Friday, 10 February 2017

வெற்றி முரசு


வெற்றி முரசு

தோட்டத்துப் பரணில்
தூசு படர்ந்து கிடந்த
முரசொன்றில்
உட்கார்கிறது
ஒரு பட்டாம் பூச்சி

முரசின் ஏக்கம் துடைத்து
மேலும் கீழும்
இரு கைச்சிறகுகளை அசைத்தபடியே இருக்கிறது.

சின்னதாய்ச்
சிலிர்த்து உயிர்த்து
அதிர்கிறது அந்த முரசு

வீடு முழுவதும்
வெற்றி முழக்கமெனப்
பன்மடங்காய் எதிரொலித்த
படியே இருக்கிறது முரசொலி

அந்த
இசையொலியை
இப்போது நீங்களும் கேட்கலாம்
உங்கள் மனதை
ஒரு பட்டாம்பூச்சியாய் மாற்றிக்கொண்டு…!

-கோ. மன்றவாணன்




எனை நனைத்த மழை


எனை நனைத்த மழை

தூவும் மழையில்
கருங்குடை பிடித்து நடைபின்னிய
கன்னியிடம் மழை கேட்டது :
“எனக்கேன்
கறுப்புக்கொடி காட்டுகிறாய்?”

மழையுடை தரித்து
வாகனத்தில் சீறிய
காளையிடம் மழை கேட்டது :
“கவச உடை நீங்கள் அணிவதற்கு
நானென்ன
கத்திவீச்சா செய்கிறேன்?”

நனைய மறுத்துக்
கடை ஓரத்தில்
ஒதுங்கி நின்றோர் இடத்தில்
மழை கேட்டது :
“நானென்ன
தீண்டத் தகாத பட்டியலில் அடைக்கப்பட்டேனா?
தீட்டான பெண்ணாகப் படைக்கப்பட்டேனா?”

வெளியில் வராமல்
வீட்டுக்குள் பதுங்கிய
மன்னர்குல திலகங்களைப் பார்த்து
மழை கேட்டது :

“நீங்கள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருக்க
நான் என்ன
அந்நியப் படையெடுப்பா நடத்துகிறேன்?”

இப்படி
வெறுத்தொதுக்கும் மானிடரைக் கண்டு
தற்கொலைக்கு முயன்ற
மழையைப் பார்த்து
மண் சொன்னது :
“உலகுக்கே படியளக்கும் நான்
உயிர்அமுதம் சேகரிக்கிறேன்
மழையில் நனையும்போதுதான் !”

- கோ. மன்றவாணன்


Thursday, 2 February 2017


சட்டம்

சமிஞ்ஞை தூணில்
சிவப்பு விளக்கு ஒளிர்கையில்
மீறியும்
சீறியும் பாய்கின்றன வாகனங்கள்

காவலர்
கள்வரோடு கைகோத்து
மது அருந்துகிறார்

அரசு அலுவலகங்களில்
நெஞ்சம் நிமிர்கிறார்கள்
லஞ்சம் வாங்கி

அரசியல்வாதி வீட்டு மாடும்
தெருக்கடையில் நுழைந்து
தின்று கொழுக்கிறது

ஞெகிழிப் பூக்களில்
செயற்கை மணம்தடவி
நந்தவனப் பூக்களிடமே விற்கிறார்கள்

பல்கலைக் கழகங்கள்
நகலகங்கள் ஆகிவிட்டன
ஆராய்ச்சிப் படிப்புகளைத்
தொடங்கி

கரும்பணத்திலும்
கள்ளப்பணத்திலும்
இருள்கிறது நம்நாடு

சட்டத்தை மீறியே
வெற்றி பெறுவது
அறிவார்ந்த வழக்கறிஞரின் நவீன அறம்

எங்கள் நீதிமன்றங்களில்
இருந்து
எப்போதோ வெளியேறிவிட்டாள் நீதி தேவதை

பழைய பேப்பர் கடையிலும்
வாங்குவதில்லை
சட்டப் புத்ககங்களை

எப்படி நட்டாலும்
பணக்காரர் வீட்டுத் தோட்டத்தில்
சாய்ந்து
காய் உதிர்க்கிறது முடத்தெங்கு சட்டம்

நேர்மை இல்லாத நாட்டில்
சட்டத்தை மதிப்பது
குற்றம்

மதுக்கடையில் யாரேனும்
பால் குடிப்பார்களா?

- கோ. மன்றவாணன்





நீதியைத் தேடி…


அடர்இருளில்
கண்ணைக் கட்டிக்கொண்டு
கறுப்புப்பூனையைத் தேடுகிறோம்

கரைதேடி
நடுக்கடலில்
விழிவலை வீசுகிறோம்

எப்போதோ
எங்கேயோ
கடல்மணலில் விழுந்து புதைந்துவிட்ட
குண்டூசியை
மீன்வலையில் சலித்துத் தேடுகிறோம்

அறம்தவறிய சமுதாயத்தில்
நீதியைத் தேடி
நீண்ட பயணம் செய்கையில்
பாதையே
களவு போய்விடுகிறது

இன்று
வள்ளுவன் வந்தாலும்
‘பொருளில்’ மயங்கி
மாற்றி எழுதிவிடுவான்
திருக்குறளை

அரிச்சந்திரன் வந்தாலும்
கையிருப்பு சாட்சியாக மாறி
நீதிமன்றத்தில்
நித்தமும் பொய்சாட்சி சொல்வான்

நெற்றிக்கண் திறந்து
கடவுளே வந்து
சாட்சிக்கூண்டு ஏறினாலும்
அரசியல்வாதிகளின்
அதிகாரக்கண் திறப்பைத் தாங்காமல்
பிறழ்சாட்சி ஆகிப்
பிழைத்துக்கொள்வார்

நீதியைத் தேடி அலையும்
அப்பாவிகள் யாராவது இருந்தால்….
அவர்கள்
கற்பனையில் மீன்பிடித்து
ஊருக்குப் பந்தி வைப்பவர்கள்

- கோ. மன்றவாணன்




புதிய டைரி

முந்தைய ஆண்டு சாதனையை
முறியடிக்கவே
இன்று உன்கையில்
புதிய டைரி


டைரியின்
கோடிட்ட இடங்களை நிரப்ப
அங்கும் இங்கும் திறந்தே உள்ளன
ஆயிரம் பொன்கதவுகள்

வாரத்தின் ஏழுநாள்களும்
வாழ்க்கைக்கு வண்ணம் தீட்டும்
வானவில்

மாதத்தின் முப்பது நாள்களும்
ஆபரணப் பொன்னள்ளித் தரும்
அட்சய திருதியைகளே

ஆண்டின் 365 நாள்களும்
நீ
சிகரம் தொடச்
செதுக்கிய சித்திரப்படிகள்

உன்
டைரியின் பக்கங்களில்
வாசம் தெளிக்க
வரிசையில் நிற்கின்றன
ரோஜாக்கள்


உன் டைரியின்
ஒவ்வொரு பக்கத்திலும்
புதுவண்ணம் தீட்டவே
தூரிகை
தூக்கி வருகின்றன
பட்டாம்பூச்சிகள்

ஒவ்வொரு பக்கத்திலும்
கவிதை எழுதிட
உன் தேவியின்
நினைவு விரல்கள் இதோ…

உன்
வெற்றி வாழ்க்கையைச்
சேமித்து வைத்துப் பெருமை கொள்வதில்
இந்தப்
புதிய டைரிக்குக்
கொஞ்சம் கனம் அதிகம்தான் !


 - கோ. மன்றவாணன்

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு

மின்னும் கண்களில்
மிளகாய்ப் பொடிதூவி
மிரட்சியில் அலற வைக்கிறீர்கள்

முரட்டுத் தோல்தான் என்றாலும்
கோணி ஊசியால் குத்தி
ரத்த தரிசனம் காணுகிறீர்கள்

கழுநீர்ப் பானையில்
மதுநீர்க் கலந்து
வெறிகொள்ளச் செய்கிறீர்கள்

நுரைகக்கிச்
சுருண்டு விழும்போதும்
கருணையை மிதித்து
வீரக்கொடி ஏற்றுகிறீர்கள்

எங்களை
வதைப்பதால்தான்
தமிழ்ப்பண்பாடு தழைக்கும் என்றால்
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற
மீசைக் கவிஞனின் மார்பை முட்டுங்கள்

அட..
ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்
உங்கள் தலைகளில்
நஞ்சு தடவிய கொம்புகள் முளைத்திருப்பதைத்
தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள் 

ஜல்லிக்கட்டில்
தமிழ்வீரம் பேசும் மாவீரர்களே…
தமிழ்ப்பெண்ணை மணக்கப்
புலியோடு போரிட்டுக்
கூர்ப்பற்களைக்
கொண்டு வாருங்கள்

பிரியாணி சாப்பிட்டபடி
மாடுகளுக்காக அழும் உங்களின்
அருட்பிரகாசத்தின் முன்
அணைந்துபோகலாம்
வள்ளலார் ஜோதி

நவீன நகரங்களை அமைத்தாலும்
உங்களைவிட்டுப் போகவில்லையே
காட்டுமிராண்டி வாழ்க்கை

நனிநாகரிகம் காண
ஜல்லிக்கட்டோடு சேர்த்துப்
பிரியாணிக் கடைகளையும் மூடுங்கள்

இப்படிக்கு
உங்கள் இதய வாயிலில்
ஆராய்ச்சி மணி அடிக்கும்
காளைகள்

- கோ. மன்றவாணன்