Tuesday, 29 August 2017

கண்ணால் காண்பதும்....






              என் கண்ணே
              ஏமாற்றுகிறது என்னை

              கானல் நீரைக்
              கண்டோடிய மானாய்
              மனம்

              தட்டையாகத்தான் இருக்கிறது பூமியெனச்
              சாதிக்கின்றன விழிகள்
              இன்னமும்

              முகம்பார்த்தே
              முடிவு செய்கின்றன
              அகம்பார்க்கத் தெரியாத கண்கள்

              ஆயிரம்கண் மாரியம்மனுக்காவது இருக்குமா
              360 பாகையிலும்
              சுழன்று படம்பிடிக்கும் விழிகள்

              வெள்ளுடையில் மின்னும் அமைச்சர்களின் மனமும்
              வெள்ளைதான் என்று
              வாக்களிக்கும் மக்கள்

              பொன்னொளியில் மின்னும் துணிக்கடையில்
              புடவை எடுத்து வெளிவந்தேன்
              பொலிவு மாறியது எப்படி அதற்குள்?

              வெளியில் முளைத்த செடிகளுக்குத்
              தண்ணீர் ஊற்றவில்லை
              வீட்டினுள் ஞெகிழிச் செடிகள்

              ஒரே மேகம்தான்
              வெவ்வேறு காட்சிகள்
              ஒவ்வொருவருக்கும்

              அழகைத் தீர்மானிக்கிற ஆற்றல்
              எந்த விழிக்கும் இல்லை
              என்றேன்

              விழிகள் செங்கொடி உயர்த்துகின்றன
              வீதிக்கு வந்து

              -கோ. மன்றவாணன்


2 comments:

  1. சுபா அருணாசலம்31 August 2017 at 18:22

    "ஆயிரம்கண் மாரியம்மனுக்காவது இருக்குமா
    360 பாகையிலும்
    சுழன்று படம்பிடிக்கும் விழிகள்" :D
    "அழகைத் தீர்மானிக்கிற ஆற்றல்
    எந்த விழிக்கும் இல்லை
    என்றேன்

    விழிகள் செங்கொடி உயர்த்துகின்றன
    வீதிக்கு வந்து"

    சிந்தனயில் சிக்கி நிக்கும் வரிகள்.....

    ReplyDelete
    Replies
    1. என்கவிக்குப் புகழ்சொன்ன
      பெண்கவிக்கு நன்றி

      Delete