Monday, 27 April 2020

கேட்காமலே சொல் பூத்தது...

















கேட்காமலே சொல் பூத்தது...

கோ. மன்றவாணன் 

கொரோனா என்ற தீநுண்மியின் பரவலால் சாவு அச்சத்தில் உலகமே உறைந்து கிடக்கிறது. இதற்கு முன்தடுப்பு மருந்து இல்லை. இந்நோய் தொற்றிய பின்னும் அதிலிருந்து மீளவும் மருந்து இல்லை. இந்நிலையில் இந்தத் தீநுண்மி தொற்றாமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதே தற்போதைய அறிவார்ந்த ஏற்பாடு. அதற்காக விழித்திரு விலகிஇரு வீட்டிலிரு என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விட்டிருக்கிறது. தனிமனித இடைவெளியும் கைகழுவுதல் உள்ளிட்ட தூய்மை ஒழுக்கங்களைப் பேணவும் சொல்கிறார்கள். இன்றியமையாத காரணங்களுக்காக வெளியில் வரும்போது Face Mask ஐ கட்டாயமாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். தற்போது வீட்டில் இருக்கும்போதும்கூட அதனைப் பொருத்திக்கொள்ளச் சொல்கிறார்கள்.

இந்த Face Mask என்ற சொல்லுக்கு முகக்கவசம் என்ற சொல்லை ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. இதனால் பட்டிதொட்டி எங்கும் இந்த முகக்கவசம் என்ற சொல் பரவி உள்ளது. இந்தச் சொல்மீது சிலருக்கு ஏன் ஒவ்வாமை ஏற்பட்டது என்று தெரியவில்லை. முகநூல் பக்கங்களிலும் வினவி (Whatsapp) பதிவுகளிலும் Face Mask என்ற பிறமொழி சொல்லுக்குத் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கப் பலரும் முயன்று வருகின்றனர் என்பதை வளவ. துரையன் அய்யா அவர்கள் வழியாக அறிந்தேன். அவற்றுள் முகக்கவசம் என்ற சொல்லையும் தாண்டி அழகான செறிவான சொல்கிடைத்தால் நம் தமிழுக்கு நல்வரவுதானே.

முகமூடி, முகத்திரை, முகக்கவசம், முகவணி, முகமி ஆகிய சொற்களைப் பேராசிரியர் வ. ஜெயதேவன் பரிந்துரைத்து இருக்கிறார். முகக்காப்பு, முகமறைப்பு, முகவட்டு, முகவுறை, முகழி, மூக்குமூடி, சுவாசக் கவசம், சுவாசக் காப்பு, எச்சில் சளிக்கவசம், எச்சில் சளித் தொற்றுக் காப்பான், ஆகிய  சொற்களையும் பலர் தெரிவித்துள்ளனர். மேலும் பல அருமையான சொற்களைப் பலர் உருவாக்கி முகநூலில் வலம் வந்துகொண்டு இருக்கலாம். 
   
பேராசிரியர் மதிவாணன் பாலசுந்தரம் அவர்கள் மேற்கண்ட சொற்களைப் பார்க்கையில் அவருக்குப் பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கிய நூலில் இடம்பெற்ற மெய்ம்மறை என்ற சொல் நினைவுக்கு வந்துள்ளது. அச்சொல் போர்புரியும்போது மெய்யை மறைத்துப் பாதுகாக்கும் கவசத்தைக் குறிக்கிறது. அச்சொல்லில் இருந்து முகமறை என்ற சொல் Face Mask என்பதற்குப் பொருத்தமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இச்சொல்லுக்குத் தமிழ்அறிஞர்கள் தமிழ்ஆர்வலர்கள் இடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.

புதுச்சொல் ஆக்கங்களில் பலரையும் ஈடுபடுத்தி வருகிற சங்கரன்கோவில் அருணகிரி என்பவர் வாய்மூக்கு மூடி என்று பாமர மக்களுக்குப் புரியும்படி சொல் ஆக்கியுள்ளார். சுவாசக் கவசம், சுவாசக் காப்பு எனப் பலர் தெரிவித்துள்ள நிலையில் மூச்சுக் காப்பு என்ற மிகுபொருத்தமான சொல்லை இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.
     
தற்காலத்தில் புதுச்சொல் கண்டறிவதில் மக்கள் ஈடுபாடு உள்ளது என்பது தமிழின் வளர்ச்சிக்கு உகந்த நற்போக்குதான். மக்களில் ஒருவனாக நானும் Face Mask என்பதற்கு வேறு ஏதேனும் சொற்கள் கிடைக்குமா என்று சிந்தித்துப் பார்த்தேன்.

ஊறுகாய் போடும்போதோ வேறு பயன்பாட்டுக்கோ பாத்திரத்தின்... பானையின் வாயைத் துணியால் மூடிக் கட்டி வைப்பதற்கு வேடு கட்டுதல் என்பர். வேடு என்ற சொல்லே மறைத்தலைக் குறிப்பதுதான். அதனால் முகவேடு என்று சொல்லலாமா என்று நினைத்தேன். அச்சொல் பொருத்தமாகத்தான் இருக்கிறது. அச்சொல் முக வேடு என்றும் முக ஏடு என்றும் பிரிந்து பொருள்தருகிறது. முக ஏடு என்றாலும் அதுவும் ஒருவகையில் பொருந்திதானே வருகிறது எனக் கருதினேன்.

அடுத்ததாக மார்புக்கச்சை, இடுப்புக்கச்சை நினைவுக்கு வந்தன. அதனை அடியொற்றி முகக்கச்சை என்ற சொல்லும் மிகச்சரியாகப் பொருந்தும் என்று அறிந்தேன். மேலும் முகச்சீலை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் எனவும் கருதினேன். ஆனால் இவையாவும் தற்காலப் பேச்சாடலுக்கு எளிதாக  இல்லை.

முகமூடி, முகத்திரை ஆகிய சொற்கள் புழக்கத்தில் உள்ளன. இச்சொற்களும் Face Mask என்பதற்கு முழுமையாகப் பொருந்தும். ஆனால் முகமூடி என்ற தற்கால வழக்கில் நல்லவர்களைக் குறிக்காமல் திருடர்களை, வஞ்சகர்களைக் குறிக்கவே பயன்படுகின்றன. அதுபோலவே முகத்திரை என்ற சொல்லும். “உன் முகத்திரையைக் கிழிப்பேன்” என்று நடித்து ஏமாற்றுவோரைப் பலர் எச்சரிப்பதைக் கேட்கலாம். ஆகவே புழக்கத்தில் வேறு பயன்பாடுகளுக்கு வந்துவிட்ட அந்தச் சொற்களைத் தவிர்க்கலாம். முகவணி என்ற சொல்லில் அணி என்பது காதணிபோல் அழகியல் சார்ந்தவற்றை அணிவதாகப் பொருள்படுகிறது. மாஸ்க் என்பது அழகியல் சார்ந்த அணிகலன் இல்லை.

இப்படி முடிவுக்கு நான் வருகையில் நண்பர் ஒருவர் கேட்டார். கவசம் என்பது உலோகம் போன்ற கடினமான பொருளால் உருவாக்கப்பட்டதைத்தான் குறிக்கும். அதனால் அதைப் போரில் தமிழர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் மாஸ்க் என்பதில் மென்மையான வளைந்து கொடுக்கும் தன்மையினான துணி போன்ற பொருள்களால் ஆனது என்றார். அதுகுறித்தும் ஆராய்ந்து அவரிடத்தில் தெரிவித்தேன். போரில் பயன்படுத்தப்பட்ட கவசம் அப்படிப்பட்டதுதான். சென்னைப் பல்கலைக் கழகம் உருவாக்கிய தமிழ்ப்பேரகராதியில் கவசம் என்பதற்கு மெய்புகு கருவி, இரட்சை, காயத்திற்கு இடும் கட்டு, மருந்தெரிக்கும் பாண்டங்களை மூட இடும் சீலைமண் எனப் பொருள்கள் தரப்பட்டுள்ளன. மந்திரங்களால் உருவாகும் பாதுகாப்பைக் குறிப்பதாகவும் சுட்டப்பட்டுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக “உளத்தாற் கவசமுரைத்து” என்ற சைவ சமய நெறியில் குறிப்பு உள்ளது. ஆக மேலே சொன்னவாறு கவசம் என்பது உலோகத்தால் ஆன கருவியாகவும், துணியாலான ஆடையாகவும் மண்ணாலான ஏடாகவும், சஷ்டி கவசம்போல் உள்ளத்தால் உணரும் பாதுகாப்புக்கு உரியதாகவும் உள்ளது. எனவே கவசம் என்ற அச்சொல் வளைந்துகொடுக்கக் கூடிய பொருள்களால் உருவாகும் மாஸ்க் என்பதற்கும் பொருந்தும்.

ஊடகங்களில் முகக்கவசம் என்ற சொல் பரவலாகிவிட்டது.  பயன்பாட்டிலும் வந்துவிட்டது. எனவே முகக்கவசம் என்ற சொல்லே இருந்து விட்டுப் போகட்டுமே என்று நான் சொன்னேன். அதற்கு எதிர்ப்புரை எழுதியவர்கள் உண்டு. அவர்கள் அனைவரும் சொல்லும் காரணம் கவசம் என்பது வடசொல். சமஸ்கிருதச் சொல்லைத் தவிர்ப்பதற்காகவே வேறு புதுச்சொல் தேடுகிறோம் என்றனர்.

கவசம் என்ற சொல்,  வடமொழிச் சொல்தானா என அறிய முயன்றேன். கலசம் என்ற வடசொல் இருப்பதால் கவசம் என்பதும் வடசொல்லாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள். மேலும் கந்தசஷ்டி கவசம், கண்ணதாசன் எழுதிய கிருஷ்ண கவசம் போன்ற நூல்களைக் காணும் போது கவசம் வடமொழிச் சொல்லாகத்தான் இருக்கும் என்று மயங்குகிறார்கள். மறைமலை  அடிகளின் மகள் நீலாம்பிகை அவர்கள் தொகுத்த வடமொழி தமிழ் அகர வரிசை என்ற நூலிலும், மொழியாய்வு அறிஞர் ப. அருளி அவர்கள் தொகுத்த அயற்சொல் அகராதி என்ற நூலிலும் கவசம் என்ற சொல்லைத் தேடினேன். அச்சொல் அந்த அகராதிகளில் இல்லவே இல்லை. இரண்டாயிரம் ஆண்டு பழமையான சங்க இலக்கியங்களில் கவசம் என்ற சொல் உள்ளதா என்றால் உள்ளது. புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய என்ற வரி புறநானூறு 13 ஆவது பாட்டில் உள்ளது.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலியில் கவசம் குறித்துத் தேடினேன். அதில்      கவ்வு – கவ்வியம் – கவயம் – கவசம் என அச்சொல் உருவான முறை சொல்லப்பட்டு உள்ளது. ஆகவே கவசம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கும் என்றே நம்புகிறேன். இச்சொல் வடமொழிக்குச் சென்று புழங்கி இருக்கலாம். ஆகவே தலைக்கவசம் எனச்சொல்லலாம். அச்சொல்லில் தமிழ்த்தாய் பாதுகாப்பாகவே இருக்கிறார்.

இதில் ஓர் ஐயம் யாருக்கேனும் இருக்குமானால் அவர்களுக்கு நான் பரிந்துரைப்பது. கவசம் என்பதற்கு இணையான ஒருசொல் காப்பு என்பதாகும். காப்புக் கட்டுதல் என்ற சொல்வழக்கையும் இங்கே ஒப்பீடு செய்துகொள்ளலாம். ஒன்றை மறைத்தலைவிட, காப்பது சரியான பொருளுணர்த்தல் ஆகும். ஆகவே தலைக்கவசத்தைத் தலைக்காப்பு என்றும் முகக்கவசத்தை முகக்காப்பு என்றும் சொல்லலாம்.

“அங்க என்னாங்க பண்றீங்க”ன்னு என் மனைவி தொலைவில் நின்று கேட்டார். “மாஸ்க் என்பதற்குத் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கிறேன்” என்றேன். “அவனவன் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான். நீங்க சொல்லக் கண்டுபிடிக்கிறீங்களா? மொதல்ல உங்க சொல்லப் பேசறதுக்கு மக்கள் உயிரோட இருக்கணும்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். நானும். உள்ளே போய்ப் பார்த்தேன். மறந்து எங்கோ வைத்துவிட்ட தொலைஇயக்கியைக் (ரிமோட்) கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தார்.

நன்றி :
திண்ணை
19-04-2020





Monday, 6 April 2020

தமிழின் சுழி



















தமிழின் சுழி

கோ. மன்றவாணன்

பதிமூணாவது சரியா... பதிமூனாவது சரியா என்று வளவ. துரையன் அய்யா அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். 13 என்ற எண்ணே பலரைப் பயமுறுத்தக் கூடியது. அவர்களைக் கேட்டால் 13 என்ற எண்ணே சரியில்லை என்பார்கள். 

எழுத்து வழக்கில் மூன்று என்று எல்லாரும் எழுதுகிறோம். அதில் எந்தப் பிழையும் இல்லை. மேலும் இருசுழி ன்-க்குப் பிறகு று-தான் வரும்; றகர வரிசைதான் வரும். அதுபோல்  முச்சுழி ண்-க்குப் பிறகு  டகர வரிசைதான் வரும். எனவே “ன்”, “ண்” மாறிவந்தால் அதுவே தவறெனக் காட்டிக்கொடுத்துவிடும்.

நம் எழுத்தாளர்கள், பேச்சு வழக்கு உரையாடல்களைப் பதிவு செய்யும் போது, மூன்று என்பதைக் குறிக்க மூணு என்று எழுதுகின்றனர்.

இதில் மூணு சரியா? மூனு சரியா? என்ற இரு கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்விக்கு உரிய விடையைக் கண்டறிந்தால் மேற்கண்ட பதிமூணாவது சரியா... பதிமூனாவது சரியா... என்பதற்குப் பதில் கிடைத்துவிடும்.

பேச்சு வழக்கில் ஒன்று என்பதை ஒண்ணு என்று மூன்று சுழி “ண்”  போட்டு எழுதுகிறார்கள். ஏன் ஒன்னு என்று எழுதவில்லை? கன்றுக்குட்டி என்பதைக் கன்னுக்குட்டி என்றும் கண்ணுக்குட்டி என்றும்... எதுசரி என்று தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு என்பதற்கு ரெண்டு என்று சரியாக மூணு சுழி “ண்” போடுகிறோம். இங்கே முச்சுழி “ண்” பக்கத்தில் “டு” என்று டகர வரிசை வந்துவிட்டதால் குழப்பம் நிகழவில்லை. ஆனால் மூன்று என்பதை மூணு என்று முச்சுழி போட்டு எழுதுகிறார்கள். இது ஏன்?  நம் எழுத்தாளர்கள் இதழாளர்கள் தொடர்ந்து மூணு என்று எழுதி எழுதி அவ்வாறு நிலைத்துவிட்டதா? அல்லது அதுதான் சரியா? உச்சரிப்பில் இயற்கையாக எழும் மாற்றமா?

தோன்றுகிறது என்ற சொல், பேச்சு வழக்கில் தோணுகிறது என்று எழுதப்படுகிறது. தோன்றுகிறது என்ற சொல்லில் இரண்டு சுழி “ன்” தான் வந்துள்ளது. ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.

தற்காலிக முடிவாக.... 

எழுத்து வழக்கில் இரண்டு சுழி “ன்” பயன்படுத்தப்பட்டிருந்தால், பேச்சு வழக்கில் இரண்டு சுழி னு-தான்  பயன்படுத்தப்பட வேண்டும்.

எழுத்து வழக்கில் மூன்று சுழி “ண்” பயன்படுத்தப்பட்டிருந்தால், பேச்சு வழக்கில் மூன்று சுழி ணு-தான் பயன்படுத்த வேண்டும் என்று நாம் முடிவு எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும்.

பதிமூணாவதா... பதிமூனாவதா... என்பதற்கு இப்போது வருவோம். 

பதின்மூன்றாம் என்றோ பதின்மூன்றாவது என்றோ எழுதிவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் பேச்சு வழக்கு அவ்வாறு இல்லை. பதின்மூன்று என்னும் சொல்லின் பேச்சு வடிவே பதிமூன்று, பதிமூன் என்றாகிப் பின்னர் பதிமூனு, பதிமூணு எனத் திரிந்திருக்க வாய்ப்புண்டு. மூன்று என்ற சொல்லில் இரண்டு சுழி “ன்” தான் உள்ளது. அப்படிப் பார்க்கிற பொழுது, பதிமூனாவது என்ற சொல் சரியாக இருக்கும்.

இதை எழுதிவிட்டு...

நான் என் வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே போனபோது பஞ்சர் ஆகிவிட்டது. அருகில் இருந்த பஞ்சர் கடைக்குத் தள்ளிக்கொண்டு போனேன். அங்கிருந்த விளம்பரப் பலகையில் இரண்டு சக்கர வாகனங்களுக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பஞ்சர் ஒட்டப்படும் என்றிருந்தது. கவனித்துப் பார்த்தேன். இரண்டு சக்கரம் என்பதில் உள்ள இரண்டு என்பதில் இரன்டு என்று இருசுழி “ன்” போட்டிருந்தார்கள். நான்கு சக்கரம் என்பதில் நான்குசுழி போட்டிருந்தார்கள்.

நன்றி : திண்ணை 29-03-2020



ஒருகண்


























ஒருகண் 

கோ. மன்றவாணன்

எனக்கு முகநூல் கணக்கு உண்டே தவிர, அதில் எந்தப் பதிவும் செய்யவில்லை. ஆனால் பிறரின் முகநூல் பக்கங்களை எப்போதாவது பார்ப்பது உண்டு.. படிப்பது உண்டு. அதுபோல் புத்தகக் காதலர் சேலம் பொன். குமார் அவர்களின் முகநூல் பக்கத்தைப் பார்த்தபோது, சங்கரன்கோவில் அருணகிரி அவர்களின் பதிவைக் காண நேர்ந்தது. அவர், என் நூலுக்குப் பிழைதிருத்தம் செய்து செப்பமாக்கியவர் என்பதால் அவரது முகநூல் பக்கத்தில் நுழைந்தேன். அதில் Surveillance Camera என்பதற்குக் கண்காணிப்புக் கண்கள் என்று பதிவிட்டதாகவும் அடுத்த ஐந்தே நிமிடங்களில் அதைவிடச் சிறந்த சொற்கள் கிடைத்தன என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சொற்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அவை வருமாறு :

     காவல் கண்கள் (நாசரேத் ரஞ்சன்)
     உறங்காத விழிகள் (துரை. மோகன்ராஜ்)
     வேவுக்கருவி, ஒற்று ஒளிவான் (சுப்பிரமணியன் வேலுசாமி)

இந்தச் சொற்கள் எல்லாம் சரியானவை போலவே தெரிகின்றன. எனினும் அந்தச் சொற்களை ஆராய்ந்து பார்த்தால், இன்னும் நுட்பம் கண்டறிந்து செப்பம் செய்யலாம்.

கண்காணிப்புக் கண்கள் என்ற சொல் சரியாகத்தான் உள்ளது. இச்சொல்லில் ஒருசொல்லே பல அவதாரங்கள் எடுக்கிறது.  இருமுறை கண் என்ற சொல் நேரடியாக வந்துள்ளது. காணிப்பு என்பதிலும் கண் என்பதன் வினைச்சொல்லாகக் காண் வந்துள்ளது. அந்தக் காண் என்ற வினைச்சொல்லிருந்து இருந்து பெயர்ச்சொல்லாக மாறியதுதான் காணிப்பு என்ற சொல். கண் – காணிப்பு - கண்கள் ஆகிய மூன்று சொற்களிலும் கண் என்ற சொல்லின் ஆட்சியே பரவி இருக்கிறது. இது தமிழின் வியப்பு என்றாலும் சொல்லாக்கத்தில் ஒருசொல்லே பல மடிப்புகள் கொண்டு விளங்குவதைத் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும் அருணகிரி அவர்களின் அறிவையும் ஆற்றலையும் உணர்ந்தவன் என்பதால் அதுகுறித்து உறுதிபடக் கூற முடியவில்லை.

காவல் கண்கள் என்ற சொல், எளிமையான இனிமையான புரியும்படியான சொல்லாக இருக்கலாம். ஆனால் காவல் என்பதன் பொருளை நுண்ணுணர்ந்தால் அச்சொல் சரிதானா என்று ஐயுற வேண்டி இருக்கிறது. பூந்தோட்டக் காவல்காரன் என்ற சொல்வழக்கை ஆராய்ந்தால், தோட்டத்தைக் கள்வர்களிடமிருந்தோ பிறரிடமிருந்தோ காப்பவன் என்பதாகும். ஆனால் இந்தக் கருவி அவ்வாறு நம் வீ்ட்டையோ அலுவலகத்தையோ காப்பதாகத் தெரியவில்லை. Police என்பதற்கு நாம் காவல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அந்தத் துறையினர் நம்மைக் காப்பவர்கள். ஆகவே காவல் கண்கள் என்ற சொல், அந்தக் கருவிக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை.

உறங்காத விழிகள் என்ற சொல், கவியினிமை கொண்டதாக இருக்கிறது. ரசிக்கத் தக்கதாகவும் இருக்கிறது. சொல்வதற்கும் எளிதாக இருக்கிறது. அந்த ஒளிப்படக் கருவியே விழிகள் போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் உறங்கும் நேரத்திலும் நாம் இல்லாத நேரத்திலும் அந்தக் கருவி விழித்திருந்து பார்க்கிறது. எனவே உறங்காத விழிகள் என்றே சொல்லலாம் என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனாலும் அக்கருவியின் நோக்கத்தை அச்சொல் தெளிவுபடுத்தவில்லை.
   
வேவுக்கருவி என்ற சொல் பொருத்தமுடையதாக இருக்கிறது. கலைச்சொல் போல் அல்லாமல் மக்களால் எளிதில் புரிந்து பயன்படுத்தக் கூடிய சொல்லாகவும் இருக்கிறது. கருவி என்ற பொதுச்சொல்லோடு, பயன்பாட்டை வெளிப்படுத்தும் சொல்லை இணைத்துக் கொள்ளலாம் என்ற முறையில் அச்சொல் உருவாகி உள்ளது. எல்லாவற்றுக்கும் கருவி என்ற பொதுச்சொல்லை இணைப்பது சொல்லழகைத் தருவதில்லை. அச்சொல்லில் கருவி என்ற பொதுச்சொல் சேராமல் ஒருசொல்லை உருவாக்குதல் நன்று. அவ்வாறு எச்சொல்லும் கிடைக்கவில்லை என்றால் வேவுக்கருவி என்ற சொல்லையே பயன்படுத்தலாம்.

மேற்கண்ட சொற்களில்... கண்கள், விழிகள் என்று பன்மை பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காமிரா ஒற்றைவிழி போலத்தான் உள்ளது. எனவே பன்மைவிகுதி பொருத்தமில்லை. மேலும் யார் மீதாவது நமக்குச் சந்தேகம் இருந்தால் அவன்மீது ஒருகண் இருக்கட்டும் என்று சொல்வார்கள். அந்த “ஒருகண்” என்ற சொல்கூட, அவனுக்குத் தெரியாமல் கண்காணிப்பதைத்தான் உணர்த்துகிறது.

இணையத்தில் தேடிய போது, கண்காணிப்பு ஒளிப்படக் கருவி என்று குறித்திருந்திருந்தார்கள். அச்சொல் அதன் முழு நோக்கத்தையும் செயலையும் குறிக்கின்றன. ஆனால் அது மூன்று சொற்கள் கொண்ட ஒரு விளக்கமாக உள்ளது. 

மேற்கண்ட சொற்களிலிருந்தே ஒரு சொல்லிணைவை உருவாக்கலாம். யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்ன நடக்கிறது என்பதை வேவு பார்ப்பதற்காகவே அந்தக் கருவி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அக்கருவியின் பயன்பாடு வேவு பார்த்தல். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் கண் என்ற சொல்லை இணைத்துப் பாருங்கள். வேவுக்கண் என்ற சொல் தோன்றும்.

அந்தக் கருவி பார்க்கிறது... கண்காணிக்கிறது என்பதைக் கண் என்ற சொல் உணர்த்துகிறது. அந்தக் கருவியின் வடிவமும் பெரும்பாலும் ஒருகண் போலவே இருக்கிறது. காமிரா செய்கிற வேலையைத்தான் அந்தக்கண் செய்கிறது.  கண் என்ற சொல், ஓர் உறுப்பைத்தான் குறிக்கும். கருவியைக் குறிக்குமா என்றொரு கேள்வியும் எழுகிறது. கேள்வி நியாயமாகத்தான் இருக்கிறது. செயற்கைக்கால் என்பதைப்போல் இவ்விடத்தில் கண்ணையும் ஒரு கருவியாகக் கருதிக்கொள்ளத்தான் வேண்டும். முடிந்த அளவு ஓவியத்தைச் சிறப்பாகத் தீட்டலாம். அதிகமாக முயன்றால் அழகு குலைந்து போகலாம். எனவே சொல் தீட்டலிலும் ஓரளவோடு நிறுத்திக்கொள்வதே சரி.

வேவு பார்த்தல் என்பதுகூட மறைந்திருந்து பார்ப்பது என்றே பொருள்தரும். பெரும்பாலும் அந்தக் கருவி மறைவான இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். கருவி இருப்பது தெரிந்தால்... அதன் முன் குற்றம் இழைக்காமல் வேறு இடம்தேடிக் குற்றம் புரிவார்கள். கண்டறிய முடியாது. கையூட்டு வாங்குபவர்கள் “இங்குக் காமிரா இருக்கிறது அந்தப் பக்கம் வாங்க” என்று அழைத்துச் சென்று பெறுவதைக் காண முடிகிறது. எல்லாருக்கும் தெரிவதுபோல் சில இடங்களில் அக்கருவி அமைக்கப்பட்டிருந்தாலும் மறைவான இடங்களில் அமைப்பதே வழக்கமாக உள்ளது.

வருமுன் காப்போம் என்பதுபோல் குற்றச் செயலை நிகழாமல் தடுக்கும் நோக்கத்தில் “இங்கே காமிரா பொருத்தப்பட்டுள்ளது” என்ற விளம்பரப்பட்டியும் சில இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம். 

ஓர் அலுவலகத்தில் எந்தெந்த இடங்களில் என்னென்ன நடக்கிறது... ஊழியர்கள் பணிசெய்து கொண்டிருக்கிறார்களா என்பதையும் அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிக்கவும் அக்கருவி பயன்படுகிறது. குற்றம் நிகழ்ந்த பிறகே அக்கருவியின் பதிவு, குற்றவாளிகளைக் கண்டறியப் பயன்படுகிறது. அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வீதிகளைக் கண்காணிக்கும் வகையிலும் சுற்றுப்புறங்களைக் கண்காணிக்கும் வகையிலும் யாருக்கும் தெரியாதவாறு அக்கருவிகள் பல இடங்களில் பொருத்தப்படுகின்றன. ஆக எல்லா வகையிலும் அந்தக் கருவி வேவு பார்க்கின்றது.

ஆகவே வேவுக்கண் என்ற சொல் Surveillance Camera என்ற சொல்லுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களிடமிருந்து இதைவிட நற்சொல் கிடைக்கலாம்.

பின் குறிப்பு :
எங்கள் வீ்ட்டில் எந்த இடத்திலும் வேவுக்கண் நிறுவவில்லை. என் அறையில் நான் என்னென்ன செய்கிறேன் என்பதை, அடுத்த அறையிலிருந்து துல்லியமாகச் சொல்கிறார் என் மனைவி. அது எப்படி?

நன்றி :
திண்ணை 29-03-2020


Wednesday, 11 March 2020

கைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது?




கைதட்டல்களில்
முதல் ஓசை யாருடையது?

கோ. மன்றவாணன்

இலக்கியக் கூட்டமோ அரசியல் கூட்டமோ எந்தக் கூட்டமாக இருந்தாலும் அங்குப் பேசுகின்ற ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது கைதட்டல் ஓசையைத்தான்! கைதட்டல் இல்லாமல் ஒரு கூட்டம் முடிகிறதென்றால் அது இரங்கல் கூட்டமாக இருக்கலாம். அங்குக் கூட இறந்தவரின் இணையற்ற பெருமைகளைப் பேசுகின்ற போது கைதட்டிப் போற்றுவோரும் உண்டு.

பின்மாலை நேரங்களில் நடைபெறும் சில இலக்கியக் கூட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கைதட்டல் ஓசை கேட்கிறது. அதைப் பாராட்டின் அத்தாட்சியாகக் கருத முடியாது. அந்தக் கை ஓசைக்குள் கொசுக்கள் ஒன்றிரண்டு இறந்துபோய் இருக்கலாம்.

அறிஞர்களின் பேச்சில் ஆய்வு முடிவுகள் நிரம்பி வழியும். அவர்களுக்குக்  கைதட்டல்கள் கிடைப்பதில்லை.

கைதட்டல் எதிர்பார்த்துச் சில செய்திகளைச் சொல்லும்போது அவ்வாறு கைதட்டல் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பேச்சாளரின் முகமும் அகமும் தளர்ந்துவிடுகின்றன. அதன்பின் அவர்பேச்சில் அவருக்கே சுவாரசியம் ஏற்படுவதில்லை.

பிரபலமானவர்கள் எது பேசினாலும் கைதட்டும் மக்கள் உண்டு. ஒரு கல்லூரியில் ஒரு நடிகர் ஒலிவாங்கியின் முன் வந்து நின்றார். அதற்கே மாணவர்கள் குரல்கோஷமும் கரகோஷமும் எழுப்பினர். அவர் வணக்கம் சொன்னார். அதற்கும் கைதட்டல்கள். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, கூட்டத்தைப் பார்த்துச் சிரித்தார். அதற்கும் கைதட்டல்கள். விதவிதமாய்க் கனைத்துக் குரலைச் சரிசெய்து கொண்டார். அதற்கும் பேரோசையோடு கைதட்டல்கள். அவர் எது பேசினாலும் கைதட்டல்தான் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“என் ரத்தத்தின் ரத்தமான கழக அடலேறுகளே” என்று மக்கள் திலகம் எம்ஜிஆர் சொல்லி முடிப்பதற்குள் எழும் கைதட்டல் ஓசை அடங்குவதற்கு இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகலாம். மேடைப் பேச்சால் தமிழையும் தமிழகத்தையும் கட்டி ஆண்ட கலைஞர் அவர்கள், “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று கரகரபிரியா ராகத்தில் சொன்னதும்... கைதட்டல் ஓசையோடு உணர்ச்சி வெள்ளம் கரைபுரளுவதைக் கண்டு உணரலாம். இப்படியாக ஒவ்வொரு தலைவருக்கும் தமக்கே உரிய தொண்டர்களை விளிக்கும் விதத்தை விதந்தோதுகின்றன கைதட்டல்கள்.

தெருமுனைகளில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டங்களில் பங்கேற்கிற பேச்சாளர்கள், உச்சக்குரலில் தம்கட்சித் தலைவர்களின் பெயர்களை அடிக்கடி உச்சரிப்பார்கள். அந்தத் தலைவர்களின் பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் கட்டாயமாகக் கைதட்டல்கள் வெடியோசைக்கு இணையாக ஒலிக்கும். அந்தப் பேச்சாளர்களின் அரிய கருத்துகளுக்கு... வாதத் திறனுக்குக் கைதட்ட,  அந்தத் தொண்டர்கள் அறிந்திருக்கவில்லை.

சில பேச்சாளர்கள் இருக்கிறார்கள். சங்கக் கவிதையை மடமடவென மனப்பாடமாகப் பொழிவார்கள். அதைக்கேட்ட கூட்டத்தினர் கைதட்டுவார்கள். ஆனால் அந்தக் கவிதையின் வார்த்தைகள் கூட அவர்களின் செவிகளில் தெளிவாகச் சேர்ந்திருக்காது. அந்தக் கவிதை அவர்களுக்குப் புரிந்திருக்காது. ஆனாலும் கைதட்டுவார்கள். எனக்குத் தெரிந்த  ஒரு பேச்சாளர் எல்லாக் கூட்டங்களிலும் பாரதிதாசன் கவிதையைச் சொல்வார். கவிதையின் முழுவரிகளையும் 48 வரிகள் 64 வரிகள் என முழுமையாகச் சொல்வார். ஒருசொல்லுக்கும் அடுத்துவரும் சொல்லுக்கும் இடையே இடைவெளி இல்லாதவாறு புல்லட் ரயில் வேகத்தில் சொல்லுவார். கேட்பவர்களுக்கு ஒன்றுமே புரியாது. ஆனாலும் கைதட்டுவார்கள். சில பேச்சாளர்கள் எந்தக் கூட்டமானாலும் எந்தத் தலைப்பு என்றாலும் கபிலர் சொன்ன 99 மலர்களின் பெயர்களை ஒப்பிப்பார்கள். அண்மையில் ஒரு கூட்டத்தில் நன்றியுரை ஆற்றியவரும் 99 மலர்களை ஒப்பித்ததைக் கேட்டேன். அவர்கள் சொன்ன மலர்களின் பெயர்களில் ஒன்றைக்கூட அதைக் கேட்டவர்கள் திருப்பிச் சொல்ல முடியாது. தெளிவாக இடைவெளிவிட்டுப் புரியும்படி சொன்னால்தானே மலர்களில் ஒரு பெயரையாவது திருப்பிச் சொல்ல முடியும். மூச்சிரைக்க... மூச்சிரைக்க... மலர்களின் பெயர்ப்பட்டியலை அவர் சொல்லி முடித்ததும் எழும் கைதட்டல்கள், “கூட்டத்தில் ஏதாவது கலாட்டவா?” என்று அரங்கின் வெளியில் இருப்பவர்களைத் திடுக்கிட வைக்கும். இவையெல்லாம் பேச்சாளர்களின் மனப்பாட ஆற்றலை வெளிப்படுத்துமே தவிர, கேட்போர் மனதில் அந்தக் கவிதை வரிகளோ அவற்றின் பொருளோ சென்று சேராது. இந்தப் பேச்சாளர்கள் இப்படி மனப்பாடமாக மழையென ஒப்பிக்கும் போது... சற்று இடைமறித்து, அந்தப் பாடலின் 20 ஆவது வரியிலிருந்து சொல்லுங்கள் என்றோ அல்லது விட்ட இடத்திலிருந்து தொடருங்கள் என்றோ கூறிப் பாருங்கள். தடுமாறுவார்கள். மீண்டும்  தொடக்க வரியிலிருந்து சொன்னால்தான் அவர்களால் அந்தக் கவிதையை முழுமையாகச் சொல்ல முடியும். பள்ளிக்கூடத்தில் ஏ,பி,சி,டி யை வரிசை ஒழுங்கோடு சொல்லும் மாணவனைத் திடீரென்று ஓ விலிருந்து சொல் என்று சொன்னால்... அவனால் வரிசையாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது மனப்பாடம்.

நீண்ட கவிதைகளைச் சொல்லி அவையினரை வியப்பில் ஆழ்த்துவதைவிட, அக்கவிதையிலுள்ள அவசியமான முக்கிய இரண்டு மூன்று வரிகளை மட்டும் சொல்லுணர்த்தி பொருளுணர்த்தி, நயமுணர்த்திச் சொல்லிப் பாருங்கள். அக்கவிதை வரிகள் அவையினரின் மனங்களுக்குள் தென்றலென உட்சென்று நிரம்பும். அக்கவிதை வரிகள் அப்படியே உள்செல்லாவிட்டால்கூட, அதன்பொருள் நிச்சயமாகக் கேட்போரின் நெஞ்சத்துக்குள் மஞ்சமிட்டுக்கொள்ளும். இப்படிச் சொல்லும் போது கைதட்டல்கள் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஆனால் பேச்சின் பொருள் மக்களிடம் சென்றடையும்.

இன்னும் சில பேச்சாளர்கள், அழகாகத் தமிழில் பேசிக்கொண்டே வருவார்கள்.... திடீரென இரண்டு மூன்று வாக்கியங்களைச் சொல்லிடைவெளி இன்றி ஆங்கிலத்தில் படபடவென்று பொரிந்து தள்ளுவார்கள். ஆங்கிலம் தெரியாத கூட்டத்தினர் அதிசயித்துக் கைதட்டுவார்கள். என்ன புரிந்து கைதட்டினீர்கள் என்று அவர்களைக் கேட்டால் உதட்டைத்தான் பிதுக்குவார்கள்.

பேச்சு என்பதே தன் சிந்தையில் தோன்றிய கருத்தை, அவையில் கூடியுள்ள நூற்றுக்கணக்கான மக்களின் மனங்களுக்குள் கொண்டு சேர்த்து, அவர்களை வழிநடத்துவதாக இருக்க வேண்டும். தன்னுடைய புலமையை... தன்னுடைய மனப்பாட ஆற்றலை வியந்து பார்க்கச் செய்வதால், அவையினருக்கு என்ன பயன்?

தன் நண்பர் பேசும் போதுமட்டும் கைதட்டும் நண்பர் குழாம் உண்டு. மற்றவர்கள் எவ்வளவு அழகாக அறிவாகப் பேசினாலும் கைதட்ட மாட்டார்கள். சாதி பார்த்து... கைதட்டுவோரும் உண்டென்கின்றனர் சிலர். கைதட்டவே ஆட்களை அழைத்து வருவோரும் உண்டாம்.

கூட்டத்தில் கைதட்டல் எழுந்தவுடன் அதைப்பின்பற்றி அனிச்சை செயலாகக் கைதட்டுவோரே இங்கு அதிகம் உண்டு. முதலில் கைதட்டலைத் தொடங்கி வைத்தவரே அசலான ரசிகராக இருக்கலாம். இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் என்ற அமுதபாரதியின் ஹைக்கூ கவிதையைப்போல் இந்தக் கைதட்டல்களில் எந்தக் கையோசை முதலாவது என்று அறிய முடியுமோ?

அரங்கத்தில் பேச்சாளர் பேசிக்கொண்டிருப்பார். சிலர் அலைபேசிகளில் விரல்நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள். அவர்களும் கைதட்டல் ஓசையைக் கேட்டவுடன் அனிச்சை செயலாக ஒரு கையால் தங்களின் தொடையைத் தட்டுவார்கள். இன்னொரு கையில்தான் அலைபேசி இருக்கிறதே! சிலர் ஒப்புக்கு மெல்லக் கைதட்டுவார்கள். அதன்ஓசை அவர்களுக்கே கேட்காது. சிலர் விருப்பமே இல்லாமல் அவைநாகரிகம் கருதிக் கைதட்டுவது போன்று ஒரு பாவனை செய்வார்கள்.

நொறுக்குத் தீனி தின்னுகிற போதிலோ தேநீர் அருந்துகிற போதிலோ எந்தப் பேச்சாளர் என்ன பேசினாலும் கைதட்ட இயலாமல் போகிற சூழலும் நிகழும்.

கல்லூரிகளில் மாணவர்கள் விடாது கைதட்டுவார்கள். அது பாராட்டு அல்ல. “பேச்சை நிப்பாட்டு” என்பதற்கான கட்டளை. நெடுநேரக் கைதட்டலைத் தமக்கான பாராட்டாகக் கருதி மேலும் பேச்சை இழுக்கும் பேச்சாளர்களின் அறியாமையை இன்றும் கண்டு சிரிக்கலாம்.

எந்தத் தலைப்புக் கொடுத்தாலும் கைதட்டல் பெறுவதற்காகவே வாட்ஸப் ஜோக்குகளையும் குட்டிக்கதைகளையும் அடுக்குமொழி போல் இருக்கும் பொன்மொழிகளையும் மனப்பாடம் செய்துவந்து  தம்பேச்சில் கலப்படம் செய்யும் பட்டிமன்றப் பேச்சாளர்கள் உண்டு.

“இதற்கெல்லாம் கைதட்ட மாட்டீர்களா” என்றும்- “இதற்கு உற்சாகமாகக் கைதட்டுங்கள்” என்றும்- கைதட்டலைக் கேட்டு வாங்குகிற பேச்சாளர்களும் உண்டு.

மாயதந்திர நிகழ்ச்சி நடத்துபவர்களும் சாலைகளில் வித்தை காண்பிப்பவர்களும் அடிக்கடி கைதட்டச் சொல்வார்கள். நம் கவனத்தைத் திசைதிருப்பவே அப்படிச் சொல்லுகிறார்களோ என்னவோ...? அந்தக் கைதட்டல் வேளையில் அவர்களின் தந்திர வேலைகள் நிறைவேறிவிடலாம்.

இத்தகைய கைதட்டல்களையும் தாண்டி மெய்யாகவே எழும் கைதட்டல்கள் உண்டு. சமூக மேன்மைக்காகவே தன்பேச்சைப் பயன்படுத்தும் பேச்சாளர்களுக்கு அத்தகு கைத்தட்டல்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. நல்ல கருத்துகளையும் நயமான வெளிப்பாட்டுத் தன்மையையும் நாம் கைதட்டி வரவேற்பதே அந்தப் பேச்சாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. கைதட்டல் இல்லையென்றால் கழைக்கூத்துக் கலைஞர்களால் கயிற்றின் மீது நடக்க முடியுமா எனக்கேட்பதில் உளவியல் நுட்பங்கள் வெளிப்படும். அந்த உளநுட்பங்கள் பேச்சாளர்களுக்கும் பொருந்தும்.

பேச்சுக்குக் கிடைக்கின்ற உடனடிப் பாராட்டுப் பத்திரம் கைதட்டல்தான். கைதட்டலுக்கு மயங்காத மகிழாத பேச்சாளர்களே இல்லை. தனக்குப் பல்லாயிரம் பொன்முடிப்புக் கொடுத்தாலும் தன் பேச்சுக்குக் கிடைக்கின்ற கைதட்டலுக்கு இணையாகாது என்பதைப் பேச்சாளரின் உள்மனம் ஒப்புக்கொள்ளும்.

கைதட்டல்கள் பல உண்டு. மெய்யான கைதட்டல்கள் எவையென்று எந்தப் பேச்சாளரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை என்பது ஒரு செளகரியம்தான்.

ஆனால்...

எல்லாப் பேச்சாளர்களுக்கும் ஒரு கைதட்டல் நிச்சயம். அது, “வாய்ப்பளித்தமைக்கு நன்றிகூறி இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்... நன்றி வணக்கம்” என்பதற்குக் கிடைக்கும் கைதட்டல். இவ்வளவு நேரம் அழகாகப் பேசினாரே என்பதற்கான கைதட்டலா அல்லது இத்துடன் முடித்தாரே என்பதற்கான கைதட்டலா என்பதை யாரறிவார்?

நன்றி :
திண்ணை  2020 மார்ச்சு 1

Thursday, 5 March 2020

கோப்பைக்குள் விழுந்த புனிதனும்...
























ஒரு கோப்பைக்குள் விழுந்து
எழாமல் கிடக்கிறது
இந்த உலகு                  

திரவத்திலிருந்து முளைத்துத்
தீண்டுகின்றன
விஷநாவுகள்

ஆசிர்வதிக்கப்பட்ட தாலியொன்று
அறுக்கப்படுகிறது  
புட்டியின் மூடியைக் கழற்றும்போது

கொடூர விலங்கென உளம் திரிகிறான்
கோப்பைக்குள் விழுந்த புனிதனும்

தனக்கு மதுபடைக்கும் மனிதனைக் கண்டு
கோவிலைவிட்டு வெளியேறி இருக்கலாம்
கடவுளும்.

மதுத்துளி பட்டு எரிந்து சரிகின்றன
குடும்ப கோபுரங்கள்

மானம் என்றொரு சொல்லுக்குப் பாடைகட்டித்
தெருத்தெருவாய் இழுத்துச் செல்கின்றன
போதையின் மாயக் கைகள்

ஓரப் பார்வையால் தொட்டவனையும்
உள்ளிழுத்துக் கொள்கிறது
சவக்குழியாய் வாய்பிளந்து காத்திருக்கும்
கோப்பை...

-கோ. மன்றவாணன்







Wednesday, 15 January 2020

நெடுமாலை அடைந்த ஞானியார் அடிகள்






















நெடுமாலை அடைந்த
ஞானியார் அடிகள்

திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள், தம் பேச்சினூடாக அவ்வப்போது சிலேடையாப் பேசுவார். அந்தச் சிலேடைப் பேச்சில் செந்தமிழ்த்தேன் வழிந்தோடும். சிந்தனை அமுதம் திரண்டுவரும்.

ஞானியார் வீர சைவ மரபினர் என்றாலும் சமய வேறுபாடு பாராதவர். வைணவ இலக்கியங்களிலும் ஆழ்ந்த புலமைகொண்டவர்.

ஒருமுறை திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சாமித் திருக்கோவிலுக்குச் சென்றார். ஞானியாரைக் கண்ட வைணவர் பலரும் ஏதேனும் ஒரு சொற்பொழிவு ஆற்ற வேண்டும் எனக் கோரினர்.

ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முதல் பாடலை மட்டும் எடுத்தாய்ந்து அரியதொரு சொற்பொழிவு ஆற்றினார். வைணவப் பெருமிதங்களை மிக அழகாக விரித்துரைத்துப் பேசினார். அதைக் கேட்ட வைணவர்கள் பெரிதும் வியந்து மகிழ்ந்தனர்.

அந்த அளப்பரிய மகிழ்ச்சியின் வெளிப்பாடாகத் தேவநாத பெருமாளுக்கு அணிவித்திருந்த  நெடியதொரு மாலையை எடுத்துவந்து ஞானியாரின் திருமேனியில் அணிவித்தனர். அவர்களைப் பார்த்து ஞானியார் சிலேடையாகச் சொன்னார்.

“இன்று நான் நெடுமாலை அடைந்தேன்.”

இன்று நான் நீண்டதொரு மாலையை அணிந்தேன் என்றும்- இன்று நான் நெடிதுயர்ந்து விளங்கும் திருமாலை அடைந்தேன் என்றும் இருபொருள்கள் அந்த ஒரு சொற்றொடரில் உள்ளன.

ஞானியார் இளம்பருவத்தில் இருந்த காலத்தில் சிதம்பரம் மு. சுவாமிநாத ஐயர் அவர்களைத் திருமடத்திற்கு வரச்செய்து தமிழ்கற்றார்கள். ஒவ்வொரு நாளும் சில பயிற்சிகளைச் செய்து வருமாறு குறிப்பேட்டில் எழுதுவது ஆசிரியரின் வழக்கம். அவர், யாப்பிலக்கணம் கற்பித்து வரும்போது ஒரு வெண்பாவைக் குறிப்பேட்டில் எழுதி, அதற்குச் சீர், தளை முதலியவற்றை எழுதி அடுத்த நாள் காட்ட வேண்டும் என்று சொல்லிச் சென்றார்.

அந்த வெண்பா இதுதான்.

நற்பா டலிபுரத்து நாதனே நாயினேன்
பொற்பாம்  நினதடியைப் போற்றினேன் – தற்போது
வேண்டும் செலவிற்கு வெண்பொற் காசுபத்து
ஈண்டு தருக இசைந்து.

அடுத்த நாள் வந்த ஆசிரியர், அந்தக் குறிப்பேட்டைப் பிரித்துப் பார்த்தார். அவர் எழுதி வைத்திருந்த வெண்பாவுக்கு உரிய சீர், தளை ஆகியவை எல்லாம் சரியாக எழுதி வைத்திருந்ததோடு உடன் பத்து ரூபாயும் இருந்தது கண்டு திகைத்தார்.

அப்போது இளம்பருவத்தில் இருந்த ஞானியாரைப் பார்த்து, “நான் பாட்டுக்கு (மனம்போனவாறு) எழுதி வைத்தேனே தவிர, பணம்பெற வேண்டும் நோக்கம் சிறிதும் இல்லை” என்றார் ஆசிரியர்.

அதற்கு ஞானியார், “நான் பாட்டுக்குத்தான்  கொடுத்தேனே அன்றி வேறொன்றுக்குமில்லை“ என்றார்.

“நான் பாட்டுக்குத்தான்” என்பதில் நானும் மனம்போனவாறுதான் கொடுத்தேன் என்ற பொருளும்- நான் பாட்டுக்காகத்தான் கொடுத்தேன் என்ற இன்னொரு பொருளும் உள்ளன.

ஞானியார் அடிகள் சொற்பொழிவாற்றும் போது கீழ்க்கண்ட வெண்பாவைச் சுவை ததும்பவும் மனம் உருகவும் பாடுவார். அந்த வெண்பா.

இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்
நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் – சொல்லறத்துள்
ஒன்றேனும் அல்லேன் உயர்திருப் போரூரா
என்றேநான் ஈடேறு வேன்.

இப்பாடலின் “என்றே நான் ஈடேறுவேன்?” என்பதை, “என்றுதான் நான் ஈடேறுவேனோ?” என்று வினவுவது போல் சொல்வார். அதே பாடலை மறுமுறையும் பாடுவார். அப்போது உயர்ந்து விளங்கும் திருப்போரூரா என்றே நான் சொல்லியே ஈடேறுவேன் என்ற பொருள்விளங்கச் சொல்வார்.

ஞானியாரின் பேச்சில் சமயப் பெருமையும் தமிழின் இனிமையும்  இரண்டறக் கலந்தே வரும்.

நன்றி :
தினமணி
05-01-2020





Monday, 30 December 2019

சிரிக்க வைத்தார்... சிந்திக்க வைத்தார்...




சிரிக்க வைத்தார்;
சிந்திக்க வைத்தார்.

கோ. மன்றவாணன்

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் யாரென்றால் எல்லாருடைய பதிலும் சார்லி சாப்ளின்தான். மொழியின்றிப் பேசி அனைத்துமொழி மக்களையும் ரசிகர்களாக மாற்றியவர் அவர்தான். நூறாண்டுகள் கடந்தாலும் பேசும் படங்கள் பெருகினாலும் அதிநவீனத் தொழிநுட்பங்கள் வந்தபடி இருந்தாலும் இன்றும் உலகின் எந்த மூலையிலாவது யாருடைய வீட்டிலாவது அவரின் படங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
     
வயிற்றுப் பாட்டுக்கு வழியில்லாமல் வாழ்வில் துயரங்களையே சுமந்து வருந்தும் மக்களையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த சீர்திருத்தவாதி அவர்தான். இந்த உலகத்தில் ஏழைகளே அதிகம். அவர்களைச் சிரிக்க வைப்பதுதான் எனது நோக்கம் என்று அவரே பலபேட்டிகளில் சொல்லியுள்ளார்.
     
இன்றைக்கும் அவருடைய படங்கள் திரைக்கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்களாக விளங்குகின்றன. கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, படத்தொகுப்பு, இயக்கம், தயாரிப்பு எனத் திரையிலக்கியத்தின் அத்தனை கோணங்களிலும் புத்திக் கூர்மையுடன் செயலாற்றிப் புதுமைகள் படைத்தார்.
     
பணக்காரர்களைப் பரிகாசம் செய்யும் வகையில் அவருடைய பல படங்களில் காட்சிகள் இருந்தன. இதனால் அமெரிக்க அரசாங்கம் அவரைக் கம்யூனிஸ்ட் எனக் குற்றம் சாட்டிக் கண்காணித்து வந்தது. ஆனால், தான் கம்யூனிஸ்ட் இல்லை என்றும் மனிதநேயன் என்றும் எதிர்க்குரல் கொடுத்தார். பல ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தும் பலகோடி டாலர்கள் சம்பாதித்தும் அவர் தன்னை அமெரிக்கக் குடிமகனாக மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்க அரசுக்குத் தன்செல்வாக்கில் போர்நிதியை அதிகமாகத் திரட்டித் தந்தார். அமெரிக்காவின் உளவு நிறுவனம் சார்லி குறித்துப் பலபக்கங்கள் கொண்ட பல கோப்புகளைப் பராமரித்தது. இதன்விளைவாக 1950களில் அமெரிக்காவில் நுழைய முடியாத நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. காலம் மாறியது. சார்லிக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டோம் என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்தார்கள். அதற்குப் பிழையீடாக 1971ல் சிறப்பு ஆஸ்கார் விருதை வழங்கிச் சிறப்பித்தார்கள் என்பது வரலாற்றுத் திருப்பம்.
     
ஹிட்லரை மையமாக வைத்து  ‘தி கிரேட் டிக்டேட்டர்” என்ற படத்தை எடுத்துச் சர்வாதிகாரத்தை எதிர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஹிட்லரும் சார்லியின் அதிதீவிர ரசிகர். அவருடைய படங்களைத் தன் அரண்மனையில் திரையிட்டுப் பார்த்து மனசை ரிலாக்ஸ் செய்து கொள்வது ஹிட்லருக்கு வழக்கம். பல நாடுகளில் இந்தப்படம் தடைசெய்யப்பட்டது என்பதாலே, அதன் அரசியல் வீரியத்தை நாம் அறியலாம். அந்தத் திரைப்படத்தில் ஒரு பூகோளம் வரைந்த பலூனை வைத்துச் சர்வாதிகாரி விளையாடுகிறான். அந்தப் பலூனை மனம்போன போக்கில் தூக்கிப்போட்டுப் பல கோணங்களில் எட்டி உதைக்கிறான். “உலகம் என் காலடியில். நினைக்கும் போதெல்லாம் எட்டி உதைப்பேன்” என்ற சர்வாதிகாரத்தின் கோரத்தன்மையை அந்தக் காட்சியில் வெளிப்படுத்தி இருந்தார். ஹிட்லரும் அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறார்.
     
அன்று உலகத் தலைவர்களாக விளங்கிய ஸ்டாலின், சர்ச்சில் ஆகியோரும் ஹிட்லரைப் போலவே சார்லியின் தீவிர விசிறிகளாக இருந்துள்ளார்கள். காந்தி அடிகளைப் பற்றி நிறைய கேள்விபட்டும் படித்தும் இருக்கிறார் சார்லி. காந்தியின் மீது அவருக்கு மரியாதை ஏற்பட்டது. எனவே இலண்டனில் காந்தியைச் சந்தித்தார். காந்தியோ சார்லியின் ஒரு படத்தைக்கூடப் பார்க்காதவர். அவரிடத்தில் என்ன பேசுவது என்று தவித்தார். இயந்திரங்களின் வருகையால் மனிதர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படுவது குறித்து இருவரும் பேசிக்கொண்டார்கள். நம் ஜவஹர்லால் நேருவும் சார்லியின் தீவிர ரசிகர்தான். நீண்டநெடு நேரம் பேசி மகிழ வேண்டும் என்பதற்காகவே சார்லியுடன் ஒரே காரில் பயணித்திருக்கிறார். இந்திராவும் சார்லியைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறார்.
     
பிற்காலத்தில் இந்தியாவின் கடைசி வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குத் திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற வேண்டும் என்று ஆசை. அவர் சார்லியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அவருடைய ஆசையை நிறைவேற்ற சார்லி படம்எடுத்தார். சில ஆயிரம் அடிகள் எடுத்தபின் அதைத் திரையிட்டுப் பார்த்தார். சார்லிக்குப் பிடிக்கவில்லை. “நீ பிரிட்டீஷ் பேரரசையே ஆளக்கூடும். ஆனால் உன்னால் ஒருபோதும் நடிகனாக முடியாது” என்று மவுண்ட் பேட்டனிடமே சொல்லிப் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்.
     
நடுத்தர வயதான போதும் சார்லி இளமைத்துள்ளலோடே இருந்தார். இது எல்லாருக்கும் வியப்பைத் தந்தது. தான் மறைத்துவந்த இளமையின்  ரகசியத்தைப் பின்னர் தெரிவித்தார். தினமும் யோகாசனம் செய்து வருவதுதான் இளமைக்குக் காரணம் என்றார். அவர்வாழ்ந்த காலத்தில் அமெரிக்கர்களுக்கு யோகாசனம் என்றாலே என்னவென்று தெரியாது. ஆனால் சார்லி அறிந்து வைத்திருந்தார்.
     
ஊமைப்படங்கள் காலம் முடிந்து பேசும் படங்கள் வந்தபோதும், பேச்சற்ற படங்களையே தயாரித்தார்... நடித்தார். உலகில் பல மொழிகள் உள்ளன. அத்தனை மொழியினருக்கும் சார்லியின் படம் அவர்கள் மொழியில் பேசுவது போலவே இருக்கும். ஆங்கிலம் பேசி நடித்தால் பிற மொழியினருக்கு அந்நியமாகிவிடும் என்று நம்பினார். 
     
தன்தாயின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். தாயின் மனநிலை குலைந்ததால் அவரை மனநலக் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளித்தார். சார்லியைப் புகழ்ந்து பேசிய மருத்துவரிடம் அந்தத்தாய், “சார்லி தன்மகன் இல்லை” எனச்சொன்னது பெருஞ்சோகம். சார்லியின் முதல் குழந்தை பிறந்த மூன்றே நாட்களில் இறந்து போனது. அந்தக் குழந்தையை அடக்கம் செய்த இடத்திலேயே தாயையும் அடக்கம் செய்தார். குழந்தை இறந்தபோதும் தாய் மறைந்த போதும் சிரிக்க வைத்த மேதை அழுதது அதிகம்.
     
1977 ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் நாளில் சார்லி மறைந்தார். கண்ணீர் ததும்பத் ததும்ப மண்ணில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெரிய இடத்துச் சடலங்களைத் திருடிச் சென்று பணம்பறிக்கும் கொள்ளையர்கள் இருந்தனர். அதுபோலவே சார்லியின் உடலையும் திருடிச் சென்றனர். சடலத்தைத் திருப்பித்தரக் கொள்ளையர்கள் அதிகவிலை நிர்ணயம் செய்தனர். காவல் துறையினர் பலநாட்களுக்குப் பிறகு குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சடலத்தைக் கைப்பற்றினர். மீண்டும் கொள்ளை அடிக்காதவாறு ஆழத்தில் அவரது உடல் மறுஅடக்கம் செய்யப்பட்டு உறுதியான கல்லறை கட்டப்பட்டது. 
     
ஆனாலும் கல்லறையில் உள்ளது அவரது உடலல்ல என்றும் “ஒருபேச்சு” உலாவுகிறது.

நன்றி :
தினத்தந்தி, 25-12-2019


பரமசிவனைப் பார்க்கப் போனேன்... பாதியிலே திரும்பி வந்தேன்...


பரமசிவனைப் பார்க்கப் போனேன்
பாதியிலே திரும்பி வந்தேன்

-கோ. மன்றவாணன்

புகழ்பெற்ற கவிஞர் ஒருவரைப் பற்றி இணைய இதழொன்றில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். சில நாட்களிலேயே அந்தக் கட்டுரை இலக்கிய மாத இதழ் ஒன்றில் வேறொரு எழுத்தாளர் பெயரில் வெளியாகி இருந்தது. முதல் பத்தியும் இறுதிப் பத்தியும் அந்த எழுத்தாளர் எழுதிச் சேர்த்துள்ளார். இடையில் என் கட்டுரையை அப்படியே வரி பிசகாமல் வார்த்தை தவறாமல் நகல் எடுத்து இணைத்திருந்தார். புதிதாகத் தட்டச்சிட வேண்டிய அவசியம்கூட அவருக்கு ஏற்படவில்லை. படித்த எனக்குப் பெரிதும் அதிர்ச்சிதான். அந்த இதழாசிரியருக்கு இதுகுறித்து ஆதாரத்துடன் மின்னஞ்சல் அனுப்பினேன். இதழாசிரியரும் அந்த எழுத்தாளருக்குத் தெரிவித்துள்ளார். அதன்பின் அவர், என்னுடன் நட்புறவுள்ள எழுத்தாளர் மூலமாகச் சமாதானம் சொன்னார். இருப்பினும் அந்த இலக்கிய மாத இதழாசிரியர் என் நிலையை அவருடைய இதழில் பதிவு செய்தார். அந்த நேர்மைமிகு இதழாசிரியருக்கு நன்றி.

வாசகர்கள் நிரம்ப உள்ள இதழுக்கு நான் ஒரு கட்டுரையை அனுப்பி இருந்தேன். பத்திகளை முன்பின்னாக அச்சிட்டும்- வரிகளில் வார்த்தைகள் சிலவற்றை மாற்றியும் சேர்த்தும் அக்கட்டுரையை வெளியிட்டு இருந்தனர். என் சொற்றொடர்கள் பலவும் அப்படியே அச்சாகி இருந்தன. அந்தக் கட்டுரையை வேறொருவர் எழுதியதாக வெளியாகி இருந்தது கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அந்தக் கட்டுரைக்குள் நான் எழுதாத சிலவற்றையும் சேர்த்திருந்தனர். சட்டப் பிடிக்குள் சிக்காதவாறு சாமர்த்தியமாகத் திருடுவதாக அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள் போலும்.

த்தகையோர் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பெருமிதம் அடைகிறார்கள். இவர்களை எழுத்தாளர்கள் என்று சொல்வதைவிட “எடுத்தாளர்கள்” என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் யாவும் பொதுவானவை. யாரும் பயன்படுத்தலாம் என்று வாதிடக் கூடும். நான் மறுக்கவில்லை. ஆனால் தகவல்களைக் கொண்டு தங்கள் சொந்தச் சிந்தனையில் இருந்து கட்டுரையை எழுத வேண்டும். தங்களின் சொந்தச் சொற்றொடர்களைக் கொண்டு கருத்துகளை விவரிக்க வேண்டும். ஆனால் இத்தகைய எடுத்தாளர்கள் வெட்டு ஒட்டு முறையில் அடுத்தவர்களின் கட்டுரையையே தமதாக்கிக் கொள்கிறார்கள். பிறரின் அறிவுழைப்பைக் களவாடிக்கொண்டு “அசல் அறிஞர்களாகக்” காட்சி தருகிறார்கள்.
     
ஒரே சிந்தனை இருவருக்கு எழலாம் என்று வாதிடுவோர் உண்டு. அதையும் நான் மறுக்கவில்லை. ஒரே சிந்தனை என்றாலும் வெளிப்படுத்தலில் இருவருக்குள் வேறுபாடு இருக்கவே செய்யும். அப்படியும் வேறுபாடு இல்லை என்றால், அது அரிதினும் அரிதானதாகவே இருக்கும். ஆனால் ஒரே சிந்தனை இருவருக்கும் எழலாம் என்பதைத் தப்பிக்கும் பாதையாகக் கொண்டு அடுத்தவர்களின் சிந்தனைகளைக் கொள்ளையடிப்பதை ஏற்க இயலாது. பிறரின் எழுத்துகளை அப்படியே பயன்படுத்துவோர், ஏன் அந்த எழுத்தாளர்களின் பெயர்களை மறைக்க வேண்டும்?
     
நான் 15 வயது சிறுவனாக இருந்த காலத்தில் எங்களூரில் தமிழ்மன்றத்தில் செயலாளராக இருந்தேன். அங்குள்ள குமரக்கோவில் மண்டபத்தில்தான் இலக்கிய விழாக்களை நடத்துவோம். அதில் கிருபானந்த வாரியார்கூட வந்து பேசி இருக்கிறார். எங்கள் அமைப்பின் சார்பில்  ஒருநாள் மாலை வேளையில் கவியரங்கமும் பட்டிமன்றமும் நடத்தினோம். கவியரங்கத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்க ஒரு பெருங்கவிஞரை அழைத்திருந்தோம். அவரோ மாவட்டத்தில் உள்ள எல்லாக் கவிஞர்களுக்கும் தலைவர். அரசு ஆசிரியரும்கூட. பழகுவதற்கு இனியவர். அவரை நானும் பிற நண்பர்களும் பேருந்து நிறுத்தத்திலிருந்து விழா நடக்கும் கோவிலுக்கு அழைத்து வந்தோம். வரும்போது அவர், ”இன்று பள்ளியில் நிறைய வேலை. பேருந்தில் பயணித்தபடியே கவியரங்கக் கவிதையை எழுதி வந்துள்ளேன்” என்று எங்களிடத்தில் அவராகவே சொன்னார்.

கவியரங்கம் தொடங்கியது. நான் முன்வரிசையில் உட்கார்ந்து இருந்தேன். அப்போதெல்லாம் நாற்காலிகள் போடுவதில்லை. எல்லாரும் தரை டிக்கெட்டுகள்தாம். அவர், தலைமைக் கவிதையை வாசித்தார். அந்தக் கவிதை எனக்கு முன்னரே அறிமுகம் ஆகி இருந்தது. எண்சீர் விருத்தங்களில் அமைந்த கவிதையை அவர் படிக்கும் போது, அடுத்தடுத்த வரிகளை அவர் சொல்வதற்குமுன் நான் அருகில் இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டே வந்தேன். கோவிலுக்கு எதிரே உள்ள சிவலிங்க முதலித் தெருவில்தான் எங்கள்  வீடு. உடனே ஓடிச்சென்று அந்தக் கவிதை வெளியான இதழை எடுத்துவந்து அங்கிருந்தவர்களிடம் காட்டினேன். தெசிணியை ஆசிரியராகக் கொண்ட “கவிதை” இதழில் சப்தங்கள் என்ற தலைப்பில் துறவி என்பவர் எழுதிய கவிதைதான் அது. அந்தக் காலகட்டத்தில் கவிதை இதழ், நாளிதழ் போன்ற தோற்றத்தில் வெளியாகி வந்தது. பிற்காலத்தில் புத்தக வடிவில் வந்தது. தலையங்கம் முதல் அனைத்தும் கவிதையிலேயே இருக்கும். அந்தக் கவிதை ஏட்டில் கவிஞர் வைரமுத்து அவர்களும் பல கவிதைகளை எழுதி இருக்கிறார். கவியரங்கத்துக்குப் பிறகு நடந்த பட்டிமன்றத்தின் நடுவரிடமும் அந்தக் கவிதையைக் காட்டினேன். கவிஞர்களுக்குக் கர்வம் இருக்கலாம். கள்ளத்தனம் இருக்கலாமா என்றேன்.
     
அந்தக் கவிஞரை யாரும் எதிர்த்துக் கேட்கவில்லை. அடுத்த நாள் எங்கள் அமைப்பின் துணைத்தலைவர் என்னை அருகில் உள்ள ஊருக்கு அழைத்துச் சென்றார். எதற்காக என்று என்னிடம் சொல்லவில்லை. அங்குள்ள பள்ளியில் அந்தக் கவிஞர் இருந்தார். திடுதிப்பென்று என்னை அலாக்காகத் தூக்கி அவர் காலில் போட்டு மன்னிப்புக் கேட்கச் சொன்னார்.
     
அய்யோ பாவம்... யார், யாரிடத்தில் மன்னிப்புக் கேட்பது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ழுபதுகளில் குமுதம் இதழில் வாரம் ஒரு கவிதையென்று கண்ணதாசன் எழுதி வந்தார். அத்தனைக் கவிதைகளும் அற்புதமான கவிதைகள். படித்துப் படித்து... ரசித்து ரசித்து எனக்குள் தாமாகவே அந்தக் கவிதைகள் மனப்பாடம் ஆகிவிட்டன. குமுதத்தில் வெளியான அந்தக் கவிதைகள் யாவும் கண்ணதாசனின் ஐந்தாம் கவிதைத் தொகுப்பில் உள்ளன. அதே கால கட்டத்தில் ஆனந்த விகடன் வார இதழில் வாரம் ஒரு கவிஞர் என்ற முறையில் கவிதையை வெளியிட முடிவு செய்தார்கள். அதன்படி நான்கைந்து வாரங்கள் கவிதைகள் வெளியாகின. அனைத்தும் நல்ல கவிதைகள்தாம். அந்த வரிசையில் ஓர் அருமையான கவிதை வெளியானது. அதை எழுதிய கவிஞரின் படமும் அச்சாகி இருந்தது. நானும் அந்தக் கவிதையைப் படித்தேன். “அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்” எனத்தொடங்கும் அந்தக் கவிதை, கண்ணதாசன் எழுதிக் குமுதத்தில் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அதைத் திருடி ஆனந்தவிகடனுக்கு அனுப்பி விட்டார் அந்தக் கவிஞர். புகழ்பெற்ற கவிஞரின் பாடலைத் திருடினால் அகப்பட்டுக்கொள்வோம் என்று அந்தக் கவிஞருக்குத் தெரியவில்லை. ஆனானப்பட்ட ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவிற்கும் அந்தத் திருட்டுத் தெரிந்திருக்கவில்லை. அடுத்த வாரத்தில் கவிதை வெளியாகும் பக்கத்தில் ஓர் அறிவிப்பு இருந்தது. “சென்ற வாரம் வந்த கவிதையைக் கண்ணதாசன் எழுதியதாக வாசகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர். கவிஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவிதையை வெளியிட்டு வந்தோம். கவிஞர்கள் நாணயமுள்ளவர்களாக நடந்துகொள்ளவில்லை என்பதால் இப்பகுதி நிறுத்தப்படுகிறது” என்று அறிவித்துவிட்டார்கள். (இப்பொருள்கள் கொண்ட ஆனந்தவிகடன் வரிகளில் எழுதி இருந்தார்கள்)
     
ள்ளிகளில் கல்லூரிகளில் கவிதைப் போட்டிகள் நடத்துகிறார்கள் என்றால் என்னிடத்தில் தலைப்புச் சொல்லிக் கவிதை எழுதித் தருமாறு கேட்கும் பெற்றோர்கள் இன்னமும் இருக்கிறார்கள். யாரோ எழுதிக் கொடுத்த கவிதைகளையே போட்டிகளில் சமர்ப்பித்துப் பரிசு வாங்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். இது காலங் காலமாய் நடந்து வருகிறது.
     
இப்படி எழுத்துகளைத் திருடுபவர்களைப் பற்றி முறையிட எங்களூர் சிவன் கோவிலுக்குச் சென்றேன். அவர்தான் முதன்முதலில் கவிதையைத் தருமிக்குக் கொடுத்துக் கவிதைத் திருட்டை ஊக்குவித்தவர் என்று தெரிந்து பாதி வழியில் திரும்பிவிட்டேன்.

நன்றி : திண்ணை

Wednesday, 11 December 2019

அப்பாவின் நாற்காலி




















அப்பா இருந்தவரை
அந்த நாற்காலிக்குக் கூட
அஞ்சி நடந்தோம் நாங்கள்.

காலொடிந்தும்
கையொன்று உடைந்தும்
பரணில் கிடக்கிறது அது.

இன்று
எங்கள் வீட்டுக் கூடத்தை
சோபா  அடைத்துக்கொண்டது

நாங்கள் வளர்க்கும் நாயொன்று
எப்பொழுதும்
உட்கார்ந்தும்
உறங்கியும் கொண்டிருக்கிறது
அந்த சோபாவில்தான். 

-கோ. மன்றவாணன்

மெளனச் சிறை




















ஊமையாகி
உள்ளுக்குள் குமறுகின்றன
சொல்ல வந்த நியாயங்கள்.

அகம் உலாவும் மர்மத்தை
முகம் காட்டிக்கொடுக்கும்
என்பதால்
சிரித்து நடிக்கவே
செலவிடுகிறேன் நேரத்தை.

ஒவ்வொரு நொடியும்
சீண்டிவிட்டுப் போகின்றன
குறுக்கும் நெடுக்குமாய்க்
கோர வவ்வால்கள்

மெளனம் உடைக்கவே
மொழிகள் முயல்கின்றன
தோற்றுத்தாம் போவோம் எனத்தெரிந்தே... 

-கோ. மன்றவாணன்