காகிதக்
கப்பல்
எங்கள் பிள்ளைகள்
எல்லாரும்
கப்பலோட்டும் தமிழர்கள்தாம்
காகிதத்தில்
கப்பல் செய்து
மழைநீரில் செலுத்தும்போது
அப்பா
அம்மாவுக்குத் தெரியாத
உளவியல் நுட்பத்தைக்
காகிதக் கப்பல்
கற்று வைத்திருக்கிறது
குழந்தைகளை
மகிழ்ச்சியில் நீந்த வைப்பது எப்படி என்று!
குழந்தைகள் ஓட்டும்
காகிதக் கப்பலைக்
காணவே
பூமிக்கு இறங்கி வருகிறதாம்
புதுமழை
வார இதழ்கள்
வாசிக்க மட்டுமல்ல
கப்பல்
கட்டும் தொழில்நுட்பத்தைக்
கற்றுத் தருவதற்கும்
யார் சொன்னது
பயணத்துக்கு ஆகாது
காகிதக் கப்பல் என்று
இதோ
காகிதக் கப்பலில்
காதல் பயணம் போகின்றன
எறும்புகள் இரண்டு
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment