Tuesday, 29 August 2017

கண்ணால் காண்பதும்....






              என் கண்ணே
              ஏமாற்றுகிறது என்னை

              கானல் நீரைக்
              கண்டோடிய மானாய்
              மனம்

              தட்டையாகத்தான் இருக்கிறது பூமியெனச்
              சாதிக்கின்றன விழிகள்
              இன்னமும்

              முகம்பார்த்தே
              முடிவு செய்கின்றன
              அகம்பார்க்கத் தெரியாத கண்கள்

              ஆயிரம்கண் மாரியம்மனுக்காவது இருக்குமா
              360 பாகையிலும்
              சுழன்று படம்பிடிக்கும் விழிகள்

              வெள்ளுடையில் மின்னும் அமைச்சர்களின் மனமும்
              வெள்ளைதான் என்று
              வாக்களிக்கும் மக்கள்

              பொன்னொளியில் மின்னும் துணிக்கடையில்
              புடவை எடுத்து வெளிவந்தேன்
              பொலிவு மாறியது எப்படி அதற்குள்?

              வெளியில் முளைத்த செடிகளுக்குத்
              தண்ணீர் ஊற்றவில்லை
              வீட்டினுள் ஞெகிழிச் செடிகள்

              ஒரே மேகம்தான்
              வெவ்வேறு காட்சிகள்
              ஒவ்வொருவருக்கும்

              அழகைத் தீர்மானிக்கிற ஆற்றல்
              எந்த விழிக்கும் இல்லை
              என்றேன்

              விழிகள் செங்கொடி உயர்த்துகின்றன
              வீதிக்கு வந்து

              -கோ. மன்றவாணன்


Thursday, 24 August 2017

தவம்







              கதைகளிலும் தென்படவில்லை
              தவத்துக்கு மயங்காத
              கடவுள்

              வஞ்சக முனிவன் வணங்கிக் கேட்டால்
              மறுப்புரைக்காமல் 
              தன்தலையையே அறுத்துத்
              தருவார் போலும் கடவுள்
              தவத்துக்கு மயங்கி

              சுயநலத்தால் நிரம்பி வழிகிறது
              தவப் பாத்திரம்

              தீயவர்களின் வேண்டுதல்கள் 
              நிறைவேறி விடுகின்றன
              திருப்பதி உண்டியல்தான்
              தினமும் நிரம்பி வழிகிறதே...

              மனம், மூளை வளர்ச்சி குறைந்த
              குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்று
              தேடித் தேடிப் பார்த்தேன் கடவுளை...


              அவர்
              அரசியல் தலைவர் வீட்டுக்குப் போய் இருக்கிறாராம்
              வரம் அருள !

              (நெற்றிக்கண் திறக்காமல் என்னை மன்னியும் 
              என் தேவனே...)


            -கோ. மன்றவாணன்

Saturday, 19 August 2017

மழைநீர் போல...









             அன்னப்பறவை ஆகவில்லை நான்
             தண்ணீரை நீக்கிவிட்டுப்
             பால்மட்டும் பருக

             நீதிப்பறவை ஆகவில்லை நான்
             மெய்யெது பொய்யெது
             என அறிய

             உள்மனநோக்குப் பறவை ஆகவில்லை நான்
             முகமூடிகளே நிறைந்த உலகில்
             நல்ல நட்பைக் காண

             வஞ்சத்தால் கொழுத்துக் கிடக்கிறது
             பூமியின்
             ஒவ்வோர் அணுவும்

             தீராத ஆசை
             பூமியைத் தொடாமலே
             புதியதோர் வாழ்வு காண

             அடங்காத வேட்கை
             மண்ணைத் தொடுவதற்கு முன்பே
             மழைநீர் அருந்த

             அமுதம் வேறேது?
             நிலம்சேரும் முன்பே அருந்தும்
             மழைநீர் போல


             கனவு காணுகிறேன்
             கருவாக...
             சக்கரவாகப் பறவையின் முட்டையில்

             -கோ. மன்றவாணன்




Tuesday, 8 August 2017

கடல் பயணம்



              முன்னரே...

              பறவைகளுக்குத் தெரிந்திருந்தது
              பரந்த உலகின்
              முழுமேனி

              மீன்களுக்கும் தெரிந்திருந்தது
              வெவ்வேறு கண்டங்களின்
              விலாசங்கள்

              மலை, காடு, கடல். நதி, பள்ளம், மேடு என
              மல்லாந்து கிடந்த பூமியை
              நெளிகோடுகளில் தாமதமாகப் படம்பிடித்தவன்
              நேற்றைய மனிதன்

              சிதறிக் கிடந்த பூமித் துண்டுகளைச்
              சேர்த்து வைத்துப் பார்த்தது
              கடல் பயணம்

              புயலில் தத்தளிக்கும் படகே
              பயணத் தடமாக்கியது
              கடலை

              வாஸ்கோட காமா இல்லையென்றால்
              வெள்ளையர்கள் ஆண்டிருக்க முடியாது
              இந்தியாவை


              நாடு பிடிக்கும் வெறியை
              நங்கூரம் இட்டுக் காத்ததும்
              கடல்பயணம்தான்.

              நிலவற்ற வானம்
              இருண்ட கடல்
              திசையழிந்த வெளி
              திடீரெனத் தாக்கும் கடலுயிரினங்கள்
              சுழன்று வீசும்
              சூறாவளி
              தண்ணீர் இல்லை தாகம் தணிக்க
              எந்த நேரமும் மரணம்
              இதுவொரு
              முடிவறியாத பயணம்

              கண்டங்களையும் நாடுகளையும்
              கண்ட மாலுமிகள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்
              வெற்றிகொள்ளத் தக்கவையே பிரச்சனைகள்


              -கோ. மன்றவாணன்

காற்றுக்கு இப்போதாவது ஞானம் வருமா....


      


               சிலநொடிகள் முன்வரை
               தீக்கிரையாக்கியது ஊரை
               வெயில்

               எங்கே பதுங்கியிருந்து
               கொரில்லா தாக்குதல் நடத்தின
               இந்த இருட்டு மேகங்கள்

               கல்கரைத்த மழையும்
               காது கிழித்த இடியும்
               நடுங்க நடுங்க வைத்தன
               நம்மை மட்டுமல்ல
               கான்கிரீட் கட்டடங்களையும் 

               தேநீர்க் கடையின் வாசலில்தான்
               நின்றுகொண்டிருந்தேன்
               தகரக் கூரை பறந்தது தெரிந்தது
               எங்கே தொற்றியது
               எங்கே விழுந்தது தெரியவில்லை

               பஸ்ஓடும் பாதையைப்
               படகுஓடும் நதியாக
               மாற்றிவிட்டது
               மழை

               பெருங்கூச்சலோடு
               பேய்த்தாண்டவம் ஆடிய
               காற்றின் கொடுங்கைகளில்
               மாய அறுவாள்கள் இருந்திருக்குமோ...

               சற்று நேரத்தில்
               போர்க்களத்தில் விழுந்த
               மாவீரர்கள் போலச் சாய்ந்தன
               மரங்கள் யாவும்

               காற்றுக்கு இப்போதாவது ஞானம் வருமா....
               கலிங்கப் போரில் மடிந்த வீரர்களைப் பார்த்துக்
               கண்ணீர்விட்ட அசோகன் போல!

               -கோ. மன்றவாணன்

Thursday, 3 August 2017

ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்





                           
              











உயிர்ப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறது
ஒருதுளி விந்து

ஓராயிரம் விளக்குகளை ஏற்றிவைக்கிறது
ஒருதிரிச் சுடர்

ஒரு திருமண விருந்தை சுவையாக்குகிறது
ஒருசொட்டுக் குழம்பின் பதச்சுவை

எந்த ஊருக்கும் அழைத்துச் செல்கிறது
எடுத்து வைக்கும் ஒரு காலடி

சிந்தனை நிலவுகள் நூறு
சேர்ந்து நடக்கும் மேடையை அமைக்கிறது
தினமணி கவிதைமணி வழங்கும்
ஒரு தலைப்பு

நாறும் அறையை
நந்தவனம் ஆக்கிவிடுகிறது
ஒரு மெல்லிய
ஊதுவத்தி

தூசுப் புள்ளியில்
தொடங்கிப் பயணிக்கிறது
பிரபஞ்சம்

புள்ளியிலிருந்துதான் தொடங்கின
புவியின் முதலெழுத்தும் முதல்ஓவியமும்

குழந்தைக்குத் தன்னம்பிக்கை மலர்ந்தது
“அ” எழுதக் கற்ற முதல்நாளில்தான்

வெற்றிபெற்ற
பெரும்புள்ளிகள் யாவரும்
ஒருபுள்ளியிலிருந்து வாழ்வைத் தொடங்கியவர்கள்தாம்

கடலாக மாறும் அதிசயம்
துளிக்கு உண்டு

இன்றைய புள்ளியில்தான்
கருவாகி வளர்கிறது
நாளைய உலகு


-         கோ. மன்றவாணன்