என்தேசம்
என்சுவாசம்
நம் தேசம்
நமக்கு முகம் ;
அகதிகள்
ஆகிவிடுவோம்
தேசம் இல்லையேல்!
நமக்கு
உரிமை தருவது எது?
பெருமை தருவது எது?
தேசம்தான்!
பிறரைக் கெடுத்தேனும்
என் குடும்பம்
என் ஆதாயம்
என வாழ்வோர் இங்குண்டு.
என் தேசம்
என் சுவாசம்
எனச்சொல்லும் தகுதி
எவருக்கு உண்டு?
எதையும் எதிர்பாராமல்
ஏழையரிடம் புன்னகைத்து….
தம் கடமைகளைச்
சரியாகச் செய்வதில்
கடவுளாய்த் தெரியும்
அரசு ஊழியர் இருந்தால்
அவர்தான்
என்தேசத்தின் சுவாசம்!
பணபலம் இல்லாமல்
படைபலம் கொள்ளாமல்
தன்னந்தனி ஏழைகூடத்
தேர்தலில் நின்று
தன் தொண்டுகளால்
தன் பண்புகளால்
தன் தகுதிகளால்
வெற்றி பெறும் வாய்ப்பை
ஏற்படுத்தும் மக்களே
என்தேசத்தின் சுவாசம்!
சொத்துச் சேர்க்காமல்
சொந்தங்களை வளர்க்காமல்
நேர்மை அரசியலை
நிகழ்த்திக் காட்ட
இன்னொரு காமராசராய்
யார் இருப்பாரோ
அவர்தான்
என்தேசத்தின் சுவாசம்!
அரசுப் பள்ளி மாணவர்கள்
அநாதைகள் அல்லர் ;
அவர்களைத்
தம்சொந்தக் குழந்தைகளாய்க் கருதித்
தரமான கல்விதரும்
ஆசிரியர் எவரோ
அவரே
என் தேசத்தின் சுவாசம்!
நோயாளி போலவே
காட்சிதரும்
அரசு மருத்துவ மனையில்…
ஊசலாடும்
உயிர்களைக் காக்க
எந்த மருத்துவர்
இதயம் துடிக்கிறதோ
அந்த இதயமே
என் தேசத்தின் சுவாசம்!
என் தேசம்
என் சுவாசம்
என வாழ்ந்து காட்ட
மாற்றி அமைப்போம்
நம் நுரையீரல்களைக்
காந்திய நுரையீரல்களாய்!
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment