Tuesday, 30 January 2018

நல்லதோர் வீணை



                          




           பூதத்திடம் கொடுத்துவிட்டுப்
           போனவர்
           திரும்பி வந்து பார்த்தார்
           மாறி இருந்தது
           நல்லதோர் வீணை
           நல்லதோர் விறகாய் நெருப்பில்

           நவீன
           நாரதரிடம் வந்து சேர்ந்தது
           நல்லதோர் வீணையொன்று
           கைவிரல் படாமலே ஒலிக்கிறது
           கலக ராகம்

           அடகு வைக்கப்பட்டது வீணை
           மீட்டவோ
           மீட்கவோ
           வரவில்லை ஏழைக் கலைஞன்

           அரசியல்வாதிக்கு
           அன்பளிப்பாகத் தரப்பட்ட
           வீணைக்குக் கோபம்
           தற்கொலை செய்துகொண்டது
           தரையில் விழுந்து

           கல்வி அமைச்சர் நடத்தும்
           கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்ட
           கலைமகள் சிலையின் கையில்
           பொன்முலாம்
           பூசப்பட்ட வீணை
           மாறி மாறி மாயாஜாலம் காட்டியது
           வாய்பிளக்கும் உண்டியலாய்


           குழந்தைகளுக்கான வீணைகளைச் செய்து
           கூடையில் வைத்துக்
           கூவிச் செல்கிறார் கிழவர்
           துப்பாக்கிப் பொம்மைகளை வைத்து
           சுடுகின்றன குழந்தைகள்
           கிழவரை நோக்கியே

             -கோ. மன்றவாணன்



Monday, 22 January 2018

தூரத்து வெளிச்சம்





              தூரத்து நட்சத்திரம்
              துணைக்கு வரும்
              தொலைவைக் கடக்கலாம்

              உச்சிவான் நிலவு
              உடன் வரும்
              இருள்பயம் நசுக்கி நடக்கலாம்

              இருள்காட்டில்
              இரவுக்கூட்டில்
              ஏற்றிவைப்பார் அகல்விளக்கு ஒருவர்
              கண்முளைக்கும் அப்போது
              காட்டுக்கும்

              இருட்டுப் பள்ளத்தாக்கில் இருந்து
              ஏற முயல்கிறோம் எல்லாரும்
              ஒளியை அள்ளி உடலில் பூசிக்கொள்ளவே

              வேதங்கள் விளக்குகின்றன
              “ஒளியால் நிரம்பிய உடல்தான்
              எந்தக் கடவுளுக்கும்”

              ஒளி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது
              “நம்பிக்கையின் உயிர்வடிவம்
              நான்”

              சுற்றிலும் இருள்வெளி
              தூரத்தில் சுடர்த்துளி
              போதுமே வெற்றி உன்னருகே....


              -கோ. மன்றவாணன்

Tuesday, 16 January 2018

யுத்தம் செய்யும் கண்கள்





              வேல்விழி என்றும்
              வாள்விழி என்றும்
              புலவர்கள் சொன்னபோதே
              புரிந்தது
              போர்செய்யும் கண்கள் இவையென்று

              மாமன்னர்களும்
              மகாகவிஞர்களும்
              போரில் தோற்றவர்களே
              அந்தரங்க வரலாறு
              அவிழ்க்கப்பட்டால்

              ராணுவ ரகசியங்களைக்
              ராத்திரியில் கைப்பற்றும் ராசி
              பெண்ணுக்கு உண்டு
              அவளின்
              கண்ணுக்கு உண்டு

              நீர்மூழ்கிக் கப்பல்போல்
              வெளித்தெரியாமல் சென்று
              வீழ்த்தும் சக்தி
              விழிகளுக்கு உண்டு
              வீழ்ந்தவர் சொன்ன மெய்யிது

              கவிபேசும் கண்களுக்குள்
              ஆயத்தமாய் இருக்கும்
              ஆயுதக் கிடங்கு  

              தோற்றுப் போவதே
              சுகம்
              யுத்தம் செய்யும் கண்களிடம் சரண்அடைந்து

                -கோ. மன்றவாணன்

Thursday, 11 January 2018

வீணையின் நாதம்



                                  


                மிழற்றிப் பாருங்கள்
                மெதுவாக வீணையை

                அறிவீர்கள்
                இரும்புக் கம்பிகளுக்குள்
                இனிய இதயம் உண்டு
                என்பதை!

                விரல்களின் மொழிபுரிந்து
                உரையாடுகிறது
                வீணை
                உலகப் பொதுமொழியில்

                எந்த ஓவியரால் வரைய முடியும்
                கையில் வீணை இல்லாமல்
                கலைமகளை?

                யாரால் கண்டுபிடிக்க முடியும்
                இந்த வீணைக்குள்
                எத்தனை பாடல்கள்?

                நாணமுண்டு வீணைக்கும்
                நங்கையின் கைதொடும்போது!
                ஞானமுண்டு வீணைக்கு
                நம்மனதைத் தொட்டுச் சுகமாக்கும்போது!

                வீணையின் நாதம் கேளுங்கள்
                உங்கள் உள்ளம்
                ஒரு கோவிலாகும்….

                   -கோ. மன்றவாணன்



Friday, 5 January 2018

நினைவுப் பெட்டகம்




               நின்று பார்த்திராத
               கால தேவதையின்
               காலடித் தடங்களைப் பாதுகாக்கிறது
               வரலாறு

               உதிர்ந்த இலைகளின் நினைவு நிழலாடுகிறது
               தளிர்விடும்
               புதிய இலைகளில்

               சோகத்தையும்
               சுகமாக்குகிறது யாருக்கும்
               முதல்காதலின் நினைவு

               நேற்றைப் புறக்கணித்துவிட்டு
               நாள் நடக்க முடியாது என்று
               ஞாபகப்படுத்துகின்றன
               நேற்றுச் சுட்ட இதே சூரியனும்
               நேற்றுக் குளிர்ந்த இதே நிலாவும்

               நினைவு தன்னைத் தானே
               முடிச்சிட்டுக்கொள்கிறது
               ஒவ்வொரு மரணத்திலும்

               அந்த
               மரணத்திலிருந்தும் ஒரு நினைவு
               கொழுகொம்பு தேடிக்கொள்கிறது

               நீ வேறு
               நினைவு வேறு அல்ல என
               மனக்கிளையில் அமர்ந்து பாடுகிறது
               வாழ்க்கைக்கிளி

               காலமும் உன்னைக்
               கைகூப்பி வணங்க
               நினைவுப் பெட்டகங்களில்
               நிரம்பி ஒளிரட்டும் நன்னெறிகளே…

               நினைவுப் பள்ளியில் பாடம் பயின்றே
               வரவேற்கிறது
               வருங்காலம்


              -கோ. மன்றவாணன்