Wednesday, 14 September 2016



அலைகளின் தாகம்



அடங்கவே இல்லை
அலைகளின் தாகம்
ஆழிப்பேரலைக்குப் பின்னும்.

நித்தமும்
உறுமுகிறது
மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை
நான்பிடிக்கக் கூடாதா என்று !

தொலைதூரத்தில் நின்ற கடல்
நிலஅபகரிப்பு செய்து
நிலஅபகரிப்பு செய்து
எங்கள்
பனையோலைக் குடிசைக்குள் நுழைந்து
பாயை நனைக்கிறது

அன்று
சிறுவர்கள் விளையாடச்
சிப்பிகளையும் சோழிகளையும் கொடுத்த
அலை
இன்று
வெறிபிடித்து அலைகிறது
பிள்ளை பிடிக்கும் பூதமாய்
அன்று
கொள்ளை அடித்தது
தங்கக் காலமாய் இருந்த
சங்க காலத் தமிழகத்தை !

எங்கள் இலக்கியங்களை
எடுத்துச் சென்ற அலைகளுக்குப்
படித்துச் சொல்ல யாருமில்லை

படிக்கக் கேட்டிருந்தால்
பண்பட்டிருக்குமே !

கரையோரத்தில் நின்றால்
காலை முத்தமிட்டுச் செல்லும்
அது ஒரு
கவிதைக்காலம்

காலை இழுத்துச் செல்கிறது
இது ஒரு
நாற்காலி அரசியல் காலம்

கடலோரச் சங்கெடுத்துக்
காதோரம் வைத்தேன்
மரண ஓசை

நான்
படித்த சட்டத்தி்லும் இடமில்லை
அலைகளுக்கு விலங்கிட 

அடங்கவே இல்லை
அலைகளின் தாகம்
ஆழிப்பேரலைக்குப் பின்னும்

 - கோ. மன்றவாணன்



No comments:

Post a Comment