Friday, 30 June 2017

அறம் செய்ய விரும்பு








அறம் செய்ய விரும்பு

தொடக்கப்பள்ளியிலேயே சொல்லித்தரும் பாடம் ஆத்திசூடி. தளிர்க்குழந்தைகளால் எளிதில் உச்சரிக்கக் கூடியதாகவும் மனத்தில் பசுமையாகப் பதியக் கூடியதாகவும் அமைந்த பழங்கால நூலது. இனிய முறையில் வாழ்வியல் நெறிகளை அமுதென ஊட்டும் அறநூலும் அது. அதில்வரும் ‘அறம் செய்ய விரும்பு” என்ற முதல்நெறி தெளிவாக இருந்தாலும் சில எதிர்வினைகளும் எழுகின்றன.

மேரி ஷெல்லியின் “பிரேத மனிதன்” என்ற நூலைப் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்து 1943 டிசம்பர் மாதத்தில் வெளியிட்டார். அந்த நூலை யாழ்ப்பாண ஈழகேசரி என்ற வார இதழின் ஆசிரியர் அரியரத்தினம் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அப்படி வழங்கும்போது அந்த நூலின் வெண்பகுதியில் “அறம் செய்ய விரும்பு. ஆனால் செய்யாதே!” என்றெழுதித் தந்தார். இந்த விவரம் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் காணப்பட்டது. உண்மைப் பொருள் அறியாதவரல்லர் புதுமைப்பித்தன். நகைச்சுவைக்காக அவ்வாறு எழுதியிருக்கிறார். ஆனால் அதுபோல் சிலர் மேடைகளில் பேசிக் கிச்சுக்கிச்சு மூட்டுகின்றனர்.

அவ்வையார் அறம் செய்க என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாமல் அறம் செய்ய விரும்பு என்று ஏன் சொன்னார்? ஆத்திசூடியின் அந்த முதல்வரியே தவறாக இருக்க முடியுமா?

ஒரு செயலுக்கு முந்திய நிலை, செய்வதற்கான விருப்பம் ஆகும். விரும்பாத போது அங்கு இயல்பான செயல் நிகழாது. ஒன்றை விரும்பிச் செய்யும் போதுதான் அந்தச் செயல் நிறைவானதாக இருக்கும். தொடர்ந்து நிகழ்வதாக இருக்கும். அறம் செய்ய விரும்பினால் அந்த அறத்தை நாம் விரும்பிச் செய்வோம். அறத்தை விருப்பத்தோடு செய்ய வேண்டும் என்பதும் உள்ளார்ந்த பொருளாகும். மேலும் செய்ய என்ற சொல்லைக் கவனியுங்கள். செய்வதற்காகத்தான் விரும்ப வேண்டும் என்ற பொருளையும் அந்தச் சொல் உணர்த்தும். செயலை ஊக்குவிக்கும் வகையில்தான் அறம் செய்ய விரும்பு என்று சொல்லி இருக்கிறார் அவ்வையார்.

ஒன்றை விரும்பினால், அதை அடைவதற்கான செயலூக்கத்தை அந்த விருப்பமே தரும். ஆகவே... அறம் செய்ய விரும்பினால் அறம் செய்து அகம் மகிழ்வீர்கள்.

இப்போதெல்லாம் அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் நன்கொடை கேட்டு வற்புறுத்துகின்றனர். அவ்வாறு கொடைகொடுக்க விருப்பம் இல்லாமலே கொடுப்பதுதான் தற்போதைய நடைமுறையாக உள்ளது. முகப்பழக்கத்துக்காகவும் வெளிமதிப்பீட்டுக்காகவும் சில அறச்செயல்களைச் செய்வோரும் உள்ளனர். விருப்பம் இல்லாமல் செய்வது எல்லாம் அறம் ஆகாது. 

மனமார விரும்பிச் செய்கிற அறம்மட்டுமே, அர்த்தம் பொதிந்ததாகவும் அன்பு மிகுந்ததாகவும் அருள் ஊட்டுவதாகவும் அமையும். தொடர்ந்து அறம் செய்யத் தூண்டுவதாக இருக்கும். அத்தகைய அறச்செயல்கள்தாம் கடைசிவரை கூடவரும். அதனால்தான் அறம் செய்ய விரும்பு என்று சொல்லி இருக்கிறார் என்றும் பொருள் அறியலாம்.
அந்தக் காலத்திலும் வறுமை தாண்டவம் ஆடியிருக்கிறது. அதனால்தானே புலவர்கள் வறுமையில் வாடி இருக்கிறார்கள்; மன்னர்களிடம் கொடைபெற ஓடியிருக்கிறார்கள். பாடிப் பரிசில் பெறுவது அப்போது இயல்பானது. அந்தக் காலத்தில் அன்றைய எழுத்தாளர்களான புலவர்களை அரசர்கள் மதித்து இருக்கிறார்கள்; பாராட்டி ஊக்குவித்து  இருக்கிறார்கள்; பரிசளித்து வாழ்வளித்து இருக்கிறார்கள் எனவும் அறிய முடிகிறது. அவ்வையாரும் பாடிப் பரிசில் பெறும் புலவராக இருந்திருப்பார். அதனால்தான் என்னவோ அறம் செய்ய விரும்பு என்று தன்தேவையை உணர்ந்து அறிவுறுத்தி இருப்பாரோ என்றுகூடச் சிலர் நகையாடலாம். பொதுநல உணர்வோடு வாழ்முறைக்கு இலக்கணமாக ஆத்திசூடியைப் படைக்கும்போது அவ்வையாருக்கு அவ்வாறு தன்னலம் இருக்க முடியாது.

இன்னொரு பார்வையும் இருக்கிறது.

செல்வந்தர்கள் அறம் செய்ய முடியும். ஏழைகள்; ஏதும் அற்றவர்கள் எப்படி அறம் செய்ய முடியும்? என்ற கேள்வியை எழுப்பிச் சிந்தியுங்கள். பிறருக்குக் கொடுத்து உதவ என்னிடம் பொருளில்லையே என்று ஏழைகள் குறுக வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு அறம் செய்ய விரும்பினாலே போதும் என்றாகிறது.

ஏழைகள் – செல்வந்தர்கள் எல்லாருக்கும் பொதுவாக அறம் செய்ய விரும்பு என்று சொல்லி இருக்கலாம். ஏழைகூடச் சில நேரங்களில் சில உதவிகளை தம்மால் இயன்ற வரை செய்ய இயலும். பொருளாகக் கொடுப்பதுதான் அறம் என்றில்லை. சொல்லாலும் செயலாலும் மனதாலும் உதவுவதும் அறம்தான்.

ஈகைகையைத்தான் அறமாகப் பலரும் நினைக்கிறார்கள். அறம் அதையும் தாண்டி பரந்த சிறந்த பொருள்கொண்டது. சுருக்கமாகச் சொன்னால் எதுவெல்லாம் நல்லதோ அதுவெல்லாம் அறம் என்று கூறலாம். அதனால்தான் ஈவது விலக்கேல் என்று தனியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அறம் செய்க என்பது செயல் சார்ந்தது. அறம் செய்ய விரும்புவது, மனம் சார்ந்தது. அறம் செய்யும் எண்ணத்தை மக்கள் மனங்களில் விதைக்கத்தான் அறம் செய்ய விரும்பு என்று அவ்வையார் சொல்லி இருக்கிறார். அவ்வாறு அறம்செய்யும் மனப்பான்மை மக்களிடத்தில் இருந்தால் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முடியும். யாருக்கும் தீங்கு இழைக்காத நிலை உருவாகும். அறம் செய்ய விரும்புகிறபோதே மனமாசு அகன்றோடும். சமுதாயத்தில் அறம் ஓங்கி உயர்ந்து தழைக்கும். அறம் தழைக்கும்போது நீதியான சமூகம் மலரும்.

நல்ல மனப்பான்மையை விதைத்துவிட்டால் நல்ல செயல்கள் தாமாகவே விளையும். அந்த வகையில் பார்த்தால் அறம் செய்ய விரும்பினாலே அறம்செய்தல் நிகழும்.

அனைத்தும் அறிந்தே அவ்வையார் சொல்லி உள்ளார்.
அறம் செய்ய விரும்பு. 


-                                                                                                                                   கோ. மன்றவாணன் 

   வெளியீடு : தினமணி 18-06-2017







No comments:

Post a Comment