஒரு கைக்குட்டை
இலவசம் என்றால்
பத்துக்
கைக்குட்டைகள் வாங்கி வருவார்
என்
பட்டத்தரசி
“அக்காவைத்
திருமணம் செய்தால்
தங்கை
இலவசம்”
இது
எங்கள்
ஜோக் எழுத்தாளர்களின்
இலவசக்
கனவு
கனவு
நனவானால்
காவல்
நிலையம் திறக்க வேண்டும்
பெண்வீட்டு
வாசலில்!
“ஆயிரம்
ரூபாய்ப் பொருளை
ஆறாயிரம்
ரூபாய்க்கு விற்க
ஐநூறு
ரூபாய்ப் பொருளை இலவசம் கொடு”
என்று
வணிக
சாஸ்திரத்தை
வகுத்து
வைத்திருக்கிறார்கள்
புதிய சாணக்கியர்கள்
தாயத்து
மந்திரக்கயிறு
வசிய
மை
இந்த
வரிசையில்
இலவசம்
முன்னிலை வகிக்கிறது
இலவசங்களின்
விலைமதிப்புதான்
தீர்மானிக்கிறது
தேர்தல்
வெற்றியை!
நம்
ஆசையின்
நாடி
பிடித்து
நாடு
பிடிக்கிறது
இலவசம்
இலவசம்
என்னும்
மாயக்
குழிக்குள் விழுந்து
மாண்டு
போவதே
நாட்டு
மக்களின்
ஜாதக
பலன் என்று
ஒரு கிளி
சீட்டெடுத்துக் கொடுத்துவிட்டு
நெல்
கொறிக்கிறது
கூண்டுக்குள்!
- கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment