Tuesday, 27 February 2018

எங்கும் எதிலும்








                 எங்கும் எதிலும் ஊழலப்பா
                 என்றும் நேர்மை வாழலப்பா
                 பொங்கும் பாலும் திரியுதப்பா
                 புனிதம் கருகி எரியுதப்பா

                 வாய்மை, பேச்சில் ஏதப்பா?
                 வாழ்க்கை முழுதும் சூதப்பா
                 தாய்மை கூடப் போலியப்பா
                 தர்மம் என்பது காலிடப்பா

                 கோவில் சொத்துப் பறிபோச்சு
                 கொலையும் களவும் உறவாச்சு
                 பாவம் செய்தல் நடப்பாச்சு
                 பாசம் கூட நடிப்பாச்சு

                 சட்டை மிடுக்கு வெள்ளையப்பா
                 சகல சொத்தும் கொள்ளையப்பா
                 பட்டை கொட்டை ஜொலிக்குதப்பா
                 பாலியல் சேட்டை கெலிக்குதப்பா

                 முகத்தில் சிரிப்புப் பொங்குதப்பா
                 முதுகில் கத்தி இறங்குதப்பா
                 அகத்தில் கரும்பேய் ஆடுதப்பா
                 அய்யோ... தெய்வம் வாடுதப்பா....

                 கோ. மன்றவாணன்




Friday, 23 February 2018

அந்நாளே திருநாள்






         வாடகை ஏதும் கொடுக்காமலே
         மாமரத்தில் குடியிருக்கும் அணில் சொன்னது :
         மாங்கனி பழுக்கும் ஒவ்வொரு நாளும்
         மனதினிக்கும் திருநாளே!

         நட்சத்திரக் கூட்டம் சொன்னது :
         மேகம் மறைக்காத இரவு ஒவ்வொன்றும்
         மின்னொளி வீசும் திருநாளே!

         என்வீட்டு ரோஜா செடி சொன்னது :
         எதிர்வீட்டு இளம்பெண் பூப்பறிக்கும் நாள் ஒவ்வொன்றும்
         காதல் தேசத்தை விலைபேசும் திருநாளே!

         சுவரில் வரைந்த காந்தி ஓவியம்
         சொன்னது :
         தவறியும் தீங்கிழைக்காத நாள் ஒவ்வொன்றும்
         மனித நேயத்துக்கு உயிரூட்டும் திருநாளே!

         அழிவின் விளிம்பில் இருக்கும் மரம் சொன்னது :
         வெட்டக் கோடரி எடுத்து வராத நாள் ஒவ்வொன்றும்
         பசுமை தீட்டும் திருநாளே!

         நீதிமன்றத்தில் சிறைபட்ட காவிரி சொன்னது :
         என்னை என்போக்கில் விடும் நாள் ஒவ்வொன்றும்
         எல்லையற்ற அன்பின் திருநாளே!

         ஆதார் இல்லாத தெருவாசி சொன்னது :
         ஒருவேளை உணவாவது கிடைக்கும் நாள் ஒவ்வொன்றும்
         இந்தியத் தாயின் கண்ணீர் துடைக்கும் திருநாளே!

         கோ. மன்றவாணன்

தனிமையோடு பேசுங்கள்






             தனிமையோடு பேசுங்கள் என்றார் யோகி
             என்முகம் பார்த்து

             யாருமற்ற பெரும்பரப்பில்
             அமர்ந்திருக்கிறேன்
             அலைமோதும் கற்பாறை மீது

             வெளியேறிச் சென்று
             விசாரிக்கிறது மனது
             இறந்தவர்களையும் தோண்டியெடுத்து

             கற்சிலை முன் பேசப் பேசக்
             காது முளைத்துவிடுகிறது
             கருங்கல் சுவர்களுக்கும்

             நம்பி உள்ளத்தைத் திறக்க முடிவதில்லை
             நான்கு திசைகளிலும் வேடர்கள்

             எனக்குள்தான் அழுகிறேன்
             எட்டிப் பார்க்கிறார்கள் யார்யாரோ...

             தனிமை இதுவென்று உடல் நம்பினாலும்
             கூட்ட நெரிசல் மனம்முழுவதும்
             கூச்சல் இட்டபடி

             சவக்குழிக்குள்  என்னைப் புதைத்துக்கொண்டு
             மவுனமாகப் பேசுகிறேன்
             மண் அதிர்கிறது

             எதுவுமற்ற மனவெளியில் பேச
             எதிர்பட்ட காட்டுச்செடி கொடிகளை வெட்டி
             இவ்வளவு தொலைவு வந்துவிட்டேன்

             கண்டறிகிறேன்
             எல்லாம் உண்டு இந்த உலகில்
             தனிமையைத் தவிர 

             கோ. மன்றவாணன்




கொண்டாடப்படும் தினங்கள்






           விழிபிடித்து அழைத்துச்செல்லும்
           விறுவிறுப்பான புதினத்தின் பக்கங்கள்தாம்
           ஒவ்வொரு நாளும்

           பூமி மாற்றி உடுத்தும்
           புத்தாடைகள்தாம்
           பருவ காலங்கள் யாவும்

           புவி
           புதுப்பித்துக்கொள்கிறது
           நாள்குளியல் செய்து

           வெற்றியாளர்கள்
           மெருகேறி மின்னுகிறார்கள்
           ஒவ்வொரு நாளையும் அலங்காரம் செய்து

           தாயைப் பழித்தவனையும் மன்னித்துவிடு
           தப்பவிடாதே
           நாளைப் பழிக்கும் சோதிடத்தை

           வானவில் அழகெனவே
           வசீகரித்து வண்ணம் பூசுகின்றன
           வார நாட்கள்

           நேற்று என்பது ஒத்திகை
           இன்று என்பது அரங்கேறும் நாடகம்
           நாளை என்பது விருதுபெறும் வைபவம் 

           உன்னை நம்பி உழை
           எல்லா நாட்களும்
           கொண்டாட்ட தினங்கள்தாம்


           கோ. மன்றவாணன்



வஞ்சம் செய்வாரோடு...







             ஆனாலும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்
             வசீகர முகம்
             வஞ்சனைக்கு

             அது
             முகத்தோல் உரிக்கும்போது
             முழுவதும் நீலம் பாய்ந்திருக்கும் நம்வாழ்க்கை

             வஞ்சச் சோறு தின்றே தடித்திருக்கின்றன
             எந்த இதிகாசமும்
             எந்தக் காவியமும்

             உன்கையே வாள்தூக்கும்...
             உன்தலையை வெட்டி வீழ்த்தும்...
             வேடிக்கை பார்த்து
             வெற்றியைக் கொண்டாடும்
             விசை அழுத்திய வஞ்சம்

             அன்பெது வஞ்சமெது
             பிரித்தறிய ஒரு பறவையுமில்லை
             பெருவெளியில்

             யாரறிவார்
             ஆசி வழங்கும் துறவிக்கும்
             அந்தப்புரங்கள் உண்டு

             “வஞ்சனை செய்வாரோடு இணங்க வேண்டாம்”
             வா... புலவனே...
             வந்து அடையாளம் காட்டு!

             கோ. மன்றவாணன்




Tuesday, 30 January 2018

நல்லதோர் வீணை



                          




           பூதத்திடம் கொடுத்துவிட்டுப்
           போனவர்
           திரும்பி வந்து பார்த்தார்
           மாறி இருந்தது
           நல்லதோர் வீணை
           நல்லதோர் விறகாய் நெருப்பில்

           நவீன
           நாரதரிடம் வந்து சேர்ந்தது
           நல்லதோர் வீணையொன்று
           கைவிரல் படாமலே ஒலிக்கிறது
           கலக ராகம்

           அடகு வைக்கப்பட்டது வீணை
           மீட்டவோ
           மீட்கவோ
           வரவில்லை ஏழைக் கலைஞன்

           அரசியல்வாதிக்கு
           அன்பளிப்பாகத் தரப்பட்ட
           வீணைக்குக் கோபம்
           தற்கொலை செய்துகொண்டது
           தரையில் விழுந்து

           கல்வி அமைச்சர் நடத்தும்
           கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்ட
           கலைமகள் சிலையின் கையில்
           பொன்முலாம்
           பூசப்பட்ட வீணை
           மாறி மாறி மாயாஜாலம் காட்டியது
           வாய்பிளக்கும் உண்டியலாய்


           குழந்தைகளுக்கான வீணைகளைச் செய்து
           கூடையில் வைத்துக்
           கூவிச் செல்கிறார் கிழவர்
           துப்பாக்கிப் பொம்மைகளை வைத்து
           சுடுகின்றன குழந்தைகள்
           கிழவரை நோக்கியே

             -கோ. மன்றவாணன்



Monday, 22 January 2018

தூரத்து வெளிச்சம்





              தூரத்து நட்சத்திரம்
              துணைக்கு வரும்
              தொலைவைக் கடக்கலாம்

              உச்சிவான் நிலவு
              உடன் வரும்
              இருள்பயம் நசுக்கி நடக்கலாம்

              இருள்காட்டில்
              இரவுக்கூட்டில்
              ஏற்றிவைப்பார் அகல்விளக்கு ஒருவர்
              கண்முளைக்கும் அப்போது
              காட்டுக்கும்

              இருட்டுப் பள்ளத்தாக்கில் இருந்து
              ஏற முயல்கிறோம் எல்லாரும்
              ஒளியை அள்ளி உடலில் பூசிக்கொள்ளவே

              வேதங்கள் விளக்குகின்றன
              “ஒளியால் நிரம்பிய உடல்தான்
              எந்தக் கடவுளுக்கும்”

              ஒளி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது
              “நம்பிக்கையின் உயிர்வடிவம்
              நான்”

              சுற்றிலும் இருள்வெளி
              தூரத்தில் சுடர்த்துளி
              போதுமே வெற்றி உன்னருகே....


              -கோ. மன்றவாணன்

Tuesday, 16 January 2018

யுத்தம் செய்யும் கண்கள்





              வேல்விழி என்றும்
              வாள்விழி என்றும்
              புலவர்கள் சொன்னபோதே
              புரிந்தது
              போர்செய்யும் கண்கள் இவையென்று

              மாமன்னர்களும்
              மகாகவிஞர்களும்
              போரில் தோற்றவர்களே
              அந்தரங்க வரலாறு
              அவிழ்க்கப்பட்டால்

              ராணுவ ரகசியங்களைக்
              ராத்திரியில் கைப்பற்றும் ராசி
              பெண்ணுக்கு உண்டு
              அவளின்
              கண்ணுக்கு உண்டு

              நீர்மூழ்கிக் கப்பல்போல்
              வெளித்தெரியாமல் சென்று
              வீழ்த்தும் சக்தி
              விழிகளுக்கு உண்டு
              வீழ்ந்தவர் சொன்ன மெய்யிது

              கவிபேசும் கண்களுக்குள்
              ஆயத்தமாய் இருக்கும்
              ஆயுதக் கிடங்கு  

              தோற்றுப் போவதே
              சுகம்
              யுத்தம் செய்யும் கண்களிடம் சரண்அடைந்து

                -கோ. மன்றவாணன்

Thursday, 11 January 2018

வீணையின் நாதம்



                                  


                மிழற்றிப் பாருங்கள்
                மெதுவாக வீணையை

                அறிவீர்கள்
                இரும்புக் கம்பிகளுக்குள்
                இனிய இதயம் உண்டு
                என்பதை!

                விரல்களின் மொழிபுரிந்து
                உரையாடுகிறது
                வீணை
                உலகப் பொதுமொழியில்

                எந்த ஓவியரால் வரைய முடியும்
                கையில் வீணை இல்லாமல்
                கலைமகளை?

                யாரால் கண்டுபிடிக்க முடியும்
                இந்த வீணைக்குள்
                எத்தனை பாடல்கள்?

                நாணமுண்டு வீணைக்கும்
                நங்கையின் கைதொடும்போது!
                ஞானமுண்டு வீணைக்கு
                நம்மனதைத் தொட்டுச் சுகமாக்கும்போது!

                வீணையின் நாதம் கேளுங்கள்
                உங்கள் உள்ளம்
                ஒரு கோவிலாகும்….

                   -கோ. மன்றவாணன்



Friday, 5 January 2018

நினைவுப் பெட்டகம்




               நின்று பார்த்திராத
               கால தேவதையின்
               காலடித் தடங்களைப் பாதுகாக்கிறது
               வரலாறு

               உதிர்ந்த இலைகளின் நினைவு நிழலாடுகிறது
               தளிர்விடும்
               புதிய இலைகளில்

               சோகத்தையும்
               சுகமாக்குகிறது யாருக்கும்
               முதல்காதலின் நினைவு

               நேற்றைப் புறக்கணித்துவிட்டு
               நாள் நடக்க முடியாது என்று
               ஞாபகப்படுத்துகின்றன
               நேற்றுச் சுட்ட இதே சூரியனும்
               நேற்றுக் குளிர்ந்த இதே நிலாவும்

               நினைவு தன்னைத் தானே
               முடிச்சிட்டுக்கொள்கிறது
               ஒவ்வொரு மரணத்திலும்

               அந்த
               மரணத்திலிருந்தும் ஒரு நினைவு
               கொழுகொம்பு தேடிக்கொள்கிறது

               நீ வேறு
               நினைவு வேறு அல்ல என
               மனக்கிளையில் அமர்ந்து பாடுகிறது
               வாழ்க்கைக்கிளி

               காலமும் உன்னைக்
               கைகூப்பி வணங்க
               நினைவுப் பெட்டகங்களில்
               நிரம்பி ஒளிரட்டும் நன்னெறிகளே…

               நினைவுப் பள்ளியில் பாடம் பயின்றே
               வரவேற்கிறது
               வருங்காலம்


              -கோ. மன்றவாணன்

Saturday, 30 December 2017

கொண்டாட்ட தினங்கள்







                 விழிபிடித்து அழைத்துச்செல்லும்
                 விறுவிறுப்பான நாவலின் பக்கங்கள்தாம்
                 ஒவ்வொரு நாளும்

                 பூமி மாற்றி உடுத்தும்
                 புத்தாடைகள்தாம்
                 பருவ காலங்கள் யாவும்

                 புவி
                 புதுப்பித்துக்கொள்கிறது
                 நாள்குளியல் செய்து

                 வெற்றியாளர்கள்
                 மெருகேறி மின்னுகிறார்கள்
                 ஒவ்வொரு நாளையும் அலங்காரம் செய்து

                 தாயைப் பழித்தவனையும் மன்னித்துவிடு
                 தப்பவிடாதே
                 நாளைப் பழிக்கும் சோதிடத்தை

                 வானவில் அழகெனவே
                 வசீகரித்து வண்ணம் பூசுகின்றன
                 வார நாட்கள்

                 நேற்று என்பது ஒத்திகை
                 இன்று என்பது அரங்கேறும் நாடகம்
                 நாளை என்பது விருதுபெறும் வைபவம்


                 உன்னை நம்பி உழை
                 எல்லா நாட்களும்
                 கொண்டாட்ட தினங்கள்தாம்


                -கோ. மன்றவாணன்


Thursday, 21 December 2017

மனத்திற்கு இட்ட கட்டளை







               முப்படை வந்தாலும்
               எப்படை வந்தாலும்
               சிறைப்படுத்த முடியாது
               மனத்தை 

               திண்டுக்கல் பூட்டுண்டு
               திறவுகோல் உண்டு
               வீட்டுக்கு!
               வானமாய்ப் பரந்து கிடக்கும்
               மனத்துக்கு?

               ஊரை அடித்துச் செல்லும்
               கரையுடைத்து வரும்
               காட்டு வெள்ளம்

               முட்டுக்கட்டை இல்லாத தேர்
               பலருக்குப்
               பலிபீடம்        

               மூக்கணாங்கயிறு இல்லாத மாடு
               குடைசாய்ந்து கிடக்கிறது
               வண்டி

               காமிரா கண் ஏமாறவில்லை
               துறவறம் பூண்ட சாமியும்
               காமப் பஞ்சணையில் 

               கட்டளை இடாவிட்டால்
               உன்னைச் சிறையில் தள்ளி
               வெளியில் திரியும் மனம்

               மனத்திற்குக் கட்டளையிட
               மந்திரம் தேடி அலையாதே

               குணத்தால் நிரம்பு
               மனம் அடங்கும் உனக்கு
                     

                 -கோ. மன்றவாணன்

பெண் எனும் பிரபஞ்சம்





                 மண்ணுக்கும் விண்ணுக்குமாக
                 மாளிகை கட்டிவைத்தென்ன
                 வாழ
                 யாருமில்லை எனில்...

                 பெண்ணெனும் உயிரூற்று இல்லெனில்
                 பிரபஞ்ச அறைகளில் இருந்து
                 வெளியேறி மரித்துப்போகும் காற்றும்

                 பிரபஞ்ச மாடத்தில் ஒளியேற்றுவாள்
                 பெண்,
                 மதியும் கதிரும் இல்லெனினும்

                 பெண்ணில்லாத உலகை விரும்புவதில்லை
                 கவிஞர் மட்டுமல்லர்
                 கண்ணில்லாதவரும்

                 பிரபஞ்சத்தின் ருசியைத் தேடி அலைந்தால்
                 பெண்ணில்தான் முடியும்

                 பிரபஞ்சத்தின் விதியைப் படிப்பதென்றால்
                 பெண்ணில்தான் தொடங்கும்

                 உயிர் ரகசியம் கற்றிருந்தால் போதும்...

                 பெண்ணுக்குள்ளே
                 பிரபஞ்சம் காணலாம்
                 பிரபஞ்சத்துக்குள்ளே
                 பெண்ணைக் காணலாம்.

                 பிரபஞ்சத்தின் சக்தி உனக்குள்ளும் சுழலும்...
                 பெண்ணைக் காதலித்துப்பார்!


                 -கோ. மன்றவாணன்