Tuesday, 23 May 2017

சுமைகளும் சுகங்களும்




 


மேனி மின்ன
நிறைமாதக் கருசுமந்து
நடக்கிறாள் என்பதைவிட அசைகிறாள்

தோளில்
துணித்தூளி கட்டி நடக்கிறாள்
கந்தல் விலக்கி
கங்காரு குட்டிபோல் எட்டிப்பார்க்கிறது இவ்வுலகை
குறுகுறு குழந்தை

முள்மர விறகுகளை
முடியில் சுமந்து போகிறாள் பெண்ஏசுவாய்
விற்றபின் கிடைக்கும் பணத்தில்
கனவுகளை உயிர்ப்பிக்க

வெள்ளருவியைப் பானையில் பொத்தி
இடைச்சுமை ஏற்றி வருகிறாள்
சற்றே உடல்நெளிந்து

சுமைகளை அவிழ்க்கும்போது
கொட்டுகின்றன
சுகப்பரல்கள்

உங்கள் துக்கம் மகிழ்ச்சியாக மாறும் எனச்
சொன்னது வேதம்
உங்கள் சுமை சுகமாக மாறும் எனச்
சொல்லிச் செல்கிறாள்
மற்றொரு வேத வாக்காய்

கிளைகள் தோறும்
கனிகள் சுமப்பதால்
எந்த மரமும் முறிந்து விழுவதில்லை


-கோ. மன்றவாணன்





Tuesday, 16 May 2017

ஒற்றைச் சிறகோடு

Image result for single wing bird



                 நடுக்கடலில் தத்தளிப்பவனுக்கு
                 எட்டிப் பிடிக்க
                 மரத்துண்டு அனுப்பும் காற்று

                 இருட்டில் வழிகாட்ட
                 மின்மினி பூச்சி வரும்

                 பசியோடு வந்தவள்முன்
                 மரம் உதிர்க்கும்
                 கனி

                 இயலாதவர்கள் முன்னால்
                 கருணை தெய்வம்
                 அவதரிக்கும்

                 கதியற்றோரை அணைக்க
                 எட்டுத் திசைகளிலும் கைகள் நீட்டி நிற்கிறாள்
                 இயற்கைத் தாய்

                 இதை
                 நம்பத்தான் முடியவில்லை
                 நேற்றுவரை


                 வீட்டு வாசலில்
                 குருவிக்
                 கோலம் போட்டிருந்தாள் என் மனைவி

                 அதில் வந்துவிழுந்தது
                 ஒற்றைச் சிறகோடு ஒரு குருவி

                 அதை
                 மெல்லெனத் தாங்கிச்சென்று
                 மெத்தைமீது வைத்துக் கொஞ்சுகிறாள்
                 என் செல்லக்குட்டி வர்ஷா

                 தக்காளி நறுக்கித் தருகிறாள்
                 தயிர்ச்சோறு ஊட்டுகிறாள்

                 மடியில் வைத்தபடி
                 வீட்டுப் பாடம் எழுதுகிறாள்

                 குருவியோ
                 குழந்தையைப் போல் தத்தி நடந்து
                 ரேஷன் அட்டையில் பெயரெழுதாத
                 உறவானது

                 ஒற்றைச் சிறகு குருவிக்குத்
                 திறந்தது
                 இன்னொரு வானம்           


                   -கோ. மன்றவாணன்

Wednesday, 10 May 2017

நீர்வற்றிய குளம்




Image result for Pond without water




          வால்நெளித்து
          வந்த மீன்கள் கிச்சுக்கிச்சு செய்து
          அலைகளில் கவியெழுதி
          ஆழத்தில் கண்ணாமூச்சி ஆடினவே....

          மீனுக்குப் பொரிபோட்ட
          அருளாளர்கள்
          என்னை மறந்தனரே...

          என்வருத்தம் உணர்ந்த
          கரையோரத்து மரங்கள்
          மலராடை அணிவித்து
          மதிப்பூட்டினவே....

          இன்று
          மழைச்சொட்டு இல்லாமல்
          நா(ன்) வறண்டு கிடக்கிறேனே....

          நான்
          தீர்ந்து போனதால்
          திருக்கோயில் சாமிகளுக்குத்
          தினக்குளியல் இல்லையாமே..

          குடங்களைச் சாய்த்து
          என்னை அள்ளி அணைத்து
          இடையழகில் குழந்தையென அமர்த்தி
          ஊர்வலம் சென்ற மென்மகளிர்கள்
          இனி
          எப்போது திரும்புவார்கள்?

          என் மீது
          அடுக்கு வீடுகள் கட்ட
          நீள அகலம்
          அளந்துவிட்டுப் போனார்களே
          நேற்று.

          குளமாக இருந்த என்னை
          மட்டைப்பந்து களமாக ஆக்கி
          விளாசுகிறார்களே
          ஆறாக !

          ஆறாக ஆசைப்பட்டு-
          குளமாக வாழ்க்கைப்பட்டு-
          களமாக வறுபட்டுக் கிடக்கும் என்னை....

          எந்த இராமன் திருவடி மிதித்துக்
          கங்கையின்
          குழந்தையாக
          உயிர்ப்பிப்பான்?

          

          கோ. மன்றவாணன்





Friday, 5 May 2017

கொத்திச் செல்வேன் வானத்தை...





Image result for self confidence images


இருகை இல்லாத மனிதன்
சொன்னான் :
“இந்த உலகம்
என் மடியில்”

காலில்லாத மனிதன் எழுதினான் :
“இந்த உலகம் சுற்றிவரும்
என்னை”

சிறகில்லாத பறவை சொன்னது :
“குளத்தில் அலகு நுழைத்துக்
கொத்திச் செல்வேன் வானத்தை”

இறுகிய
கல்பாறையில் முளைத்த விதை சொன்னது :
“தடையொன்றும் இல்லை கண்ணா”

நம்பிக்கை சொன்னது :
“எந்த இழப்பையும் தாண்ட முடியும்
மனக்கோல் ஊன்றி”

புதிய பக்கத்தைத் திறந்துவைத்து
வரலாறு சொன்னது :
“வா சாதிக்க”

-கோ. மன்றவாணன்


Monday, 1 May 2017

கோடை மழை




         Image result for rain



             மேகங்கள்
             வெளிநாடு சென்றனவோ
             கோடை விடுமுறைக்கு?

             வருணன்
             தலைமறைவாக இருக்கிறானாமே
             என்ன குற்றம் செய்தான்?

             வெண்பஞ்சு அருவியில் நீராடிய
             எங்களைச் சோதிக்கவா
             வியர்வைக் குளியல்?

             கார்ஓடும் நெடுஞ்சாலைகளில்
             கானல்நீர் ஓடுகிறதே
             கண்ணுக்கு எட்டிய தூரம்

             நிலா இரவில்
             வீட்டுக் குழாயைத் திறந்தால்
             சுட்டு விடுகிறதே வெந்நீர்

             சருகுகளாகி
             விறகுகளாகிக் கிடக்கின்றனவே
             காடுகள்

             மழைதெய்வமாம்
             மாரியம்மனுக்கு ஊர்தோறும் கோயில்கள்

             அம்மனின் வேக்காட்டைத் தணிக்க
             இளநீர்
             சந்தனம்
             தயிர் என அபிஷேகம் நாள்தோறும்

             சாமி வெப்பம் தணிக்கின்றோம் நாங்கள்
             பூமி வெப்பம் தணிக்க
             சாமி நினைக்காதா?

             சுற்றிலும்
             துயர்பெருகிச் சுடும்போது
             உதவும்
             உள்ளத்துக்கு உவமை கேட்டேன்

             பதில் சொல்லும் வகையில்
             கோடையில்
             கொட்டியது மழை!

              
             -  கோ. மன்றவாணன்






Thursday, 27 April 2017

சூரிய தாகம்


                                       சூரிய தாகம்




            
Image result for sun

       
                தூரத்தில் இருந்தபடியே
                சூரியன் நாவு
                எங்களூர்
                குளத்து நீரைக்
                குடித்துவிட்டது
                மாயக் குழாய்போட்டு.

                இப்படியே போனால்
                கடல்
                திடல் ஆகும்

                நம்
                ஒவ்வொருவருக்குள்ளும்
                சுட்டுக்கொண்டிருக்கிறது
                குட்டிச் சூரியன் ஒன்று

                அதன்தாகம் தணிக்க
                தீரா நதியொன்று தேவை

                வேட்கை தீர்க்காது பூந்தேன் என்று
                சிற்றோடை தேடிச் சோர்கிறது
                பட்டாம்பூச்சிக் கூட்டம்

                சூரியனின் எச்சில் பட்டிருக்குமோ...
                இளநீர்க்குள்ளும்
                சுடுநீரே!


                வெய்யில் போர்த்திய என் பகலில்
                உப்பளங்களும்
                கொப்பளங்களும்

                நெருப்புலை எதற்கு?
                கத்தி செய்ய
                கத்திரி வெய்யில் போதும்

                இந்த
                வெய்யில் பூமிக்கு முகம்காட்ட
                நிலவும் அஞ்சுகிறதாம்
                அதன்
                அழகிய முகத்திலும்
                அம்மைப்புண் வந்துவிடுமோ என்று!

                தாகம் தீர்க்காத
                வியர்வைக் கசிவு மட்டுமே
                சூரியனின் மாற்றீடு

-                                                                                                                            கோ. மன்றவாணன்




Tuesday, 18 April 2017

கைகோர்ப்போம்




        கை கோர்ப்போம்



உதிரிப் பூக்களை
ஒன்று சேர்த்தால்
மாலை 

நட்சத்திரங்களைக்
கூட்டமாகப் பார்த்தால்
ஒளிமாநாடு

வெட்டுக் கத்திகளாக இல்லாமல்
ஒட்டுப் பசையாக மாறட்டும்
குடும்ப நீதிமன்றங்கள்

பிரிந்து வேண்டினால்
திரும்பிக் கொள்வான்
உன் தேவனும்.

கைகோர்த்து நின்றால்
தோற்றுத் திரும்பும்
சுனாமியும்

முகம்பார்க்க வைப்போம்
நவகிரகங்களை

மொழி,இனம்,மதம்,நாடு
தாண்டி வந்து
மனம்கோர்த்து ஆடுவோம்!



-    கோ. மன்றவாணன்

Sunday, 16 April 2017

பச்சை நிலம்



                 பச்சை நிலம்

                         Image result for dead tree painting
          

                  சோறு தண்ணீர் இல்லாமல்
                  சோர்ந்திருக்கும்
                  நூறு வயது கிழவியின்

                  தளருடல் முழுவதும்
                  தோல்வறண்டு
                  ரேகைகள் நெளிவதுபோல்

                  வெடித்து மல்லாந்து கிடக்கிறது
                  வயல்வெளி !

                  பசும்புல் தேடி
                  ஏமாந்து திரும்பும்
                  எங்களூர் மாடுகள்
                  காகிதம் தின்னக்
                  கற்றுக்கொண்டன.

                  பச்சைப் புற்களையும்
                  பசும் மூங்கில்களையும்
                  ஞெகிழியில் செய்து
                  வீட்டுக்குள் தோட்டமிட்டு
                  விழிகளை ஏய்க்கிறார்கள்.

                  இனி
                  ஓவியத்தில் மட்டுமே
                  பார்க்க முடியுமாம்
                  பச்சை நிலத்தை.

                  முன்னறி ஞானம்கொண்ட எங்கள்
                  முன்னோர்கள்
                  காகிதத்தில் செய்த
                  மாவிலைத் தோரணத்தைக்
                  கண்டுபிடித்துவிட்டார்கள்
                  கடந்த நூற்றாண்டில்

                  மெழுகுத் தாளில் தயாரித்த
                  வாழை இலையில்
                  மணவிருந்து பரிமாறுகிறோம் நாம்
                  இந்த
                  நூற்றாண்டில்

                  நாளைய
                  சருகு தேசத்தில்
                  பச்சை நிலம்காண முடியும்
                  என்கிறார் உளமருத்துவர்,
                  மாயக்காட்சி காணும்
                  மனப்பிறழ்வு நோயிருந்தால்


-                                                                                           -கோ. மன்றவாணன்