ஏழ்மையின் எதிர்பார்ப்பு
சீருடையில் மேனி மிளிர்ந்து
சிறு டையில் மிடுக்குயர்ந்து
சிரிப்புப் பூஉதிர்த்து
பறக்கும் வாகனங்களில் செல்லும்
பள்ளிக் குழந்தைகளைப்
பார்க்கின்றன….
சாலை ஓரத்தில்
சகதி மண்ணில்
விளையாடும் குழந்தைகள் !
அந்த
ஏதுமறியா
ஏழ்மை விழிகளுக்குள்
ஏக்கக் கண்ணீர்!
அருகிலேயே…
ஆந்திரம் விட்டுக்
குழி தோண்டும்
கூலி வேலைக்குக்
குடும்பமாய் வந்த
பெற்றோர்களின்
வியர்வைக் கண்ணீர்!
அவர்கள்
குழிகள் வெட்டிக்
குழாய்களைப் புதைக்கிறார்கள்…
தம்
குழந்தைகளின் கல்வியையும் சேர்த்து!
கீழே விழுந்து
கிடந்த
“2020ல்
இந்தியா வல்லரசாகும்”
என்ற வாசகப் பலகையில்
ஏறிச் செல்கிறது
எங்கள் அமைச்சரின் கார்!
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment