Wednesday, 14 September 2016


சினிமாவுக்குப் போன
கடவுள்

திடீரென்று
திருக்கோவிலை விட்டுத்
திரையரங்குக்குப் போனார்
கடவுள்.

சினிமா நாயகனின்
சித்திர வெட்டுருவை
அண்ணாந்து பார்த்தபோதுதான்
முதன்முதலாகக்
கழுத்துச் சுளுக்கியது
கடவுளுக்கு!

படநாயகனின்
பதாகைகளுக்குத்
தீபாராதனை நடத்தின
தெருவுக்குத் தெரு உள்ள
தீவிர ரசிகா் மன்றங்கள்.

ஜீன்ஸ் அணிந்த
சிறுசுகளும் இளசுகளும்
பால்குடம் சுமந்துவந்து
அபிஷேகம் செய்து
ஆர்ப்பரித்தன
அந்தக் கட் அவுட்டுக்கு!

படம்போடும் முன்பே
அரங்கில்
சந்தோஷ சப்த
சங்கீத ஆலாபனை
விதவிதமாக…

படத்தில்
படிக்கட்டுத் தெரிந்தது…
பின்னா்
நாயகனின்
கால்ஷு மட்டும் தெரிந்தது…
அதற்காகவே தவம்கிடந்த
ரசிகா்கள்
தம் உள்ளங்கையில் வைத்தே
கற்பூர ஆராதனை செய்தனா்
கால்ஷுவுக்கு!


இடையிடையே விசிலோசை
எதிரொலித்தது
எட்டுத்திக்கும்.

வேத மந்திரத்தைவிட
விசிலோசையில்தான்
பக்திசுகம் அதிகமென்று
பட்டிமன்றத் தீர்ப்பளித்தார்
பகவான்.

லாரிகளில்
வாரிவந்த ரோஜாப் பூக்களை
நாயக பிம்பத்தின் மீதும்
நாடிவந்த ரசிகா்கள் மீதும்
மழையாகப் பொழிவதற்குப்
பயிற்சி பெற்ற ரசிகப்படை
பார்க்கும் இடமெல்லாம்.

எல்லாவற்றையும் பார்த்த பிறகு…
இந்த ரசிகா்களைப்போல்
விசுவாசமாக
இருக்கவில்லையே என்று
தன் பக்தர்களை நொந்துகொண்டார்
கடவுள்!

தெய்வம்
திரும்பவே இல்லை
திருக்கோவில் பக்கம்.

இனி
படத்தில் நடித்தால்தான்
தம்பெருமையைத்
தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று
இயக்குநர் புதுமைராஜ் வீட்டின்
வாயிலில்
வாய்ப்புக்காகக்
காத்துக் கிடக்கிறார் கடவுள்
கூர்க்கா விரட்டியும்!

-கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment