Saturday, 22 June 2019

ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்...




















ஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்....

கோ. மன்றவாணன்

நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகரில் உள்ள வீட்டில் எழுத்தாளர் ஜெயமோகன் வாழ்ந்து வருகிறார். 14-06-2019 அன்று இரவு தோசை வார்த்து உண்ணலாம் என்றெண்ணிய அவர், அருகில் உள்ள வசந்தம் மளிகைக்கடைக்குச் சென்று மாவு பாக்கெட்டுகள் வாங்கி வந்துள்ளார். அந்த மாவு கெட்டிருந்தது. கெடுநாற்றம் வீசியது. அந்த மாவுப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு அந்தக் கடைக்குச் சென்று மாவு கெட்டிருக்கு என்று சொல்லி உள்ளார். மாவு பாக்கெட்டைத் திரும்ப வாங்க மறுத்த அந்தக் கடையின் அம்மையார், ஜெயமோகனை வசைபாடி உள்ளார். அதனால் அந்தப் பாக்கெட்டை அங்கேயே போட்டுவிட்டுக் கிளம்ப எத்தனித்தவரை, கடையின் உரிமையாளரும் அந்த அம்மையாரின் கணவருமான ஒருவர், ஜெயமோகனைத் தாடையில் அறைந்து கீழே தள்ளி உள்ளார். உதைத்தும் அடித்தும் உள்ளார்.
இச்செய்தியைக் கேட்டவுடன் எனக்கு வலித்தது. அந்த அறை ஒவ்வொரு தமிழ்எழுத்தாளரின் கன்னத்தில் விழுந்ததுபோலவே நான் கருதுகிறேன். உலகம் அறிந்த அந்த எழுத்தாளரை உள்ளூர் அறிந்திருந்தால் இந்த இழிவு ஏற்பட்டிருக்காது. தகுதிவாய்ந்த எழுத்தாளர் யாரும் தன்னை ஊரில் முன்னிறுத்திக் கொள்வதில்லை.
கெட்ட மாவுப் பாக்கெட்டுகளை வேண்டுமென்றே விற்பது தொழில் அறமன்று. எது கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு போக வேண்டும் என்பது நம் தலையெழுத்து அல்ல. வணிகத்தில் வாடிக்கையாளரே முக்கியமானவர். அவரே நம் எஜமானர் என்று காந்தி அடிகள் சொன்ன மணிமொழியை எந்த வணிகரும் ஏற்பதில்லை. விற்ற பொருட்கள் வாபஸ் வாங்கப்பட மாட்டாது என்று விற்பனை பில்களில் அச்சிட்டிருப்பார்கள். நம்முடைய நுகர்வோர் சட்டப்படி அந்த வாசகமே ஏற்புடையதல்ல.
சில கடைகளில் கெட்டு நாறிய பொருட்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள். வீட்டுக்கு வந்தபின்தான் அவற்றின் குணம் மணம் எல்லாம் தெரி்யும். அழுகிய பொருட்களைக் கலந்து விற்பவர்களும் உண்டு. நாம் பணம் கொடுத்து வாங்குகிறோம். சரியான பொருட்களை வழங்க வேண்டியது வணிகர்களின் கடமை. நேர்மை தவறியவர்களே வணிகத்தில் பெருமுதலாளிகளாக- சமூகத்தில் பெரிய மனிதர்களாக உயர்வதையும் பார்க்க முடிகிறது.
காலவரம்பு கடந்த, கெட்டுப்போன பொருட்களை விற்பது சட்டப்படிக் குற்றம். அந்தப் பொருட்களைத் திரும்பக் கொடுத்தால் அதைப் பெற்றுக்கொண்டு சரியான பொருட்களைத் தரவேண்டும் அல்லது அந்தப் பொருட்களுக்குரிய தொகையைத் திருப்பித் தந்துவிட வேண்டும். இதுவே நியாயமான வணிக முறை.
“சிறிய மாவுப் பாக்கெட்டுக்காகப் பெரிய எழுத்தாளர் மளிகைக்கடைக்காரரிடம் மல்லுக்கட்டி நிற்கலாமா? அற்ப விஷயத்துக்காக அந்தக் கடைக்குச் சென்று நியாயம் கேட்கலாமா? விட்டுவிட்டுப் போவதே... கண்டும் காணாமல் போவதே நம் கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்கிற வழிமுறை. இது தெரியவில்லையே இந்த ஜெயமோகனுக்கு” என்று எண்ணுவோரும் உள்ளனர். குற்றம் சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும், குற்றம் குற்றமே. அதைக் கண்டுகொள்ளாமல் போவதாலேயே குற்றங்கள் பெருகி, அவையே தர்ம நியாயங்களாக  வேடம் தரிக்கின்றன.
நுகர்வோர் விழிப்புணர்வின்படி நியாயம் கேட்டதற்காக எழுத்தாளர் தாக்கப்பட்டுள்ளார். இன்றைய உலகில் எந்த இடத்திலும் நியாயம் உதைபடுகிறது.
தமிழில் உள்ள இன்றைய எழுத்தாளர்களில் உச்சப் புகழில் இருப்பவர் ஜெயமோகன். நட்சத்திர நடிகர்கள் பங்கேற்கும் பெருஞ்செலவு கொண்ட திரைப்படங்களுக்கு அவர் திரைக்கதை வசனம் எழுதி உள்ளார். கமல், ரஜினிகாந்த் போன்ற பெரு நடிகர்களோடு நட்புறவு கொண்டவர். இந்தியா முழுவதும் இருக்கின்ற இலக்கிய ஆளுமைகளோடு நெருங்கிய உறவுடையவர். எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கே அவருக்கென ரசிகர் கூட்டம் உண்டு. இந்தியாவின் பல அரசியல் தலைவர்களுடனும் அவருக்கு பழக்கமுண்டு. இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்க முன்வந்த போது அதைத் தவிர்த்தவர்.  
தமிழகத்தின் எந்த ஊருக்குச் சென்றாலும் இவரின் பின்னால் அணிவகுக்கும் வாசகர்படை உண்டு. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒன்றை நிறுவி, ஆண்டுதோறும் பெரியதோர் இலக்கியத் திருவிழாவை நடத்தி வருகிறார். மூத்தப் படைப்பாளிகளுக்கு விருது வழங்குகிறார். இளம்படைப்பாளிகளை ஊக்குவிக்கிறார். பிறமொழிப் படைப்பாளிகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். இலக்கிய விவாதங்கள் தொடர்பாக எந்தக் கேள்வி எழுந்தாலும் அவருடைய இணையத்தளத்தில் அதுபற்றி ஒரு கட்டுரையாவது இருக்கும். அவரளவு வாசித்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற அளவில் வாசிப்பர். வாசிப்பை நேசிப்பவர்.
இவரின் இலக்கிய படைப்புகள் யாவும் உலகத்தரம் வாய்ந்தவை. எந்தப் பெரும் விருதுக்கும் தகுதியானவர். தமிழ் எழுத்தாளர்களில் ஜெயகாந்தனுக்குக் கிடைத்த கம்பீரம், தற்காலத்தில் ஜெயமோகனுக்குக் கிடைத்துள்ளது.
இவருக்கு எந்த அளவு ஆதரவுகள் உண்டோ, அதற்குச் சரிசமமாக எதிர்ப்புகளும் உண்டு. கறாரான விமர்சனங்களை அவர் முன்வைப்பதால் எதிர்ப்புகளை அவர் நேர்கொள்ள வேண்டியதாகிறது. அவருடைய இலக்கியப் படைப்புகளுக்கு நான் ரசிகன். ஆனால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் முரணானவன்.  அவர் வெறுக்கின்ற திராவிட இயக்கத்தில் நான் பற்றுள்ளவன். எனினும் அவருடைய விஷ்ணுபுரம் இலக்கியத் திருவிழாவுக்கு 2014ஆம் ஆண்டுமுதல் சென்று வருகிறேன். கலந்துரையாடல்களில் பங்கேற்றும் வருகிறேன்.
அதே நேரத்தில் ஜெயமோகனை விரும்பாதவர்கள், அவர் அடிவாங்கிய தகவலைக் கேட்டு ஆனந்தப்பண் பாடுவது, தமிழ் நாகரிகம் அல்ல. அரசியல், மதம் சார்ந்து அவருடைய கொள்கைள் பலருக்கு ஒவ்வாமை தந்தாலும், அவர் தமிழின் புகழை உயர்த்தும் எழுத்தாளர். கருத்து வேறுபாடுகள் இருந்தால் கருத்துகளைத்தான் எதிர்கொள்ள வேண்டும். கருத்துரைத்தவரை  நண்பராகவே அணைத்துக்கொள்ள வேண்டும். எந்தக் காலத்திலும் இருவேறு கருத்துகளால் நிரம்பியதே இந்த உலகம்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த எழுத்தாளருக்கு உள்ளூரில் அவமரியாதை என்கின்ற போது இதயம் வலிக்கிறது. சமூகத்தில் எந்த அளவு மரியாதை எழுத்தாளருக்கு உள்ளது என்பதை அறிகிற போது வெட்கித் தலைகுனிய வேண்டியதாகிறது. எழுத்தாளருக்கு வெளியூரில் மாலை மரியாதை விருது விழா எல்லாம் கிடைத்தாலும் உள்ளூரில் அவர்முகம் தெரியவில்லை என்றால் என்ன செய்வது?
பல பெரிய அறிஞர்களை, எழுத்தாளர்களை, அவர்களுடைய சொந்த ஊரில் விசாரித்தால் யாருக்கும் தெரிவதில்லை. அஞ்சல்காரருக்குக் கூட அவர்பெயர் நினைவுக்கு வருவதில்லை.
ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரில் உள்ள எழுத்தாளர் கொண்டாடப்பட வேண்டும். ஊழல் செய்கிற ஒரு கவுன்சிலருக்குக் கொடுக்கின்ற மரியாதையைக்கூட  எழுத்தாளருக்குக் கொடுப்பதில்லை.
எழுத்தாளர் இறந்தபிறகு அவருடைய சொந்த ஊரில் சிலை வைக்கக்கூட வேண்டாம். குறைந்த பட்சம் அவர் வாழுகின்ற காலத்தில் அவரை அவமரியாதை செய்யாது இருத்தலே நற்சமூக மாண்பு.
நன்றி :
திண்ணை, ஜுன் 16, 2019

Wednesday, 19 June 2019

தண்ணீர் தண்ணீர்















நீர்நிரப்பிய காலத்தை என்றோ மறந்துபோய்
சூரியத்தீயில்
கரிந்துகொண்டிருக்கிறது தீயணைப்பு வண்டியொன்று

ஏரிகாக்கும் ராமருக்கு வேலை பறிபோய்க்
கரிகாக்கும் ராமர் வேலைக்கு
விண்ணப்பம் எழுதிக்கொண்டிருக்கிறார்

மண்ணில் விழும்முன்னே மழைத்துளியைப் பருகிவிடும்
சக்கரவாகப் பறவைகள்
கூவம் ஓடிய தடம்தேடிக் கொத்துகின்றன

ஆறில்லாத சென்னை மாநகரம் நேற்று
நீரில்லாத சென்னை மாநகரம் இன்று
ஆளில்லாத சென்னை மாநகரம் நாளை

கூட்டமாய் வரும் மேகங்களைக் காணாமல்
கொப்பளித்துக் கிடக்கிறது வானம்

கண்ணீரைக் குடிக்கவும்
தயாராகிவிட்டன வறண்ட நாவுகள்

கோ. மன்றவாணன்

Saturday, 15 June 2019

சுய தரிசனம்


விண்ணும் மண்ணும் தெரிகிறது உன்
விழிவாசலில்
உன்னை அறிந்ததுண்டா
ஒரு நாளேனும்... ஒரு நொடியேனும்...?

உருவத்தை அழகாக்குகிறாய்
கண்ணாடி பார்த்து
உள்ளத்தை அழகாக்க எதன்
முன்னாடி நிற்பாய்?

உன்னை யாரென்று
உனக்குக் காட்டும்
வாழ்வில் வரும் இடர் ஒவ்வொன்றும்

உன்
பலத்தை அறிந்ததுண்டா?
பலவீனத்தைப் புரிந்ததுண்டா?
இரண்டையும் எடைபோட்டால்
எந்தப்பக்கம் சாய்வாய் நீ?

கோ. மன்றவாணன்

சித்திரம் பேசுதடி





















திரையில் எழுந்தருளிய
திருமகள்
கொட்டுகிறாள்
கூடமெங்கும் பொற்காசுகளை...

இன்று அமாவாசைதான்
என் அறைக்குள்
பூரண நிலவு

தண்ணீர்ப் பஞ்சம் நாடெங்கும்
அருவி
ஆரத் தழுவுகிறது என்னை

புன்னகைக்கிறாள்
பூவிழி சிமிட்டுகிறாள்
கவிதை வாசிக்கிறாள்
கண்ணாடி வேலியை ஊடுருவி

சிந்திய வண்ணத் திட்டுகளைத்
தொட்டேன்
சிறகு விரித்துப் பறந்தன

கிளையில் அமர்ந்து
கிளிகள் பேசுகின்றன
உயிர்கொடுத்த
ஓவியனைப் புகழ்ந்தபடி...

கோ. மன்றவாணன்


Monday, 18 March 2019

தன்னளவில் அவரொரு நூலகம்



   
தன்னளவில் அவரொரு நூலகம்
(பேராசிரியர் சுந்தர சண்முகனார்)

கோ. மன்றவாணன்

டலூர் நகராட்சியில் புதுவண்டிப்பாளையம் என்ற பகுதி உள்ளது. அதைப் பண்டிதர் பாளையம் என்றும் புலவர் பாளையம் என்றும் அழைக்கக் கேட்டிருக்கிறேன். புலவர்களே நிறைந்த பகுதியாக ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது. என்னுடைய தமிழாசிரியர்கள் தண்டபாணி, சம்பந்தனார் ஆகியோரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே. அந்தப் பகுதியில்தான் அப்பர் கரையேறிய இடமும் உள்ளது. அத்தகைய தமிழ்மணந்த ஊரில் 13-07-1922 அன்று பிறந்து வளர்ந்தவர் சுந்தர. சண்முகனார். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்பேரறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஞானியார் மடத்தில் ஞானியார் அவர்களிடமே தமிழ்பயின்றவர். திருவையாறு அரசர் கல்லூரியில் படித்து வித்துவான் ஆனார். பிறகு மயிலம் சிவஞான பாலைய அடிகள் தமிழ்க்கல்லூரியில் தன் பதினெட்டாவது அகவையிலேயே விரிவுரையாளராகச் சேர்ந்து தமிழ்கற்பித்தார்.  அதன்பின் புதுவைக்கு வந்து பெத்தி செமினார் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மேலும் புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் தமிழ்விரிவுரையாளராகப் பணியாற்றினார். அவரிடத்தில் தமிழ் பயின்றவர்கள் பலரும் தமிழாசிரியர்களாக உயர்ந்து தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்.

புதுவையிலோ கடலூரிலோ ஏதோ ஒரு நிகழ்வில் அவரை நான் பார்த்திருக்கிறேன். அகன்ற முகம். பருத்த உடல். அடிக்கடிக் கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருந்தார். மேலும் முகத்தசையும் மேலேறி இறங்கியபடி இருந்ததையும் பார்த்தேன். மூளைக்கட்டிக்குக் கதிரியக்க சிகிச்சை செய்துகொண்டதால் அவருடைய கண்நரம்புகள் பாதித்தனவாம். அதனால்தான் அந்த உடல் ஒத்துழையாமை. ஒளியைப் பார்த்தால் கண்கூசும் நிலை. அதனால் எப்போதும் கருப்புக்கண்ணாடியை அணிந்தார். ஒலியைக் கேட்பதிலும் அவருக்கு ஒவ்வாமை இருந்தது. கடிகாரத்தின் டிக்டிக்டிக் ஒலியையும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிற்காலத்தில் பக்க வாதத்தால் ஒரு கை, ஒரு கால் முடங்கியும் வாய் பேச முடியாமலும் அல்லல்பட்ட காலத்திலும் ஒரு காகிதத்தைத் தன்மார்பில் வைத்துக் குறிப்பெழுதுவாராம். உடல் இயங்க மறுத்த போதும் ஓயாமல் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார்.

இவர் எழுதிய முதல்நூல் “வீடும் விளக்கும்” ஆகும். இது 1947ல் வெளியானது. மறைவெய்திய 1997 வரையிலும் தொடர்ந்து ஐம்பது ஆண்டுக் காலமாக நூல்கள் எழுதித் தமிழுக்கும் உலகுக்கும் பயன்சேர்த்துள்ளார். 1946 ஆம் ஆண்டில் அவருடைய மூளையில் கட்டி ஏற்பட்டுப் பெருந்துன்பத்துக்கு ஆளானார். வாழ்நாள் முழுவதும் அந்தப் பெருவலியைச் சுமந்துவந்தார். இந்நிலையிலும் 69 நூல்களை எழுதிக் குவித்துள்ளார் என்றால் அந்த அருஞ்செயலை யாரும் வியக்காமல் இருக்க முடியாது. அவருடைய நூல்கள் அனைத்தும் ஆராய்ச்சி மிக்கவை. அவ்வளவு எளிதில் எழுதிவிட முடியாது. இன்றைய இணையதள வசதிகள் அன்றைக்கு இல்லை. தரவுகள் கிடைப்பதரிது. தாமாகவே முயன்று தேடிக் கண்டடைய வேண்டும். நாள்பல செலவாகும். கைப்பட எழுத வேண்டும். அவருடைய வீட்டுக்கருகில் வாழ்ந்த அவருடைய தோழர் ஒருவர் குறிப்பிட்டார். “இரவில் ஒரு மணியோ இரண்டு மணியோ மூன்று மணியோ வெளியில் வந்து பார்த்தால் சுந்தர சண்முகனார் வீட்டறையில் மின்விளக்கு எரிந்துகொண்டிருக்கும். அவர் விழித்திருந்து எழுதிக்கொண்டிருப்பார்.” தீராத நோயின் வேதனையைத் தன் எழுத்துகளால் தணித்துக்கொண்டாரோ.....

அவர் எழுதிய  கெடிலக்கரை நாகரிகம் என்ற நூல் அவருடைய ஆராய்ச்சிக்கும் களஆய்வுக்கும் சான்றாகும். உலகின் மிகப்பெரும் ஆறுகளுக்குக்கூட இப்படியொரு வரலாறு எழுதப்படவில்லை. கெடிலம் என்ற சிற்றாறுக்குச் சிறப்பான வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. ஆறு தோன்றிய இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம்வரை நேரடியாகச் சென்றும் ஆய்வு செய்தும், இலக்கிய ஆதாரங்களைத் திரட்டியும், முன்னோர்களை நேர்காணல் செய்தும் அந்த நூலை யாத்திருப்பார். கடலூரில் உள்ள அப்பர் கரையேறிய இடத்தில் கடலும் இல்லை; நதியும் இல்லை. அப்படியானால் அவர் எப்படி அந்த இடத்தில் கல்தூணில் மிதந்து வந்து கரையேறி இருப்பார்? இந்த ஒரு கேள்விக்கு அவர் எடுத்து வைக்கும் ஆதாரங்களும் விளக்கங்களும் அறிவின் உச்சம். 650 பக்கங்கள் கொண்ட இப்பெரிய ஆய்வு நூலில் 51 படங்கள் இடம்பெற்று மெய்விளக்கச் சான்றுகளாக உள்ளன. இந்த நூலை நம்கால எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் வியந்து பாராட்டியிருக்கிறார். உடல்நலம் குன்றிய நிலையிலும் இப்படி ஒரு நூலை எப்படி எழுதினார் என்று  பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழ் அகராதிக் கலை என்ற நூலைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். தமிழ்நூல் தொகுப்புக் கலை, தமிழ்நூல் தொகுப்புக் கலைக்களஞ்சியம் ஆகிய பெருநூல்களும் அவருடைய திறமைக்குச் சான்றானவை ஆகும். அய்யாவின் ஆய்வுத்திறனையும் அரிய உழைப்பையும் கண்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்கள், தொகுப்பியல் துறைக்குத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணிஅமர்த்தினார்.

திருக்குறளுக்குப் பலரும் உரைஎழுதிக் குவித்துள்ளனர். இவரோ மிகப்பெரும் ஆராய்ச்சியோடு உரையெழுதிப் பல அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றார். இவருடைய திருக்குறள் உரையைப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பெரிதும் போற்றி இருக்கிறார். பொருளிழப்பைப் பொருட்படுத்தாமல் திருக்குறளுக்காகவே 1948 முதல் 1958 வரை திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் ஆகிய பெயர்களில் மாதமிருமுறை ஆய்விதழ்களை  நடத்தி வந்திருக்கிறார். 15-01-1991 அன்று அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் திருவள்ளுவர் விருது வழங்கிச் சுந்தர சண்முகனாரைப் பெருமைப்படுத்தியது பொருத்தமான சிறப்பாகும். திருக்குறள் நெறித்தோன்றல், குறளாயச் செல்வர் போன்ற பட்டங்களும் அவருடைய திருக்குறள் பணியைப்போற்றி வழங்கப்பட்டன.

புதுவையில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் என்ற அமைப்பை நிறுவி, மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் யாப்பிலக்கணம் உள்ளிட்ட இலக்கணங்களைச் சொல்லித்தந்ததோடு தமிழ்இலக்கியங்களைச் சுவைபட உரைத்திருக்கிறார். அதன்மூலம் யாப்புப் பிசகாமல் கவிஎழுதும் கவிஞர் கூட்டத்தை உருவாக்கினார். திருக்குறள் வகுப்புகளையும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்.

சைவக்குடும்பத்தில் பிறந்த இவர், புத்தர் காப்பியம் படைத்து, அதற்காகப் புதுவை அரசின் பரிசையும் பெற்றுள்ளார். மணிமேகலைக் காப்பியத்தில் வரும் அறவணன் என்ற புத்த துறவியின் பெயரையே தன் மகனுக்குச் சூட்டினார் என்றால் புத்த தத்துவத்தில் அவர் ஆழ்ந்த ஞானம் கொண்டிருக்கிறார் என அறிய முடியும். மேலும் புத்தர் பொன்மொழி நூறு என்ற நூலை விருத்தப்பாக்களில் வடித்துள்ளார்.

புதுச்சேரியில் நடந்த தமிழ்நிகழ்ச்சி ஒன்றில் திருப்பதியில் உள்ள வேங்கடவன் முருகனே என்று பேசினார். அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டார் கூட்டத்தில் இருந்த சித்தன் என்றொரு புலவர். அருகிலிருந்த தி.வே. கோபாலய்யர் என்ற தமிழறிஞர், “ஆதாரம் இருந்தால்தான் சொல்லி இருப்பாரே” என்று பகடி செய்தார். அதே மேடையில் ஆதாரங்களோடு ஒரு நூலையே எழுதுகிறேன் என்று சூளுரைத்தார். அதன்படியே “இலக்கியத்தில் வேங்கட வேலவன்” என்ற ஆய்வு நூலை எழுதினார். திருப்பதிக்குச் சென்று தீர ஆய்வு செய்தும் அந்நூலைப் படைத்துள்ளார்.

தமிழை விரும்பிப் படித்த சுந்தர சண்முகனார், ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார். மலர்மணம் என்ற தானெழுதிய தமிழ்ப்புதினத்தைத் தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, ஆங்கில இலக்கியத்துக்குச் சிறப்புச் சேர்த்துள்ளார்.           
தமிழ் – இலத்தீ்ன் பாலம், தொல்திராவிட மொழி கண்டுபிடிப்பு ஆகிய மொழியியல் நூல்களை ஆராய்ச்சி அறிவோடு எழுதி இருக்கிறார்.

தமிழறிஞர் சுந்தர சண்முகனார் தன்நூல்களில் எடுத்துரைக்கும் வாதங்களைப் படித்தபோது, அவருக்குள் ஒரு தேர்ந்த வழக்கறிஞர் இருப்பதை உணர்ந்தேன். இரு தரப்பு வாதங்களையும் எடுத்து வைத்து, அதற்கு தானே நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து, எது மெய்யெனக் கண்டறிந்து சொல்லும் ஆற்றலையும் அறிவையும் ஆராய்ச்சி நேர்மையையும் அவருடைய நூல்களில் காணலாம்..

மக்கள் நன்முறையில் வாழ வேண்டும் என்பதற்காகவும், வாழும் வழி, பணக்காரர் ஆகும் வழி, இன்ப வாழ்வு போன்ற வாழ்வியல் நூல்களையும் எழுதிப் பலரின் வாழ்வுக்கு வழிகாட்டி உள்ளார். மேலும் வரலாறு, மொழியியல், அறிவியல், தத்துவம், மதம், உளவியல், புவியியல் சார்ந்த நூல்களை எழுதி அவருடைய பல்துறை ஆற்றல்களை வெளிப்படுத்தி உள்ளார். குழந்தைகளுக்காகவும் நூல்சில படைத்துள்ளார். தன்னளவில் அவரே ஒரு நூலகமாகத் திகழ்ந்தார்.

தமிழைத் தவறின்றி எழுதுவோர் யாருமில்லை என்ற அளவுக்கு இன்றைய தமிழின் நிலை உள்ளது. ஆனால் அந்தக் காலத்திலேயே தமிழைப் பிழைமலிந்து எழுதியவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களும் தமிழைத் தவறின்றி எழுத வேண்டும் என விரும்பினார். அதற்காக இலக்கண நூலொன்றை எழுதினார். அந்த நூலுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பாவேந்தரிடம் அறிவுரை கேட்டார். எழுத்தாளர் துணைவன் என்ற பெயரைச் சூட்டலாம் என்றார் பாவேந்தர். அன்றைய எழுத்தாளர்களே தமிழைத் தவறாக எழுதியதைப் பொறுக்க மாட்டாமல்தான் அந்தப் பெயரை வைத்திருப்பார் பாவேந்தர்.  

எங்கே தமிழ்பயிலத் தொடங்கினாரோ அதே ஞானியார் மடம் பிற்காலத்தில் அவருக்கு விழாநடத்தி ஆராய்ச்சி அறிஞர் எனும் விருதை வழங்கியது. தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய், அந்த மகனை உச்சி முகர்ந்து மகிழ்வதுபோல் அந்த விழா அமைந்தது.

பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்ட பாப்பம்மாள் வனச்சோலையில் தன்னுடலை அடக்கம் செய்ய வேண்டுமென்று தன் இறுதிக் காலத்தில் விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படியே 30-10-1997 அன்று பாவேந்தரின் அருகிலேயே சென்றடைந்தார்.

“எனக்கு எட்டு வயது இருக்கும்போதே சுந்தர சண்முகனாரைத் தெரியும். அந்தக் காலத்தில் அவர் ஒரு புரட்சியாளர்.”  என்று புகழ்ந்தார், அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எழுத்தாளர் பிரபஞ்சன்.

திண்ணை 18-03-2019

Friday, 1 March 2019

தாமரை
















ஒரு குளம்
ஆயிரம் முகங்கள்
தாமரைகள்

குளத்தில் இறங்கி நீராடினாள்
கோதை
அறிய முடியவில்லை
ஆயிரத்தில் அவளை

சூரியனின் சுடுவிரல்கள் குளிர்கின்றனவாம்
மலர்முகம்
வருடுகையில்

கதிரவன் வரவுக்குக்
கதவு திறந்து வைத்த தாமரை
அவன் போனதும் சாத்திக் கொண்டாள்

வெண்தாமரை கலைமகளுக்கும்
செந்தாமரை திருமகளுக்கும்
சொந்தமெனச் சொன்ன போது...
அலைவட்டம் போட்டு மெல்லச் சிரித்தது
தடாகம்

தரைகுளிர நீர்தெளித்துத்
தாமரைக் கோலம் போட்டாள்
வண்டுகள் மொய்க்கின்றன

-கோ. மன்றவாணன்

யாரோவாகிப் போன அவள்






















வரும் பாதையில்
கொடிமலர் என அசைந்து புன்னகைத்தேன்
பார்த்த மாதிரியே  தெரியவில்லை என்னை

நூலகக் கூடத்தில்
எதிரில் அமர்ந்து அவளை வாசித்தேன்
புத்தகத்தை மூடிவைத்துப் போனாள்

உணவகத்தில்
உட்கார்ந்தேன் அவளருகே
குப்பைக் கூடையில் கொட்டிச் சென்றாள்
அன்றருளிய அமுதை

அம்மன் சந்நிதியில் காத்திருந்தேன்
அவள்வணங்கும் பொழுதறிந்து
வெளிக்கும்பிடு போட்டு விரைந்தாள் மறைந்தாள்
இரவலர்க்குப் பிச்சையிட்டு.

தொடர்வண்டியில் ஏறிச் சென்றாள்
தண்டவாளத்தில் நசுங்கிக் கிடக்கிறேன்
சோடா பாட்டல் மூடியாய்

முன்பொருநாள்
அவள்மடியில் நான்கிடந்து குழல்கோதிவிட்ட
அந்தக் காட்சி மட்டும் ஒட்டிக்கிடக்கிறது
எல்லாத் திசைகளிலும்

-கோ. மன்றவாணன்

நீர்ப்பரப்பில் மீன்


















நீர்ப்பரப்பாய் மட்டுமே இவ்வுலகு உண்டென
நீந்திக்கொண்டே இருக்கின்ற மீன்
கண்டதில்லை
கரை என்ற ஒன்றை

கரை தொடுகையில்
நிரந்தரமாக அசையாமல் போய்விடும்
செதில்களும்
திமிர்த்தனமான வாலும்

கோட்டுக்குள் சுற்றவிடுகிறது வாழ்க்கை
கோடு தாண்டும் போது...

கோ. மன்றவாணன்


Thursday, 28 February 2019

நிகழ்ந்தும் நிகழாத...


















நிகழ்ந்தும் நிகழாத.....

கோ. மன்றவாணன்

ஜெகதீசன் வேகமாக வந்து என் கடைவாசலில் தன் வாகனத்தை அவசர அவசரமாக நிறுத்திய போது ஸ்டாண்ட் சரியாக விரியாததால் வாகனம் கீழே சரிந்தது. அதை அவர் கவனிக்காமல் படியேறி என் கடைக்குள் வந்தார். கண்கள் அழுது அழுது சிவந்து போனதுபோல் தெரிந்தது. “என்னாச்சு ஜெகதீசுக்கு” என்று என்மனம் பதற, நான் இருக்கைவிட்டு எழுந்து அவரை நோக்கி வந்து, “என்ன ஜெகதீஷ்... ஒரு மாதிரி இருக்கீங்க? என்ன நடந்துச்சு?” என்று கேட்டேன்.

அதற்கு அவர் பதில் சொல்லாமல் “வாங்க ஸ்கூலுக்குப் போலாம்” என்று விரைவுப்படுத்தியதோடு கீழே விழுந்துகிடந்த வண்டியை நிமிர்த்தி ஸ்டார்ட் செய்தார். நான் பின்னிருக்கையில் அமர்ந்தேன். வழக்கத்தைவிட அதிவேகமாக வண்டியை ஓட்டினார். அந்த வேகத்தில் நான் கீழே விழுந்துவிடுவேனோ என்று அச்சமாக இருந்தது. ஆனால் அதை அவரிடத்தில் தெரிவிக்கவில்லை. அவர் பையனும் என் பையனும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அவருடைய அவசரத்தைப் பார்க்கும்போது அவர் பையனுக்கு ‘ஏதோ ஆயிடுச்சு” என்று மட்டும் மனசு சொல்லியது. 

கம்மியம்பேட்டைப் பாலம் வழியாகச் சென்று, செம்மண்டலத்தில் கிழக்குப் புறமாகத் திரும்பினார். எதிரே வேகமாக வந்த டவுன் பஸ் டிரைவர் சாமர்த்தியமாப் பிரேக் அடித்து நிறுத்தியதால் நாங்கள் மோதாமல் நிலைதடுமாறி வாகனத்தோடு சாய்ந்தோம். “யோவ் அறிவிருக்காயா? நீ வந்து மோதிடுவே. போலீசுல பெரிய வண்டின்னு என் பேர்ல வழக்குப் போடுவாங்க. நான்தான் ஜாமின் கீமின்னு செலவு பண்ணனும். வருஷக் கணக்கா கோர்ட்டுக்கு நடக்கணும்” என்று கோபமாகப் பேசினார். பஸ்ஸூக்குள் இருந்தவர்களும் எங்களைப் பார்த்துத் திட்டினார்கள். என்ன திட்டினார்கள் என்று இப்போது நினைவுக்கு வரவில்லை. 

பரபரப்பிலும் பதற்றத்திலும் வாகனத்தை ஓட்டிய தன்மேல்தான் தவறு என்பது ஜெகதீசனுக்குத் தெரியாமல் இல்லை. எங்கள் மனக்கவலையில் அந்த வசவுகள் எதுவும் எங்களுக்குள் இறங்கி இரசாயன மாற்றம் ஏதும் செய்யவில்லை. மீண்டும் வாகனத்தைத் தூக்கி நிறுத்தி ஸ்டார்ட் செய்து புறப்பட்டோம். கடலூரின் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றான ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நுழைவுக் கேட்டின்மேல் மோதிவிடுவதுபோல் போய்நின்றது ஜெகதீசன் ஓட்டிய வண்டி. “தமிழ்ச்சங்கத்துல பொறுப்பாளர்களாக இருந்துட்டுப் பிள்ளைகள இங்கிலீஷ் மீடியத்துல படிக்க வைக்கறீங்களே” என்று எங்களைப் பிறர் குத்திக்காட்டுவது நினைவுக்கு வந்து போனது. 

எங்கள் அவசரத்தையும் பதற்றத்தையும் கவனித்த வாட்ச்மேன் வேகமாகக் கதவைத் திறந்து உள்ளே அனுமதித்தார்.

பள்ளி முதல்வர் நடராசன் எங்கள் பதற்றத்தைப் புரிந்து உட்காரச் சொன்னார். நாங்கள் உட்காரவில்லை.

“சார், பையனப் பாக்கணும்”
“இரண்டு பேர்ல யாருடைய பையன்?”
“ரமேஷ் சார் பையன் பாரத்” என்றார் ஜெகதீசன்

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. வயிற்றின் வலப்புறத்தின் உள்ளிருந்து அஞ்சாறு தவளைகள் துள்ளிக் குதித்து ஓடுவன போல் இருந்தது. கைவிரல்களின் நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை. சட்டென்று முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் வியர்வைப் பொங்கியது. பயம் என் குரலைக் கம்மி செய்தது. கணீரென்று மேடையில் பேசிய என்குரல் பயத்தால் ஒடுங்கிப் போனது. பேச முயன்ற போது ஒலிக்குப் பதிலாகப் பெரும்பாலும் காற்றுதான் வந்தது. பள்ளி முதல்வர் அங்கிருந்த ஆசிரியைகளிடம் சொல்லி என்னை ஓர் அறைக்கு அழைத்துப்போய் அமர வைத்தார்கள். தண்ணீர் கொடுத்தார்கள். குடிக்க மறுத்துவிட்டேன். ஏசி போட்டார்கள். எனினும் என் வியர்வை அடங்கவில்லை.

சுதாகரித்து ஜெகதீசனிடம் கேட்டேன். ”என்னாச்சு என் மகனுக்கு?”
“எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்றாங்க”

அய்யோ என்று அலறுவது தெரிகிறது. ஆனால் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. கண்ணீர் மலமலவென வழிந்தது. சேரில் இருந்து சரிந்து கீழே விழுந்தேன்... புரண்டேன். அந்தத் தகவல் பொய்யாகி விடாதா என்று கடவுளிடம் வேண்டினேன். செடல் போட்டுக்கொள்வதாக பஸ் ஸ்டாண்ட் நாகம்மாளிடம் உறுதி சொன்னேன். ஒரு வயது இருக்கும்போது அவனுக்கு இதயத்தில் ஓட்டை. சென்னைக்குச் சென்று மருத்துவர் செரியன் அவர்களிடம் காட்டினேன். அவர் சிகிச்சை அளித்தார். அந்த இதயக் கோளாறுதான் மறுபடியும் ஏற்பட்டு இப்படி ஆகிவிட்டதோ என்று கருதிய போது, என் இதயத்தில் ஈட்டிகள் இறங்கின.

சற்று நேரத்தில் பாரத் வகுப்பறையில் இருந்து அழுதபடியே ஓடி வந்தான். உடன் ஒரு ஆசிரியரும் அவன் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து ஓடி வந்தார்.

“என் டாடிக்கு என்னாச்சு” என்ற பயத்தில் வந்தவனைப் பார்த்ததும் தளர்ந்து சுருண்டு கிடந்த எனக்கு எப்படித்தான் தெம்பு வந்ததோ, பட்டென எழுந்து அவனைக் கட்டிப்பிடித்துத் தூக்கி முகம் தலை எல்லாம் முத்தம் இட்டேன். கண்ணீரும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு மனோபாவத்தில் உணர்ச்சியின் உச்சி முகட்டில் நான் இருந்தேன். அந்த அனுபவத்தை எந்த எழுத்தாளராலும் விவரிக்க முடியாது என்றுதான் நம்புகிறேன்.. 

இதைப் பார்த்ததும் ஜெகதீசனுக்கும் மகிழ்ச்சிதான். கூடவே ஒரு தர்ம சங்கடமும் பிடுங்கித் தின்னும் அவமானமும், தீர விசாரிக்காமல் எனக்கு அதிர்ச்சியைத் தந்துவிட்ட தத்தளிப்பிலும்  அவர் தவித்ததை உணர்ந்தேன். ஆனால் அவர்மீது கோபம் ஏதும் இல்லை. நல்லெண்ணத்திலும் என்மீது உள்ள உண்மையான அக்கறையாலும்தான் அவர் அப்படிச் செய்தார் என்பது எனக்குப் புரியாமல் இல்லை. அவரின் தர்ம சங்கடத்தையும் தவிப்பையும் போக்கும் வகையில் அவரின் இருகைகளையும் பற்றி அணைத்துக்கொண்டேன்.

நானும் ஜெகதீசனும் இளம்வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். நான் ஓவியத்தைத் தொழிலாகவும் எழிலாகவும் செய்து வருகிறேன். ஜெகதீசன் வேளாண் துறையில் சாதாரண ஊழியராகப் பணியாற்றுகிறார். துறையின் துணை இயக்குநர்கள் இணை இயக்குநர்கள் ஆகியோரிடம் பரிந்துரைத்து வேளாண் திட்டங்கள் குறித்த சுவர் விளம்பரம், ஃபிளக்ஸ் விளம்பரம் ஆகிய ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுத் தந்து எனக்கு எப்போதும் உதவுகிறார்.

அன்று அலுவலகத்தில் இருந்த ஜெகதீசன் செல்பேசியில் வாட்ஸ் அப் தகவல் ஒன்று வந்தது. அனுப்பி இருந்தவர் ஸ்ரீதேவி. “ரமேஷ் அவர்களின் மகன் ரயில்மோதி இறந்துவிட்டார்.” இந்தத் தகவலைப் படித்ததும் அதிர்ந்துதான் போனார்.

“ரமேஷிடம் எப்படிப் போன் போட்டுப் பேசுவது? அவருக்கு இந்தத் தகவல் தெரியுமா? ஒரு வேளை தெரியாமல் இருந்தால் நாம் சொல்லி அவருக்கு அதிர்ச்சியில் ஏதாவது ஆகிவிடுமா?” என்று பதைபதைத்துள்ளார்.  என்ன செய்வது என்று தெரியாமலும் புரியாமலும் “டெத் ஒண்ணு. அவசரமாகப் போறேன்”னு அலுவலகத்தில் சொல்லிவிட்டுத்தான் வாகனத்தில் வேகமாக வந்திருக்கிறார். ஆனால் அவர் வாட்ஸ்அப்பின் தகவலை முழுமையாக உள்வாங்கவில்லை. ரமேஷ் மகன் இறந்துவிட்டார் என அவர் மனதில் பதிந்து, பள்ளியில்தான் அந்தத் துயர்நிகழ்வு நடந்ததாக அவசர கதியிலும் மனப்பதற்றத்திலும் காட்சியை அவராகவே வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

லுவலகத்தில் பணியில் இருந்த போது ஸ்ரீதேவியின் செல்போனில் வாட்ஸ்அப் ஒலி எழும்பியது. அவர் வணிகவியல்தான் படித்தவர் என்றாலும் சங்க இலக்கிய அறிவாற்றலில் பல தமிழ்ப்பேராசிரியர்களுக்கு மேம்பட்டவர். இலக்கிய வட்டத்தில் நல்ல பெயர் உண்டு. அதனால் அவருக்கு நட்பு வட்டமும் பெரிதாக இருந்தது. வாட்ஸ் அப் செய்தியைத் திறந்து பார்த்தவருக்குப் பெருத்த அதிர்ச்சி. “ரமேஷ் அவர்களின் மகன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.” இதுதான் அந்தச் செய்தி. ரமேஷ் ஓவியர் மட்டுமல்ல நல்ல கவிஞரும் கூட. சமூக நற்பணி மன்றங்கள் அனைத்திலும் அவரின் குரல் ஒலிக்காமல் இருந்ததில்லை. எல்லாருக்கும் நல்லவராக வாழ்வது என்பது இயலாத ஒன்று. ஆனால் எல்லாருக்கும் நல்லவராய் வாழ்ந்து காட்டும் அதிசய மனிதர் அவர். எந்த நேரமானாலும் யார் என்ன உதவி கேட்டாலும் ஓடிவந்து உதவும் குணமும் அவருடையது என்ற ரமேஷின் குணச்சித்திரம் ஸ்ரீதேவியின் மனத்தில் அழுத்தமாக வரையப்பட்டிருந்தது.

ரமேஷ் என்ற பெயரைப் பார்த்ததும் அதிர்ந்த ஸ்ரீதேவி அந்தத் தகவலை மற்ற இலக்கிய அன்பர்களுக்கு முன்னகர்த்தினார். அந்த நேரத்தில் பாண்டியன் அவர்களிடமிருந்து போன் வந்தது. அவர் பேசத் தொடங்குவதற்கு முன்பாகவே ஸ்ரீதேவி,

“சார்... ரமேஷ் மகன் ரயிலில் விழுந்து இறந்துட்டானாம். என்னென்னு விசாரிச்சிங்களா?”

“விசாரிச்சிட்டுச் சொல்றேன்” என்றவர் போனை வைத்துவிட்டார். காத்திருந்து பார்த்தும் பாண்டியனிடமிருந்து விசாரிப்புத் தகவல் எதுவும் வரவில்லை. அலுவலகத்தில் அவசர வேலைகள் இருந்தன. அவற்றைச் செய்ய ஸ்ரீதேவிக்கு மனம் ஓடவில்லை. “வேற யாரை விசாரிக்கலாம்“ என்று யோசித்தபடி செல்போனில் இருந்த காண்டாக்ட் பகுதியில் தேடினார்.

அந்த நேரம் சொல்லி வைத்தாற்போல் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவர் வந்தார். அவரை விசாரித்த போது சொன்னார். ”நீங்க நினைக்கிற மாதிரி இறந்து போனது ஓவியர் ரமேஷ் மகன் இல்லீங்க. கம்யூனிஸ்ட் கட்சி ரமேஷ் மகன்தான் ரயிலில் விழுந்து இறந்துட்டார்.”

இதைக் கேட்ட ஸ்ரீதேவிக்கு இன்னும் அதிர்ச்சி. கம்யூனிஸ்ட் ரமேஷின் மனைவி அவருக்கு நெருங்கிய தோழி. அனிச்சம் இலக்கியக் கூடல் நிகழ்ச்சிக்கெல்லாம் ரமேஷ் குடும்பத்துடன் வருவார். அவருடைய பையன் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் டீ பிஸ்கெட் பரிமாறுவதற்கு உதவி இருக்கிறான். ஸ்ரீதேவியின் மனக்கண்ணில் அவனின் சூரிய முகம்  ஒளிர்ந்தது.

காலையில் வீட்டைவிட்டு சைக்கிளில் சென்றவன் இன்னும் வரவில்லை என்று நேற்று இரவு 2 மணிவரை கடலூரில் உள்ள எல்லா இடங்களிலும் கம்யூனிஸ்ட் ரமேஷ் தன் மகனைத் தேடித் தேடி அலைந்து பார்த்திருக்கிறார். பல நண்பர்களும் தேடி ஓய்ந்துபோனார்கள். அவனுடைய நண்பர்கள் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று விசாரித்துப் பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.

விடிகாலை 3 மணியளவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, எப்படியும் தன் மகன் வந்து சேர்வான் என்ற நம்பிக்கையில் கண்ணயர்ந்தார் ரமேஷ். ஆனா அவருடைய மனைவி மட்டும் தூங்காமல் அழுது அழுது கண்களும் முகமும் வீங்கிப் போயிருந்தது.

அவருடைய பையன் 12 ஆம் வகுப்பு படித்தான். மூன்று முறை தேர்வு எழுதியும் அவனால் தேர்ச்சி அடைய முடியவில்லை. அதுபற்றி எதுவும் கோபமாகப் பேசியதில்லை ரமேசும் அவருடைய மனைவியும். பிள்ளைகளின் உளவியல் தெரிந்து நடக்கக் கூடியவர்கள். பெற்றோர் பிள்ளைகள் அணுகுமுறை, ஆசிரியர் மாணவர் அணுகுமுறை பற்றியெல்லாம் கல்வி நிகழ்ச்சிகளில் பேசி இருக்கிறார் ரமேஷ்.. அதனால் அவர் அவனை அடித்ததும் இல்லை. கண்டித்ததும் இல்லை.

“ஒருவேளை கடிதம் எதுவும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறானா” என்று வீட்டில் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார். அலமாரியில் துணிமணிகளை எல்லாம் அவசர அவசரமாகச் சரித்துத் தள்ளித் தேடினார். கடிதம் எதுவும் இல்லை. கீழே தள்ளிய பொருட்களை எடுத்து உள்ளே வைக்காமல் அலமாரியை மூடிவிட்டு வந்து படுக்கையில் சாய்ந்தார்.

காலை ஆறு மணிக்கு ரமேஷ் செல்போன் மூன்றுமுறை அலறி ஓய்ந்தது. யாரும் அதை எடுத்துப் பேசவில்லை. வெளியில் கிடந்த துணிமணிகளை எடுத்து உள்ளே வைப்பதற்காக அலமாரியைத் திறந்த ரமேஷின் மனைவியின் கண்களில் கணவரின் செல்போன் தெரிந்தது. அவசரத்தில் தன் செல்போனை அலமாரியில் வைத்துவிட்டு மறந்துவிட்டிருக்கிறார் என்று தெரிந்தது. அதில் மூன்று மிஸ்டுகால் இருந்ததைப் பார்த்து, “என்னங்க... போன அலமாரியில வைச்சிட்டீங்க. மூணு மிஸ்டுகால் வந்துருக்கு. என்னன்னு கேளுங்க” என்று சொல்லி ரமேஷிடம் கொடுத்தார்.

முக்கியமான தகவலாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டார்.

“சார்.. நான் ரமேஷ் பேசுறேன்.”
“சார்... நாங்க ஸ்டேசனிலிருந்து பேசறோம். பல தடவை உங்கள தொடர்புகொள்ள முயற்சி செஞ்சோம். நீங்க எடுக்கல.”
“சார்... பையனைத் தேடி அலைஞ்சதுல கொஞ்சம் தளர்ந்துபோய் படுத்துட்டேன். ஏதாவது தகவல் கிடைச்சுதாங்களா?
“இல்ல சார். ஆனா... டீ சர்ட்டும் பள்ளிக்கூட யூனிபார்ம் பேண்ட்டும் போட்ட ஒரு சின்ன வயசுப் பையனோட பாடி ஆஸ்பிட்டல இருக்குது. ரயில்வே போலீசார் சொன்னாங்க. நிச்சயமாக ஒங்க மகனா இருக்க மாட்டான். எதுக்கும் ஒருதடவை போய் பாத்துட்டு வந்துடுங்க.”

ரமேஷின் கையிலிருந்து செல்போன் நழுவிய நிலையில் அதை சுதாகரித்துப் பிடித்துக்கொண்டார்.

“என்னங்க பேசினிங்க? ஏதாவது தகவல் கிடைச்சுதுங்களா?”
...........
“என்ன பேச மாட்றீங்க? நம்ம பையனுக்கு எதாவது ஆயிடுச்சா?”
“எதுவும் ஆவாதும்மா.”
“கொஞ்சம் இரு. ஒரு இடத்துக்குப் போயிட்டு வந்துடுறேன்.”
“எங்கப் போறீங்க? நானும் வரேன்”
“இரும்மா... கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்.”
“எங்கப் போறீங்கன்னு சொல்லிட்டுப் போங்க. எம்மனசு அமைதியா இருக்காது?”
“இல்லம்மா... கட்சி ஆபிசுக்குப் போயிட்டு வந்துடுறேன்.”

மருத்துவமனை ஊழியர் அய்யாசாமிக்குப் போன் செய்து மருத்துவமனைக்கு வரும்படிச் சொல்லிவிட்டுத் தனது ஹோண்டா சைனில் பறந்தார்.

மருத்துவமனை ஊழியர்கள் சங்கத் தலைவர் அய்யாசாமி காத்திருந்தார். “மார்ச்சுவரியைப் பார்க்கணும்” என்றார் அவரிடம். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மார்ச்சுவரிக்கு ரமேசை அழைத்துச் சென்று காண்பித்தார் அய்யாசாமி.

ஒரேஒரு பாடிதான் கிடத்தப்பட்டிருந்தது. கிடத்தப்பட்டிருந்தது என்று சொல்வதைவிட ஒரு மனித படத்தைத் துண்டுதுண்டாக வெட்டி, பிறகு ஒன்று சேர்ப்பதுபோல் உறுப்புகள் அடுக்கப்பட்டிருந்தன. தலை தனியாக இருந்தது. கைகளும் கால்களும் துண்டுத்துண்டுகளாகச் சிதைந்து கிடந்தன. உள்ளே நுழைந்ததும் கிழிந்து சிதைந்த டீ சர்ட்டும் பேண்டும் ரமேசை நிலைகுலையச் செய்துவிட்டது. அது தன்மகனின் டீ சர்ட்டுதான். அந்தப் பேண்ட் அவன்படித்த பள்ளிக்கூட சீருடைதான்.

ஆறரை அடி உயரமும் அதற்கேற்ற உடல்பருமனும் மனபலமும் கொண்ட ரமேஷ் வாய்விட்டுக் கதறி அழுதார். அவரை அருகில் இருந்த அய்யாசாமி தாங்கிப் பிடித்துப் பிணவறையிலிருந்து வெளியில் அழைத்துவர முயன்றார். ஆனால் அவர் மீறி மீறி உள்ளே சென்று பார்த்துக் கதறினார். அங்கிருந்த மற்ற ஊழியர்கள் சமாதானம் சொல்லி அவரை வெளியே அழைத்து வந்தார்கள். அவர் அழுவதைப் பார்த்து அய்யாசாமியின் கண்களிலும் கண்ணீர்த் திவலைகள். வெறுங்கையால் துடைத்துக் கண்ணீரை மறைக்க முனைந்தார்.

“எம்மகன் மேல ஒரு துரும்புகூட விழாம பாத்துக்கிட்டிருந்தேனே. அவன எதிர்த்து ஒரு வார்த்த கூட  நான் சொன்னதில்லையே. ரயில்முன் விழ எப்படித் துணிஞ்சான்? என்ன கஷ்டம் பட்டிருப்பான்?” என்று சொல்லிச் சொல்லி அழுதவரை சமாதானப்படுத்த முடியாத நேரம் அது. அழுது தீர்த்த பிறகுதான் சமாதானப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்த அய்யாசாமி, “போஸ்ட்மார்ட்டம் முடிச்சு நாங்க கொண்டாந்துடுறோம். டூவீலரை நான் எடுத்துட்டு வரேன். நீங்க இந்த ஆட்டோவுல வீட்டுக்குப் போங்க” என்று ஒருவாறு சொல்லி ஒப்பேத்தி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

வியக் கூடத்தில் உட்கார்ந்திருந்தேன். ஒரு பூங்குடுவைக்குள் கொத்தாகச் செருகப்பட்டிருந்த தூரிகைகளில் ஒன்றை எடுத்து வண்ணம் தோய்த்து வெள்ளட்டையில் ஓடவிட்டேன். என்ன வரையப் போகிறேன் என்ற திட்டம் எதுவும் எனக்கில்லை. வரைந்தபின்தான் உணர்ந்தேன். என்னை அறியாமல் நான்வரைந்தது ஒரு சிறுவனின் படம். அதுவும் நான் அடிக்கடி கடந்துபோகும் திருப்பாதிரிப்புலியூர் ரயில்பாதையில்... அடிபட்டுச் சிதைந்து கிடக்கும் சிறுவனின் படம். எப்படி இதை நான் வரைந்தேன் என்று இன்றுவரை புலப்படவில்லை. நான் வரைந்த படத்தைப் பார்த்து நானே அழுதேன்.  படமாக வரையப்பட்ட சிறுவன் எனக்கு வேண்டியவன் இல்லை. என் கண்களில் ஏன் நீர்பெருக்கெடுக்கிறது? அப்போது எழுத்தாளர் வளவ. துரையன் வந்தார். நான் கண்ணீரைத் துடைத்து மறைத்தேன். அதை அவர் கவனித்திருக்க முடியாது. மேசையின் மீது விரித்து வைத்திருந்த சிறுவனின் படத்தைப் பார்த்த அவர், “அட படம் தத்ரூபமாக இருக்கிறது” என்று பாராட்டியதோடு இதை அடுத்த ‘சங்கு” இதழுக்கு அட்டைப்படமாக வச்சிடுங்க. படத்துக்கேற்ப கதையோ கவிதையோ எழுதித் தந்துடுறேன்” என்றார். அவருக்கு வீட்டிலிருந்து போன் வந்தது. “ரமேஷ்... வீட்டுல கூப்புடுறாங்க. நான் அப்பறம் வந்து பாக்குறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். மீண்டும் நான் படத்தைப் பார்த்தேன். படத்தில் இருந்த சிறுவன் என் மனதுக்குள் நுழைந்து என்னமோ பண்ணுகிறான் என்பது தெரிகிறது. எத்தனையோ படம் வரைந்துள்ளேன். எதுவும் இதுபோல் என்மனதைப் பாதித்ததில்லை. படத்தைச் சுருட்டி வைத்தேன். அந்தப் படம் மனதுக்குள் விரிந்தது. அந்தச் சிறுவன் என்னிடம் பேசுவதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது.

ரயில்மோதி இறந்தது என் மகன் இல்லை என்பதில் நான் எல்லையில்லாத சந்தோஷம் அடைந்தேன் என்பது உண்மைதான். இதுபோன்ற சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட யாரும் மகிழ்ச்சி அடையத்தான் செய்வார்கள். உள்மனம் என்னை விரல்நீட்டிக் குற்றம் சுமத்தியது. “மகன் இறக்கவில்லை என்று மகிழ்கிறாய். தன்மகன் எனக்கருதி இறந்த யாருடைய மகனுக்காகவோ அழுது புரண்டாய். இப்போதும் அந்த யாரோ ஒருவரின் மகன் இறந்து கிடக்கிறான். ஏன் அவனுக்காக இப்போது கவலைப்படவில்லை. தன் வீட்டில் நடந்தால் அது துக்கம். அடுத்த வீட்டில் நடந்தால் அதைத் துக்கமாக ஏன் கருதுவதில்லை. என்ன இருந்தாலும் ஓர் அரைமணிநேரம் இறந்த சிறுவனை மகனாகக் கருதி அந்தத் துயரை... துக்கத்தை... வலியை நீ அடைந்திருக்கிறாய். இன்னும் அடக்கம் செய்யாமல்  அந்தச் சிறுவன் பிணமாகத்தான் கிடக்கிறான். இந்த நேரத்தில் நீ மகிழ்ச்சியாக இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்” என்று நீதிக்கூண்டில் ஏறி மனசாட்சி உரக்கப் பேசியது.

ஜெகதீசன் இப்போது என் கடைக்கு வந்தார். அவர் அமைதியாக இருந்தார். “இப்பத்தான் எனக்கு நிம்மதி” என்றார். ஆனால் எனக்கு நிம்மதி இல்லை என்பதை அவர் அறிய மாட்டார். மேலும் சொன்னார்.

“ரயிலில் அடிபட்ட சிறுவனின் இறுதி ஊர்வலம் அஞ்சு மணிக்காம். அந்த இன்னொரு ரமேசும் எனக்கு நண்பர்தான். போய் பாத்துட்டு வந்துடலாமா?.”

நான் எதுவும் சொல்லவில்லை. கடையை விட்டு இறங்கி ஜெகதீசனுடன் புறப்பட்டேன். திருப்பாதிரிப்புலியூர் சுரங்கப்பாதை தாண்டியதும் வண்டியை நிறுத்தச் சொன்னேன். பூக்கடையில் நிறைய மாலைகள் தொங்கிக்கொண்டிருந்தன. இருந்ததிலே பெரிய மாலையை பேக் செய்யச் சொன்னேன். என்ன விலை என்று ஜெகதீசன் கேட்டார். 350 ரூபாய் என்றார். பேரம் பேசிய ஜெகதீசனைத் தடுத்தேன். பூக்கடைக்காரர்கள் அதிகம் விலை சொல்வது வழக்கம்தான். பேரம் பேசி வாங்குவதும் அங்கு இயல்பான நடைமுறைதான். நான் பூக்கடைக்காரர் கேட்ட விலையை அப்படியே குறைக்காமல் கொடுத்துவிட்டு மாலையை வாங்கிக்கொண்டேன். நான் சாதாரணமாகப் பஸ்நிலையத்தில் கூறுகட்டிக் கொய்யாப்பழம் விற்கும் பாட்டிகளிடம் அடாவடியாகப் பேரம் பேசி மிகக்குறைந்த விலையில் வாங்குபவன்தான். பேரம் பேசுவதில் நான் தேர்ந்தவன் என்பதால் என் நண்பர்கள் எந்தப் பொருள் வாங்கப் போனாலும் என்னை அழைத்துக்கொண்டு போவார்கள். இது ஜெகதீசனுக்கும் தெரியும் என்பதால் என் நடவடிக்கையை விநோதமாகப் பார்த்தார்.

கம்யூனிஸ்ட் ரமேஷ் வீட்டுத் தெருவில் நுழைந்தோம். ஏராளமான கூட்டம். ட்ரம் மற்றும் கிளாரினெட் வைத்து ஒரு இசைக்குழு சோக இசையைக் காற்றில் கரைத்தபடி இருந்தது. “நாதர்முடி மீதிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே” என்று பாடிக் கொண்டிருந்தார். அதில் “நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு” “நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு” என்று உச்ச ஒலியில் வாசித்தார். அதைக் கேட்டதும் கண்ணுக்குள் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்துவிட்டது. கண்ணில் அழுகையோடும் கையில் மாலையோடும் வீட்டுக்குள் நுழைந்த நான், சிறுவன் கிடத்தப்பட்டிருந்த குளிர்ப்பெட்டியின் மீது மாலையை வைத்து அதன்மீதே விழுந்து அழுதேன். இறந்த சிறுவன் வீட்டாருக்கு நான் உறவினன் இல்லை. அந்தச் சிறுவனை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை. கம்யூனிஸ்ட் ரமேஷ் எனக்குப் பழக்கமில்லை. ஆனால் பீறிட்டு வந்த அழுகையைத் தடுக்க என்னால் முடியவில்லை.

மகனைப் பறிகொடுத்த துயரத்தில் இருந்த கம்யூனிஸ்ட் ரமேஷ், என்னைத் தாங்கிப் பிடித்து அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப்போட்டு உட்காரவைத்தார். அப்போதும் என் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

நான் ஏன் இப்படி அழுகிறேன் என்று யாருக்கும் தெரியவில்லை. எனக்கும்தான்.

தினமணி கதிர், 28-10-2018

புத்தகம் உள்ள வீடு














புத்தகம் உள்ள வீடு

வழக்கறிஞர் கோ. மன்றவாணன் 

வ்வொரு வீட்டிலும் சமையலறை, துயிலறை, பூஜையறை, கழிப்பறை, வரவேற்பு அறை, பொருள்வைப்பறை போன்ற அறைகள் உள்ளன. ஆனால் நூலக அறையென்று ஏதும் இல்லை.

எல்லாருடைய வீட்டிலும் பாடப்புத்தகங்கள் இருக்கும். அதைத்தாண்டி இலக்கியம், வரலாறு, அரசியல், சமயம், சமுதாயம், உளவியல், அறிவியல் சார்ந்து ஏதேனும் புத்தகங்களை வாங்கி நம் வீடுகளில் வைத்திருக்கிறோமா? அப்படிக் கேட்டால் “அதற்குத்தான் ஊருக்கு ஊர் நூலகங்கள் இருக்கின்றனவே. நாம் ஏன் புத்தகங்கள் வாங்க வேண்டும்” என்று எதிர்க்கேள்வி கேட்பவர்களே அதிகம். ஒவ்வோர் ஊரிலும் கோவில் இருக்கிறதுதான். அங்குக் கடவுள் உண்டுதான். இருப்பினும் நம் வீட்டில் கடவுள் சிலைகளை வைத்தும் படங்களை வைத்தும் பூசையறை வைக்கவில்லையா? அப்படித்தான் நூலறையோ நூல்அலமாரியோ ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் நம் வீடுகளில் திருக்குறள் புத்தகமாவது உண்டா என்றால் பெரும்பாலும் இல்லை.  புத்தகம் படிப்பது என்பது ஒருசிலரின் பொழுதுபோக்கு என்று பலரும் படிக்காமல் ஒதுங்கிவிடுகிறார்கள். நம் வீட்டுப் பெண்கள் கதைப்புத்தகம் படித்தால்... அது சோறு போடாது என்று தடுக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமும் உங்கள் வாழ்வில் ஒருநாள் உங்களுக்குத் துணைவரும். அது உங்களுக்கே தெரியாது.  கதைகூட உங்கள் வாழ்க்கையின் சிக்கலுக்குத் தீர்வு சொல்லும். நாம் படிக்கின்ற விஷயங்கள் நம்மூளையில் பதிவாகித் தேவைப்படுகிற காலத்தில் நம்மை அறியாமல் சிக்கலைத் தீர்க்க, நன்முடிவுகள் எடுக்க, வாழ்வில் முன்னேற வழிகாட்டும். புத்தகம் படிக்கின்ற சமுதாயமே அறிவார்ந்த சமுதாயம்.

பொருட்களைத் தாள்களில் மடித்துத் தந்தார்கள் அன்றைய வணிகர்கள். அந்தத் தாள்களில் உள்ளவற்றைப் படிப்பது என்பதே சுகமாக இருந்தது. அதைப்படித்து வாழ்வில் முன்னேறியவர்கள் உண்டு. அந்த வாசிப்பையும் அழித்துவிட்டன பாலித்தீன் பைகள்.  

நம் வீடுகளில் புத்தகங்களை அடுக்கி வைத்துப் பாருங்கள். அறிவு வெளிச்சம் வீடு முழுவதும் மட்டுமல்ல... நம்வாழ்வு முழுவதும் ஒளிவீசும். நம் வீட்டில் நூலக அறை இருந்தால் அது நமது மதிப்பைப் பிறரிடத்தில் உயர்த்தும். நூலறை இல்லாவிட்டாலும் வரவேற்பறையிலாவது நூல்களை அழகான முறையில் அடுக்கி வைக்கலாம்.

ஆயுத பூசை, சரஸ்வதி பூசையின்போது புத்தகத்தில் பூசையிடப் பாடப் புத்தகங்களின்றி வேறு புத்தகம் இல்லை. விஜயதசமியை முன்னிட்டுப் பல வீடுகளில் பொம்மைகளை அடுக்கிக் கொலு வைப்பார்கள். அதுபோலவே படித்தட்டுகளில் புத்தகங்களையும் அடுக்கிப் புத்தகக் கொலு கொண்டாடினால் வெள்ளைத் தாமரையில் அமர்ந்துள்ள கலைவாணி கொள்ளை மகிழ்ச்சி அடைவாள். பாரதி பிறந்த நாளிலாவது நம் வீடுகளில் புத்தகக் கொலு கொண்டாடினால் தமிழ்த்தாயும் மகிழ்வாள்.

படிக்கும் பழக்கம் பல்கிப் பெருக வேண்டும்; பல்வேறு புத்தகங்கள் பலருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையிலுள்ள குவிகம் இலக்கிய வாசல் அமைப்பினர், புத்தகப் பரிமாற்றம் எனும் நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துகின்றனர். அந்நிகழ்ச்சியில் நிறைய புத்தகங்களைக் காட்சிப் படுத்துகிறார்கள். படித்ததைப் போட்டுப் பிடித்ததை எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். இதில் காட்சிப் படுத்தப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை குறைவதே இல்லை. ஒன்று கொடுத்தால் ஒன்று கிடைக்கும் என்ற திட்டத்தை இந்தப் புத்தகப் பரிமாற்றத்தில் கையாளுகிறார்கள். இதுபோன்ற நூல்பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஊரிலும் குடியிருப்புப் பகுதியிலும் தொடர்ந்து நடத்திவந்தால் வீடுகள் தோறும் வெவ்வேறு புத்தகங்கள் அறிவுலா செல்லும்.

தூத்துக்குடியில் பொன்.மாரியப்பன் என்பவர், தன் முடித்திருத்தகத்தில் இருநூறு நூல்கள் கொண்ட நூலகத்தை வைத்திருக்கிறார். வாடிக்கையாளர்கள் வீணே காத்திருக்காமல் நல்ல புத்தகங்களைப் படித்து நாலும் தெரிந்துகொள்ளச் செய்கிறார். அதனால் அந்தச் சலூனில் சிகையும் அழகாகிறது. சிந்தனையும் சீராகிறது. இந்த நல்வழியைப் பின்பற்றும் வகையில் காத்திருக்கும் நேரங்களில் வாடிக்கையாளர்களை வாசிப்பாளர்களாக மாற்ற அலுவலகங்களில் சிறு நூலகங்களை அமைக்கலாம்.

எந்த மருத்துவ மனைக்குச் சென்றாலும் காத்திருப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அத்தகைய தருணங்களில் நாமே புத்தகம் கொண்டுசென்று படிக்கலாம். வாசிப்புகூட மனநலத்தை மேம்படுத்தி உடல்நலத்தைச் சீராக்கலாம்.

பிறந்தநாள் திருமண நாள் போன்ற நிகழ்வுகளில் புதுப்புத்தகங்களைப் பரிசளிக்கலாம். அப்படிப் பரிசளிக்கையில் ஒரே தலைப்புள்ள புத்தகங்கள் பல வந்து சேரலாம். அவற்றைப் பிறருக்குக் கொடுத்து உதவலாம்.

நம் பிள்ளைகளைப் பாடப் புத்தகங்களைப் படிக்கச் செய்வதும் கல்வியில் கவனம் செலுத்தச் செய்வதும் முக்கியமானதுதான். வேலை பெறுவதற்காகத்தான் படிப்பு என்று நினைத்துப் பிள்ளைகளை இயந்திரங்களாக ஆக்கிவிட வேண்டாம். பிறப் புத்தகங்களையும் ஓய்வான நேரங்களில் பிள்ளைகள் படிக்க உதவுங்கள். பெற்றோர் புத்தகங்கள் படிக்காதவர்களாக இருந்தாலும் வீட்டில் நூலறை வைத்துப் புத்தகங்களை வாங்கி வைத்தால் அந்த வீட்டில் வளரும் குழந்தைகள் வாசிப்பாளர்களாக மாறிப் பிற்காலத்தில் விருதுகள் பெறும் படைப்பாளிகளாகவும் மாறுவார்கள். படைப்பாளியாக மாறாமல் போனாலும் புத்தகங்களால் பெறும் அறிவினால் வாழ்வில் சிறந்தவர்களாக வளர்வார்கள்.

நூலகம் ஒன்று திறப்பது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுவதற்குச் சமம் என்பார்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை நூலகம் செல்லப் பழக வேண்டும். எல்லாப் பள்ளிகளிலும் நூலகத்தைப் பூட்டி வைத்திருப்பார்கள். அதை இயங்கச் செய்ய வேண்டும்.. வாரம் ஒருமுறையாவது நூலக நேரம் ஒன்றை ஒதுக்கி மாணவர்களை வாசிக்கத் தூண்ட வேண்டும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நகரங்களிலும் கிராமங்களிலும் அரசியல் கட்சியினர் படிப்பகங்களை நடத்தி வந்தனர். சிவாஜி ரசிகர் மன்றம் என்று வைத்திருப்பார்கள் அதனோடு சேர்ந்து காமராஜர் படிப்பகம் வைத்திருப்பார்கள். இத்தகைய படிப்பகங்கள் சிறு கீற்றுக் கொட்டகைகளில் இயங்கும். அங்கு நான்கு சவுக்குக்கால்கள் நட்டு, அதன்மேல் பலகை பொருத்தி இருப்பார்கள். குறுக்கும் நெடுக்குமாக கொடிக்கயிறுகள் கட்டி, நாளிதழ்கள் வார மாத இதழ்களைத் தொங்க விட்டிருப்பார்கள். ஒவ்வோர் இதழையும் ஒவ்வொருவர் நன்கொடையாகப் படிப்பகத்துக்கு வழங்கிவந்தார்கள். அத்தகைய படிப்பகங்கள் இன்றில்லை. ஆனாலும் தேநீர்க்கடைகளில் தினத்தந்தி படிக்கும் வழக்கம் அன்று தொட்டு இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. என்றென்றும் அது தொடரும். வெகுசாதாரண மக்களையும் நாளிதழ்களைப் படிக்கச் செய்தவர் சி. பா. ஆதித்தனார். படிப்பறிவு குறைந்த அந்தக் காலத்தில் பாமர மக்களிடம் வாசிப்பைக் கொண்டுசென்று சாதனை படைத்த அவரைச் சரித்திரம் மறக்காது.

புத்தகங்களை வாங்கினால்தான் தமிழில் தரமான சிறப்பான நிறைய நூல்கள் வெளிவரும். வாங்கிப் படியுங்கள். வழங்கிப் படிக்கச் செய்யுங்கள். வாசிப்பது என்பது சுவாசிப்பது போன்ற அனிச்சை செயலாக மாற வேண்டும்.

தினத்தந்தி 23-02-2019