Tuesday, 26 September 2017

பறவையின் மனசு







             முதியவர் ஒருவரை மோதித் தள்ளிவிட்டுச்
             சீறிப்பாய்ந்து கூட்டத்தில் மறைந்தது
             திமிர் இளைஞனின் இருசக்கர வாகனம்

             பின்னால் வந்த வாகனம் எதுவும்
             நிற்காமல் போயின
             அவசர அவசரமாய்

             இன்னும்
             துடித்துக் கொண்டிருக்கிறார் முதியவர்


             உண்டிவில் ஏவிய கல்பட்டு விழுந்தது
             காக்கை ஒன்று
             எங்கிருந்தெல்லாம் வந்த காக்கைகள்
             இடைவிடாமல் எழுப்பிக்கொண்டே இருக்கின்றன
             நீதிகேட்டோ உதவிகேட்டோ முழக்கங்கள்


             சுற்றுலாப் பயணிகளை இறக்கிவிட்டுக்
             காத்திருந்தது பேருந்து.
             ஆளுக்கொரு திசை சென்றவர்களைத் தேடி
             இழந்தனர்
             நேரத்தையும் அமைதியையும்

             அருகே
             வாத்துக் கூட்டமொன்று கடந்து போனது
             முன்சென்ற வாத்தைத் தொடர்ந்தபடியே...


             தனக்கு எப்போது நல்ல காலம் வருமென
             சாதகம் பார்க்கிறார்
             வேலை தேடாத இளைஞர்

             சீட்டெடுத்துக் கொடுக்கும் வேலையைச்
             செய்துவிட்டே
             நெல்மணியைக் கொரிக்கின்றன உழைக்கும் கிளிகள்


             -கோ. மன்றவாணன்

Monday, 18 September 2017

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும்






                 சின்னக் கைகள்
                 காப்பாற்ற நீளுகின்றன
                 மழைநீர் உள்புகுந்து
                 கவிழத் தொடங்கும் காகிதக் கப்பலை!

                 அம்மா இட்ட
                 ஆடுமயில் கோலத்தைப் பார்த்துத்தான்
                 கருமேகம் திரளுதோ...
                 கனமழை இறங்குதோ...

                 மழை மறைத்த
                 மயில்கோலத் தடம்தேடி
                 அலைகிறது ஒரு பிஞ்சு மனது

                 குடைவிரித்து நிற்கிறது ஒரு குழந்தை
                 கொட்டும் நீரில் நடுநடுங்கும்
                 கோழிக்குஞ்சுக்கு

                 புத்தகப்பை நனையக் கூடாதெனப்
                 பொத்தி வைக்கிறாள் உரச் சாக்கில்
                 குடிசை வீட்டுச் சிறுமி 


                 காசுகளை உண்டியலில் போட்டுக்
                 கடவுளை வேண்டுகின்றன குழந்தைகள்...
                 கப்பலைக் கவிழ்க்காத
                 கோலத்தைக் கலைக்காத
                 குஞ்சுகளை நடுக்கிடாத
                 புத்தகத்தை நனைக்காத 
                 செல்ல மழையை அனுப்ப வேண்டி!

                 
                 -கோ. மன்றவாணன்


Tuesday, 12 September 2017

சேர்த்து வைத்த கனவு





                      செல்வ நிதியை
                      சேர்த்து வைக்க வழியேது
                      குடிசையில் பிறந்த அவளுக்கு

                      தனியார் பள்ளியில் இடமேது
                      சுமைதூக்கும் தந்தையின்
                      மகளுக்கு

                      ஆசை அவளுக்கில்லை
                      புத்தாடை அணியவோ
                      பூச்சூடிப் புன்னகைக்கவோ
                      பொன்னகையில் மின்னவோ...

                      கல்வி ஒன்றுதான்
                      நிலவைத் தொட
                      அவளுக்குக் கிடைத்த நூலேணி

                      அப்துல்கலாம் சொல்கேட்டுத்
                      தூங்கவிடாக் கனவொன்றைக்
                      நட்டு வளர்த்தாள்

                        1176  / 1200
                      உயர்மதிப்பெண் பெற்றாள்
                      ஏழைக் கலைமகள்

                      கழுத்தில் ஸ்டெதஸ்கோப்
                      தவழ்ந்தாடி இருக்கும்
                      கடந்த ஆண்டாக இருந்திருந்தால்

                      கழுத்தில் தூக்குக்
                      கயிறு இறுகியதே
                      நீட் ஆண்டாக இது இருந்ததால்

                      சக்கரங்களில் நசுங்கியது
                      தூக்கி வெளியில் கிடாசிய
                      காமராசர்
                      சேர்த்து வைத்த கனவு

                      -கோ. மன்றவாணன்






Tuesday, 5 September 2017



பதினொருபேர் கொண்ட ஓர் அவையில்...


-கோ. மன்றவாணன்-


இலக்கியக் கூட்டத்தில் பேராசிரியர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். இன்னா நாற்பது குறித்தும் அதுதொடர்பான இலக்கிய மேற்கோள்கள் குறித்தும் சுவைபடத்தான் பேசினார்.

அறிஞர்கள் கூறும் கருத்தை மறுதலிப்பதும் அதைக் கேள்வி கேட்பதும் அறிவிலார் செயல் என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் கேள்வி கேட்கக் கூடாது? ஒருவர் அறிஞர்தானா என்பதை எப்படி ஒப்புக்கொள்வது? எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவர் தவறாக ஒன்றைச் சொல்லும் போது, அல்லது அவர் கருத்தில் தெளிவின்மை இருக்கும் போது ஏன் கேள்வி கேட்கக் கூடாது? ஏன் ஐயம் எழுப்பக் கூடாது? அவர் அறிஞர் என்று சொல்வதால் அவரிடத்தில் கேள்விகள் கேட்டு ஐயம் தீர்ப்பதுதானே முறை. அதைவிடுத்து வேறு யாரிடத்தில் வினா எழுப்புவது? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருந்தன.
ஏன் என்ற கேள்வி இங்குக் கேட்காமல் வாழ்க்கையில்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
என்ற திரைப்பாடலும் என் மனச்செவிக்குள் ஒலித்து அடங்கியது

அடுத்த சில நொடிகளிலேயே இன்னொன்றையும் சொன்ன போது இன்னும் பேரதிர்ச்சி ஏற்பட்டது.

“பதினொருபேர் கொண்ட ஓர் அவையில், ஒருபொருள் பற்றிப் பத்துப்பேர் ஒரே மாதிரி கூறுகையில்- அவையில் ஒருவர் மட்டும் எழுந்து அதை எதிர்த்துக் கூறுவது பேதைமையின் உச்சம்” என்று பேராசிரியர் சொன்னதுதான் அந்தப் பேரதிர்ச்சி ஏற்பட்டதற்கான நதிமூலம். என் உள்மனசு போர்க்கொடி தூக்க முயன்றது.

பல இலக்கியப் பொருள்கோள்களை எடுத்துரைத்துத் தம் புலமைத்திறத்தை வெளிப்படுத்தி விட்டதாகக் கருதிப் பெருமிதத்தோடு அமர்ந்தார் பேராசிரியர்.

கூட்டத்தில் இருந்த இலக்கிய ஆர்வலர்கள் அவர்பேச்சைச் சுவைத்த விதத்தைப் பார்த்த போதும், இடையிடையே பலத்த கைத்தட்டல்களால் ஆராவாரித்த போதும், அவர் சொன்ன அனைத்தையும் அப்படியே கூட்டத்தினர் ஒப்புக்கொண்டதாகத்தான் அறிய முடிகிறது. ஒருவேளை அறிஞர் பேச்சை யாரும் மறுக்கக் கூடாது என்ற பேராசிரியரின் கூற்றுக்கு கட்டுண்டோ என்னவோ...

எனக்கு ஐயங்கள் ஏற்பட்டன. பதினொருபேர் கொண்ட அவையில் உள்ள அத்தனை பேரையும் எவ்வாறு அறிஞர்கள் என்று அறிய முடியும்? முனைவர் போன்ற படித்த பட்டங்கள் மூலம் ஒருவரை அறிஞர் என்று சொல்லும் போக்கே நம்மிடையே இருக்கிறது.

முனைவர் பட்டம் மட்டுமே ஒருவரை அறிஞர் என்று தீர்மானித்துவிடும் என்றால், ஒரு முனைவர் பற்றி இன்னொரு முனைவரிடம் கேட்டுப் பாருங்கள். ஆய்வேடுகளின் உண்மைத்தன்மை குறித்துப் பல்கலைக் கழகங்களிலேயே விசாரித்துக்கொள்ளுங்கள். (தரமான தகுதியான முனைவர்களும் இருக்கிறார்கள்.)

பதவியால் ஒருவர் அறிஞர் ஆகிவிடுவாரா? பேராசிரியர் ஆக ஒருவர் பணியாற்றினால் அவர் அறிஞர்தான் என்றாகிவிடுவாரா? துறைத்தலைவர் ஆகிவிட்டால் அவர் பேரறிஞர் ஆகிவிடுவாரா? பல்கலைக்கழகக் குழுவில் இடம்பெறுபவர்கள் பெரும்பாலும் பதவி மூப்பு அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாகத் தமிழில் புதுச்சொல் உருவாக்கக் குழு அமைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். அதுகுறித்து ஆற்றல் இல்லாதவர்களும் அந்தக் குழுவின் பெரும்பதவிகளில் வீற்றிருப்பார்கள். மெய்யாகவே சொல்லாக்கத்தில் தேர்ந்தவர்கள் இடம்பெறாமல் போய்விடுவார்கள். சொந்தப்பயன் எதுவும் பெறாமல் பின்னிருந்து யாரோ சிலர் உதவுவதால் அக்குழு புகழ்பெறவும் கூடும். இதுதான் தற்போதைய நிலைமை. படித்தொகை பெறுவதற்காகவே பல அறிஞர் குழுக்கள் கூடிக் கலைவதும் உண்டாம். பதவி அடிப்படையில் ஒருவரைச் சிறந்த அறிஞர் என்று கருதுவது எல்லாத் தரப்பிலும் சரிவராது. (தம் அறிவால் ஆற்றலால் பதவிக்குப் பெருமை சேர்ப்பவர்களும் உண்டு)

சரி... அறிஞர் என்றே ஒப்புக்கொள்வோம். அந்த அறிஞர் அவருடைய துறையில் அனைத்தும் அறிந்தவராக இருக்க முடியாது. அவருக்குத் தெரியாதவை சாதாரண ஒருவருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.

எல்லாரும் சொல்லித் தேய்ந்த புகழ்பெற்ற எடுத்துக்காட்டுதான். என்றாலும் நினைவூட்டுகிறேன். உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டின் இரண்டு பூனைகள் வளர்த்தாராம். ஒருநாள் இரவு அடைபட்ட அறையை விட்டு வெளியே வர முடியாமல் கத்திக்கொண்டே இருந்தனவாம். அந்தப் பூனைகள் போய்வர கதவில் இரண்டு துவாரங்கள் போடும்படித் தன் உதவியாளரிடம் சொன்னாராம். பெரிய பூனை போய்வரப் பெரிய துவாரமும், சின்னப் பூனை போய்வரச் சின்னத் துவாரமும் போடும்படிக் கவனமாக அறிவுறுத்தினாராம். அப்போது அந்த உதவியாளர், “பெரிய துவாரத்திலேயே சின்னப் பூனையும் போய்வர முடியுமே” என்றாராம். மூளையை அதிகமாகப் பயன்படுத்திய மேதை ஐன்ஸ்டினுக்கே அந்த நிலைமை. (இந்நிகழ்வு வெவ்வேறு விதமாகப் பதிவாகி உள்ளது. எது சரியென்று தெரியவில்லை. ஆனால் சொல்லவரும் கருத்து என்னவோ ஒன்றுதான்)

ஒருபொருள் குறித்த அறிவைப் பெரும்பான்மைக் கணக்கில் பத்துப்பேர் ஒப்புக்கொள்வதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? அந்த ஒருவர் சொல்வதை நிராகரிக்க வேண்டுமா? யார்சொன்னாலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று வள்ளுவர் சொல்வதைப் பெரும்பாலும் மேடையில் போற்றிப் பேசுபவர்கள், தன்வாழ்வில் பயன்படுத்தத மறந்துவிடுகிறார்கள் அல்லது மறுத்துவிடுகிறார்கள்.

அறிவை அளப்பதற்கு ஜனநாயக முறை சரிவராது. தலைஎண்ணிக்கையில் தீர்மானித்தால் தப்பும் சரியென்று சாதிக்கப்படுமே... போதிக்கப்படுமே...

உலகம் தட்டையென அனைவரும் சொன்னார்கள், கலிலியோ ஒருவரைத் தவிர! இதை ஜனநாயக முறையில் தீர்மானித்திருந்தால் உலகம் உருண்டை என்ற உண்மை வெளிப்படாமல் போய்இருக்கும்.

பெரும்பான்மையர் சொல்லிவிடுவதால் அதை ஏற்கத்தான் வேண்டும் என்ற பேராசிரியரின் வாதம், சாதாரணன் ஆகிய எனக்கு நெருடலாகத்தான் இருந்தது. அதை அவரிடத்தில் அப்போதே நேரில் சொல்லத் துணிந்தேன். அவைமரபு; அவைநாகரிகம் என்றெல்லாம் சொல்லி என்னைத் தடுப்பதற்கென்றே என்கூடவே என் நண்பர் ஒருவர் இருந்தார்.


அவை நாகரிகத்தால்தான் பலர் “அனைத்தும் அறிந்த” அறிஞர்கள் ஆக மேடையுலா வருகிறார்களோ?  

நிலைக்கும் என்றே...






               பல்லாயிரம் ஆண்டுகளை நனைத்த
               நதி
               நினைத்திருக்காது
               வீட்டுமனைகளாக
               விற்கப்படுவோம் என்று

               ஏசு பேசிய
               எபிரேய மொழி நினைத்திருக்காது
               தானும்
               சிலுவையில் மரிப்போம் என்று

               நிமிர்ந்து நின்ற
               நெடுங்குன்றம் நினைத்திருக்காது
               கல்குவாரி குள்ளனின்
               கால்மிதியில் நசுங்குவோம் என்று

               அடர்ந்த படர்ந்த
               காடு நினைத்திருக்காது
               நிழலைத் தொலைப்போம் என்று

               ஊர்காக்கும் சாமி
               நினைத்திருக்காது
               அகலச் சாலைத் திட்டத்தில்
               அகற்றப்படுவோம் என்று


               ஆனாலும்
               நிலைக்கும் என்றே
               நினைக்கிறார்கள் அமைச்சர்கள்
               ஆட்சியும்
               அதிகாரமும்


               -கோ. மன்றவாணன்

Tuesday, 29 August 2017

கண்ணால் காண்பதும்....






              என் கண்ணே
              ஏமாற்றுகிறது என்னை

              கானல் நீரைக்
              கண்டோடிய மானாய்
              மனம்

              தட்டையாகத்தான் இருக்கிறது பூமியெனச்
              சாதிக்கின்றன விழிகள்
              இன்னமும்

              முகம்பார்த்தே
              முடிவு செய்கின்றன
              அகம்பார்க்கத் தெரியாத கண்கள்

              ஆயிரம்கண் மாரியம்மனுக்காவது இருக்குமா
              360 பாகையிலும்
              சுழன்று படம்பிடிக்கும் விழிகள்

              வெள்ளுடையில் மின்னும் அமைச்சர்களின் மனமும்
              வெள்ளைதான் என்று
              வாக்களிக்கும் மக்கள்

              பொன்னொளியில் மின்னும் துணிக்கடையில்
              புடவை எடுத்து வெளிவந்தேன்
              பொலிவு மாறியது எப்படி அதற்குள்?

              வெளியில் முளைத்த செடிகளுக்குத்
              தண்ணீர் ஊற்றவில்லை
              வீட்டினுள் ஞெகிழிச் செடிகள்

              ஒரே மேகம்தான்
              வெவ்வேறு காட்சிகள்
              ஒவ்வொருவருக்கும்

              அழகைத் தீர்மானிக்கிற ஆற்றல்
              எந்த விழிக்கும் இல்லை
              என்றேன்

              விழிகள் செங்கொடி உயர்த்துகின்றன
              வீதிக்கு வந்து

              -கோ. மன்றவாணன்


Thursday, 24 August 2017

தவம்







              கதைகளிலும் தென்படவில்லை
              தவத்துக்கு மயங்காத
              கடவுள்

              வஞ்சக முனிவன் வணங்கிக் கேட்டால்
              மறுப்புரைக்காமல் 
              தன்தலையையே அறுத்துத்
              தருவார் போலும் கடவுள்
              தவத்துக்கு மயங்கி

              சுயநலத்தால் நிரம்பி வழிகிறது
              தவப் பாத்திரம்

              தீயவர்களின் வேண்டுதல்கள் 
              நிறைவேறி விடுகின்றன
              திருப்பதி உண்டியல்தான்
              தினமும் நிரம்பி வழிகிறதே...

              மனம், மூளை வளர்ச்சி குறைந்த
              குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று
              தேடித் தேடிப் பார்த்தேன் கடவுளை...


              அவர்
              அரசியல் தலைவர் வீட்டுக்குப் போய் இருக்கிறாராம்
              வரம் அருள !

              (நெற்றிக்கண் திறக்காமல் என்னை மன்னியும் 
              என் தேவனே...)


            -கோ. மன்றவாணன்

Saturday, 19 August 2017

மழைநீர் போல...









             அன்னப்பறவை ஆகவில்லை நான்
             தண்ணீரை நீக்கிவிட்டுப்
             பால்மட்டும் பருக

             நீதிப்பறவை ஆகவில்லை நான்
             மெய்யெது பொய்யெது
             என அறிய

             உள்மனநோக்குப் பறவை ஆகவில்லை நான்
             முகமூடிகளே நிறைந்த உலகில்
             நல்ல நட்பைக் காண

             வஞ்சத்தால் கொழுத்துக் கிடக்கிறது
             பூமியின்
             ஒவ்வோர் அணுவும்

             தீராத ஆசை
             பூமியைத் தொடாமலே
             புதியதோர் வாழ்வு காண

             அடங்காத வேட்கை
             மண்ணைத் தொடுவதற்கு முன்பே
             மழைநீர் அருந்த

             அமுதம் வேறேது?
             நிலம்சேரும் முன்பே அருந்தும்
             மழைநீர் போல


             கனவு காணுகிறேன்
             கருவாக...
             சக்கரவாகப் பறவையின் முட்டையில்

             -கோ. மன்றவாணன்




Tuesday, 8 August 2017

கடல் பயணம்



              முன்னரே...

              பறவைகளுக்குத் தெரிந்திருந்தது
              பரந்த உலகின்
              முழுமேனி

              மீன்களுக்கும் தெரிந்திருந்தது
              வெவ்வேறு கண்டங்களின்
              விலாசங்கள்

              மலை, காடு, கடல். நதி, பள்ளம், மேடு என
              மல்லாந்து கிடந்த பூமியை
              நெளிகோடுகளில் தாமதமாகப் படம்பிடித்தவன்
              நேற்றைய மனிதன்

              சிதறிக் கிடந்த பூமித் துண்டுகளைச்
              சேர்த்து வைத்துப் பார்த்தது
              கடல் பயணம்

              புயலில் தத்தளிக்கும் படகே
              பயணத் தடமாக்கியது
              கடலை

              வாஸ்கோட காமா இல்லையென்றால்
              வெள்ளையர்கள் ஆண்டிருக்க முடியாது
              இந்தியாவை


              நாடு பிடிக்கும் வெறியை
              நங்கூரம் இட்டுக் காத்ததும்
              கடல்பயணம்தான்.

              நிலவற்ற வானம்
              இருண்ட கடல்
              திசையழிந்த வெளி
              திடீரெனத் தாக்கும் கடலுயிரினங்கள்
              சுழன்று வீசும்
              சூறாவளி
              தண்ணீர் இல்லை தாகம் தணிக்க
              எந்த நேரமும் மரணம்
              இதுவொரு
              முடிவறியாத பயணம்

              கண்டங்களையும் நாடுகளையும்
              கண்ட மாலுமிகள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்
              வெற்றிகொள்ளத் தக்கவையே பிரச்சனைகள்


              -கோ. மன்றவாணன்

காற்றுக்கு இப்போதாவது ஞானம் வருமா....


      


               சிலநொடிகள் முன்வரை
               தீக்கிரையாக்கியது ஊரை
               வெயில்

               எங்கே பதுங்கியிருந்து
               கொரில்லா தாக்குதல் நடத்தின
               இந்த இருட்டு மேகங்கள்

               கல்கரைத்த மழையும்
               காது கிழித்த இடியும்
               நடுங்க நடுங்க வைத்தன
               நம்மை மட்டுமல்ல
               கான்கிரீட் கட்டடங்களையும் 

               தேநீர்க் கடையின் வாசலில்தான்
               நின்றுகொண்டிருந்தேன்
               தகரக் கூரை பறந்தது தெரிந்தது
               எங்கே தொற்றியது
               எங்கே விழுந்தது தெரியவில்லை

               பஸ்ஓடும் பாதையைப்
               படகுஓடும் நதியாக
               மாற்றிவிட்டது
               மழை

               பெருங்கூச்சலோடு
               பேய்த்தாண்டவம் ஆடிய
               காற்றின் கொடுங்கைகளில்
               மாய அறுவாள்கள் இருந்திருக்குமோ...

               சற்று நேரத்தில்
               போர்க்களத்தில் விழுந்த
               மாவீரர்கள் போலச் சாய்ந்தன
               மரங்கள் யாவும்

               காற்றுக்கு இப்போதாவது ஞானம் வருமா....
               கலிங்கப் போரில் மடிந்த வீரர்களைப் பார்த்துக்
               கண்ணீர்விட்ட அசோகன் போல!

               -கோ. மன்றவாணன்

Thursday, 3 August 2017

ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்





                           
              











உயிர்ப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறது
ஒருதுளி விந்து

ஓராயிரம் விளக்குகளை ஏற்றிவைக்கிறது
ஒருதிரிச் சுடர்

ஒரு திருமண விருந்தை சுவையாக்குகிறது
ஒருசொட்டுக் குழம்பின் பதச்சுவை

எந்த ஊருக்கும் அழைத்துச் செல்கிறது
எடுத்து வைக்கும் ஒரு காலடி

சிந்தனை நிலவுகள் நூறு
சேர்ந்து நடக்கும் மேடையை அமைக்கிறது
தினமணி கவிதைமணி வழங்கும்
ஒரு தலைப்பு

நாறும் அறையை
நந்தவனம் ஆக்கிவிடுகிறது
ஒரு மெல்லிய
ஊதுவத்தி

தூசுப் புள்ளியில்
தொடங்கிப் பயணிக்கிறது
பிரபஞ்சம்

புள்ளியிலிருந்துதான் தொடங்கின
புவியின் முதலெழுத்தும் முதல்ஓவியமும்

குழந்தைக்குத் தன்னம்பிக்கை மலர்ந்தது
“அ” எழுதக் கற்ற முதல்நாளில்தான்

வெற்றிபெற்ற
பெரும்புள்ளிகள் யாவரும்
ஒருபுள்ளியிலிருந்து வாழ்வைத் தொடங்கியவர்கள்தாம்

கடலாக மாறும் அதிசயம்
துளிக்கு உண்டு

இன்றைய புள்ளியில்தான்
கருவாகி வளர்கிறது
நாளைய உலகு


-         கோ. மன்றவாணன்