Tuesday, 28 August 2018

நட்சத்திரங்கள் விழும் இரவினில்...

















குடிசை வீட்டுச் சிறுமியின்
கூந்தலில் மின்ன
இறங்கி வருகின்றனவோ...
இரங்கி வருகின்றனவோ...

மீன்
துள்ளி விளையாடும் தடாகத்தின்
அல்லி மலர்மீது காதல்கொண்டு
நிலம்நோக்கி
குளம்நோக்கிப் பாய்ந்ததில்
இடம்மாறி
தடம்மாறி விழுகின்றனவோ...
                                                             
நளினச் சொற்களுக்குப் பதிலாக
நட்சத்திரங்களை அடுக்கியொரு கவியெழுத
அழைத்தேன்
அதற்காக வருகின்றனவோ...

நட்சத்திங்களை
நிராகரித்துவிட்டு
நிலவை மட்டுமே பாடும் கவிஞர்களிடம்
நீதி கேட்டு
நெடும்பயணமோ...

நட்சத்திரங்கள்
விழுந்த இடம்தேடி
விஞ்ஞானிகளும்  செல்வதில்லை
மெய்ஞானிகளும் சொல்வதில்லை
பாவ பூமியில்விழ அஞ்சிப்
பாதியிலே சாம்பலாகிக் கரைகின்றனவோ...

உச்சி நட்சத்திரங்கள் விழும்
ஒவ்வோர் இரவும்
உணர்த்துகின்றதோ...
ஒவ்வொன்றாய் என் கனவுகள்
உடைந்து நொறுங்குவதை?

-கோ. மன்றவாணன்

Thursday, 16 August 2018

திராவிடச் சூரியனே...



உன்
மேடைப் பேச்சைக் கேட்டு
மேனி சிலிர்த்தது
தமிழகத்துக்கு மட்டுமல்ல
தமிழ்த்தாய்க்கும்

இருள்கவ்விய  தேசத்தில்
எழுந்து சிவந்து ஒளிபாய்ச்சிய
திராவிடச் சூரியன் நீ
திசைகளின் தீபம் நீ

எழுதுகோல் ராஜ்ஜியத்தில்
என்றுமே
முதல்வர் நீ

காலையில் தொடங்கி
மாலையில் முடங்கிப் போய்விடும்
சூரியனுக்குப் பொறாமை
உன்
சுடர்முகம் பார்த்துத்தான்

எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்?
இரவிலும் பகலிலும்
எந்தப் பொழுதிலும்
உதய சூரியனாய் நீ மட்டும்தான்!

கலைஞர் என்ற பெயரை
உச்சரித்தே வாழ்ந்தது
ஒரு நூற்றாண்டு காலம் 

உன்னைப் படித்தால்
ஒவ்வொருவரும் கற்கலாம்
நெருப்பாறுகளை
நீந்திக் கடக்க

-கோ. மன்றவாணன்

Thursday, 9 August 2018

வாழ்வின் நிஜங்கள்













நிஜத்தைத் தேடி
நெடுந்தூரம் வந்துவிட்டேன்
நிலம்
நீண்டுகொண்டே இருக்கிறது

நேற்று மெய்யென மிளிர்ந்தது
இன்று பொய்யென
இருட்டுக்குள் பதுங்குகிறது

மெய்யெது பொய்யெது போட்டியில்
கலந்துகொள்ளும்
கடவுளும் தோற்றுப் போகிறான்

பிறப்பதற்கும் இறப்பதற்கும் இடையில்
மறைத்து வைத்த புதையலைத் தேடி
அலைந்து களைப்பதல்லால்
அறியேன் வேறொன்றும்

விட்டு விடுதலை ஆகிவிடும்
உயிர்ப்பறவை
நிஜத்தை
நெருங்கும் தருணத்தில்

-கோ. மன்றவாணன்


Thursday, 2 August 2018

தானாக வாழுமா தேன்தமிழ்?











தானாக வாழுமா தேன்தமிழ்?

-கோ. மன்றவாணன்-

     
யாரும் தமிழை வாழ வைக்கவோ வளர்க்கவோ எதுவும் செய்ய வேண்டாம். எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை இடர்கள் நேரிட்டாலும் தமிழ் எப்போதும்போல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும் என்றே பலரும் பேசுகின்றனர்.

தமிழர்களாகிய நம்மை ஆறுதல் படுத்த இந்தச் சொற்கள் பயன்படலாமே தவிர, தானாகத் தமிழ் வாழ்ந்துவிட முடியாது. தற்போதைய அரசியல், சமூக, பொருளாதாரச் சூழல்களில் தமிழ் அழிந்துவிடக் கூடிய நிலையில்தான் உள்ளது.

தானாக எல்லாம் நடக்கும் என்பது பழைய பொய். தமிழை நாம் பாதுகாத்து வளர்த்தால்தான் தமிழ்வாழும்.

அவ்வப்போது தமிழுக்கு இடர் ஏற்பட்ட போதெல்லாம் யாரோ சிலரின் முயற்சிகளால் தமிழ் பாதுகாக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தமிழை நாம் பாதுகாத்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியது நம் தலையாய கடமை.

இன்னும் சில பத்தாண்டுகளில் அழிந்துவரும் மொழிகளின் பட்டியலில் தமிழ் உள்ளது என்று யுனெஸ்கோ நிறுவனமும் அறிவித்துள்ளது. அதற்கான காரணங்களையும் சொல்லியுள்ளது. கல்வி மொழியாக- அலுவல் மொழியாக- வழிபாட்டு மொழியாக- வேலைவாய்ப்புக்கு உரிய மொழியாக இல்லாத எந்த மொழியும் காலப் போக்கில் அழிந்துவிடும்.

கடந்த 2010 ஆம் ஆண்டு வாக்கில் அந்தமான் தீவுக் கூட்டத்தில் “போ” என்னும் மொழியைப் பேசிய கடைசிப் பெண் இறந்துவிட்டார். அவரோடு சேர்ந்து அந்தப் “போ” மொழியும் இறந்து போனது. ஆக நம் கண்முன்னால் மொழிகள் அழிவதைப் பார்க்கிறோம்.  கட்டடம் ஒன்று விழுந்துவிட்டால் அதை உருவாக்கிவிட முடியும். ஒரு மாநகரமே கடலில் மூழ்கி விட்டாலும் அதைத் திரும்ப நிறுவ முடியும். மொழி அப்படிப் பட்டதல்லவே!

மொழியை உருவாக்க முடியாது. ஆனால் அதை வளர்க்கவும் பரப்பவும் பாதுகாக்கவும் முடியும்.

கடல்கோள்களால் தமிழின் இலக்கியங்கள், இலக்கணங்கள் ஏராளமாக அழிந்துள்ளன. சூழ்ச்சிகளால் அறியாமையால் தமிழ்ச்செல்வங்களை இழந்துள்ளோம்.

அயலார் படையெடுப்புகளால் அன்னைத் தமிழ், தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. பிற இனத்தாரின் பண்பாட்டுப் படையெடுப்பாலும் நம் மொழி சிதைவுக்குள்ளாகி இருக்கிறது.

காலம் தோறும் ஏதேனும் ஒருவடிவில் தமிழை அழிக்கக் கூடிய தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருந்தும் தமிழ் என்ன அழிந்தாவிட்டது? இன்றும் பத்துக்கோடி பேர் இனிய தமிழைப் பேசுகின்றனரே. இலங்கை, சிங்கை, மலேசியா போன்ற நாடுகளில் ஆட்சி மொழியாக தமிழ் விளங்குகிறதே. உலகின் பல மூலைகளிலும் தமிழர்கள் பரவி உள்ளதன் அடிப்படையில் அங்கெல்லாம் தமிழ் பேசப்படுகிறேதே என்று சொல்கிறார்கள். அதற்கு நம் முன்னோர்களின் தமிழ்ப்பணிதான் காரணம்.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழைப் பாதுகாத்தவர்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் மன்னர்களாக... புலவர்களாக... புரவலர்களாக... இருந்திருப்பார்கள். தமிழ்காப்புப் பணியில் பொதுமக்களும் இருந்திருக்கலாம். வழக்கம்போல் வரலாறு அவர்களைப் புறந்தள்ளி இருக்கலாம்.

நம் கண்முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் வந்த திருமண அழைப்பிதழ்களில் தமிழின் நிலை என்ன? விவாஹ ஸுப முகூர்த்த பத்திரிகை என்ற தலைப்பு இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இரண்டொரு தமிழ்ச்சொற்கள் இருக்கும். சில தமிழ்பின்னொட்டுகள் இருக்கும். முழுவதும் சமஸ்கிருத ஆதிக்கமாகவே இருக்கும். அதிலிருந்து மீண்டு நல்ல தமிழில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்த நிலையிலும் தமிழுக்கு மற்றொரு இடரும் நேர்ந்துள்ளது. இன்றுவரும் பெரும்பாலான அழைப்பிதழ்கள் ஆங்கிலத்தில்தான் அச்சடிக்கப்படுகின்றன.

தமிழும் சமஸ்கிருதமும் கலந்து எழுதினால் மணியும் பவழமும் கலந்து கட்டிய மாலைபோல் இருக்கும் என்று, நம் முன்னோர்களின் உச்சம் தலையில் பனிக்கட்டியை வைத்தார்கள். அதை நம்பி நம் புலவர்கள் தமிழையும் சமஸ்கிருதத்தையும் கலந்து எழுதினார்கள். காலப் போக்கில் எந்த அளவுக்குத் தமிழைத் தள்ள முடியுமோ அந்த அளவுக்குத் தமிழைத் தள்ளியும்- எந்த அளவுக்குச் சமஸ்கிருதத்தை அள்ளிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்குச் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினார்கள். அப்படிப் பயன்படுத்துவதே மொழிநாகரிகம் என்றார்கள். பிறகு தமிழைத் தேட வேண்டிய நிலையில் தமிழர்கள் படைத்த நூல்கள் பலவும் சமஸ்கிருதமாகவே மாறின.

மணிப்பிரவாளம் தொடர்ந்திருந்தால் தமிழ்அடையாளம் தொலைந்திருக்கும். சமஸ்கிருதமாகவே மாறிக்கொண்டிருந்த தமிழை மீட்டுப் பாதுகாத்தவர்கள் பரிதிமால் கலைஞர், மறைமலை அடிகள் போன்றவர்கள் அல்லவா? தமிழ் தானாகத் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு வளர்ந்ததா?

தற்போதும் மற்றொரு மணிப்பிரவாளம் என்னும் நிலையில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்து, பின்னொட்டாகத் தமிழ்ச்சொற்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலந்து எழுதும் அவல நிலை வந்துவிட்டதே. தமிழ் மறைந்து தமிங்கிலம் என்னும் மொழி பிறக்குமோ என்று நினைக்க வேண்டி உள்ளதே. தமிழ்த்தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்களின் மொழியைக் கேட்டால், தமிழ் தானாக வாழும் என்றா சொல்ல முடியும்?

தண்ணீர் என்ற சொல் தமிழில் இருக்கிறது. அதை ஒருகாலத்தில் ஜலம் என்று சொன்னால்தான் நமக்கு மரியாதை என்று நினைத்துப் பயன்படுத்தினோம். படாத பாடுபட்டுத் தண்ணீரை மீட்டுக்கொண்டு வரும் வழியிலேயே வாட்டர் வந்து தண்ணீரை மூழ்கடித்துவிட்டது. இன்று உணவகங்களில் யாரும் தண்ணீர் கேட்பதில்லை. “வாட்டர் ப்ளீஸ்”தான்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் பாட நூல்களை உருவாக்கியவர்கள், அறிவியல் கலைச்சொற்களுக்குச் சமஸ்கிருத சொற்களையே கையாண்டார்கள். பின்னர்தான் அந்தச் சமஸ்கிருதச் சொற்களை மாற்றி அவற்றுக்கிணையான தமிழ்ச்சொற்களைக் கொண்டுவந்தார்கள்.

பிறமொழிச் சொற்களையே பயன்படுத்தக் கூடாது என்று நான் சொல்லவில்லை. காலம் காலமாகத் தமிழ்த்தனம் கொண்ட தமிழாகவே உருமாறிவிட்ட பிறசொற்களைக் களைய வேண்டும் என்றும் சொல்லவில்லை. நம்மிடம் சொல் இல்லாத நிலையில்... நம்மொழியில் சொல் உருவாக்க முடியாத நிலையில்... தேவைக்கேற்ப பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தலாம். புதுச்சொல்லாக்கமே தேவையில்லை என்று சிலர் வாதிடுவது தமிழைப் பின்னுக்குத் தள்ளுமே தவிர முன்னுக்குக் கொண்டு வராது. தமிழுக்குப் புதுக்குருதி பாய்ச்சுவதுபோல்தான் புதுச்சொல்லாக்கங்கள்.

அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அங்குதான் தமிழின் நம்பிக்கை வேர்விட்டுக் கொண்டிருந்தது.  இருக்கும் அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வியைப் படிப்படியாகக் கொண்டுவருகிறார்கள். நம் கல்விக் கூடங்களில் தமிழ் அகற்றப்பட்டு ஆங்கிலமும் இந்தியும் மட்டும் இருக்கும் சூழல் வருகிறது.

வேற்றுமொழி படித்தால்தான் வேலை என்ற நிலையும் நம்கண் முன் அச்சுறுத்துகிறது.

தமிழ் பேசத் தெரியாத தமிழ்க்குழந்தைகள் பெருகி வருகின்றனர். “என் குழந்தைக்குத் தமிழ் வராது” என்று சொல்வதில் பெருமை அடையும் நிலையில்தான் தமிழர்கள் உள்ளனர். தமிழ் நாளிதழ்களில் வரும் தலைப்புச் செய்திகளைப் படிக்கத் தெரியாத தமிழ்இளைஞர்கள் உருவாகி வருகிறார்கள்.

தமிழ் எழுத்துகளையே காவு கொடுக்க இன்றைய தமிழர்கள் தயாராகிவிட்டனர். குறுஞ்செய்தி, கருத்துரை, மடல் போன்றவற்றை ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தித் தமிழ் எழுதுகின்றனர்.

தமிழின் வாய்ப்புகள் ஒவ்வொன்றாகப் பறிபோகின்றன.

பிறமொழிகளை நேசிப்போம்: கற்போம். அதற்காக நம் தாய்மொழியை இழக்க வேண்டியதில்லை. தாய்மொழியைப் பாதுகாப்பது என்பது மொழிவெறி அல்ல.

நம் தகுதிகளில் உயர்ந்தது தாய்மொழியில் பேசுவதுதான் என்று உணருங்கள். தாய்மொழியில் தமிழ்மொழியில் பேசுவது என்பதே மொழியின் முதல் பாதுகாப்பு நடவடிக்கை.

இந்த நிலையில் தமிழ் தானாக வாழும். யாரும் வாழ வைக்க வேண்டாம் என்று நீங்களும் சொல்வீர்களாயின்.... மறைமுகமாகத் தமிழின் அழிவுக்குத் துணைபோகிறீர்கள்.

நன்றி : தினத்தந்தி  30-07-2018 திங்கள்

முதல் தனிமை


























முதல் தனிமையின் கதகதப்பில்
கவலை இன்றிக் கிடந்தேன்
கருவறைக்குள்

வெளிவந்தேன்
விழிதிறந்தேன்
அகல வாய்விரித்தது
அமைதியற்ற உலகம்

கண்ட நொடியே
கதறினேன் கலங்கினேன்
இனி தனிமை
எப்போது வாய்க்கும் என

மறைந்து
எரிந்து கரைந்து போனால்தான்
புதைந்து சிதைந்து மட்கினால்தான்
தளிர்விடுமோ
தனிமை

-கோ. மன்றவாணன்






Friday, 27 July 2018

அடுத்த வரி



















அடுத்த வரி தேவை
அழகாய்க் கவிதை
விழிதிறக்க

இரவு வானத்தை
இறவாணத்தை
அண்ணாந்து பார்த்தபடியே இருக்கிறேன்

வெறுங்கையோடு திரும்புகிறேன்
கம்பன்
கடலில் மூழ்கியும்

அடுத்து அடுத்தென
மொட்டு விரித்துக்கொண்டே இருக்கிறது
முற்றத்து மல்லிகை
என்னை
ஏளனமாய்ப் பார்த்து

ஊர்வசியோ மேனகையோ
ஊடுருவ முடியாத வெளியில்
உறக்கம் பசி மறந்து
தவம் கிடக்கிறேன்...
அடுத்த வரிக்காக

-கோ. மன்றவாணன்


Wednesday, 18 July 2018

மழை இரவு





















நள்ளிரவு
இருளில் கோடு வரையும்
வெள்ளைமழை

தூரத்து மலையில் இருந்து
அவசரமாய் இறங்கும்
அருவி

அமைதியாகக் குளிக்கும்
சாலைகள்

புதுசிவன் புதுநக்கீரன் சொற்போர்
பூக்களைத் தழுவிய மழைக்கு
மணமுண்டா?

தாமரைக் குளத்தில்
தவளைகள் நடத்தும்
இசை அரங்கு

மூடிய அறைக்குள் குறட்டைவிடும் உன்னை
நிராகரித்து நடக்கிறது
மழையிரவு

-கோ. மன்றவாணன்

பிரியும் தருணத்தில்...






















இறப்பு
பிரித்துவிடுமா?
பிரிந்தோமா காந்தியின் நினைவை!

இன்றைய
இணைய உலகிலும்
வாழ்கின்றான் வள்ளுவன்
வலம்வருகின்றான் கம்பன்

பிரிக்க முடியுமா
புலவனையும் தமிழையும்?

நேற்று என்பது பிரிந்து போவதில்லை
நேற்றின் வளர்ச்சியே
இன்று

பிரிந்து கிடக்கவில்லை
சேர்ந்தே செல்கின்றன தண்டவாளங்கள்
ஒரே பயணம்தான்

நிழல் பிரிவதில்லை
இருட்டுக்குள்ளும்
வாழப் பழகிக்கொள்கிறது

கண்ணுக்குத் தெரியாவிட்டால் என்ன?
கைக்கோர்த்தபடியே நடக்கின்றன
கிழக்கும் மேற்கும்


ஒட்டியே உறவாடுகின்றன ஒருமுனையில்
வடதுருவமும்
தென்துருவமும்

நெடுஞ்சுவர்கள் பிரிக்குமோ
காதலை?
ஊடுருவும் மனம் இருக்கையில்!

பிரியும் தருணம் என்பதே மாயையானது
சூரியன்
மறைவது போலவே!


-கோ. மன்றவாணன்


Wednesday, 27 June 2018

ஒருமுறையேனும்...







அன்பூற்றி, ஆசையிட்டு
ருசிக்க ருசிக்க மனைவி சமைத்த
அமுதுணவை நாவிலிடும் போது
அலுவலகத்தின்
அவசர வேலைகளை
நினைவால் மெல்லுகிறீர்கள்

அலுவலகத்தில்
அதிகப் பணிநெருக்கடியின் போதும்
உடன்பணியாற்றும் எதிராளியின்
உயர்முன்னேற்றத்தை நினைத்து
மனசைச்
மலச்சாக்கடையில் அமிழ்த்துகிறீர்கள்

இலக்கியக் கூட்டத்தில் சுகி.சிவம் பேசும்போதும்
கைப்பேசியில்
விரல் தேய்க்கிறீர்கள்

பஞ்சணையில் மனைவி அரவணைக்கும் போதும்
பள்ளிப் பருவக் காதலை
அசைபோடுகிறீர்கள்

இன்றில் வாழும் போது
நேற்றில்
கால்பதித்து நடக்கிறீர்கள்.

கோவிலுக்குள் சென்று கும்பிடும் போதும்
களவு போகாமல் தப்புமோ என்று
வெளியில் நிறுத்திய வாகனத்தில்

உள்ளத்தை
ஒருமுகப்படுத்துகிறீர்கள்.

வாகனத்தை மிகுவேகத்தில் செலுத்தும்போதும்
மனது பறக்கிறது
வேறு திசைநோக்கி

நிகழ்நேரத்தில்
வாழ்ந்து மகிழ்ந்ததுண்டா
ஒருமுறையேனும்....?

-கோ. மன்றவாணன்



Thursday, 14 June 2018

வெல்லும் சொல்





              இன்னல் இழைக்காமல் இருந்ததில்லை
              எந்தப் போரும்

              ரத்த போதையில்
              ரவுடித்தனம் செய்கின்றன
              போரில் பெற்ற புகழெல்லாம்

              அசோகரைச் சாட்சித் தேரில்
              அழைத்து வந்து
              போதிக்கிறது வரலாறு
              போர் தீர்வாகாது என்று

              விடுதலைத் தவத்தில்
              வெற்றி கொண்டாடியது 
              காந்தியின் ஒருசொல்
                அகிம்சை

              கடைப்பிடியுங்கள்
              காந்தியத்தை
              நாடென்றாலும்
              வீடென்றாலும்

              அடங்கிப் போனது
              வெள்ளைச் சிங்கம் அன்று
              அகிம்சைப்புல் தின்று

             -கோ. மன்றவாணன்

Sunday, 10 June 2018

வாழ்க்கையெனும் போர்க்களம்

















முன்னோர்கள் அனுபவித்தார்கள்
முதலாம் உலகப்போர் ரத்த வெள்ளத்தை
இரண்டாம் உலகப்போர் கொலைபீடத்தை

நிமிடம்தோறும் அனுபவிக்கிறோம்
நிகழ்கால வாழ்க்கையில்.
மூன்றாம் உலகப் போரின்
முன்மாதிரியை

சொர்க்கம் போகவே ஆசை
சொக்கநாதனிடம் வேண்டுகிறார்கள்
அப்படியானால்
நாம்வாழும் வாழ்க்கை
நரகம்தானே

லஞ்சம் வஞ்சம் ஆடம்பரம்
மோசடி ஜாலம் கொடுந்தந்திரம்
இவையே வாழ்வென்றால்...
எதிர்கொள்வது போர்க்களம்தானே...

அடுத்த வீட்டில்
ஒப்பாரி பாடக் காரணமாகிவிட்டுத்
தன்வீட்டில்
தாலாட்டுப் பாடவே விரும்புகிறார்கள்

எல்லாரும் காந்தியாய் மாறுவது எப்போது?
இந்த வாழ்க்கை, பூவனமாய் மாறும் அப்போது!

-கோ. மன்றவாணன்

என்றும் என் இதயத்தில்...



















திமுதிமு என்று மோதும்
திருவிழா நெரிசலில் அவளிருந்தால்
அவளை மட்டும் படம்பிடித்து விடுகிறது
என் கண்கள்
எத்தனை தொலைவில் இருந்தாலும்

கடல்மணலில் அவள் நடந்துபோன போது
கவிதையாய் விட்டுச் சென்ற சுவடுகளைக்
காற்றுக் கலைக்கும்முன்
கண்களில் ஒத்திக்கொண்டு வந்துவிடுகிறேன்

நான்
இரவில் நிலவைக் கண்டாலும்
எட்டிப் பார்க்கிறாள் அங்கிருந்தும்

உலக
ஓவியர்கள் வரைந்த பெண்ணோவியங்களைக் காண
ஓவியக் காட்சிக்கு அவளுடன் சென்றேன்

அழகோவியங்கள் எழுந்துவந்து
அவளுக்கு மாலை சூட்டின

என்
இதயத்தைத் திறந்து உள்ளே சென்றவள்
பூட்டிக்கொண்டாள்


-கோ. மன்றவாணன்

யார் இட்ட சாபம்?




             சீர்இட்ட செய்யுள் போலச்
                  செப்பமாய் மிளிர்ந்த என்னைப்
             போர்இட்ட களமாய் மாற்றிப்
                  போட்டது எதனால்? யாரால்?
             நீர்இட்ட நெருப்பு அணைந்து
                  நீறென மாறல் போல
             யார்இட்ட சாபத் தாலே
                  என்வாழ்க்கை சாம்பல் ஆச்சு?

             நல்லதை விரும்பிச் செய்தேன்
                  நாடிது மதிக்க வில்லை
             உள்ளதை உரைத்து வைத்தேன்
                  உலகிது நம்ப வில்லை
             கல்லதை வைரம் என்பார்
                  கருமையை வெண்மை என்பார்
             சொல்லதை மாற்றிப் பேசும்
                  சூழ்ச்சியர் வெல்லு கின்றார்

             சட்டத்தைக் கற்றேன்; நீதி
                  சபையினில் நேர்மை இல்லை
             பட்டத்தைப் பெற்றேன்; எங்கும்
                  பணியது கிடைக்க வில்லை
             விட்டத்தைப் பார்த்துப் பார்த்து
                  வெறுங்கனா காணு கின்றேன்
             திட்டத்தை யார்தான் சொல்வார்
                  தேசத்தில் அறங்கள் வெல்ல?


             -கோ. மன்றவாணன்