Thursday, 19 December 2024

பெரியார் தொண்டர் தி. மாதவன்



கோ. மன்றவாணன்

     திருவாரூர் தங்கராசு கூட்டம் ஒன்று கடலூர் முதுநகரில்  நடந்தது. துறைமுக நகர் என்ற பெயர் அப்போது இல்லை.

   நான் கூட்டத்தில் ஒருவராகக் கலந்து கொண்டேன்.  அவருடைய வாதங்களையும் நகையாடலையும் கேட்டுக் கை தட்டினேன். அப்போது  நான் சிறுவன்.  

          பையில் பத்துக் காசு இல்லை. அந்தப் பேச்சுதான் எனக்கு அன்றைய இரவு உணவு.

            நடு இரவு நெருங்கும் நேரத்தில் கூட்டம் நிறைவடைந்தது.  


            அந்த இரவு நேரத்தில் பேருந்து வசதி  இல்லை. ஆட்டோக்களும் அறிமுகம் ஆகவில்லை.  சாமி லாரி புக்கிங் ஆபிஸ் எதிரில் ஜட்கா ஸ்டாண்ட் இருக்கும் அது வேறொன்றும் இல்லை. குதிரை வண்டி நிலையம்தான்.

அங்கிருந்து குதிரை வண்டிகள் முதுநகருக்கும் திருப்பாதிரிப்புலியூருக்கும் ஓடிக்கொண்டிருக்கும். அதில் பயணம் செய்ய காசு வேணுமே!

வரும்போது நடந்துதானே வந்தேன். திரும்பும் போதும் நடந்துதானே போக வேண்டும். ஏழ்மை நடக்க வைத்தது காலில் செருப்பும் இல்லாமல்.

நள்ளிரவு தாண்டிய நேரத்தில் இருள் சூழ்ந்த சாலையில் நடந்து கொண்டிருந்தேன். இடையிலே மோகினி பாலம் குறுக்கிட்டது. 

திகில் பற்றி எரிய எரிய மோகினி பற்றிய பல கதைகளைப் பலர் சொல்லக் கேட்டு நடுங்காதவர்களே அன்று இல்லை. அந்தக் கதை மன்னர்களிடத்தில் பேய்க்கதை மன்னன் பி டி சாமியே தோற்றுப் போய்விடுவார்.

ஒரு பக்கம்... பேய் இல்லை என்று அறிவு சொல்கிறது. மறுபக்கம்... ஒரு வேளை பேய் இருந்துவிட்டால் என்று பயம் கவ்வுகிறது. இந்த நிலையில்… என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... என்று எம்ஜிஆர் பாட்டைப் பாடியபடி   திருப்பாதிரிப்புலியூர் நோக்கி  நடந்து கொண்டிருந்தேன். 

எனக்கு முன்னே குள்ளமான ஓர் உருவம் நடந்து போய்க் கொண்டிருந்தது. அந்த உருவம்தான் மாதவன். அவரும் அன்றைய கூட்டத்தில் என்னைப்போல் கலந்துகொண்டவர். ஆனால் அவருடன் பேசியதில்லை அப்போது.


அந்தக் காலத்தில் இருந்தே அவர் கருப்புச் சட்டைதான் அணிந்திருப்பார். நான்  கருப்புச் சட்டை அணிந்ததில்லை. பிறர் கொடுக்கும் பழைய சட்டைகளையே போட்டு வந்ததால்,   கருப்புச் சட்டை அணியும் வாய்ப்பை யாரும் தரவில்லை.

அவர் அதிர்ந்து பேசி நான் கேட்டதில்லை. அவர் கோபம் கொண்டு நான் பார்த்ததில்லை.

அவரால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வார். பெரும்பாலோர் அவரை எடுபிடியாகவே நடத்தினார்கள். ஆனாலும் அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. எப்படியோ யாருக்கோ இந்த சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதே அவர் நோக்கமாக இருந்தது. 

கடலூரில் எந்தக் கூட்டம் நடந்தாலும் அங்கே மாதவன் இருப்பார். எளிய தோற்றம் என்பதால் அவரை அலட்சியமாகப் பார்த்துச் செல்வார்கள் பலர். 

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் ஊரில் உள்ள பெரிய மனிதர்களைச் சிலர் போய்ப் பார்த்து மரியாதை செய்வது உண்டு. எனக்கு அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் அது போன்ற ஒரு புத்தாண்டு தினத்தில் நானும் ஒரு பெரிய மனிதரைப் பார்த்து மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 

யாருக்கு மரியாதை செய்வது? இந்தக் கேள்விக்கு எனக்கு உடனே பதில் கிடைத்தது. அவர்தான் மாதவன். 

யாரோ கொடுத்த பழத்தை அல்ல, பணம் கொடுத்து ஓர் ஆப்பிள் பழத்தை வாங்கிக் கொண்டு, அவர் வீட்டுக்குப் போய் வாழ்த்தினேன். பழத்தையும் கொடுத்தேன். சத்தம் இல்லாத சிரிப்போடு அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விழுப்புரம் மற்றும் கடலுார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அஞ்சல் கொண்டு செல்பவராகக் கொஞ்ச காலம் பணி புரிந்தார். அரசு நியமன வேலை இல்லை அது. கூலிக்கு வைத்துக் கொள்ளும் வெளிஆள் வேலை.

கடலூர் பெரியார் நூலகத்தில் நூலகராகவும் பணி செய்தார். திராவிடர் கழகம் அவருக்குச் செய்த கவுரவம் அது. அவருக்கு அந்த வேலை பிடித்திருந்தது. அந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்க வேண்டி இருந்ததால் இடித்துவிட்டார்கள். புது கட்டுமானப் பணியும் தடைபட்டது. அதன்பின், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் நூல்களை எல்லாம் கூட்டங்களின் போது விற்பனை செய்து வந்தார். 

அவரிடத்தில் பலர் புத்தகங்களை வாங்கிக்கொண்டு பின்னர் பணம் தருவதாகச் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் அவர்கள் தரவில்லை. இவரும் கேட்கவில்லை.  

ஒரு பெருமழையின் பொழுது அவருடைய ஓட்டு வீட்டுக் கூரை ஒழுகியதால் ஏராளமான புத்தகங்கள் வீணாகிவிட்டன. அவற்றுக்குரிய பணத்தை, நிறுவனத்துக்குச் செலுத்த முடியவில்லையே என்று வருந்தினார். 

பின்னர் நியூ சினிமா அருகில் இருந்த இந்திரா டிராவல்ஸில் இரவுக் காவலராகவும் பணிபுரிந்தார்.

தி.க., தி.மு.க., கூட்டம் மட்டுமல்லாமல் இலக்கிய கூட்டங்கள், பொதுநல அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் என்றாலும் அங்கே மாதவன் இருப்பார். பொதுநலப் போராட்டம் ஒன்றில் பங்கேற்றதால் நீதிமன்றத்துக்கு நடையாய் நடந்தார். வழக்கின் கடுமை அவருக்குப் புரிந்ததே இல்லை. நீதிமன்றத்தில் சிரித்தபடி நின்றிருப்பார்.

பல இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களை… பல்வேறு அமைப்புகளின் அழைப்பிதழ்களை… அவர்தான் நடையாய் நடந்து, வீடு வீடாகச் சென்று கொடுப்பார்.  ஆனால் எந்தக் கூட்ட அழைப்பிதழிலும் அவர் பெயர் இருக்காது. கூட்ட நிறைவில் நன்றி சொல்லுகின்ற பொழுது,  அழைப்பிதழைக் கொடுத்த மாதவன் பெயரை மறந்திருப்பார்கள்.  

கூட்ட அழைப்பிதழ்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்க்க வருவார். அழைப்பிதழை வாங்கிப் படித்தபடியே தேநீர்க் கடைக்கு அவரை அழைத்துச் செல்வேன். தேநீர் அருந்துவோம்., எனக்கு முந்திச் சென்று தேநீருக்குப் பணம் கொடுக்க முயலுவார். நான் தடுத்துவிடுவேன். 

(அப்பொழுது எல்லாம் நினைத்துக் கொள்வேன். ஒரு காலத்தில் நடந்த தி.க., தி.மு.கழகக் கூட்டங்களில் மூவர் கட்டாயம் இருப்போம். இரும்புக் கடையில் வேலை செய்யும் தங்கத் தமிழன் என்ற இராமலிங்கமும்- செருப்புக் கடையில் வேலை செய்யும் நானும்- எந்த வேலையிலும் இல்லாத மாதவனும்தாம் அந்த மூவர். கொடுத்துச் சிவந்த கரங்கள் என்று வள்ளல்களைப் பாராட்டுவார்கள். பொதுக்கூட்டங்களில் கைதட்டி கைதட்டியே சிவந்தன எங்கள் கரங்கள்.  மாதவனும் இராமலிங்கமும் அழுக்கு வேட்டி அணிந்திருப்பார்கள். அவர்களில் நான் வேறுபட்டு இருப்பேன். ஆம். அழுக்குக் கைலி கட்டி இருப்பேன். அந்த நினைவில் இருந்து மீண்டு வருகிறேன்.)

ஒரு கூட்டத்தில் அரங்கின் ஓரமாக மாதவன் நின்றுகொண்டிருந்தார். பார்வையாளராக வந்திருந்த ஓர் இலக்கிய அன்பர், “மாதவன் இந்த டீ கப்பு எல்லாம் எடுத்துப் போடக் கூடாதா,” என்று தன் வீட்டு வேலைக்காரர் போல் தாழ்த்தி அதட்டினார். மாதவனும் அந்த டீ கப்புகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு போய் வெளியில் போட்டார். அதையும் அவர் மகிழ்ச்சியோடுதான் செய்தார். 

தோற்றத்தை வைத்தே ஒருவரை உலகம் மதிக்கிறது. குள்ளமான உருவம். அழுக்கடைந்த ஆடை. முடிமழிக்காத முகம். தெளிவில்லாத பேச்சு என்று இருந்தால், மதிப்பார் யார்?

யாருக்கும் எந்த உதவியும் ஒருவர் செய்ய வேண்டியது இல்லை. மேக்கப் சகிதம் வந்தால் போதும். அவருக்கு மரியாதை உண்டு. மாதவனுக்கு எப்படி மரியாதை கிடைக்கும்?

மாதவனைப் பார்த்து நாம் பரிதாபப் படலாம். ஆனால் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. தன் தோளில் துண்டு அணிந்து கம்பீரமாகவே இருந்தார். 


அவர் மேடை ஏறி முகம் காட்டியதில்லை. யாரிடத்திலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. எந்த விளம்பரமும் தேடிக் கொண்டதில்லை. ஆனாலும் கடலூரில் உள்ள பொதுநலம் சார்ந்த பிரமுகர்களுக்கு அவரைத் தெரியும். அதுவே அவருக்குக் கிடைத்த பெரும் புகழ்.

மாதவன் அவர்களின் மணிவிழாவைத் திராவிடர் கழகத் தோழர்கள் எழிலேந்தி, தென். சிவக்குமார், சின்னதுரை உள்ளிட்டோர் நடத்தினார்கள். வெண்புறா குமார் உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும் மாதவனுக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். இலக்கிய அமைப்பினர் சிலரும் வேறு அமைப்பினர் சிலரும் நிகழ்வுகளில் மாதவனுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்துள்ளார்கள். இவர்கள்தாம் சேவையை மதிக்கத் தெரிந்தவர்கள். உருவத்தைப் பார்க்காது உள்ளத்தைப் போற்றியவர்கள்.

பலருக்குப் பல பதவிகளும் பட்டங்களும் கிடைத்திருக்கலாம். அந்தப் பதவிகளையும் பட்டங்களையும் விடவும் உயர்ந்தது ஒன்று உண்டு. அது, பெரியார் தொண்டர் என்ற பெருமை!

பெரியார் தொண்டர் தி. மாதவன் அவர்களுக்குக் கண்ணீர் மாலை சூட்டுகிறேன்.

கோ. மன்றவாணன்

 


Monday, 16 December 2024

வழி அடைக்கும் கல்லா? வழி அமைக்கும் கல்லா?

 


வழி அடைக்கும் கல்லா...

வழி அமைக்கும் கல்லா...


-கோ. மன்றவாணன்-


திருக்குறள் அறன் வலிஉறுத்தல் அதிகாரத்தில் ஒரு குறள்.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃது ஒருவன் 

வாழ்நாள் வழிஅடைக்கும் கல். 

வீழ்நாள் என்றால் வீணான நாள் அல்லது நாள் தவறாமல் எனப் பொருள்படும். வீழ்நாள் படாஅமை நன்று ஆற்று என்றால் நாள் தவறாமல் அறம் செய்க என்பதாகும். வள்ளுவர் நமக்கு அறிவுறுத்தும் செய்தியும் அதுதான். 

ஆனால், அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்ற வரிக்கு உரை எழுதும் பொழுதுதான், பலர் வழி தடுமாறுகின்றனர்; வழுக்கியும் விழுகின்றனர்.

மணக்குடவர், காளிங்கர், பரிமேல் அழகர், பரிதியார் உள்ளிட்ட பழம் உரையாசிரியர்கள், வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்பதற்கு அடுத்தடுத்து பிறக்கும் பிறவியைத் தடுக்கும் கல் எனப் பொருள் கூறி உள்ளனர். இதற்கு ஆதரவாகப் பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரை சேரலாம் என்ற இன்னொரு திருக்குறளையும் துணைக்கு அழைக்கலாம். அந்தக் குறளின் மெய்ப்பொருள் என்னவென இன்னொரு கட்டுரையில் ஆராயலாம்.

எல்லாரும் சொர்க்கத்துக்குப் போக ஆசைப்படுகிறார்கள். அதே வேளையில் இறந்து போக யாருமே விரும்புவது இல்லையே. இந்த முரணை எண்ணிப் பாருங்கள். ஆக எல்லா மனிதர்களும் வாழவே ஆசைப்படுகிறார்கள் 

நீடு வாழ்வார் என்ற சொல்தொடரை எழுதியவரும் வள்ளுவர்தான். அதன்படி, மக்கள் நீடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம்.  வாழக் கற்றுக் கொடுப்பதுதானே திருக்குறள். 

“இந்த உலகம் துன்ப மயமானது.”

“மறுபிறவி உண்டு.”

நாம் இந்தப் பிறவியில் அறம் செய்தால் இறைவனை அடையலாம்.  பாவம் செய்தால் மீண்டும் மீண்டும் இந்த உலகில் நாயாய் நரியாய்ப் பிற உயிரியாய்ப் பிறந்து துன்பம் அடைய நேரிடும். 

இந்த உலகில் நாம் தீமை செய்தால் நரகத்தில் தண்டனை கிடைக்கும். நன்மை செய்தால் சொர்க்கத்தில் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.

இந்தக் கருத்துகள் எல்லாம் காலம் காலமாக நம் மக்களின் மனதில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இவற்றை மெய்ப்பிக்க எந்த ஆதாரமும் கிடையாது. 

ஆனால் நம் முன்னோர்கள் ஏன் இந்த அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை மக்கள் மனதில் பதித்து வந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? 

ஆனாலும் அதை நல்நோக்கத்தில் சிந்தித்துப் பார்த்தால், அதிலும் ஒரு பயன் இருப்பது தெரியவரும்.

மனித மனம் விசித்திரமானது. ஒன்றை நம்பி விட்டால், அதுவே மெய்யென உறுதி கொண்டுவிடும். அதை மாற்றுவது என்பது எளிதான செயல் இல்லை. அறிவா நம்பிக்கையா என வந்தால் பெரும்பாலும் மனது நம்பிக்கையின் பக்கமே சாய்ந்து விடுகிறது; சார்ந்து விடுகிறது.

ஒரு மனிதரை இயக்க; ஒன்றை நோக்கிச் செயல்படுத்த உளவியலில் இரண்டு வழிமுறைகள் உண்டு. ஆசையைத் தூண்டி நல்வழிப் படுத்துவது ஒன்று. அச்சுறுத்தித் தீயவழியில் செல்வதைத் தடுப்பது இன்னொன்று.

நம் முன்னோர்கள் இந்த இரண்டு வழிமுறைகளையும் கையாண்டு சமூக வாழ்வைச் சீர்படுத்த முயன்றார்கள். சமய அன்பர்களின் நோக்கமும் வள்ளுவர் சொன்னது போல், நாள்தோறும் அறம் செய்க என்பதுதான். அப்படி செய்யாவிட்டால் என்ன என்று எதிர்க் கேள்வி மக்கள் இடையே எழும். அறம் செய்வதை அலட்சியமாக அவர்கள் நோக்கவும் கூடும். 

ஆதாரமற்ற நம்பிக்கைகளைச் சொல்லித் திருத்த நினைப்பதைவிட, அறிவான வழிமுறைகளில் திருத்துவதே உகந்த முறை. 

இந்த நிலையில்தான் அறம் செய்தால் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். இறைவனிடம் அடைக்கலம் ஆகலாம் போன்ற ஆசை வார்த்தைகள் கூறி, அறம் செய்யவும்; ஒழுக்கமாக இருக்கவும் ஊக்குவித்தார்கள். அறம் செய்யாமல் போய்விட்டால் நரகத்தில் எண்ணெய்ச் சட்டியில் வறுபடுவாய் எனவும் அச்சுறுத்தினார்கள்; 

ஆனால் இன்றைய அறிவியல்படி சிந்தித்துப் பார்த்தால் அவற்றில் எதுவும் உண்மை இல்லை. கடந்த காலங்களைவிட இன்று மக்கள் மிகுந்த அறிவைப் பெற்று இருக்கிறார்கள். நிறைய சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. 

இந்நிலையில்... ஆதாரமற்ற நம்பிக்கைகளைச் சொல்லித் திருத்த நினைப்பதைவிட, அறிவான வழிமுறைகளில் திருத்துவதே உகந்த முறை. அந்த முறையில் திருக்குறளுக்கு உரை காண்பதே சரி என நினைக்கிறேன். அப்படியானால், வழி அடைக்கும் கல் என்பதற்குப் பிறப்பைத் தடுக்கும் கல் என்று பொருள் கொள்ள முடியாது. 

வழக்கறிஞர் கு.ச. ஆனந்தன் அவர்கள், வழி அடைக்கும் கல் என்ற சொல் தொடருக்கு வழிஅமைக்கும் கல் என்று பாடம் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஓலைச்சுவடிகளில் காலம் காலமாய் எழுதி வருகிற பொழுது... படி எடுக்கின்ற பொழுது அவ்வாறு நேரிடவும் வாய்ப்பு உண்டு. தமிழ்த்தென்றல் திரு வி கலியாண சுந்தரம் அவர்களும் வழி அமைக்கும் கல் என்ற பொருளில்தான் இந்தக் குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். அது, அறிவியலுக்கு ஏற்றதாகவும் அமைந்துவிடுகிறது.

புலவர் குழந்தை போன்றோர் வாழ்நாளில் வரும் தீமைகளைத் தடுக்கும் கல் என்று பொருள் கூறி இருக்கின்றார்கள். அதனை ஒட்டியே நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும் உரை எழுதி உள்ளார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல், வழி அடைக்கும் கல் என்பதை நேரடியாகப் பார்த்தால், ஒரு வழியை மூடும் கல் என்றே பொருள் தருகிறது. வாழ்நாள் வழி என்பதைப் பிறவி எடுத்தலுக்கான காரணம் எனச் சமயக் கருத்தோடு பொருத்திப் பொருள்கொள்வது எளிதாக இருக்கிறது. அப்படி இருக்க, இவர்கள் ஏன், தீமை வரும் வழி என்று பொருள் கொள்கிறார்கள்? தீமை என்ற சொல்லாவது அந்தக் குறளில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. 

குறளில் வரும் இரு சொற்களுக்கு இடையில் நுழைந்து ஒரு பொருளைத் தருவித்தோ ஊகித்தோ உரை எழுதுவது ஒரு முறை.  மேலும் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தமிழில் உண்டு. ஏழு சீர்கள் மட்டுமே கொண்ட செய்யுள். அதனால் சீர்களுக்கு இடையே சொல்லும் பொருளும் தொக்கிவர வாய்ப்பு உண்டு. குறளின் பொருளை நிகழ்காலத்துக்குப் பொருத்திப் பார்ப்பது தேவை. இந்தக் காரணங்களால்தாம் திருக்குறளுக்குப் புதுப்புது உரை எழுத முடிகிறது. அதற்குத் திருக்குறளும் இசைகிறது. 

அடைக்கும் என்பதற்கு மூடுதல் என்பதோடு துார்த்தல் என்ற பொருளும் உண்டு அடைக்கும் என்ற சொல்லை அப்படியே எடுத்துக் கொண்டு, வேறு வகையில் பொருள் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. 

ஒவ்வொரு பாதையும் கல்பரப்பி அதாவது கல்அடைத்து உருவாக்கப்படுகிறது. நாள்தோறும் அறம் செய்பவர்களின் வாழ்க்கைப் பாதையைச் சீரமைத்து வாழ்க்கைப் பயணத்தைச் சுகம் ஆக்குவதுதான் அடைக்கும் கல் என்று பொருள்கொள்ள முடிகிறது. வாழ்க்கைப் பாதையில் எதிர்கொள்ளும் துயரப் பள்ளங்களைத் துார்ப்பதையும் அடைக்கும் கல் என்பது   உணர்த்தும்.                   

இந்தக் கருத்துக்கு ஆதரவாகக் கலைஞர் கருணாநிதியின் உரையும் அமைந்து இருக்கிறது. அவருடைய உரை இதுதான் : 

“பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.“

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் இந்த உரை ஏற்கத் தக்கது. குறளின் சொற்களை அப்படியே எடுத்துக் கொண்டு, பொருத்தமான உரை எழுதி இருக்கிறார். 

குறளில் வரும் வாழ்நாள் என்ற சொல்லை ஆராய்ந்து பார்ப்போம். இன்பம் - துன்பம், நல்வினை - தீவினை, நன்மை - தீமை என்பன போல்தாம் வாழ்நாள் - வீழ்நாள் ஆகியவை. இவை, எதிர்எதிர்த் தன்மைகள் கொண்டவை.

வீழ்நாள் என்பது வீணான நாள் அல்லது வீழ்ச்சியான நாள் எனப் பொருள் தரும். வாழ்நாள் என்பது பயனுடைய நாள் அல்லது வாழ்ந்து காட்டும் நாள் எனப் பொருள் தரும். இங்கே வாழ்நாளைத்தான் உயர்த்திப் பிடிக்கிறார் வள்ளுவர். எனவே வாழ்நாளைத் தடுக்கச் சொல்லவில்லை. அறம் செய்து ஒவ்வொரு நாளையும் பயனுடையதாக ஆக்கி நீடு வாழ்க என்றுதான் வாழ்த்தி இருக்கிறார். 

மக்கள் நீடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். வாழக் கற்றுக் கொடுப்பதுதானே திருக்குறள். 

திருக்குறளுக்கு இன்றைய வாழ் நிலையில் என்னவாக பொருள் இருக்க முடியும் என்று சிந்திப்பதே நிகழ்காலத் தேவையாகும்.   இந்தக் குறளுக்கு இப்படி எளிதாகப் பொருள் கொள்ளலாம்.

நாள் தவறாமல் நன்மை செய்து வந்தால்… அதுவே, வாழ்க்கைப் பாதையில் படிக்கல் ஆகும்.


                                                    -கோ. மன்றவாணன்


நன்றி

கணையாழி மாத இதழ்

நவம்பர், 2024








Thursday, 7 November 2024

ஞாலத்தைவிடப் பெரியது எது?


 

ஞாலத்தைவிடப் பெரியது எது?

கோ. மன்றவாணன்


பின்இரவு நேரம். சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. கோழிக் கோட்டில் இருந்து மஞ்ஞேரி நோக்கி அந்தப் புதிய மகிழுந்து பறக்கிறது. பின்னிருந்து துரத்தும் நிலாவால் அந்தக் காரை முந்த முடியவில்லை. இன்னும் வேகத்தை அதிகப் படுத்துவதற்காக உடலை அசைத்து நேராக அமர்கிறார் அதன் ஓட்டுநர். அதே நேரத்தில் திடீரெனச் சாலையின் குறுக்கே கை அசைத்தபடி ஒரு முதியவர் ஓடி வருகிறார்.

மின்னல் எனத் திசைமாற்றியை இடது பக்கம் ஒடித்து, வலது பக்கம் திருப்பி நிறுத்துக் கட்டையை மிதிக்கிறார், கார் குலுங்கி நிற்கிறது. வண்டியைப் பின் நகர்த்தி நிறுத்துகிறார்.

அந்த முதியவரைப் பாதுகாத்து விட்டோம் என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், திடீரெனக் குறுக்கே வந்த அவர்மீது கோபம் எரிமலையாய்க் கனல்கிறது. முதியவர் ஓட்டுநர் முன் வந்து நிற்கிறார். அப்போதுதான் சாலையின் ஓரம் கந்தல் துணிபோல ஒரு பெண் படுத்தபடியும் துடித்தபடியும் இருப்பதைப் பார்க்கிறார் அந்த ஓட்டுநர்.

எழுபது வயது மதிக்கத் தக்க அந்தப் பெரியவர், கை கூப்பியவாறு குரல் நடுங்கச் சொல்கிறார்.

“பாப்பாவுக்குப் பிரசவ வலி அதிகமாயிடுச்சு. ஆஸ்பத்திரிக்குப் போகணும். நீங்கதான் பெரிய மனசு பண்ணி உதவணும்”

அப்போது மணி இரண்டு. வாகனம் ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை. அவசரமாய்ப் போய்க் கொண்டிருந்த ஓட்டுநர், அந்தப் பெண்ணையும் அந்த முதியவரையும் காரில் ஏற்றிக்கொண்டு முன்னிலும் அதிக வேகமாக மருத்துவ மனைக்கு விரைகிறார். மஞ்ஞேரி அரசு மருத்துவ மனையின் வாசலில் பிரேக்கைப் பிடித்துப் பெரும் உராய்வு ஒலியோடு காரை நிறுத்துகிறார். அந்த அதிர்வைக் கேட்டு மருத்துவ மனை ஊழியர்கள் வேகமாக வருகிறார்கள். அந்தப் பெண்ணைக் கைத்தாங்கலாக மருத்துவ மனைக்கு உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். அவசரப் பணியில் கவனம் செலுத்தியதால், ஓட்டுநரை அவர்கள் பார்க்கவில்லை.

அந்தப் பெண்ணுக்கு வயது பதினெட்டுதான் இருக்கும். முதியவருக்கு அவள் பேத்தியாகத்தான் இருப்பாள்.

ஓர் உயிரைக் காப்பாற்றவும் முடிந்தது; ஓர் உயிரைப் பூமிக்குக் கொண்டுவரவும் முடிந்தது என்று அந்த ஓட்டுநர் மனநிறைவு அடைந்த போது, முதியவர் அருகில் ஓடி வருகிறார்.

“உங்கப் பேரு என்ன?”

“மம்முட்டி”

“என் மன திருப்திக்காக இதை வச்சுக்குங்க” என்று சொல்லிக் கையில் ஒரு சிறு தாளைத் திணித்துவிட்டு மருத்துவ மனைக்குள் சென்று விடுகிறார்.. கைதிறந்து பார்த்தபோது அது இரண்டு ரூபாய்த் தாள்.

மம்முட்டி எனப் பேர் சொன்ன பிறகும்; முகத்தை நேருக்கு நேர் பார்த்த போதும் அந்த முதியவருக்கு அவர் மலையாள சூப்பர் ஸ்டார் என்ற விபரம் தெரியவே இல்லை.

காலத்தில் செய்த அந்த உதவிக்கு, முதியவர் கொடுத்த அந்த இரண்டு ரூபாய் சரியாகி விடுமா? இந்தப் பூமியையே கொடுத்தாலும் ஈடாகி விடுமா?

ஃ

மும்பை வாங்கணி தொடர்வண்டி நிலையம். ஆறு வயது சிறுவனைக் கையில் பிடித்தபடி நடைமேடையில் கண்பார்வை இல்லாத பெண்ஒருத்தி நடந்து போகிறாள். எதிர்பாராத வகையில் சிறுவன் ரயில் பாதையில் தவறி விழுந்துவிடுகிறான். அப்போதுதான் மின்னல் வேகத் தொடர்வண்டி ஒன்று, நிலையத்தில் நுழைகிறது. சிறுவன் நடைமேடையில் ஏற முயலுகிறான். முடியவில்லை. கண் தெரியாத பெண், நடை மேடையைக் கைகளால் தட்டுத் தடவியபடி அலறுகிறாள்.

அதிவேக ரயில் மிக அருகே வந்துவிட்டது. அங்கே அது நிற்காது. “சிறுவன் உடல் சிதைந்து போகும். உயிர் பிரிந்து போகும்” என்றே நடைமேடையில் உள்ள பயணிகள் அழுகுரல் இடுகின்றனர்.

இருப்புப் பாதைத் துறையில் பணியாற்றும் ஊழியர் மயூர் செல்கா மின்னலைவிட வேகமாக ஓடி வந்து ரயில் பாதையில் குதிக்கிறார். அவரும் சிதைந்துதான் போகப் போகிறார் என்பது உறுதியான நேரம் அது. எப்படியோ சிறுவனை நடைமேடையில் ஏற்றித் தானும் ஏறும் அந்த நொடியின் நுனிப்பொழுதில்… எதுவும் நடவாததுபோல் அதிவேக ரயில் அந்த இடத்தைக் கடந்து போகிறது…

அடுத்த நொடியே உயிர்போகும் நிலையில்… உயிர்காத்த அந்த உதவிக்கு என்ன பரிசு தர முடியும்? என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த ஞாலத்தையே கொடுத்தாலும் அது போதுமா? ஞாலத்தைவிடப் பெரியது என்று புகழ்ந்தால் மனம் சமாதானம் அடையுமா?

ஃ

இவைபோன்ற நிகழ்வுகள் அரிதாகச் சிலர் வாழ்வில் ஏற்பட்டு இருக்கும். இப்பொழுது உங்களுக்கு வள்ளுவரின் குறள் ஒன்று நினைவுக்கு வருமே…

காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

இடர்படும் நேரத்தில் செய்யும் உதவி சிறியதுதான் என்றாலும்… அது, இந்த உலகத்தைவிடப் பெரியது. இவ்வாறுதான் உரை ஆசிரியர்கள் பொருள் உரைத்து உள்ளனர்.

உலகத்தைவிடப் பெரியது என்பதுதான் வள்ளுவரின் எண்ணமா? அதற்குள் ஏதும் நுண்பொருள் வைத்து இருப்பாரா? - என்று என் மனத்துக்குள் நெடுங்காலமாக அலை ஒன்று வந்துவந்து மோதியபடி இருந்தது.

உதவி செய்தல் என்பது ஒரு தன்மை. ஒரு பண்புநலன். அவசர காலத்தில் செய்கிற உதவி என்பது, அரிய பண்புகளிலேயே உயர்ந்த ஓர் உன்னதக் கூறு.

உலகம் என்பதோ மிகப்பெரிய நிலப்பரப்பு.

இப்போது நமக்குள் கேள்வி பிறக்கிறது. அரியதொரு தன்மையையும் பெரியதொரு பரப்பையும் ஒப்பீடு செய்வது சரி ஆகுமா? சமம் ஆகுமா? ஆகாது என்பதே என் கருத்து.

அப்படி ஆனால் அதனை எப்படிப் பொருத்தி நுண்பொருள் காண்பது?

பூமியில் உள்ள செல்வங்களை… வளங்களை எல்லாம் அள்ளிக் கொடுத்தாலும் உற்ற காலத்தில் செய்த உதவிக்கு இணை ஆகாது என்று சொன்னால் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ள முடிகிறது. ஆனால் அவ்வாறு அள்ளித் தர முடியுமா? முடியாத ஒன்றைச் சொல்லி, ஈடு காட்டுவது கவிதைக்கு அழகாக இருக்கலாம். கருத்து ஒப்புமைக்கு ஒத்து வருமா?

நிலத்தின் தன்மை என்ன என்பதை எண்ணித் தொகுத்துப் பாருங்கள்.

தாவரங்களை வளர்க்கிறது. உயிரினங்கள் வாழ உணவு வழங்குகிறது. உயிர்க்காற்றுத் தந்து உயிர் காக்கிறது. வான் அமுதாகிய மழையைத் தேக்கி வைத்துக் குடிநீர் தருகிறது. கனிம வளங்களைக் கொடுத்து உலக வாழ்வை வளப்படுத்துகிறது. இன்னும் பல. இவை யாவும் உலகம் நமக்குச் செய்யும் உதவிகள்.

காலம் உணர்ந்து செய்யும் சிறு உதவியை ஒப்பிடுகையில், ஞாலம் செய்யும் இந்த உதவிகள் மிகமிகச் சிறியவை. எப்படி?

உலகம் நமக்குத் தேவையான போது உதவி செய்யாமல் போகும். தண்ணீரைக் கோடைக் காலத்தில் கொடுக்காமல் போகிறது. மருந்துக்கு உதவும் சில தாவரங்களைத் தேவைப்படும் காலத்தில் தருவது இல்லை. எந்தப் பருவத்தில் எதைக் கொடுக்குமோ அந்தப் பருவத்தில்தான் அதைக் கொடுக்கும். கொடுக்காமலும் போகும்.

தேவைப்படாத காலத்தில் என்ன கொடுத்தாலும் அப்போதைக்கு அது பயனில்லை. தேவையான நேரத்தில் கொடுக்காமல் போனால், அது பெருமையா? அதுதான் மாணப் பெரிதா? இல்லை!

இடர்காலம் உணர்ந்து செய்யும் சிலரின் சிறு உதவிதான், ஞாலம் செய்யும் இயற்கை உதவிகளைவிடப் பெரியது.

இந்த விரிவான கருத்தாடலுக்கு ஆதரவாக நாவலர்                                     இரா. நெடுஞ்செழியனின் கருத்துரை உள்ளது. சுருக்கமாகவும் ஏற்கத் தக்கதாகவும் உள்ளது. அந்த கருத்து உரை இதோ…

பருவம் அல்லாத காலத்தில் உதவி செய்யாத உலகத்தைவிட, காலம் அல்லாத காலத்திலும் உதவி செய்கின்றவன்தான் பெருமையில் மிக்கவன் ஆவான்.

---கோ. மன்றவாணன்

நன்றி : திண்ணை இணைய இதழ்

Wednesday, 30 October 2024

தளை இல்லாத வெண்பாவா…

 

தளை இல்லாத வெண்பாவா…

கோ. மன்றவாணன்

 

மரபு கவிதைகளுக்குத் தலைமை தாங்குவது வெண்பாதான்.

அதை எழுதுவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை; அதற்கெனப் பல கட்டுப்பாடுகள் உண்டு; அதற்குள் சிந்தனையை அடக்குவது என்பதும் எளிய செயல் இல்லை; சிமிழுக்குள் சிகரத்தை வைப்பது போன்றது என்றே பலரும் கருதுகிறார்கள்.

பெரும்புலவர்கள் பலரும் வெண்பா எழுத முடியாமல் திணறி இருக்கிறார்கள். புகழ்பெற்ற புலவர்கள் எழுதிய வெண்பாக்களில் தளை தட்டும் இடங்களைச் சுட்டிக் காட்டிப் பேர்வாங்கும் புலவர்களும் உண்டு.

வள்ளுவரின் திருக்குறளில்கூட தளை தட்டுகின்றது எனச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

தமிழ் யாப்புகளில் கடினமானது வெண்பா. அதனால் அதனை வன்பா என்றார்கள். யாப்புகளில் மிக எளிமையானது ஆசிரியப்பா. அதனால் அதை மென்பா என்று சொன்னார்கள்.

பார்க்கப் போனால் வெண்பாவில்தான் புலவர்களும் கவிஞர்களும் அதிகம் விளையாடி இருக்கிறார்கள்.

சித்திரக் கவி என்பது தமிழ்மொழிக்கே உரிய கவிதை அமைப்பு. சித்திரங்களுக்குள் எழுத்துகளைப் பொருத்திக் கவிதை எழுதும் கலை. அத்தகைய. சித்திரக் கவிதைளில் வெண்பாதான் இடம்பெறும்.

என் சிறுவயதில் ரத பந்தனம் என்ற சித்திரக் கவிதையை எழுதி இருக்கிறேன். தேர்ப் படம் இருக்கும். அதில் கட்டங்கள் இருக்கும். அந்தக் கட்டங்களுக்குள் எழுத்துகள் அமைய வேண்டும். எதுகை, மோனை, வெண்டளை உள்ளிட்ட இலக்கணக் கூறுகளும் இருக்க வேண்டும்.

நளவெண்பா எழுதிய புகழேந்தியை, வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி என்று தமிழ்க்கவிதை உலகம் இன்றும் புகழ்கிறது.

காளமேகப் புலவரின் சிலேடை வெண்பாக்களை இன்றும் நாம் ரசித்துப் படிக்கிறோம். இன்றைய மேடைப் பேச்சாளர்களும் காளமேகப் புலவரின் வெண்பாக்களைச் சொல்லிக் கைதட்டல் வாங்குகிறார்கள்.

எண்கவனகம், பதின்கவனகம், நுாறு கவனகம் நிகழ்வுகளில் ஒரு கவனம், வெண்பா பாடுவது.

மணிமேகலை வெண்பா என்ற முழுநுாலைப் பாவேந்தர் பாரதிதாசன் எழுதி இருக்கிறார்.

இந்த நுாற்றாண்டிலும் சிலர் வெண்பாவில் காவியம் எழுதி வருகிறார்கள்.

இருபதாம் நுாற்றாண்டில் வெண்பாவுக்கு ஒரு புகழிடத்தை உருவாக்கித் தந்தவர் கவியரசர் கண்ணதாசன். அவருடைய தென்றல் இதழில் வெண்பாப் போட்டி நடத்தினார். தென்றல் இதழில் வெண்பா வந்தது என்றால், அதை எழுதிய கவிஞருக்கு, அது என்றும் வாடாத புகழ்மாலை.

நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் வெண்பாக்கள் எழுதி அசத்தி இருக்கிறார். புலவர்களையே வியக்க வைத்த வெண்பாக்கள் அவை. வட்டாரப் பேச்சு வழக்கில் வெண்பாக்களை எழுதினார் ஆகாசம்பட்டு சேசாசலம்.

கரூர் இல. சேதுராமன் என்பவர் கடலுாரில் வாழ்ந்தார். தன்னுடைய நாள்குறிப்பை வெண்பாவில் எழுதி வந்தார். அதனை நான் அருகில் இருந்து பார்த்தவன். இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வெண்பாக்களை எழுதிக் குவித்தார். 1331 குறள்கள் கொண்ட புதுக்குறள் என்ற நுாலையும் வெளியிட்டார்.

காத்தப்பன் என்பவர், ஒரே ஈற்றடி கொண்டு ஐநுாற்றுக்கும் மேற்பட்ட வெண்பாக்களை எழுதித் தனி நுாலாக வெளியிட்டு உள்ளார். இருபத்து ஓராம் நுாற்றாண்டின் வள்ளுவர் எனப் போற்றத் தக்க வகையில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குறள் வெண்பாக்களை எழுதி நுாலாக வெளியிட்டு உள்ளார். கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி, பலவகை வெண்பா யாப்புகளில் வெண்பாக்கள் எழுதினார்; வெண்பூக்கள் என்ற பெயரில் நுாலாகவும் வெளியிட்டார்.

வெண்பாவில் தனி நுால்கள் படைத்து வருகிறார்கள் சிலர். முகநுாலில் வெண்பாக்களை எழுதிக் குவிப்பவர்களும் இருக்கிறார்கள். வெண்பா இலக்கணத்தை எளிதாகச் சொல்லிக் கொடுக்கும் இணையப் பதி்வுகளும் இருக்கின்றன.

இவர்களைக் கேட்டால் வெண்பா எழுதுவது கடினம் இல்லை என்பார்கள். அவர்கள் அலட்சியமாக எழுதும் போதே அந்த வெண்பாக்கள் தளை தட்டாமல் வந்து அமையும். வெண்பாவும் ஒரு மனப்பழக்கம்.

வெண்பா இலக்கணத்தைச் சரியாகக் கற்றுக் கொள்ளாமல், சிலர் வெண்பாக்கள் எழுதுகிறார்கள். அவர்களில் தமிழ் கற்றவர்களும் உண்டு. அந்த வெண்பாக்களில் தளைகள் தட்டுகின்றன. வெண்பாவின் வடிவம் இருக்கிறதே தவிர,  வெண்டளை என்ற இலக்கணம் அறவே இல்லை.

தளை தளை என்கிறீர்களே…. அந்தத் தளைதான் என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். அந்தத் தளைதான் இன்றைய சில கவிஞர்களுக்குத் தடை.

மா முன் நிறை, விளம் முன் நேர், காய் முன் நேர் என்ற யாப்பு இலக்கணப் படி வெண்பாவின் சீர்கள் இருக்க வேண்டும். அதற்கு வெண்தளை அல்லது வெண்டளை என்பார்கள்.

தலை,கால் புரியாமல் சிலர் வெண்பாக்களை எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். சற்று இலக்கணம் கற்க முயன்றால் அவர்களும் சரியாகவே  எழுதி விடுவார்கள்.

தளை பற்றித் தெரியாமல் எழுதுகின்ற அந்த வெண்பாக்களில் நல்ல சிந்தனைகள் இருக்கின்றன. அழகான சொல்வளம் மிளிர்கின்றன. வித்தியாசமான வெளிப்பாடுகள் உள்ளன. கவிதையின் எழில் கொஞ்சுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் அந்த வெண்பாக்களைப் புறம் தள்ள மனம் ஒப்பவில்லை.

பழங்காலத்தில் பெரும் புலவர்களில் சிலர், கவிதைகளில் பிழைகள் செய்தனர். அவற்றைத் தமிழ் உலகம் ஒதுக்கித் தள்ளவில்லை. வழுவமைதி என இலக்கணம் வகுத்து ஏற்றுக் கொண்டது.

வெண்பாக்களில் பல வகைகள் உண்டு. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா், நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா என உண்டு. அவற்றிலும் உள்வகைகள் உண்டு. “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்ற பழைய வெண்பாவில் ஒரு சீரைக் காணவில்லை. அதனையும் சவலை வெண்பா எனப் பெயர்சூட்டி ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

காலம் மாற மாற, வெண்பாக்களிலும் வேறு வகைகள் வந்தால் என்ன? அதன்படி, தளை தட்டும் வெண்பாக்களைத் தளையறு வெண்பா என்று சொல்லி நாம் ஏற்றுக் கொள்ளலாம். தளை என்றால் தடை என்ற பொருளும் உண்டு. அந்தத் தடையைச் சற்று நகர்த்தி வைத்து நடந்தால் என்ன?

தளையறு வெண்பா என்றால் அது வெண்பாவின் தலையை அறுப்பது போல் எனக் கொதித்துச் சிலர் சீறிப் பாயலாம். தளையறு வெண்பா என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால், வழுவமைதி போலத் தளைஅமைதி வெண்பா என்று அழைத்துக் கொள்ளுங்கள்.

வெண்பா இலக்கணத்தின் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தலாம் என நான் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுக் காலமாகச் செழித்து வந்த மரபு கவிதை, மெல்ல மெல்ல… இல்லை இல்லை, விரைவாகவே மறைந்து வருகிறது. மரபுக் கவிதையை அடுத்த அடுத்த நுாற்றாண்டுக்கும் அழைத்துச் செல்லத்தான் இந்த இலக்கணத் தளர்வு தேவை என்கிறேன்.

யாப்புக் கட்டுமானத்துக்குள் சொற்களை அடுக்கி விடுவதால் அது கவிதை ஆவதில்லை. அதையும் தாண்டிக் கவிதையின் அழகு ஒளிர வேண்டும்; புதுப்புது உலகின் கதவுகளைத் திறக்க வேண்டும்.

ஆனால் ஓர் அறிவுரை

வெண்பா இலக்கணம் கற்றுக் கொள்வது மிக எளிது. கற்றுக் கொள்ளுங்கள். தளை தட்டாமல் எழுதிப் பாருங்கள்; பழகுங்கள். முடியாத போது மட்டுமே  தளைஅமைதி வெண்பாக்களை எழுதலாம்.

ஆனால் ஈற்றடியில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நாள், மலர், காசு, பிறப்பு என்ற வகையில் கடைசிச் சீர் அமைந்தால் நல்லது. அதுதான் வெண்பாவை அடையாளப் படுத்தும் முகம்.

………………………………

பனி இல்லாத மார்கழியா…

படை இல்லாத மன்னவரா…

தலை இல்லாத பெண்பூவா…

தளை இல்லாத வெண்பாவா…

என்று எங்கோ யாரோ பாடுவது, இங்கு எனக்குக் கேட்கிறது.

 

                                 -கோ. மன்றவாணன்


நன்றி  : திண்ணை இணைய இதழ் 28-10-2024

Friday, 20 September 2024

கற்றவர் அவையில் கல்லாதவர் அரங்கேற்றமா?






கற்றவர் அவையில் 

கல்லாதவர் அரங்கேற்றமா?

கோ. மன்றவாணன்

 

திருக்குறளில் உள்ள கல்லாமை அதிகாரத்தில் ஒரு குறள் :

கல்லா தவரும் நனி நல்லர், கற்றவர்முன்

சொல்லாது இருக்கப் பெறின். 


கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்பதுதான் இந்தக் குறளின் பொருள். பெரும்பாலான உரையாசிரியர்களின் உரையும் இதுதான்.  

கற்றவர் முன் பேசாது இருந்தால் கல்லாதவர்களும் நல்லவர்களே என்றால், கல்லாதவர்கள் கெட்டவர்களா என்றோர் உள் கேள்வி எழுகிறது. கல்லாதவர்களும் என்ற சொல்லில் வருகிற உம்மின் அழுத்தத்தைக் கவனியுங்கள். 

ஒருவர் படிக்கவில்லை என்றால்... கற்கவில்லை என்றால் அவர் கெட்டவராக ஆக முடியுமா? கல்லாதவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள். 

ஒருவர் படித்து இருப்பதனால்... நிறைய கற்று இருப்பதனால், அவர் நல்லவராக ஆகிவிட முடியுமா? கற்றவர்களில் கெட்டவர்களும் இருக்கிறார்கள். 

ஆனால், வள்ளுவரின் மெய்யான எண்ணம் என்ன? 

ஒருவர் நல்லவர் என்பதை எப்படித் தீர்மானிப்பது? ஒருவரை நல்லவர் என்பதற்குப் பல காரணங்களைச் சொல்ல முடியும். பல வகையான பண்புகளைக் கூற முடியும்.  

வாழ்க்கையில் ஒழுக்கமாய் நடத்தல்; பிறருக்குத் தீங்கு செய்யாது இருத்தல் காரணமாக ஒருவரை நல்லவர் என்று கருதுகிறோம். 

பல பண்புகளில் ஏதேனும் ஒரு பண்பில்; பல செயல்களில் ஏதேனும் ஒரு செயலில் ஒருவர் நன்னெறிப் படி நடந்து கொண்டால், அந்தப் பண்பைப் பொருத்தவரையில்; அந்தச் செயலைப் பொருத்தவரையில் அவரை நல்லவர் என்று சொல்லலாம்.  

யார் ஒருவரும் எல்லாப் பண்புகளிலும்; எல்லாச் செயல்களிலும் நன்னெறிப்படி வாழவும் முடியாது அல்லவா! 

அதன்படி, ஒரு துறை சார்ந்த அறிவைக் கற்றவர்கள் கூடும் சபையில், அந்தத் துறை சார்ந்து கல்லாதவர்  பேசாமல் இருந்தால், அந்தச் சமயத்தில் அவர் நல்லவராகவே கருதப்படுவார். தன் அறியாமை வெளிப்படவும் கற்றவரை அவமதித்தும் பேசினால், அவருடைய செயல் அவரைக் கெட்டவராகக் காட்டிவிடும். 

இப்படி... வள்ளுவர் குறளுக்குப் பொருள் கொண்டால், நல்லவர் என்பதான உரை சரிதான். 

நல்லர் என்ற சொல்லுக்கு நல்லவர் என்றும் பொருள் உண்டு. நன்மை அடைந்தவர் என்ற பொருளும் உண்டு.  ஓரிரு உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் நல்லர் என்பதற்கு நன்மை அடைந்தவர் என்றே பொருள் கொள்கின்றனர். அதன்படி மேற்கண்ட குறளுக்கு எவ்வாறு பொருள் சொல்லலாம்? 

கல்லாத ஒருவர் கற்றவர் முன் பேசாமல் அடக்கமாக இருப்பாரே ஆனால் அந்தக் கற்றவர் கற்பிக்கும் பல அறிவார்ந்த கருத்துகளைக் கல்லாதவரும் கேட்டு அறிவு பெற முடியும். இது ஒரு நன்மை. 

மேலும் கற்றவர் முன்னால் கல்லாதவர் பேசுவதன் மூலம் தன் அறியாமையை வெளிக்காட்டிப் பலரின் ஏளனத்துக்கு உள்ளாகலாம்; அவமானத்துக்கு ஆளாகலாம்.  எனவே கற்றவர் முன்னால் கல்லாதவர் பேசாமல் இருந்தாலே ஏளனத்துக்கு உள்ளாகாமலும் அவமானத்துக்கு ஆளாகாமலும் தன்னைக் காத்துக் கொள்ள முடியும். இது இன்னொரு நன்மை. 

ஆக... கற்றுத் தெரிந்தவர்கள் முன்னால் கல்லாதவர்கள் பேசாமல் இருப்பதனால் அவர்களுக்குப் பயன்கள் உண்டு; நன்மைகள் உண்டு என்பதாக அந்தக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம். 

அடுத்து,

நனி நல்லர் என்பதை நனி நல்ல என்று பாடம் செய்தால் என்ன என்று தோன்றுகிறது. நனி நல்ல என்பதற்கு மிகவும் நல்லது: மிகவும் நல்லவை எனப் பொருள் கொள்ளவும் முடியும்.  அதன்படி பார்த்தால், கற்றவர் முன்னால் கல்லாதவர் பேசாது இருந்தால், அதுவே மிக நல்லது என்று எளிதாகப் பொருள் வரும். 

சிலர் இப்படிக் கேட்கலாம் : "நல்ல என்பது பெயரெச்சம். நல்ல என்பதற்குப் பின்னால் ஏதோ ஒரு பெயர்ச்சொல் எஞ்சி நிற்கிறது. பின்னால் ஒரு சொல் வராமல் நல்ல என்ற சொல் முடிவு பெறாது." 

அவர்களுக்கு நாம் நினைவு ஊட்டுவது இதுதான். நல்ல நல்ல அவை நல்ல நல்ல என்றொரு தொடர், கோளறு பதிகத்தில் வருகிறதே. 

இன்னொரு கேள்வி எழுகிறது. கற்றவர் முன்னால் கல்லாதவர் தன் ஐயப்பாட்டைச் சொல்லிக் கற்றுக் கொள்ளக் கூடாதா? ஐயப்பாட்டை எழுப்புவதற்காகக் கற்றவர் முன் கல்லாதவர் பேசத்தானே வேண்டி இருக்கும்! தெரியாதவர், தெரிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? அறிவைத் தேடும் ஒரு முயற்சிதானே அது.  

அப்படி ஐயம் தெளிவதற்காகக் கற்றவரிடத்தில் கல்லாதவர் கேட்டுத் தெரிந்து கொள்ள முயல்வதை வள்ளுவர் என்னும் பேராசிரியர் எதிர்ப்பாரா? 

இதே குறளில் இன்னொன்றையும் நாம் ஆராய வேண்டும்.  

"கற்றவர் முன் சொல்லாது இருத்தல்" என்ற வரியைக் கவனியுங்கள். சொல்லாது இருத்தல் என்று பொதுவாகச் சொல்லுகிறாரே தவிர, எதைச் சொல்லாது இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. 

தன் மடத்தனமான கருத்துகளை வலியுறுத்திச் சொல்லாது இருத்தல் வேண்டும் என்பதுதான் "சொல்லாது" என்ற சொல்லின் உள்பொருள் என  அறியலாம்.  மேலும் கல்லாதவர், கற்றுத் தேர்ந்த ஓர் அறிஞரை அவமானப்படுத்தும் விதமாக,  எதையும் சொல்லக்கூடாது என்றும் ஊகிக்கலாம். 

இதனால்தான் வள்ளலார் மனம் நொந்து நொந்து பாடி இருக்கிறாரோ....  

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ என வரும் அந்தப் பாட்டில் உள்ள சில வரிகள்.... வள்ளுவர் குறளுக்குப் பொருள் கூறும் வரிகளாக உள்ளன. அவை வருமாறு: 

கற்றவர் மனத்தைக் கடுகடுத்தேனோ... 

பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ.... 

மேற்கண்ட ஆய்வின் அடிப்படையில், அந்தக் குறளுக்குச் சுருக்கமாகவும் சரியாகவும் பொருள் சொல்ல வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்.  

கற்றவர் முன்னால் கல்லாதவர் தன் மடத்தனமான கருத்துகளைப் பேசாது இருத்தல் நல்லது. 

இந்தக் குறளை நேரடியாகப் பொருள் கொண்டு, கல்லாதவர்கள் சார்பில் வள்ளுவரைக் குற்றம் சுமத்தினால், அதில் துளி அளவும் நியாயம் கிடையாது.  

கல்லாதவரைத் தாழ்த்திச் சொல்வதன் மூலம், யார் ஒருவரும் கல்லாதவராக இருக்கக் கூடாது என வலியுறுத்தவே, கல்லாமை என்னும் அதிகாரத்தை வள்ளுவர் எழுதி இருக்கிறார். 

கற்றவர்கள் பங்கேற்கும் ஆய்வு அரங்கில், கல்லாத ஒருவரையும்  ஆய்வுரை நிகழ்த்தச் சொன்னால் எப்படி இருக்கும்? என்ன நடக்கும்?

 

கோ. மன்றவாணன் 

நன்றி : திண்ணை, 15-09-2024

 


 

Sunday, 1 October 2023

இரா. இராதாகிருஷ்ணன்

 

இளமை எனும் பூங்காற்று... 

இரா. இராதாகிருஷ்ணன் பக்கமே வீசுகிறது.


இரா. இராதாகிருஷ்ணன்

 

கடலூர் மாநகராட்சியில் வன்னியர்பாளையம் என்றொரு பகுதி உள்ளது. ஒரு காலத்தில் இங்குக் கிளை பரப்பாத அரசியல் கட்சிகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அரசியல் சிந்தனை தீப்பற்றி எரிந்த மண் இது. இதைக் கடலூரின் கிரேக்க பூமி என்று நீதிபதி மகிழேந்தி விவரிப்பார். இங்குதான் இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்து வளர்ந்தார். இங்குப் பிறந்ததாலோ என்னவோ “ஏன்?” என்ற கேள்வி கேட்காத ஒருநாள்கூட இவர் வாழ்வில் இருந்ததே இல்லை.

இவர் எடுக்கும் முயற்சிகளையும், வென்று முடிக்கும் செயல்களையும் பார்த்தால்... இவரே ஒரு நடமாடும் தன்னம்பிக்கை நூலகம் என உறுதியாகச் சொல்லலாம்.

இன்றைய சிந்தனைகூட இவருக்குப் பழைமை ஆனதாகத் தோன்றுமோ என்னமோ... நாளைய உலகுக்கு இன்றே தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்.

இவருக்கு எண்பத்து ஐந்து வயது என்றால் யாரும் நம்ப மாட்டீர்கள். உடை அழகையும் நடை அழகையும் உற்று நோக்கினால் இருபது வயது இளைஞராகவே திகழ்கிறார். அது என்னவோ தெரியவில்லை... இளமை எனும் பூங்காற்று எப்பொழுதும் இராதாகிருஷ்ணன் பக்கமே வீசுகிறது.

வடிநிலம் என்ற பெயரில் கடலூர் மாவட்ட வரலாற்றைச்  சிறப்பாக எழுதி உள்ளார். இதற்காக அவர் ஆற்றிய களப் பணிகளும் தகவல் தேடல்களும் ஏராளம்.

பல நூல்களை எழுதித் தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகிறார். தேநீர்க் கோப்பையுடன் இவரின் நூலைப் படிக்கத் தொடங்கினால், தேநீர் பருக மறந்து விடுவோம். நாவில் விழுந்த தேன், தானாகவே நழுவித் தொண்டையில் இறங்குவதுபோல், இவரின் எழுத்து நடை எளிமை ஆனது; இனிமை ஆனது.

“முதலில் இருந்து” என்ற இவரின் தன்வரலாற்று நூலைப் படித்தால் இவரின் உயரம் காணலாம்.

சின்னம்சிறு பருவத்தில் பெரியார் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு, அவரோடு சென்றுவிட்டார். 'படி' என்ற அவரின் அறிவுரை ஏற்றுத் திரும்பி வந்து படித்தார். அரசுப் பணியில் சேர்ந்தார். பல உயர் பதவிகளை வகித்தார். 39 ஆண்டுக் காலம் அரசுப் பணி ஆற்றினார். திரு. வெ. இறையன்பு, திரு. உ. சகாயம் போன்ற அதிகாரிகளிடம் பணியாற்றிப் பாராட்டுகள் பெற்றார்.

ஒருவர் 1330 திருக்குறள்களையும் பின்பற்ற முடியாமல் போகலாம். ஏதேனும் ஒரு குறளைத் தேர்ந்து எடுத்து, அதன்படி வாழ்ந்தாலே போதும். உயர்வு நிச்சயம். அப்படி ஒரு குறளுக்கு வாழும் முறையால் உரை எழுதி வருகிறார் நம் இராதாகிருஷ்ணன். அந்தக் குறள் இதுதான்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி,தன்

மெய்வருத்தக் கூலி தரும்.

 

கோ. மன்றவாணன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


பழ. ஆறுமுகம்

கவிஞர் பழ. ஆறுமுகம் அவர்களுக்குப்

பாராட்டு உரை

 

சிலருக்கு உணவுகூடத் தேவை இல்லை. கவிதை எழுதிப் பசியை மறந்துவிடுவார்கள்.

சிலருக்குக் காற்றுகூடத் தேவை இல்லை, கவிதைப் புத்தகம் இருந்தால் போதும். அதையே (சு)வாசித்துக் கொள்வார்கள்.

அந்தச் சிலரில் ஒருவர்தான் பழ. ஆறுமுகம்.

உயிரும் உடலும் சேர்ந்து இருப்பது இயற்கை. கவிதையும் உடம்பும் சேர்ந்த அதிசயம் பழ. ஆறுமுகம்.

பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் கவிதையும் ஆறுமுகமும் என்று சிவன் சிவாஜியே வந்து சாட்சி சொல்லிவிடுவார்.

இப்படிக் கவிதைக்காக வாழும்.... கவிதையால் வாழும் பழ. ஆறுமுகம் அவர்கள் எழுதி உள்ள “பாட்டருவி” என்ற கவிதை நூலைப் படித்தேன். மெய்யாகவே தமிழ் அருவியில் குளித்து மகிழ்ந்தது போல் மனம் குளிர்ந்தது.

உவமைக் கவிஞர் சுரதா, புதுக்கவிஞர் மு. மேத்தா, முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி போன்ற கவி ஆளுமைகளின் தலைமையில் கவி பாடி, புகழ் சூடி உயர்ந்து நிற்பவர் பழ.ஆறுமுகம்.

ஒரு கவிதையில்....

செருப்புத் தைக்கும் தொழிலாளரின் வறுமை வாழ்வை விளக்குகிறார். அவருக்கு என்ன வருவாய் கிடைக்கும் என்றால், “விழிவடிக்கும் கண்ணீரே வருவாய்.” என்கிறார்.

அதே கவிதையில்,

ஓலையிலே மனுஎழுதிக் கொடுத்த போதும்

ஒருபயனும் இருந்ததில்லை; ஓட்டை வீழ்ந்த

சேலையினால் சுவர்எழுப்பிச் சேர்ந்து வாழ்வோம்!

சீலைகூட உடுக்காத குழந்தை ஆவோம்! என்று

ஏழைகளின் வாழ்வைப் படம் பிடித்துச் சொல்லி இருக்கிறார். 

ஒருவர் கவிஞர் என்றால், அவருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணம்,  கருணை. அது நிறையவே இருக்கிறது பழ. ஆறுமுகம் அவர்களிடம். அதனால்தான் அவர் கவிதைகளில் மனிதம் ஆராதிக்கப் படுகிறது.

இந்த நூலைப் படிப்பதற்கு முன் அறிந்தேன், இவர் பழ. ஆறுமுகம் என்று.

படித்த பிறகு உணர்ந்தேன், இவர் தமிழின் நூறுமுகம் என்று! 

பாட்டருவி நூலைப் படியுங்கள். உங்கள் பாராட்டைப் பதுக்கி வைக்காமல் பழ. ஆறுமுகம் அவர்களிடம் சொல்லுங்கள். பாராட்டு ஒன்றுதானே கவிஞன் சேர்த்து வைக்கும் சொத்து,சுகம்! 


கோ. மன்றவாணன்

 

Tuesday, 5 July 2022

கம்பருக்கே கர்வம் இல்லை


கம்பருக்கே கர்வம் இல்லை

கோ. மன்றவாணன்

ஒரு பூனை பால்கடல் முழுவதையும் நக்கி நக்கிக் குடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவது போல், இராமாயணத்தை முழுவதுமாகச் சொல்லிவிட ஆசை கொண்டேன் என்று கம்பர் சொல்கிறார். தன்னால் இராமாயணத்தை நிறைவாகச் சொல்லிவிட முடியாது என்பதுதான் அதன் பொருள். ஆனால், இராமாயணத்தைத் தமிழ்ச்சூழலுக்கு ஏற்பவும் காவியச் சுவை ததும்பி வழியவும் சிறப்பாகவே எழுதி இருக்கிறார். 

இளம்பெண்களின் ஆடல் நிகழ்வால் அரங்கின் தரையில் கீறல் விழுந்துவிட்டதற்காகத் தச்சர் யாரும் அந்தப் பெண்களைத் திட்ட மாட்டார்கள். அதுபோல் தெளிவும் ஞானமும் இல்லாத தன்னுடைய புன்கவியைக் கேட்டு, நூல்பல கற்ற புலவர் பெருமக்கள் யாரும் சினம் கொள்ள மாட்டார்கள் என்றும் கம்பர் சொல்கிறார்.

கம்பர் கவியைப் பொன்கவி என்று தமிழ் உலகமே போற்றுகிறது. ஆனால் கம்பரோ தன்கவியைப் புன்கவி என்று தாழ்த்திக் கொள்கிறார். இவற்றை எல்லாம் அவையடக்கம் என்ற பகுதியில்தான் சொல்கிறார்.

இப்படிக் கம்பர் ஏன் தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்? ஒருவேளை அவருக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்திருக்குமோ என்றும் ஐயம் கொள்ளலாம். தாழ்வு மனப்பான்மை என்பது உளவியல் சிக்கல். அவையடக்கம் என்பது பண்பியல் சிறப்பு.

புலமையும் திறமையும் நற்பண்புகளும் கொண்டவர்கள்தாம் அவையினராக இருந்திருக்கிறார்கள். அதனால் அவையில் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும் அவையினரை உயர்த்திச் சொல்வதும் அந்தக் காலத்து மரபாக இருந்திருக்கிறது. தன்னைத் தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப் படுவார் என்றொரு திருவாசகம், திருவிவிலியத்தில் வருகிறது. 

அன்றைய சூழ்நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு இடம்தரும் ஒரு பெரும்படைப்பை... அரும்படைப்பை அறிஞர் அவை ஏற்றுக் கொள்ளுமோ அல்லது ஒதுக்கித் தள்ளுமோ என்ற அச்சம் கம்பருக்கு ஏற்பட்டிருக்கலாம். நன்றாகத் தேர்வு எழுதி, முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவரின் மனநிலைதான் அது. 

அன்றைய அரங்கேற்றம் என்பது நூலாசிரியர்களுக்கு வைக்கப்படும் தேர்வு. இன்றைய வெளியீட்டு விழா என்பது, நூலாசிரியர்கள் தாங்களே செய்துகொள்ளும் புகழ் விளம்பரம். 

ஆனால் இந்தக் காலத்தில் சில படைப்பாளர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தித் தற்பெருமை பேசுகிறார்கள்.. படைப்பாளருக்கு வித்யா கர்வம் இருக்க வேண்டும் என்றும் கொடி உயர்த்துகிறார்கள். தற்பெருமை பேசுவதைக்கூட ஒரு வகையில் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் தங்களை உயர்த்திக்கொள்ள அடுத்தவர் பெருமையைத் தாழ்த்திப் பேசுவதை ஏற்க இயலாது. 

நம் பெருமையை நாமே பேசுவது நாகரிகம் இல்லை.
நம் பெருமையைப் பிறர் பேசுவதில்தான் உலக அங்கீகாரம் கிடைக்கிறது.

எழுத்தாளருக்கு அவையடக்கம் இருக்க வேண்டுமா? அல்லது, அவைக்கு அடங்காத கல்விச் செருக்கு (வித்யா கர்வம்) இருக்க வேண்டுமா? இப்படியான விவாதம் இலக்கிய அரங்கில் இன்னமும் நடந்து வருகிறது. வித்யா கர்வம் இருக்க வேண்டும் என்போர், பாரதியை உதாரணம் காட்டுகிறார்கள். 
  
“சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் என்னை” என்று பாரதி தன்னை உயர்த்திப் பாடிக்கொண்டார் என்கிறார்கள். 

“சுவை புதிது; பொருள் புதிது;  வளம் புதிது; சொல் புதிது; சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று தன் கவிதையைத் தானே புகழ்ந்துகொண்டார் என ஆதாரம் காட்டுகிறார்கள். 

“புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்த தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும் வசை என்னால் கழிந்தது அன்றோ!” என்று கர்வம் கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

அதற்காக எல்லாரும் பாரதியாகி விட முடியாது. 

இவை எல்லாம் பாரதியாரின் “ஒரு காலக் கட்டக்“ கவிதைகளாகவே இருக்கும். பாரதியே மகாசக்தியிடம் பணிந்து நிற்கிறார். உள்ளம் தெளியாதோ... பொய்ஆணவ ஊனம் ஒழியாதோ என்று விண்ணப்பம் வைக்கிறார். 

தன் கவிதையை மகாகவிதை என்று சொன்ன பாரதி, கர்ணனொடு கொடை போயிற்று; கம்பனொடு கவிதை போயிற்று என்று வேறோர் இடத்தில் சொல்கிறார். பிற்காலத்தில் பாரதியாரிடம் கர்வம் இருந்திருக்காது என்றே கருதுகிறேன். ஆனாலும் சிலர், பாரதியாரிடம் இருந்தது கர்வம் இல்லை; அது பெருமை கொள்ளும் மனோபாவம் என வலிந்து பொருள்திணிப்புச் செய்யலாம். 

கண்ணதாசன் தன் வரலாற்றை எழுதும் போது, நான் என்பதற்குப் பதிலாக அவன் என்றே எழுதினார். நான் என்று சொன்னால்கூட அதுவும் கர்வமாகக் கருதப்படும்; ஆணவமாக அறியப்படும் என்று அஞ்சியே அப்படி அவர் எழுதினார். 

இரத்த ஓட்டம்போல் கற்றல் என்பது தொடர்ந்து நடைபெற வேண்டிய நிகழ்வு. கற்றல் என்பது படைப்புக்கு மூலதனம். எப்போது படைப்பாளர் கர்வத்துக்கு ஆளாகிறாரோ... அதுமுதல் கற்பதிலிருந்து அவர் விலகுகிறார். 

தனக்கு நிகராகவோ உயர்வாகவோ யாரும் இல்லை என்ற மூடத்தனத்தை வளர்க்கிறது கர்வம். கர்வம் உள்ள மனிதர் யாரையும் மதிப்பதும் இல்லை. யார் சொல்லையும் கேட்பதும் இல்லை.  

கர்வத்தோடு நடப்பவரை உலகம் வெறுக்கும். பணிவோடு நடப்பவரை உலகம் வணங்கும். “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்” என்ற கண்ணதாசனின் பாடல் வரியை இங்கே நினைத்துக்கொள்ளலாம். 

அவையடக்கம் என்பது ஆணவப் போக்கை அண்டவிடாமல் தடுக்கிற ஓர் உளவியல் சிகிச்சை முறை. 

பணிவு என்பது பூவனத்துக்குச் செல்லும் பாதை. கர்வம் என்பது புதைகுழிக்குப் போகும் பாதை. இதைப் பல பெரிய மனிதர்களின் வரலாற்றுப் பக்கங்களில் பார்க்கலாம். 

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து என்பது திருக்குறள் வழங்கும் தீர்ப்பு.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்பது வள்ளுவர் நீதி.

நாம் பணிவாக இருக்கும் போது பிறரை உயர்த்துகிறோம். பிறரின் மனங்களில் நாம் உயர்கிறோம்.
 
அட... கம்பருக்கே கர்வம் இல்லை என்னும் போது, நாம் ஏன் கர்வப்பட வேண்டும்? 


நன்றி 
திண்ணை இணைய இதழ்
04-07-2022


 

உருப் பளிங்கு

 உருப்பளிங்கு

-கோ. மன்றவாணன்



    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

    ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய

    உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தின் உள்ளே

    இருப்பள்இங்கு வாரா(து) இடர்.


இது, சரசுவதி அந்தாதியில் வரும் காப்புச் செய்யுள். இதில் வரும் உருப்பளிங்கு என்ற சொல்லைப் பார்த்து வியக்கிறேன்.

உருவத்தைக் காட்டும் கண்ணாடி போல், கலைமகள் மேனி இருப்பதாகக்கம்பர் சொல்கிறார். இதை எதிரொலிப்பதுபோல் திரைப்பாடல் ஒன்றும் உண்டு.

‘படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்’ என அந்தப்பாடல் தொடங்கும். அதில் ‘அந்தக் கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா?இல்லை, உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா?’ என்று கவிஞர் கேட்டு இருப்பார்.

உருவத்தைக் காட்டும் பொருள் வள்ளுவர் காலத்திலும் உண்டு. பொதுவாக அதற்குப் பளிங்கு என்று பெயர். அதனால்தான் அவர் “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” என்ற திருக்குறளை எழுதி உள்ளார். .

நாம் பொதுவாகச் சொல்லும் கண்ணாடி என்பதில் முகம் பார்க்கிறோம். ஆடி என்பதுதான் பொதுச்சொல். அந்தச் சொல்லில் முன் ஒட்டுச் சேர்த்துக் கண்ணாடி என்றும், மூக்குக் கண்ணாடி என்றும், முகம் பார்க்கும் கண்ணாடி என்றும் பலவாறு வேறுபடுத்தி அழைக்கிறோம்.

பின்புறத்தில் வேதிப்பொருள் பூசப்பட்ட ஆடியை முகம் பார்க்கும் கண்ணாடி என்று சொல்கிறோம். அதைத்தான் ஆங்கிலத்தில் Mirror என்கிறார்கள். ஒளிபுகும் ஆடியை, அதாவது, தெள்ளிய (transparent) ஆடியை Glass என்று சொல்கிறார்கள்.

Mirror என்பதற்கும் Glass என்பதற்கும் சேர்த்தே நாம் கண்ணாடி என்ற சொல்லைப் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். பல காலமாகப் புழக்கத்தில் வந்துவிட்டதால் அவ்வாறே பயன்படுத்தலாம்.

கண்ணாடி என்ற சொல், கண்ணுக்கு அணியும் ஆடி என்றும், கண்ணால் காணும் ஆடி என்றும், கண்ணைக் காட்டும் ஆடி என்றும் விரிந்து பொருள்கள் தரும். உருவத்தைக் காட்டும் ஆடி என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.

முகம் பார்க்கும் ஆடியை அல்லது உருவத்தைக் காட்டும் ஆடியைக் குறிப்பதற்கு மிகவும் பொருத்தமாக உருப்பளிங்கு என்ற சொல் உள்ளது.

அதனால்தான் கம்பனைச் சொல்கடல் என்று சொல்கிறார்களோ...


Saturday, 4 June 2022

இலக்கிய முதல்வர்

 


மனத்தை வெளுக்கும் மருந்து




மனத்தை வெளுக்கும் மருந்து

கோ. மன்றவாணன்

யாப்பு இலக்கணத்தில் மணிமுடியாக ஒளிர்வது வெண்பா. அதில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா போன்ற வகைகளும் உண்டு. குறிப்பாக நேரிசை வெண்பாதான் பெரிதும் கோலோச்சி வந்துள்ளது.

வெண்பா பாடுவது மிகவும் கடினம் என்று பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தொடக்கத்தில் எழுதும் போது தளை பார்த்து எழுத வேண்டி இருக்கலாம். எழுத எழுத இயல்பாகவே தளை தட்டாமல் வெண்பா தானாகவே வரும். தேனாகவே சுவை தரும்.

திரைப்பட நடிகரும் உரையாடல் எழுத்தாளருமான கிரேசி மோகன் பொறியியல் படித்தவர். மிக எளிமையாக இனிமையாக வெண்பாக்களை எழுதிப் பலரையும் கவர்ந்தார். பேச்சு வழக்கில் வெண்பாக்களை எழுதிப் பேர் வாங்கினார் ஆகாசம்பட்டு சேசாசலம். வெண்பா எவ்வளவு எளிமையானது இனிமையானது என்பதை மெய்ப்பித்தவர்கள் இவர்கள்.

நளவெண்பா எழுதியவரை வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி என்று தமிழ் இலக்கிய உலகம் இன்றும் புகழ்ந்து கொண்டாடுகிறது. நம் காலத்தில் பேராசிரியர் சுப்புராமன் என்பவர் அறிவியல் விதிகளை வெண்பாவில் எழுதி அசத்தி இருக்கிறார்.

அந்த வகையில் கடலூர் மண்ணுக்கும் வெண்பாவுக்கும் அண்மைக் கால வரலாறுகள் சில உண்டு.

கரூரில் பிறந்து இருந்தாலும் கடலூரில் வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் கரூர் சேதுராமன். திருக்குறள் போலப் புதுக்குறள் என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதில் திருக்குறளை மிஞ்ச வேண்டும் என்பதற்காக 1331 குறள்களை எழுதி உள்ளார். தன்னுடைய நாள்குறிப்புகளை வாழ்வின் இறுதிவரை வெண்பாவில் எழுதி வந்தார். அவ்வாறு எழுதிக் குவித்தவை பல்லாயிரம் வெண்பாக்கள்.

நாட்டரசன் கோட்டையில் பிறந்தாலும் கடலூரில் வாழ்ந்து தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வருபவர் கவிஞர் க. காத்தப்பன் ஆவார். இவரும் 3333 குறள்களைக் கொண்ட காத்தப்பர் குறள் என்ற நூலை வெளியிட்டு உள்ளார். ஏராளமான வெண்பாக்களை எழுதி உள்ளார். பல்வேறு இதழ்கள் தந்த ஈற்றடிகளுக்கு இவர் எழுதிய வெண்பாக்கள் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வெண்பா ஐயாயிரம் என்றொரு நூலையும் வெளியிட உள்ளார்.

‘கண்ணுடைய நாயகியாம் காண்’ என்ற ஒரே ஈற்றடி கொண்டு 4000 நேரிசை வெண்பாக்கள் எழுதி இருக்கிறார். இன்னும் எழுதுவார் என்று நினைக்கிறேன். ஒரே ஈற்றடிக்கு ஏற்ப இத்தனை பாக்களுக்கும் எப்படி இவரால் எதுகை அமைக்க முடிந்தது என்று வியக்காமல் இருக்க முடியாது. இந்த அருஞ்செயலை முறியடிக்க இனி யாராலும் முடியாது.

புதுவை மாநிலம்  கலிதீர்த்தாள் குப்பம் கிராமத்தில் பிறந்து இருந்தாலும் கடலூரில் வாழ்ந்து கவிதைத் தொண்டு ஆற்றியவர் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி. வெண்பூக்கள் என்ற தலைப்பில் ஓர் அரிய நூலைப் படைத்து உள்ளார். எத்தனை வகை வெண்பாக்கள் இருக்கின்றனவோ அத்தனை வகையிலும் எழுதி இருக்கிறார். நூலாக ஆவதற்கு முன்பு, சங்கப் பலகை என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்தினார். வெண்பூக்களில் அதாவது வெண்பாக்களில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சங்கப் பலகையில் பேசச் செய்தார். தமிழ் அறிஞர்கள் சொன்ன குறைகளை நீக்கியும் அறிவுரைகளைப் பின்பற்றியும் வெண்பூக்களை வெளியிட்டார். சங்க(க்) காலத்தில் இப்படித்தான் புலவர்கள் கூடிப் பாடல்களின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து உள்ளனர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். சமுத்திரம் என்ற சமற்கிருதச் சொல்லுக்கு உரிய தமிழ்ச்சொல்லான கடலைக் குறிக்கும் கடலூரில் வாழ்ந்தார். இங்குதான் பெரும்பாலான நூல்களை எழுதினார். அந்த நூல்களில் ஒன்றுதான் உலகியல் நூறு. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

மேற்சொன்ன கவிஞர்கள் வரிசையில் கடலூர் மண்ணில் பிறந்த தமிழ் இயலன் அவர்களும் வந்து சேர்கிறார். இயற்பெயர் தனசேகரன் என்றாலும் நாள்தோறும் தமிழ்ச்செல்வம் சேர்க்கும் தமிழ்சேகரன் இவர்.

கொரொனா காலத்தில் உலகம் முடங்கிப் போனது. ஆனால் இவர் முடங்கவில்லை. முன்னிலும் சிறந்து செயல்பட்டார். வலையரங்கு வழியாக நாள்தோறும் தமிழ் சார்ந்த கூட்டங்களை நடத்தினார். நடத்தியும் வருகிறார். இவர் நடத்தும் தமிழ்நிகழ்வுகள், ஆயிரத்தைத் தொட உள்ளன.

இவர் தமிழ்ப்பணி செய்யாத நாளில்லை. இவர்போல் தமிழ்ப்பணி செய்ய ஆளில்லை என்று சான்று அளிக்கலாம்.

தமிழுக்காக வாழும் இவருக்குத் தமிழக அரசு விருது அளிக்கும் நாள் விரைவில் வரும். தமிழுக்கான உயர் அமைப்புகளில்  தலைமை தாங்கும் காலமும் வரும்.

இவர் எழுதி வெளியிட்டு உள்ள “நண்பா உனக்கொரு வெண்பா” என்ற நூல் தமிழ் அன்பர்கள் இடையே பெரும் அளவில் பேசு பொருளாக உள்ளது. அந்நூல் குறித்து என்னுள் எழும் கருத்துகளை இங்கே பதிவிடுகிறேன்.

‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்பில் நாள் ஒன்றுக்கு ஒரு வெண்பா” என்ற கணக்கில் நூறு நாள்களில் நூறு வெண்பாக்களை எழுதி முடித்துள்ளார். அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டு உள்ளார். இப்படி நூல் எழுதுகிற போது கடவுள் வாழ்த்தாக ஒரு பாடலைச் சேர்த்து, நூற்று ஒரு பாடல்களாக வெளியிடுவது முற்காலப் புலவர்களின் வழக்கம். தேவை அற்ற அந்த வழக்கத்தைத் தவிர்த்து உள்ளார். முதல் பாடலில் உலகம் என்ற சொல்லை இடம்பெற வைப்பதும் பழங்கால வழக்கம். அதனையும் விலக்கி உள்ளார்.

முதல் வெண்பாவிலேயே தமிழைப் பாடுகிறார். தமிழை வாய்மொழியாகப் பார்க்காமல் வாழ்வியலாகப் பார்க்கிறார். வாழ்ந்தும் காட்டுகிறார். வாழ வழியும் காட்டுகிறார். தமிழ் உயர, தமிழன் உயர்வான் என்ற பாவாணர் கருத்து இங்கே நினைவுக்கு வருகிறது.

நூலில் நூறு வெண்பாக்கள் உள்ளன. அதனால் ‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்புப் பொருத்தம் உடையதா எனச் சிலர் கேட்கக் கூடும். முகநூல், வினவி ஊடாக ஒவ்வொரு நாளும் ஒரு வெண்பா எழுதி இருக்கிறார். நண்பருக்கு நாளும் ஒரு வெண்பா என்று தொடர்ந்து எழுதி வந்ததால், இந்தத் தலைப்புப் பொருத்தம் உடையதுதான். தென்கச்சி சாமிநாதன் ‘இன்று ஒரு தகவல்’ எனப் பேசி வந்தார். நூலாகும் போது அதில் பல தகவல்கள் இருந்தாலும் ‘இன்று ஒரு தகவல்’ என்ற தலைப்பில்தான் வெளியானது. ‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்பில் உள்ள எதுகை எடுப்பாகவும் சிறப்பாகவும் உள்ளது. தலைப்புக்கு ஒரு கவர்ச்சியையும் தருகிறது.

தன்முன்னேற்ற வாழ்க்கைக்கும் சமூக மேன்மைக்கும் தமிழ் உயர்வுக்கும் பயன்படும் கருத்துகளை நண்பருக்குச் சொல்லும் வகையில் வெண்பாக்களை அமைத்து இருக்கிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும் போது, நம் வாழ்வில் சந்தித்தவை நினைவுக்கு வரும். நம்மைச் சரிசெய்து கொள்ள ஊக்கம் தரும்.

எப்போதும் நேர்ப்பாங்காகச் சிந்திப்பவர் தமிழ் இயலன். அவரின் முன்னேற்றத்திற்கு இதுவே அடிப்படை என்று கருதுகிறேன். மென்போக்குக் கொண்டவர் இவர் என்றாலும் தமிழுக்குத் தீங்கு வருகுது என்றால் போர்வாளைத் தூக்கிவிடுகிறார்.

வீட்டுப் பணியில் இருவரும் என்ற தலைப்பில் ஒரு வெண்பா இருக்கிறது. அதை ஏற்று நடந்தால் போதும். இல்வாழ்க்கை நல்வாழ்க்கை ஆகும். அந்த வெண்பா இது.  

ஆக்கிடும் வேலைகள் அன்புடன் செய்திட;

தேக்கிய குப்பை பெருக்கிட; – ஊக்கமாய்த்

தூக்கிப் பிடித்திட; தாய்மையைப் போற்றிட

வாக்குரைக்கும் ஆண்களுக்கென் வாக்கு.

ஒரு நூலோ ஒரு கவிதையோ படித்தால் நம்முள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இந்த வெண்பா படித்தேன். அந்த நாளில் இருந்து வீட்டு வேலைகளில் நானும் சமப்பங்கு வகிக்கிறேன். சில நாள்களில் முழுப்பங்கும் ஏற்கிறேன். இது இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். துடைப்பம் ஏந்திக் குப்பையை அகற்றுவது பெண்களுக்கே உரியது அன்று. அது ஆண்களுக்கும் உரியது என்பதையும் உணர்த்துகிறார். ‘ஏணை அசைத்தலும் கூடும்; அது யார் அசைத்தாலும் ஆடும்’ என்ற பாவேந்தர் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

சாலை ஓரத்து ஏழை வணிகர்களிடம் பேரங்கள் பேசாதே என்று நண்பருக்கு அறிவுறுத்துகிறார். பெரும் வணிக வளாகங்களில் பேரம் பேசினால் மதிப்புக் குறைவு என்று நினைப்பவர்கள், வீதி ஓரத்துப் ஏழைப் பாட்டியிடம் அடாவடி பேரம் பேசுவது சரிதானா முறைதானா என்று ஏழை வணிகர்களுக்காகக் குரல் எழுப்புகிறார். அந்த வெண்பாவைப் படித்த பிறகு அன்றாட வாழ்வில் தத்தளிக்கும் ஏழை வணிகர்களிடம் பேரம் பேச நா எழாது.

மனித இலக்கண வழுவாகத் திருநர்களைக் கருதக் கூடாது. அவர்களை மனித இலக்கண வகையாக அறிய வேண்டும். புறத்தினர் மட்டும் அல்ல, பெற்றோரே மூன்றாம் பாலினரை ஒதுக்குகின்றனர். அந்நிலை மாற வேண்டும்.  ஆண்பெண் சமன்மையை உடலிலேயே உயர்த்திப் பிடிக்கும் அவர்களுக்கு நட்பைத் தரவேண்டும்... கல்வியைத் தரவேண்டும் என்கிறார்.

மனித நேயத்தையுத் தாண்டி உயிர்நேயத்தை வளர்க்கும் நோக்கில் ‘சிற்றுயிர் ஓம்பு’ என்ற வெண்பாவைப் படைத்து இருக்கிறார். இந்த வெண்பாவுக்குப் பொருத்தமாகவே நூலின் முகப்பு ஓவியம் உள்ளது. இந்த உலகம் மனிதருக்கு மட்டும் சொந்தம் இல்லை. செடி கொடிகளுக்கும் சொந்தம். சின்ன சின்ன உயிரினங்களுக்கும் சொந்தம். தமிழ் இயலன் சொல்லும் உயிர்நேயத்தை உள்வாங்கி நடந்தால் உலகம் நன்மை அடையலாம்.

ஒரு நூலகம் போல நம் மூளை அறிவு நிரம்பி இருக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு வெண்பா உண்டு. அப்படி இருந்தால் எந்தத் தேர்விலும் எந்த நேர்விலும் நமக்கு வெற்றி உண்டு. நாளை உலகை ஆளப் போகும் இன்றைய மாணவர்களுக்கான அறிவுரை இது. 

அடுக்கிய நூல்கள் அறிவுதரல் போலச்

சொடுக்கினால் மூளையது செய்திதர வேண்டும்

நடுக்கமிலா அப்பயிற்சி நாம்பெற்றுச் சொல்வோம்

எடுத்ததெலாம் வெற்றியே என்று


வெற்றிச் சூத்திரத்தை வெண்பாவில் வடிக்கிறார் இப்படி : 

உன்னால் முடியும் உயர்கனவே நீபெறுவாய்

உன்கனவை நெஞ்சில் உரமேற்று! – பின்னர்த்

தொடர்செயலால் பெற்றிடலாம் தொய்விலா வெற்றி

தடம்பதித்து வானம் தொடு.

உழவன் உழைப்பில் அழகாகிறது இந்த உலகு என்று உணர்த்துகிறது இந்த வெண்பா. 

உணர்ந்தே அளவாய் உணவைச் சுருக்கி

உணவே இலார்க்கென உண்ணக் கொடுக்கும்

உழவன் உழைப்பே உலகென்(று) உணரும்

அழகியலில் வாழ்கிறது அன்பு.

வெண்பாக்களில் பல சித்து வேலைகள் செய்து அசத்தி இருக்கிறார்கள் நம் புலவர்கள்; தமிழை உசத்தி இருக்கி்றார்கள் நம் கவிஞர்கள். இவரும் பதினைந்து சீர்களிலும் ஒரே எதுகை வர ஒரு வெண்பா எழுதி இருக்கிறார். அருணகிரிநாதர் சந்தம்போல் ஓசை நயம் துள்ளுகிறது. உள்ளத்தை அள்ளுகிறது. தமிழ் இயலன் அவர்களின்  வெண்பாத் திறனுக்கு இது ஓர் எடுத்துக் காட்டு. சந்தம் துள்ளும் அந்த வெண்பா இதுதான்.

             பெற்றாரும் உற்றாரும் பெற்றளிக்கும் பற்றுடையார்

கற்றோரின் சொற்றிறனும் குற்றமிலா நற்றுணையார்

சுற்றத்தால் உற்றிசைந்து சுற்றிடுவார் வெற்றியைத்தான்

முற்றாகப் பெற்றிடுவார் மற்று.

ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு பேராற்றல் உள்புதைந்து இருக்கும். அந்தத் திறனை ஊக்குவிப்பதும் பழக்குவதும் நம் கடமை. அவ்வாறு செய்தால் குழந்தைகள் வெற்றி பெறுவார்கள் என்று வெண்பாவால் அன்பாகச் சொல்கிறார்.

பயணத்திசை என்று ஒரு நூலைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டார் தமிழ்இயலன். அந்த நூலின் அட்டைப் படத்தில் தம் இரு பிள்ளைகளின் படங்களை ஓவியமாக்கி இருந்தார். நண்பா உனக்கொரு வெண்பாவிலும் முல்லை, பண்பு ஆகிய சொற்களின் ஊடாகத் தம் மக்கள் தமிழ்முல்லையையும் பண்பரசனையும் காவியமாக்கி இருக்கிறார். தமிழ்இயலன் அவர்களின் பிள்ளைப் பாசம், சிலப்பதிகாரக் காலத்துக் காவிரி போல் பொங்கிப் பெருகிப் பாய்கிறது. அன்பு பொங்கும் அந்த வெண்பா :

             குழந்தைகளைப் பாராட்டி அன்புசெய்; நாளை

அழகாகப் பூத்திடுமே முல்லை மலர்ச்சோலை!

நண்பர்போல் வைத்திடு நம்பிக்கை; பின்மகிழ்வாய்ப்

பண்புமனம் வீசுவதைப் பார்த்து!

நீடு வாழவும் நிறைவாக வாழவும் உடலையும் உள்ளத்தையும் பயிற்சியின் மூலம் பாதுகாக்க வேண்டும் என்கிறார். அதற்கு ஒரு வெண்பாவை அளிக்கிறார். படியுங்கள்; பயிற்சி செய்யுங்கள்.

             உலவுதல் நற்பயிற்சி உள்மூச்சை நோக்கல்

பலசெயலில் ஒன்றில் பதிந்துமனம் ஒன்றல்

நலமளித்தே வாழ்தல் நடுவுநிலை கொள்ளல்

கலங்கரை ஆக்கிடுமே காண்.

மாற்றுத் திறனாளி என்று குறிப்பிடுகிறோம். இவரோ மாற்றும் திறனாளி என்கிறார். மாற்றும் திறனாளி என்ற தலைப்பே, சிறகு ஏதும் இல்லாமலேயே சிந்தனை உயரத்தை எட்டிப் பிடிக்கிறது.

வெண்பா ஒவ்வொன்றுக்கும் அழகாகத் தலைப்பு இட்டு இருக்கிறார். ஒவ்வொரு வெண்பாவுக்கும் ஒற்றை வரியில் பொருளுரை சொல்வதுபோல் அந்தத் தலைப்புகள் உள்ளன.

ஊழல் என்பது நாட்டின் புற்றுநோய். இதை ஒழிக்க முடியவில்லை. கையூட்டு வாங்கினேன் கைது செய்தார்கள். கையூட்டுக் கொடுத்தேன் விட்டுவிட்டார்கள் என்ற நிலையில்தான் நம் ஊழல் ஒழிப்பு உள்ளது. ஊழல் வழக்கில் இருந்து விடுபெற ஆளும் கட்சிக்குத் தாவுதலும் ஓர் உத்தியாக உள்ளது. “ஊழல் வழக்கில் இருந்து விடுதலை செய்தால் உன் உண்டியலைப் பணத்தால் நிரப்புகிறேன்” என்று திருப்பதி வேங்கடவனிடம் வேண்டுகிறார்கள். கடவுளுக்கே கையூட்டுக் கொடுக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க வேறு வழி தெரியவில்லை கவிஞருக்கு. அதனால் அறம் பாடுகிறார். அந்த வெண்பா இது.

             ஆழ்ந்திட்ட ஊழல்நீ ஆணிவேர் ஆனதனால்

தாழ்ந்துதான் போனதே தாய்நாடு – சூழ்ந்துநின்று

வாழவிடாது ஏழையரை வாட்டி வதைக்கின்ற

ஊழலே நீமறைந்து ஓடு!

தடைச்சட்டம் இருந்தாலும் சாக்கடைக் குழிக்குள் ஏழைத் தோழர்களை இறங்க வைத்து வேலை வாங்குவதை இன்றும் பார்க்கின்றோம். அருவருப்பு, நாற்றம், நோய்த்தொற்று, உயிர்போக்கும் நச்சுஆவி, ஆகியவற்றிற்கு இடையே பணியாற்றுகிறார்கள். அவர்களின் கைகளில் மலர் தரச் சொல்கிறார் நம் மனிதநேயக் கவிஞர். அந்த வெண்பா...

             சாக்கடை அள்ளும் சரிநிகர் தோழனுக்குப்

பூக்கள் கொடுப்பாய்ப் புகழ்சேர்த்து! – தூக்கமிலாத்

தூயோர் பணியினைத் தூற்றியே வாழ்ந்திடும்

தீயோரைத் தீயால் திருத்து!

இந்த வெண்பாவில் சாக்கடை அள்ளும் தோழரைச் சரிநிகர் தோழன் என்று நமக்கு இணையாக உயர்த்திச் சொல்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். அழுக்கு, குப்பை, சாக்கடை அள்ளும் அவர்களைத்  தூயோர் என்று போற்றுகிற முரண் அழகையும் கவனியுங்கள். நேர்மையானவர்களைத்தாம் தூயவர்கள் என்கிறோம் நாம். சாக்கடை அள்ளுபவர்களைத் தூயவர்கள் என்கிறார் தமிழ்இயலன்.

என்ன விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நல்லதைச் செய்வோம்; நல்லதைப் பெறுவோம் என்பதை உணர்த்துகிறது இந்த வெண்பா. 

கூடும் மழையைக் குறைசொலக் கூடாதே

வாடும் நிலையும் வருந்தும் நிலையுமே

வந்திடக் காரணம் வாழ்வியல் மாந்தரிங்குத்

தந்ததையே வானம் தரும்.

எல்லாம் இங்கு மாறும். உலகம் ஒவ்வொரு நாளும் புதிதாய் உருமாற்றிக் கொள்ளும். நாமும் நல்ல மாற்றங்களுக்கு ஏற்பப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்று நாள்தோறும் புதுப்பொலிவுடன் இருக்கச் சொல்கிறார் தமிழ் இயலன். இப்படி இயங்குவதுதான் முன்னேற்றம். மாறாமல் இருந்தால் வளர்ச்சி இல்லை. இதை உணர்த்தும் இனிய வெண்பா இது. 

பதிந்திருக்கும் பூமிப் படிமங்கள் மாறும்

குதித்திங்கே ஓடுகிற காட்டாறும் மாறும்

எதிலுமே மாற்றத்தை ஏற்றுத்தான் நாளும்

உதிக்கும் புதிய உலகு

குடி, போதையால் இளைஞர் திரள் பாழ்பட்டுப் போகிறது. போதைப் பழக்கம் இல்லை என்றால் நம் குடும்பங்கள் வளமாக வாழும். போதையை ஒழித்து நல்ல பாதையை அமைக்க வழி சொல்லும் பாடல் இது. 

படித்திட்ட நற்குறளின் பாடம் மறந்தே

குடித்தே அழியுதொரு கூட்டம் – கடிந்தும்

குடியாட்சி செய்யும்  குறைபட்ட நாட்டில்

குடியாட்சி வேண்டுமெனக் கூறு.

குடியாட்சி என்ற சொல்லை இரு பொருள்களில் பயன்படுத்தி இருப்பது சிறப்பு. குடிதான் ஆட்சி செய்கிறது என்ற நிலைமாறிக் குடிமக்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்கிறார்.

மன்னிப்புக் கேட்பதை மதிப்புக் குறைவாக நினைக்கிறார்கள் பலர். ஆனால் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார் தமிழ் இயலன். 

தவறு நிகழலாம் தன்னல வாழ்வில்

தவறின் பொறுத்தருள வேண்டலே நன்று

வெறுப்பினை நீக்கிட வேறுவழி இல்லை

பொறுத்தருளக் கேட்பதைப் போன்று.

பல்லால் நாய் துரத்துவது போல் சொல்லால் துரத்தும் சிலர் உண்டு. அவர்களிடம் இருந்து விலகிச் செல் என்கிறார் இன்னொரு வெண்பாவில். ஆக... நடைமுறை வாழ்க்கையின் ஊடே, நல்வழி காட்டுகிறார் நம் கவிஞர்.

கோபுரம்போல் உயர்ந்தவர்களாக இருந்தாலும் கோபத்தால் வீழ்ந்தவர்கள் பலர் உண்டு. ஒவ்வொருவர் இடத்திலும் கோபம் இருக்கிறது. அதனை அடக்கி ஆளத் தெரிய வேண்டும். அதற்கான வழி சொல்கிறார். 

சினம்வரும் நேரம் சிறிதாய் அமைதி

உனக்கு வழங்கிடும் உள்ளொளி நன்மை

இனம்போற்றும் அந்த இனிய அமைதி

மனத்தை வெளுக்கும் மருந்து.

ஆக.... நண்பா உனக்கொரு வெண்பா என்ற இந்த நூல் நம் மனத்தைத் தூய்மை செய்கிறது. மன ஆளுமையை வளர்க்கிறது. வாழக் கற்றுத் தருகிறது.

பள்ளியில் அறவுரை வகுப்பு உண்டு. அதுபோல் இந்நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவும் அறவுரை வகுப்புதான்.

இந்த நூலுக்கு ஒரே வரியில் மதிப்புரை சொல்லலாம்.  அதற்கும் தமிழ் இயலனின் ஈற்றடி உதவுகிறது. அந்த ஒருவரி மதிப்புரை இதுதான் : “இந்த நூல், மனத்தை வெளுக்கும் மருந்து.”

ஆரஞ்சு பழம் விற்பவர் சுவைத்துப் பார்க்க ஒருசுளை தருவார். அதுபோல்தான் சில வெண்பாக்களை உங்களுக்குச் சொன்னேன். நூறு வெண்பாக்களையும் சுவைக்க நூலைப் படியுங்கள்.

வெண்பா எழுதும் வேறுசிலர், புரியாத புலவர் நடையைப் பயன்படுத்துகிறார்கள். அது இந்தக் காலத்துக்கு ஒத்துவராது. தமிழ் இயலன் அவர்களின் மொழியில் புரியாத சொல் ஏதும் இல்லை. அகர முதலியைப் புரட்ட வேண்டியதும் இல்லை. உரைநூல் தேவை இல்லை. 

அனைவருக்கும் புரியும் சொற்கள்.

யாவரும் ஏற்கத் தகுந்த கருத்துகள்.

நடைமுறைப் படுத்தக் கூடிய அறிவுரைகள்.

வானைச் சிமிழுக்குள் வைத்துக் காட்டும் சுருக்கமான கூறுமுறைகள்


இவை எல்லாம் தமிழ் இயலன் அவர்களின் வெண்பாக்களில் உள்ள சிறப்புக் கூறுகள்.


வெண்பாவை இவர் காதலிக்கிறாரா... வெண்பா இவரைக் காதலிக்கிறதா... என்று பிரித்து உணர முடியவில்லை. தலைப்புகளில் கூடத் தளை தட்டவில்லை. சிறு தவறும் தலை நீட்டவில்லை.

வாழ்வியலைச் சொல்லித் தரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய நூல் இது.

பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியப் பட்டப் படிப்புகளில் பாடமாகச் சேர்க்கத் தகுதி வாய்ந்த நூல் இது.

நூலை எழுதிய கவிஞர் தமிழ் இயலன் அவர்களுக்கு வாழ்த்து மாலைகள் நூறு சூட்ட வேண்டும். அச்சாரமாக ஒன்று சூட்டுகிறேன். 

நூறென வெண்பாக்கள் நூல்முழுதும் நூற்றவரே

சாறென நம்தமிழைத் தந்தவரே – ஆறென

ஓடும் கருத்துகளில் உன்மேன்மை நான்அறிந்தேன்

நாடும் உனைப்புகழும் நன்று.