Friday, 31 March 2017

அழியாது இந்த உலகம்



        

         புகழ்போதையில் வெளித்தள்ளும்
         வாந்தியில் 
         வழுக்கி விழுகின்றன
         இலக்கிய நாற்காலிகள்!

                   
         பொன்னாடை கொண்டுபோனால்தான்
         இலக்கிய அரங்கில் 
         நுழைய விடுவார்கள் போல் இருக்கி்றது.


         பிழைமலிந்து
         விடுப்பு விண்ணப்பம் எழுதி
         அதற்கும்
         ஞான பீட விருது கேட்பார்கள்
         இவர்கள்


         சூரியன் எனப் பட்டம்
         சூட்டிக் கொண்டு உருள்கிறது
         எலிப்புழுக்கை கூட !


         அழியாது இந்த உலகம்,
         பட்டம் சூடாத 
         கவிஞன் ஒருவனைக் காணும் வரை !



           -கோ. மன்றவாணன்



Tuesday, 28 March 2017

எதிர்காலம்



                எதிர்காலம்?


                    எதிர்காலம் சிறக்க வேண்டி
                    ஏங்குவோர் இங்கே உண்டு;
                    புதிர்காலம்  என்றே ஆகிப்
                    போகுமோ காலம் யாவும்?
                    எதிர்காலம் என்று சொன்னால்
                    எதிர்க்கின்ற காலம் ஆமோ?
                    கதிர்காலம் உதிக்க வேண்டும்
                    கவலையாம் இருளை நீக்க!

                    தும்பிக்கை இல்லை என்றால்
                    தொடராது யானை வாழ்க்கை
                    நம்பிக்கை இல்லை என்றால்
                    நகராது மனித வாழ்க்கை
                    அம்பினைப் பாய்ச்ச வேண்டாம்
                    அன்பினைப் பாய்ச்ச வேண்டும்
                    தெம்பினை மனதில் வைத்துத்
                    தேடுநீ பொன்னைக் காண்பாய்

                    நேற்றெல்லாம் மாறிப் போகும்
                    நேர்மையே உயர்த்தும் உன்னை
                    காற்றெல்லாம் மலர் கொணர்ந்து
                    காலடி வைத்துப் போற்றும்
                    ஊற்றெல்லாம் இளநீர் ஆகும்
                    ஊரெல்லாம் உன்னைத் தாங்கும்
                    மாற்றெல்லாம் யார் உனக்கு?
                    மணிமுடி  தேர் உனக்கு! 

                    உனக்கெனக் காலம் உண்டு
                    உழுதுவை உனது மண்ணை
                    தனக்கென வாழ்தல் இன்றித்
                    தலைவனாய் உழைத்து வாழ்வாய்
                    ஜாதகம் மாற்றிப் போட்டு
                    சாதகம் ஆக்கி வெல்வாய்
                    சாதனை உனக்கே சொந்தம்
                    சத்தியம் செய்கின் றேன்நான்!

                        
                    - கோ. மன்றவாணன்





அரியாசனம்



            
            அரியாசனம்


           உரியினை இழக்கப் பானை
                ஒப்பாது ; ஆனால் அந்நாள்
           அரியணை துறந்தார் புத்தர்
                ஆரண்யம் சென்றார் ராமர்
           எரியினை மூட்டப் போனார்
                எம்அரிச் சந்தி ரன்தான்
           சரியென இவர்கள் போல
                சமுகத்தில் யார்தான் உள்ளார்?


           அரியினைக் கடத்தி விட்டே
                ஆலயம் தொழுவார் உண்டு
           திரியினை அவித்தே இங்குத்
                தீபத்தைத் திருடு வார்கள்
           பெரியதோர் பதவி என்றால்
                பிழைசெய்து பெறுவார் உண்டு
           அரியதோர் அறத்தைப் பேணி
                ஆளவே யார்தான் உண்டு?


           அறியா சனங்கள் ஏராளம் ;
                அதனால் வளரும் பேரவலம்!
           அரியா சனங்கள் செருக்கோடு ;
                அறமோ கண்ணீர்ப் பெருக்கோடு!
           அறிவு சனங்கள் வருகையில்
                ஆட்சி அறங்கள் மேலோங்கும்
           அரிய மனங்கள் கொண்டவர்கள்
                ஆட்சி செய்ய வரவேண்டும்


                             - கோ. மன்றவாணன்

Tuesday, 21 March 2017

வீர மங்கை





வீர மங்கை



தோட்டத்தில்
கிள்ளி எறிந்துகொண்டிருந்தான்
தளிர்களை ஒருவன்
பெண்ணைப் பழித்தபடி

அழகிய பெண்ணின் ஓவியத்தில்
தார்பூசிக் கொண்டிருந்தான்
பெண்ணின் வயிற்றில்
பிறந்த ஒருவன்

வீதியை
விழி பார்க்கக் கூடாதாம்
மூடிய சன்னலுக்குள் அடைத்தான்
முழுநிலவை

நங்கையவள்
நகை அணிய இசைந்தவன்
புன்னகை அணியக் கூடாதெனப்
புதுவிலங்கு மாட்டினான்

கல்விக் கூடத்தை மூடி-
கலவிக் கூடத்துக்கு வாடி
என்றான்

மெய்ப்புலியை விரட்டியவள்
பொம்மைப் புலிக்கு
அடங்கி இருந்தாள் நேற்றுவரை 

இன்றைய
நவீனப் பெண்ணுக்குப்
பதினாறு கைகள்

அனைத்துக் கைகளிலும்
ஆயுதங்கள்


கோ. மன்றவாணன்


Wednesday, 15 March 2017

விடுதலை



விடுதலை

செக்குப் பாதையில்
காலங்காலமாய்க்
கால்கள் ஓடிச்
சிறைபட்டன
சின்ன வட்டத்துக்குள்!

புதிய காற்று
புதிய வாசம்
புதிய நேசம்
புதிய வெளிச்சம்
எதையும் உள்விடாத
இருட்டுச் சுவருக்குள்
மூச்சுத் திணறி மூச்சுத் திணறி
வாடுது ஆண்டாண்டாய் உயிரொன்று

நிலவைப் பார்க்காமல்
சபித்துவிட்டுப் போகின்றன
இரவுகள்

காற்று வராத
கண்ணாடிப் பெட்டிக்குள்
அவிந்த விளக்காய் இருப்பதில்
யாருக்கென்ன லாபம்?

பஞ்சவர்ணச் சிறகுகள்
படபடத்து ஆவதென்ன
தொங்கவிடப்பட்ட கூண்டுக்குள் 

கைவிலங்கு கால்விலங்கு என்பதுபோல்
மனவிலங்கைப்
போட்டுக்கொண்டது யார்?

மாய விலங்கு உடைந்து தெறிக்கும்
உன்னை நம்புவதால் மட்டுமே!

அப்புறம் பார்
விடுதலை தேசத்தில்
மூவாறு றெக்கைகளும்
ஈராறு கால்களும் கொண்டெழும்
புரவியாய் நீ



-கோ. மன்றவாணன்

Saturday, 4 March 2017

நிலாவிடு தூது



       நிலாவிடு தூது

           புறாவைத் தூதுவிட்டால்
           வலைவிரித்துப்
           பிடிப்பார்களோ…

           காற்றைத் தூதுவிட்டால்
           புறப்பட்ட இடத்துக்கே
           திரும்பாதோ….

           நதியைத் தூதுவிட்டால்
           கட்டிவிடுவார்களோ…
           கல்அணை

           தோழியைத் தூதுவிட்டால்
           அவள் அழகில்
           அவன் மயங்கிவிடுவானோ…

           வண்டுவைத் தூதுவிட்டால்
           வழியில் உள்ள
           பூவனத்தில் மதுகுடித்து
           போதையில்
           பாதை மாறுமோ….

           என ஐயுற்ற எனக்கு
           உன்னை அல்லால் யாருமில்லை
           தூது செல்ல!

           ஞாபகம் வருதே…
           அன்னையின் மடியில் அமர்ந்து
           அன்று மல்லிகைப்பூ கொண்டுவரச் சொன்னேன்

          
           இன்று
           அல்லலுறும் என்மனதை ஏந்திச்சென்று
           அவன்முன் வைத்து
           நியாயம் கேட்டுவர
           நீ வருவாயா நிலவே!

          - கோ. மன்றவாணன்