Saturday, 11 November 2017



மேதாவிகள் சிலர் நடத்தும் மேல்சபை

---கோ. மன்றவாணன்---

எனக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார்களோ இல்லையோ... எங்கே இலக்கியக் கூட்டம் நடந்தாலும் அங்கே சென்று தமிழ்கேட்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. மழைவர எத்தனிக்கும் ஒரு மாலை வேளையில் ஓர் இலக்கியக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன்.
சுற்றுவட்டாரப் பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து புகழ்பெற்ற ஒருவர் பாவேந்தரின் நூலைப்படி என்ற பாடலை வரிபிசகாமல் சுவைபடச் சொன்னார். காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் நீண்ட நேரம் அவர் பேசியது கூட்டத்தை நெளிய வைத்தது என்னவோ மெய்தான்.
அடுத்து இன்னொருவர் எழுந்தார். அவர் தன்னை நவீன இலக்கியவாதியாகவும்- சங்கத்தமிழ் அறிந்தவராகவும் வெளிப்படுத்திக்கொள்பவர் அல்லது அறியப்படுபவர். உண்மையிலேயே நவீன இலக்கியத்தில் மிகுஅறிவு கொண்டவர். அந்தக் கூட்டத்தை நடத்தும் அமைப்பாளர்களுக்கு மேலாக இருந்து கட்டளை பிறப்பிக்கும் நிலையிலும் இருப்பவர். நாள்தோறும் படிப்பவர். நான் மதிக்கின்ற நல்லவரும்கூட.
எது பேசுவதென்றாலும் ஆழ்ந்து படித்துவிட்டுப் பேச வேண்டும் என்று அறிவுரையோடு அவர் பேசத் தொடங்கினார்.
சங்கத்தமிழ் நூலைப்படி என்றெழுதிய பாரதிதாசன், சங்க இலக்கியத்துக்காக என்ன செய்தார்? சங்கத் தமிழ் பற்றி அவருக்கு என்ன தெரியும் என்றவாறு கேட்டு அதற்குப் பதில்களும் சொன்னார். சங்க இலக்கியத்துக்காக எதுவும் செய்யவில்லை; சங்கத் தமிழ் இலக்கியம் பற்றி எதுவும் எழுதவில்லை; சங்க இலக்கியம் அறிந்திருக்கவில்லை என்றார். ஓரிடத்தில்கூடக் கைதட்டல் கிடைக்கவில்லை என்றோ என்னவோ சோர்ந்துபோய் நன்றி வணக்கம் சொன்னார்.
அவரைப் பார்த்துக் கேட்டேன். பாவேந்தர் தமிழ்படித்தவர்; தமிழாசிரியராக இருந்தவர்; கண்ணகி புரட்சிக் காப்பியம் படைத்தவர்; மணிமேகலை வெண்பா பாடியவர்; பிசிராந்தையார் நாடகம் எழுதியவர்; திருக்குறளுக்கு உரை எழுதியவர் என்றேன். பிரெய்லி எழுத்தில் தமிழ்படித்த பேராசிரியர் ஒருவர் என் கருத்துக்கு ஒத்திசைந்து, பாவேந்தர் சேரத்தாண்டவம் என்றொரு நூலெழுதி உள்ளார் என்றார். அதைக் கேட்ட அவர், “அப்படியா” என்றபடி சற்றும் நாணாமல் மிடுக்கோடு அவர் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
அன்று அந்த அவையில் பாவேந்தரை வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியமே இல்லை. பாவேந்தர் பெயரை உச்சரிப்பதையே நவீன இலக்கியவாதிகள் எனச் சொல்லிக்கொள்வோர் விரும்புவதில்லை. பாவேந்தர் கவிஞரே இல்லை என்று “ஒரே அடி” கொடுத்து ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். திராவிட இயக்கம் சார்ந்த கவிஞர் என்பதாலும் அவரை வெறுக்கிற ஒரு கூட்டம் இருக்கவே செய்கிறது. பாரதிதாசன் கவிதைகளைப் படித்தால் தீட்டுபடும் என்பார்களோ என்னவோ. படிக்காமலேயே பாரதிதாசனை ஒதுக்கும் போக்கு, சில குழுக்களிடம் உண்டு.
பாரதியாரைவிடவும் தொழிலாளர்களுக்காக அதிகமாகப் பாடல்கள் எழுதியவர் பாவேந்தர். அப்படி இருந்தும் பொதுவுடைமைக் கட்சியினர் பாரதியையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் மட்டும் தூக்கிப்பிடித்துப் பாரதிதாசனைப் புறக்கணித்த காலமும் இருந்தது. அந்தப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எந்தப் பாடலை எழுதினாலும், பிள்ளையார்ச்சுழி போலத் தலைப்பில் பாரதிதாசன் பெயரை எழுதிவிட்டுத்தான் எழுதத் தொடங்குவார். சில ஆண்டுகளாகத்தான் பொதுவுடைமைக் கட்சியினரும் பாரதிதாசனை ஏற்றுப் போற்றுகிறார்கள்.
சரி! பாவேந்தர் சங்கத் தமிழ் இலக்கியத்துக்காக எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதனால் அவர் தரம் தாழ்ந்துவிடுவாரா? ஒரு கவிஞன் என்ன எழுதி இருக்கிறானோ அதில்தான் அவனின் பெருமை இருக்கிறது. அதற்குள்தான் நாம் ஆய்வு நடத்த வேண்டும். பாரதியோ பாவேந்தரோ தாம் வாழ்ந்த காலத்தின் தேவைக்கேற்ப இயங்கி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாரதிதாசன் இதுபற்றி ஏன் எழுதவில்லை? அதுபற்றி ஏன் எழுதவில்லை என்றெல்லாம் கேள்வி கேட்பது நியாயமா? “இதுபோன்ற தனத்தில்” கேள்வி கேட்டால் எந்த எழுத்தாளரும் எந்த இலக்கியவாதியும் தப்ப முடியாதே. எந்த எழுத்தாளரும் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாதே!
நான் நினைப்பதையெல்லாம் ஓர் எழுத்தாளன் எழுத வேண்டும் என்று நினைப்பதும்-  என் கருத்துக்கு உட்பட்டே எந்த எழுத்தாளனும் எழுத வேண்டும் என்று நினைப்பதும்... அப்படி எழுதாதவர்களை எழுத்தாளர்களே இல்லை என்று இழிவுபடுத்துவதும்... இலக்கியக் கொடுங்கோல் அல்லவா?
தனக்கு வேண்டியவர்கள் தப்பாக எழுதினாலும் அதுவே சரியென்றும்... ஆகா... அருமையென்றும் சாதிக்கிறார்கள். தனக்கு ஆகாதவர்கள் சரியாக எழுதினாலும் அதை முட்டாள்களின் பிதற்றல் என்றும்... இலக்கியமே இல்லை என்றும் சாடுகிறார்கள். இதுவே தற்கால இலக்கிய மேதாவிகள் சிலர் நடத்தும் மேல்சபையின் தீர்ப்பாக உள்ளதே.
இலக்கியப் படைப்பின் நிறை-குறைகளைச் சுட்டி விவாதிப்பது தவறல்ல. ஆனால் அதில் அறம் வெளிப்பட வேண்டும்.
காலத்தின் தேவையையும் காலத்தின் பின்னணியும் அடிப்படையாக வைத்துத்தான் இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் நோக்க வேண்டும். விருப்பு – வெறுப்பு இவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். சாதி, மதம், கட்சி, கொள்கை, மொழி, தனிப்பட்ட நோக்கம் சார்ந்து எடைபோடக் கூடாது.
சுருக்கமாகச் சொன்னால்...
தனக்குப் பிடித்தவர்கள் எழுதுவதே இலக்கியம் என்றும்- பிறயாவும் கழிவுகள் என்றும் கருதும் முன்முடிவுகள் அறமாகாது.
இலக்கியம் மனங்களைப் பண்படுத்தும் என்கிறார்கள். மெத்த இலக்கியம் படித்த பலரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது... அது கேள்விக்குறியாகி விடுகிறது.





சட்டமா? நியாயமா?

கோ. மன்றவாணன்


சட்டம் மேலானதா? நியாயம் மேலானதா? என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்பி விடைகாணப் பாருங்கள். கிட்டத்தட்ட எல்லாருடைய பதிலும் நியாயம்தான் மேலானது என்பதாக இருக்கும்.

கொலை செய்வோர் கூட, அவர்கள் தரப்பிலிருந்து சில நியாயங்களை அடுக்கக் கூடும். கொலைசெய்யப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் நியாயங்கள் அணிவகுக்கும்.

திருடர்கள் கூட, வறுமையின் காரணமாகத் திருடினேன் என்று சொல்லக்கூடும். திருடு கொடுத்தவனின் வேதனையைப் பொருப்படுத்த வேண்டியதில்லை என்றும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்றும் புத்திமதி புகலக்கூடும். யாரிடம் திருடினான்? பணக்காரன்கிட்டேதானே திருடினான் என்று இரக்க நியாயம் பேசுவார்கள்.

ஏதாவது யாராவது குற்றம் செய்தால், அதைச் சமூகத்தின் மீது சார்த்திவிட்டுத் தாங்கள் நியாயவாதிகள் என்று மார்தட்டுகின்ற புதிய தர்மர்கள் உண்டு.

இளம்பெண்ணை ஒருவன் களங்கப்படுத்திவிட்டான் என்றால்…. கற்பழித்துவிட்டான் என்றால்… அவனுக்காகச் சிலர் வாதாடத் தயாராக உள்ளார்கள். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மீதே பழிசுமத்திப் பாதகனைப் பாதுகாக்கப் புறப்பட்டுவிடுவார்கள். அந்தப் பெண் அந்த நேரத்தில் ஏன் அங்கு வரவேண்டும்? அவள் ஏன் ஆளைக் கவரும் ஆடை அணிய வேண்டும்? அவள் ஏன் துணைக்கு ஒருவரை அழைத்து வரவில்லை. அவளே உடன்பட்டு இருப்பாள். வெளிச்சத்துக்கு வந்ததும் பத்தினி வேடம் தரிக்கிறாள் என்றெல்லாம் ரப்பர் நாக்கை நாலாப்புறமும் சுழற்றுவார்கள்.

பள்ளிக்கூடத்தில் காலை 9 மணிக்கு மாணவர்கள் வருகை தர வேண்டும் என்பது பொதுஒழுங்கு. காலம் கடந்துவரும் மாணவர்கள் எப்படி எல்லாம் நியாயப் போர்வை போர்த்திப் பொய்க்காரணங்களைச் சொல்வார்கள் என்பது, மாணவர்களாக இருந்த நமக்கெல்லாம் தெரியும். பேருந்து தாமதம்; ஆட்டோ வரவில்லை; போக்குவரத்து முடக்கம்; வழியில் விபத்து; மருத்துவ மனைக்குப் போய்விட்டு வந்தேன் என்றெல்லாம் காரணங்கள் சொல்லக் கூடும். இவை சில நேரங்களில் உண்மையாக இருக்கக் கூடும். அந்த உண்மையான காரணங்கள் நியாயமானவைதாம். அதற்காக அவற்றை ஏற்கத் துணிந்தால் அதையே காரணம் காட்டி, அதையே சாதகமாக்கி, அவரவர் தாமதமாக வருவார்கள். இது தொடரும் போது பள்ளியில் பொதுஒழுங்கு கெட்டுப்போகும்.

வீட்டிலேயே காலம் தாழ்த்திவிட்டு, தூங்கிவிட்டு, தேநீர்க் கடையில் வம்பளந்துவிட்டு, தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டு,  அதுபற்றிக் கவலைப்படாமல் சமாளித்துக்கொள்ளலாம் என்றிருந்துவிட்டு; யார் என்ன செய்துவிடுவார்கள் என்று வீரம் பேசிவிட்டு அலட்சியமாகப் புறப்பட்டு வருபவர்கள் அந்தக் காரணங்களை வெளிப்படையாகச் சொல்வார்களா?

நியாயவிலைக் கடையில் பொருட்களை எடைக்குறைவாகக் கொடுப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நியாயமானதாகத்தான் இருக்கிறது. சாக்குப் பைகளில் கொக்கி போட்டுத் தூக்குவதால், சரக்குந்தில் வரும் மூட்டைகள் எல்லாம் எடை குறைவாகத்தாம் இருக்கின்றன என்கிறார்கள். என்ன பிரச்சனையோ எங்கே பிரச்சனையோ அதற்குத் தீர்வு காண்பதைவிட்டு, இழப்பை எல்லாருடைய தலையிலும் ஏற்றி வைப்பது சரியா? சரியென்றால் சரக்கு ஏற்றி இறக்கும் தருணங்களில்  இடையில் திருடுவார்கள்; கடைசியில் கடையில் எடையில் திருடுவார்கள். வாதத்துக்கு ஒவ்வொரு மூட்டையிலும் ஒரு கிலோ குறைவதாக வைத்துக்கொள்வோம். அதற்காக ஒவ்வொரு கிலோவிலும் 100 கிராம் எடைகுறைத்து விநியோகம் செய்யும்போது பல கிலோ கொள்ளை போகவில்லையா?

இப்போது இருக்கும் நிலை என்ன என்றால், சணல்சாக்குப் பைகளில் பொருட்கள் வருவதில்லை. அடர்த்தியான கெட்டியான ஞெகிழிப் பைகளில்தாம் பொருட்கள் வருகின்றன. கொக்கிப் போடும் நிலையும் இப்போது இல்லை. அப்போதும் எடை குறைகிறதே!

தங்கள் பிழைக்குத் தனக்கு மேலிருப்போரைக் காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ளவே தனிப்பட்ட நியாயங்கள் பயன்படும்.

உரிய படிவங்கள் கொடுத்தும்- சட்டப்படியான அனைத்தும் செய்தும்- அந்தப் பணியை நிறைவேற்றாமல் ஓர் அதிகாரி தாமதம் செய்து வந்தார். பலமுறை நடந்தும் பல காரணங்கள் சொன்னார். பிறகு அவர் நாசூக்காக லஞ்சமும் கேட்டார். கொடுத்திருக்கிறார்கள். லஞ்சம் வாங்கிய அந்த அதிகாரி, “இது எனக்கில்லை. மேலதிகாரிகளுக்கு” என்று நேர்மை பேசினார்.

அலுவலக எழுத்தர் தான் செய்யும் தவறுக்கு, அவருடைய மேலதிகாரியைக் காட்டுவார். அந்த மேலதிகாரியைக் கேட்டால் அவரைவிட மேலதிகாரியைக் கைகாட்டுவார். அந்த உயரதிகாரியைக் கேட்டால் அமைச்சருக்காக என்பார். அமைச்சரைக் கேட்டால் மேலிடத்துக்கு என்பார். ஆக ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு நியாயம் சிலுக்குச் சட்டை போட்டுக் கொண்டு சிரிக்கிறது. சில அலுவலகங்களில் லஞ்சப் பணத்துக்குக் கூட்டணி உண்டு.

இது குறித்துப் பொதுமக்களைக் கேட்டால், இதெல்லாம் சாதாரணமப்பா. அப்படி வாங்கினால்தான் இந்தக் காலத்தில் அவர்களுடைய குழந்தைகளை நல்ல பள்ளியில் நல்ல கல்லூரியில் படிக்க வைக்க முடியும்.  பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் செலவு பண்ண முடியும் என்று நியாயம் பேசி சமாதானம் ஆகிவிடுகிறார்கள்.

எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும் தவறு செய்யாமல் உரிய நேரத்தில் பணிகளைச் செய்யும் நேர்மையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது என்று சமூக அக்கறை நண்பர்கள் சிலரிடம் பேசி உள்ளேன். . நேர்மையாக இருந்த சிலருக்கு அரிதாக ஏற்பட்ட துயர நிகழ்வுகளைச் சொல்லி, நேர்மைக்கு எதிராகக் கொடிபிடிக்கும் நியாயவாதிகளாக அவர்கள் இருக்கிறார்கள்.

பரபரப்பான சாலையின் நாற்சந்தியில் சமிஞ்ஞை தூண் இருக்கிறது. சிவப்பு விளக்கு ஒளிரும் போது நின்றும்- மஞ்சள் விளக்கு எரியும் போது தயாராகியும்- பச்சை விளக்கு சுடரும் போது பயணித்தால் ஒரு நிமிடக் காத்திருப்பில் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் சென்றுவிடலாம்.

“எனக்கு அவசர வேலை இருக்கிறது” “பள்ளிக்கு நேரமாகிவிட்டது” என்று ஒவ்வொருவரும் அவர்களின் அவசர நியாயங்களுக்கு உட்பட்டு போக்குவரத்து விதிகளை மதிக்காமல் போனால் என்னாகும்? விபத்து நடக்கும்; போக்குவரத்து முடங்கும். வாய்த்தகராறும் கைகலப்பும் கைகோர்த்துக்கொள்ளும். போக்கு வரத்தைச் சரிசெய்ய அரை மணி நேரத்துக்கும் மேலாகும். அதுவரை யாரும் அவரவர் போக வேண்டிய இடங்களுக்குப் போக முடியாது. இந்த எளிய எடுத்துக்காட்டு உணர்த்துவது என்னவென்றால், அவரவர் நியாயத்தைவிடச் சட்டமே சமூக அறனுக்கு வழிவகுக்கும் என்பதுதான். 

தப்புச் செய்பவர்கள் இங்கே புத்திசாலிகளாகவும் பிழைக்கத் தெரிந்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சட்டப்படி நடப்பவர்களைப் பைத்தியக்காரர்களாகப் பார்த்து நகையாடுகிறார்கள்.

இவ்வாறு பேசுவோரைத்தான் கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் இப்படிச் சொல்லியுள்ளார்.     

           கதைகட்ட சிலபேர் பிறந்துவிட்டால்
           கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
           காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்
           கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு

சட்டம் என்பது ஒரே பார்வை கொண்டது. நியாயம் என்பது 360 பாகையிலும் பயணித்து ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் ஒவ்வொரு நியாயம் பேசும். அத்தனைக்கும் செவிசாய்த்தால் ஒரு தீர்வும் கிடைக்காது. அவரவர்க்கு அவரவர் தரப்பே நியாயமானதாகத் தெரியும். நியாயம் என்பது ஆளாளுக்கு மாறுபடும். சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றே!

அப்படியானால் சட்டம் என்பது நியாயம் அற்றதா? சட்டத்தில் நியாயம் உள்ளடங்கி இருக்காதா? என்றெல்லாம் யாரேனும் வினா அம்புகள் தொடுக்கலாம்.

சட்டம் என்பதே பொதுவான நியாயங்களின் அடிப்படையில் உருவாவது. அந்தப் பொதுநியாயத்துக்கு உட்படும் போது தனிப்பட்ட நியாயங்கள் ஏற்கத் தக்கதல்ல. பொதுஒழுங்கை நிலைநாட்டுவதே சட்டம். அந்தப் பொதுஒழுங்கை நோக்கியே உங்கள் நியாயங்கள் இருக்க வேண்டுமே தவிர, சுய நியாயங்களைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது.

நிறைவேற்றப்பட்ட ஒருசட்டம் நியாயமற்றதாக உள்ளது எனக் கருதினால், அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முயலாம். அதுவரை அந்தச் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டும்.

சட்டத்துக்கு மதிப்பளித்துத் தனிப்பட்ட நியாயங்களை விட்டுத் தருவதுதான் சமூக அறனுக்கு உகந்த வாழ்க்கை.


சட்டமா? நியாயமா? என்றால் சட்டமே மேலோங்கும்..




கோப்பையைக்

கவிழ்த்துவிடுகிறார்கள்.



---கோ. மன்றவாணன்---


இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். பேராசிரியர் ஒருவர் கவிதை நூலொன்றை விமர்சனம் செய்தார். அது மரபுக்கவிதை நூல். அதைப் படிக்காமலேயே அதுகுறித்துப் பேசினார் என்றால் அவருடைய அசாதாரண ஆற்றலை வியக்காமல் இருக்க முடியாது.

பொதுவாக அணிந்துரையை, முன்னுரையைப் படித்துவிட்டு மொத்த நூலையும் படித்த மாதிரி பேசுகிற வழக்கம் பெருகிவிட்டது. மிகவும் எதிர்பார்ப்போடும் மதிப்போடும் ஒருவரை அணுகி, மதிப்புரை ஆற்ற அழைக்கிறார்கள்; வண்ண அழைப்பிதழ் அச்சடிக்கிறார்கள்; சுவரொட்டி ஒட்டுகிறார்கள்; நாளிதழ்களில் சிலர் விளம்பரமும் செய்கிறார்கள்; வெளியூர்க்காரர் என்றால் குளிரறை ஏற்பாடு செய்கிறார்கள்; அழைத்துவர மகிழுந்து கொண்டுவருகிறார்கள்.

நூல்குறித்து விமர்சனம் செய்பவரின் சிறப்புகளை எல்லாம் செந்தமிழ்த் திறத்தால் புகழ்ந்துரைக்கிறார்கள்; பொன்னாடை அணிவித்துப் பூங்கொத்துக் கொடுக்கிறார்கள்; மினுமினு தாளில் பொதிந்து பரிசுப்பொருட்களைத் தருகிறார்கள்; விடைபெற்றுப் போகும்போது பணஉறை அளிக்கிறார்கள்.

ஆனால் அத்தகு பேராசிரியர்கள் அந்நூலைப் படிக்காமல் பேசிச் சென்றால், ஆர்வத்தோடு கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் நிலை எப்படி இருக்கும். எதிர்பார்ப்போடு காத்திருந்த நூலாசிரியரின் நுண்மனம் நொந்து நைந்து இருக்காதா? வருகை தந்த சுவைஞர்கள் ஏமாற மாட்டார்களா?
அப்படித்தான் அன்றும் நடந்தது.

மரபுக் கவிதை நூலென்று தெரிந்துவிட்டது. எண்சீர் விருத்தங்களால் எழுதப்பட்ட நூல் என்பதும் புரிந்துவிட்டது. அதுபோதுமே பேராசிரியருக்கு. அதனால் அவர் முன்னுரையையோ அணிந்துரையையோகூடப் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

புதுக்கவிதையா மரபுக்கவிதையா என்ற சென்ற நூற்றாண்டு தலைப்பில் அரைமணி நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார். பலரும் பலகாலமாகச் சொல்லித் தேய்ந்த கருத்துகளையே மேலும் தேய்த்தார். அது அந்நிகழ்வின் பேசுபொருள் அல்ல. பேச வேண்டிய பொருள், பேசாப் பொருளாய் ஆனது.

“மரபுக்கவிதை என்பது உறையில் உள்ள வாள்” என்றார். “புதுக்கவிதை என்பது உறையில் இருந்து வெளிவந்த வாள்” என்றார். கூட்டம் கைதட்டி மகிழ்ந்தது.  நவீன கவிதை பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் அதை  “மார்பில் செருகப்பட்ட வாள்” என்று சொல்லி இருப்பாரோ என்னவோ?

மரபுக்கவிதை என்பது உறையில் உள்ள வாள் என்றால், பாரதியின் மரபுக்கவிதை அப்படித்தானோ? சுதந்திரப்போர் காலத்தில் பாரதியின் கவிதையே மக்களின் ஆயுதமாகக் கையாளப்பட்டிருக்கிறதே!

கவிதையைப் பார்க்காமல் கவிவடிவை விமர்சித்துக்கொள்வதில் என்ன பெரிய ஆதாயம்? கோப்பையின் வடிவத்தைக் குறைசொல்லும்போது, கோப்பையைக் கவிழ்த்துவிடுகிறார்கள். விளைவு... பருகத் தந்த தேநீர் மண்ணில் கொட்டிப் பாழாகிவிடுகிறதே. உள்ளத்தைப் பார்க்காமல் உடலைப் பார்த்துக் கூறுபோடுவது போல் அல்லவா இத்தகைய விமர்சனம் இருக்கிறது.

காலத்துக்கு ஏற்ப வடிவங்கள் மாறும். சொல்லும் முறைகளும் மாறும். ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிக்கொண்டு வந்தால்தான் அது வளர்ச்சி முகம். ஆனால் நுண்ணிய கவிமனம் மட்டும் என்றும் ஆராதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

பேச்சை முடிக்கும் தறுவாயில், கடைசி மூன்று மணித்துளிகளில் அந்தக் கவிநூலில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வரிகள் படித்தார். ஏன் அதைப் படித்தார் என்று எங்களுக்கும் தெரியவில்லை. அவரும் சொல்லவில்லை.

கடைசிவரை அந்த நூலில் என்ன சிறப்பு இருக்கிறது என்று சொல்லவில்லை.

முழுவதும் படித்ததுபோல் காட்டிக்கொள்ளவும், தனக்கும் இலக்கணம் தெரியும் என்று மிடுக்குயர்த்திக்கொள்ளவும் முயன்றார். அதனால் அந்த விருத்தங்களில் ஏழு இடங்களில் தளை தட்டுப்படுகிறது என்றார். ஆனால் எந்த இடத்தில் எப்படித் தளை தட்டுப்படுகிறது என்று இறுதிவரை சொல்லவில்லை. எங்கோ எப்போதோ தமிழ்படித்த என் உள்மனம் புலம்பியது. “வெண்பா, கலிப்பா போன்ற பாவகைகளில் தளை தட்டுப்படுகின்ற சிக்கல் வரும். விருத்தப்பாக்களில் தளை தட்டுப்படுவதாகச் சொல்ல முடியாது”

விருத்தப்பா வாய்ப்பாட்டுக்குரிய சீர்களில் தவறு ஏற்படலாம். காய்ச்சீர் வரவேண்டிய இடங்களில் விளச்சீர், கனிச்சீர் போன்றவற்றை வைத்துவிடுவோர் உண்டு. குற்றியலுகரப் புணர்ச்சி காரணமாகச் சீர் குறைந்து போவதும் உண்டு. ஆனால் விருத்தப்பாக்களில் தளை பார்ப்பதில்லை. இவை என் பட்டறிவுக்குப் பட்டவை.

கூட்டத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகளை மறக்காமல் பாராட்டி உரையை நிறைவு செய்த பேராசிரியர், ஓரிடத்தில் கூட நூலாசிரியரைக் குறிப்பிடவே இல்லை.

குறிப்பு :

இதுகுறித்துக் கலிபோர்னியாவில் உள்ள பொறியாளரும் புலவருமான செந்தமிழ்ச்சேய் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். விருத்தப்பாக்களில் தளைபார்ப்பதில்லை என்று விளக்கமாகவும் எடுத்துக்காட்டுகளுடனும் பதில் அனுப்பினார்.






Tuesday, 7 November 2017

மேகத்தில் கரைந்த நிலா







          மேனி தொடும் உரிமையை
          மேகத்துக்குத் தந்து
          வெட்கப்படுகிறாள் நிலா

          தொலைதூரத்து நட்சத்திரங்கள் கண்ணடித்துத்
          தொட முயன்றாலும்
          நெருங்க விடவில்லையே
          நிலாவட்டம்

          இன்னமும்
          ஒருதலைக் காதலாய்
          நிலவைக் காதலிக்கிறார்கள் கவிஞர்கள்

          வா... வா... என்றே
          அம்மாக்கள் அழைத்து ஓய்ந்துவிட்டார்கள்
          வானைவிட்டு இறங்கவும் இல்லை
          வாண்டுகளுக்காக இரங்கவும் இல்லை

          வானத்தில் அங்கங்கே புகைமூட்டம்
          நிலவில் அடுப்பெரித்துப்
          பாட்டி வடைசுடுவதால்.

          மேகம் தொடத்தொட
          நழுவி ஓடுகிறாள் நிலா
          நாணம் நடத்தும் நாடகம்

          கண்ணாமூச்சி ஆடுகிறாள் நிலா
          அமாவாசையில்
          தேடி அலைகிறது வெண்முகில்

          மேகத்தில்
          பாதிமுகம் மறைத்து
          மீதிமுகம் காட்டும் நிலவை

          எதிர்வீட்டு ஜன்னலிலும் பார்க்கிறேன்.


          -கோ. மன்றவாணன்

Tuesday, 31 October 2017

தீ தின்ற உயிர்





         கம்பன் எழுதினான்
         கடன்பட்டார் நெஞ்சம்போல் என்று
         கந்துவட்டி இருந்திருக்கும் அன்று

         கந்துவட்டிக் காரர்களுக்கும்
         கார்பரேட் சூரர்களுக்கும்
         ஒரே முகம்
         ஒரே நகம்

         மீட்டர் வட்டிக் கடன் வாங்கியவர்கள்
         மீளவே வழியில்லை
         புதைகுழியில் விழுந்ததுபோல்
         புலிக்குகையில் நுழைந்ததுபோல்

         கந்துவட்டிக் காலடியில்
         கழுத்திறுகிக் கிடக்கிறது சமுதாயம்
         கல்வியும் மருத்துவமும்
         காசாகிப் போனதால்

         நிமிடம்தொறும் ஏறுகிறது வட்டி
         நீள்நாக விஷமென
         தீயே நீயும் சேர்ந்துகொண்டு
         தின்பதுவோ எம் மக்களை

         பற்றி எரிகின்றன
         பச்சிளம் குழந்தைகள்
         அழுதோடி வரவில்லை
         அந்த வருண பகவானும்


         தீயே
         தீபமாய் இருக்கும் போது
         கருணை தெரிகிறது உன் முகத்தில்

         தீயே
         சிறுகுழந்தைகளை எரிக்கின்ற போது
         மண்டையோட்டு மாலை தெரிகிறது உன் கழுத்தில்


         -கோ. மன்றவாணன் 

Tuesday, 24 October 2017

வான(ண) வேடிக்கை





             சோகத்தை எரிக்கிறது
             வாண வேடிக்கை
             மவுனமாக நகரும் சவஊர்வலத்திலும்

             இருட்டைக் கீறித்
             தங்கப் புதையலைப் படம்பிடிக்கிறது
             சிவகாசி ஏவுகலம்

             ஒளிமழை பொழிகிறது வானம்
             சாமியின்
             ஊர்வலப் பாதையில்

             சிலநேரம் வானம் மயங்குகிறது
             சிவகாசியில்தான்
             நட்சத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன என்று

             விழாக்கொண்டாட்டத்தை
             ஊருக்குச் சொல்கிறது
             வாண(ன) வேடிக்கை

             வானமும்
             வாணமும் சேர்ந்து காட்டும் வேடிக்கையைத்
             தூக்கம் மறந்து எட்டிப் பார்க்கின்றன
             தூக்கணாங்குருவிகளும்

             என்றாலும்
             சோகத்தோடே விடைபெறுகிறது
             ஒவ்வொரு தீபாவளியும்
             வெடிக்காத பட்டாசுகளைப் பொறுக்கி மருந்தெடுத்துப்
             பொட்டலம் கட்டித் திரிசெருகிப்
             புஸ்வாணம் விடும்
             ஏழைச் சிறுவர்களின் ஏக்கங்களைப் பார்த்து...!

            -கோ. மன்றவாணன்


Friday, 20 October 2017

நிசப்த வெளியில்







             குருதி சிந்தும்
             நெஞ்சப் பறவை அலைகிறது
             நிசப்தத்தின் வெளிதேடி

             போதி மரத்துக் கீழ் அமர்ந்த
             புத்தன் மனதைக் கலைத்துப் போட்டிருக்கும்
             கொடுவண்டுகளின் ரீங்காரம்

             துறவியின் சங்குக்குள்ளும்
             சுழன்று வருகிறது பேரிரைச்சல்

             தொலைதூரக் காட்டுக்குள் சென்றமர்ந்தேன்
             சருகுகளில் பாம்புகள் ஊர்ந்து போகும்
             சப்தங்கள்

             பாலைவனத்தின் நடுப்பகுதியில் அமர்ந்து
             தியானம் செய்தேன்
             மண்வாரி போட்டுச் சண்டைக்கூச்சல் போடுகிறது
             சுடுகாற்று

             மனிதர்களற்ற கோவிலுக்குப் போனேன்
             முகத்தை உரசிச் செல்கின்றன
             வவ்வால்கள்

             மரணம் மட்டுமே
             கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்னை
             நிசப்தத்தின் வெளிக்கு

-                                                           
               கோ. மன்றவாணன்

Thursday, 12 October 2017

காந்திக்கு ஒரு கடிதம்






             மற்றவரைத் துன்புறுத்தலில்
             வண்ணக் கலவை பூசி
             வாண வேடிக்கை நடத்துகிறது
             சமூகம்

             ஏழைகளுக்கான திட்டங்களைச் சுரண்டுவதால்
             வறுமைக்கோடு கொழுத்து நெளிகிறது 

             மதநல்லிணக்கம்
             மாலை போர்த்தப்பட்டுக் கிடக்கிறது
             குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில்

             முதலாளிகள் சேமிப்பில்
             கறுப்பாகவே மாறுகின்றன
             வெள்ளை ரோஜாக்களும்

             சுதந்திர இந்தியாவில்
             முகவரி இன்றிக் கிடப்பவர்களை
             ஒருநிமிடம் நின்று பார்த்துப்
             பெருமூச்சுவிட்டு நகர்கிறது
             ஒவ்வொரு தொடர்வண்டியும்

             உன்னை
             ரூபாய்த் தாளில் அச்சடிக்கும் நாங்கள்
             மறுத்துவிட்டோம்
             மனதில் அச்சடிக்க 

             நேர்மையைப்
             பித்தர் கூடத்தில் அடைத்துவைத்துக்
             கேலி செய்கிறோம் கைகொட்டி!

             உன்னிடம்
             மாறவே மாறாத குணம்
             மன்னிப்பதுதான்!

             மன்னித்துக்கொண்டே இருக்கிறாய் எங்களை....


             -கோ. மன்றவாணன்

Thursday, 5 October 2017





சொற்கள்
புகழோடு தோன்றுகின்றன 


கோ. மன்றவாணன்


ஜெயமோகன் படைப்புகளில் அவருடைய மொழியாளுமை எவரொருவரையும் வியக்க வைக்கும்.  அவருடைய எழுத்துகளில் தமிழின் புதுமிளிர்வாகப் புதுச்சொல், புதுச்சொற்றொடர், புதுவீச்சு ஊற்றெடுத்து வெள்ளமெனப் பாய்வதைப் பார்க்கலாம்.
மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாள்தோறும்  எழுதி வருகிறார். சமற்கிருதப் பெருங்காவியமாக அது இருப்பதால் சமற்கிருத சொல்மிடுக்குகளுக்கு ஏற்ப, அதே மிடுக்கோடும் கூடுதல் அழகோடும் தூய தமிழ்ச்சொற்கள் படைத்து வருகிறார்.
படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தாம் மொழி தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும் அவர்களால்தாம் மொழி அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு இளமையோடு கொண்டு சேர்க்கப்படுகிறது. அதில் ஜெயமோகனுக்குத் தனிஇடம் உண்டு.
ஜெயமோகன் படைப்புகளில் காணப்படும் புதிய தமிழ்ச்சொற்களை- புதிய சொற்கூட்டுகளைத் தொகுத்தால் அது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் தனிஅகர முதலியாகச் சிறந்து விளங்கும்.
இதுகுறித்துக் கடந்த ஆண்டு கோவையில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் ஜெயமோகன் அவர்களிடமே கோரிக்கை வைத்தேன். அப்போது அவர் சொன்னார். பரப்புரை என்ற சொல்லையும் முதன்முதலில் அவர்தான் உருவாக்கிப் பயன்படுத்தியதாகவும், அந்தச் சொல் தினத்தந்தி இதழில் தற்காலங்களில் பயன்படுத்தப்படுவதைக் கண்டு பேருவகை கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் தன்படைப்புகளில் அவர் உருவாக்கும் புதுச்சொற்களை வேறுயாராவதுதான் தொகுக்க வேண்டும் என்றார்.
யுனிவர்ஸ் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு உரிய புடவி என்ற சங்கத்தமிழ்ச் சொல்லை வெண்முரசில் பார்க்கலாம். பாவலரேறு பெருஞ்சித்திரனார் படைப்புகளில் இந்தப் புடவி என்ற சொல்லைப் படித்திருக்கிறேன். அத்தகு பழந்தமிழ்ச் சொற்களை இன்றைய இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கிறார் ஜெயமோகன்.
வெண்முரசு படிப்பவர்களிடம் கேட்டேன். அதில் கையாளும் பல தமிழ்ச்சொற்களைத் தமிழ்அகராதியில் தேடித்தான் அறிய முடிகிறது என்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆங்கில அகராதி இருக்கும். ஆனால் தமிழ் அகராதி இருக்காது. தமிழ் அகராதியை வாங்க வைத்துவிடுகிறார் ஜெயமோகன். சில சொற்களைத் தமிழ் அகராதியில் தேடினாலும் கிடைப்பதில்லை என்றும் சொல்லுகின்றனர்.
எனக்கு ஒரு வியப்பு. ஜெயமோகன் மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். தமிழ்ப்பெருங்கடலில் மூழ்கிச் சொல்முத்துகளை அள்ளிவந்து கொட்டுகிறாரே... அவரால் எப்படி முடிகிறது? அவருடைய தமிழ்படிப்பு வானம்போல் உயர்வானது; கடல்போல் பரந்தது என்பதால் இருக்கலாம். தூய மலையாளத்தில் நல்ல தமிழ்ச்சொற்கள் உள்ளன. அந்த மலையாளச் சொற்களும் புதுச்சொல் உருவாக்கத்தில் அவருக்குக் கைகொடுக்கலாம்.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்ப் பேச்சு வழக்கில்  மலிந்திருந்த பிறசொற்கள் பலவும் தற்காலத்தில் மறைந்தே விட்டன. அதற்கு முயன்றவர்களில் மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள் எனப் பலர் உள்ளனர். ஆனாலும் பிராயச்சித்தம் என்ற சொல் நம்மிடையே நங்கூரமிட்டு நகராமல்தான் உள்ளது. அந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் என்ன என்று தனித்தமிழ் அன்பர்கள் பலரிடம் கேட்டேன். யாரும் சொல்லவில்லை. ஜெயமோகன் படைப்புகளில் அதற்கு விடை இருக்கிறது. பிராயச்சித்தம் என்ற சொல்லுக்கு அவர் படைத்தளித்துப் பயன்படுத்தி வரும் சொல் பிழையீடு.
இழப்பீடு என்ற சொல் வழக்காடு மன்றத்தில் புழங்கப்பட்டு வருகிறது. ஏதாவது ஓர் இழப்புக்கு அதை ஈடுசெய்ய வேண்டிய ஒன்றுக்கு இழப்பீடு என்ற சொல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இழப்பீடு பணமாகவும் இருக்கலாம் வேறு வகையிலும் இருக்கலாம். அறமன்றங்களில் இழப்பீடு என்பது பணத்தால் ஈடுசெய்வதாக மாறிவிட்டது. அந்தச் சொல்தான், பிழையீடு என்ற சொல் உருவாக்கத்துக்குத் தூண்டுகோலாக இருந்திருக்கும் எனக் கருதுகிறேன்.
சிலநாள்களுக்கு முன் எழுத்தாளர் வளவ. துரையன் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவருடைய துணைவியார் வழிபாட்டு அறையில் படைத்துக்கொண்டிருந்தார். தீபாராதனை என்ற சொல்லுக்குத் தமிழ்ச்சொல் என்ன என்று கேட்டார். தீபம் என்றால் விளக்கு. ஆராதனை என்றால் பூசனை, வணங்கல், வழிபடல் என்றெல்லாம் சொல்லித் தகுந்த சொல் காண முற்பட்டுத் தோற்றுத்தான் போனேன். வளவ. துரையன் பல்தெரியாமல் புன்னகைத்துச் சொன்னார். எனக்கும் தெரியாதுதான். ஆனால் தீபாராதனை என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை ஜெயமோகன் எழுதி இருக்கிறார் என்றார். என்ன சொல் என்று சொல்லுங்கள் என்று படபடத்தேன். சுடராட்டு என்றார். தற்போது தொடங்கியுள்ள வெண்முரசின் எழுதழல் புதினத்தில் அந்தச் சொல் உள்ளது. சுடரை ஆட்டுவதால் அவ்வாறு அந்தச் சொல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீராட்டு என்பதுபோல் பாராட்டு என்பதுபோல் இந்தச் சுடராட்டு என்ற சொல்லில் தமிழ் ஒளிவீசுகிறது.
மேலும் பூஜை என்று நாம் சொல்லும் சொல்லில் ஜை இருப்பதால் அது வடசொல்தான் என்று தெளிவாகச் சொல்லிவிடுவோம். அந்தச் சொல் பூசெய் என்ற சொல்லில் இருந்து மருவியதால் அது தமிழ்ச்சொல்தான் என்கின்றனர் தமிழறிஞர்கள். ஜெயமோகனின் எழுதழல் புதினத்தில் பூசெய்கை என்ற சொல் பூசை / பூஜை என்ற சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தமிழ்ச்சொல்லின் பழங்கால வடிவைக் கூட ஜெயமோகன் மீட்டெடுக்கிறார் என்பதில் மகிழ்ச்சியுறாமல் இருக்க முடியாது.
அண்மையில் அவருடைய தளத்தில் தாள்குட்டை என்ற சொல்லைப் படித்தேன். உடுவிடுதியில் (புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கொண்டது போல், நட்சத்திர ஓட்டலுக்கு எனக்குத் தோன்றிய சொல். ஆனால் இயல்பாக இல்லைதான்.)  Tissu Paper வைத்திருப்பார்கள்.  தற்போது சரக்கு-சேவை வரி வாங்காத உணவகங்களிலும் வைத்திருக்கிறார்கள். அதைத்தான் தாள்குட்டை என்று சொல்கிறார். கர்ச்சீப்க்கு கைக்குட்டை என்று சொல்வதை அடிப்படையாக வைத்து அதை அவர் உருவாக்கி இருக்கலாம். முன்னொரு முறை அவர் தலைக்குட்டை என்ற சொல்லைப் பயன்படுத்தியதைப் பார்த்தேன். அது Head Scarf என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்.
Tissu Paper என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எதுவென இணையத்தில் துழாவினேன். ஜெயமோகன் சொல்லைவிட வெல்லும்சொல் அதில் இருக்கலாம் என நினைத்துத்தான் தேடினேன். அதில் உள்ள சொற்கள் திசு காகிதம், மென்தாள், புரைத்தாள், உரித்தாள் ஆகியவை ஆகும். நாமும் முயன்றுதான் பார்ப்போமே என்று துடைதாள் என்றொரு சொல்லை உருவாக்கிப் பார்த்தேன்.  தாள்குட்டை என்ற சொல்லோடு இந்தச் சொற்களை எல்லாம் ஒப்பிட்டு ஆய்ந்து பார்த்தேன். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தாள்குட்டைதான் வெல்லும் சொல் ஆனது.
கதைநிகழ்வுகளின் நுண்காட்சிகளை- கதைச்சூழல்களின் நுண்ணுணர்வுகளை விவரிக்கும்போதும் பல புதிய தமிழ்ச்சொற்களைப் படைத்தளித்துக்கொண்டே செல்கிறார். இத்தகைய சொற்களைத் தொகுக்கும்போது தமிழகராதியின் சொல்வளம் பெருகும். ஆங்கில அகராதியில் ஆண்டுதோறும் பல புதிய சொற்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த உயர்நிலையைத் தமிழகராதியும் அடையும்நாள் வரவேண்டும்.
ஜெயமோகனுக்கு வாசகர்கள் என்ற நிலையைத் தாண்டியும் அணுக்கமான மெய்யன்பர்கள் உள்ளனர். கடலூர் சீனு அவர்களில் ஒருவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஜெயமோகன் உருவாக்கிய புதுச்சொற்களையும்- அவர் பயன்படுத்தும் பழந்தமிழ்ச் சொற்களையும் பட்டியல் இட்டார்.
சவால் என்ற சொல்லுக்கு வல்விளி என்றும், சுவையான பானத்துக்கு இன்னீர் என்றும், படகின் முனைப்பகுதிக்கு அமரமுனை என்றும் ஜெயமோகன் சொல்லாக்கம் செய்துள்ளார்.
பாஸ்போர்ட்டைக் கடவுச்சீட்டு என்றும் பாஸ்வேர்டு என்பதைக் கடவுச்சொல் என்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம். பாஸ்வேர்டு என்பதற்கு ஜெயமோகன் கரவுச்சொல் என்று சொல்கிறார்.  கடவுச்சொல்லா கரவுச்சொல்லா எது மிகுபொருத்தமான சொல் என்று எண்ணிப் பார்த்தேன். கடந்து செல்வதால் கடவுச்சீட்டுப் பொருத்தமாக இருக்கிறது. கடவுச்சீட்டில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. ஆனால் பாஸ்வேர்ட் என்பதில் கடந்து உள்நுழைவதற்கான சொல் என்ற அடிப்படையில் கடவுச்சொல் என்கின்றனர். ஆனால் பாஸ்வேர்ட் என்பதில் மறைத்திருக்கும் எழுத்துகள் உள்ளன. அவற்றை யாரிடமும் சொல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அதுதான் அதில் முதன்மையானது. கடந்து நுழைவதற்கான சொல் என்பதைவிடவும் மறைவான சொல் என்னும் பொருள்தரும் கரவுச்சொல் என்பதே மிகவும் பொருந்துகிறது.
இத்தகு சொல்லாக்கத்தில் இன்னொரு புதுமையையும் ஜெயமோகனிடம் காணலாம். அவர் உருவாக்கிப் பயன்படுத்தும் இத்தகைய சொற்களுக்குரிய புழக்கத்தில் உள்ள பிறமொழிச் சொற்களை அடைப்புக்குறிக்குள் போடுவதில்லை. அப்படிச் செய்தால் இயல்பான நடையோட்டத்தைத் அது தடுக்கக் கூடும்.  அவர் விவரிக்கும் சூழலே அந்தப் புதுச்சொல்லை நமக்கு நன்றாக அறிமுகப்படுத்தி நீ்ண்டகால நட்பாக்கி விடுகிறது. அந்தச் சொல் நேர்த்தியில் சில நேரம் சிற்பமாகி அங்கேயே நின்று விடுவோர் உள்ளனர்.

இத்தனைக்கும் ஜெயமோகன் தனித்தமிழ் ஆர்வலர் அல்லர். அவரிடமிருந்துதான் எத்தனை எத்தனை தூயதமிழ்ச் சொற்கள் புகழோடு தோன்றுகின்றன.

Tuesday, 3 October 2017

புதிய ஓட்டம்




                சோர்வைச் சுண்டியெறிந்து
                புதிய ஓட்டப் பாதையில்
                புதுவேகத்தோடு சுழன்றோடுகிறது
                பூமிச் சக்கரமும்

                செல்பேசியின்
                சிறகுகளில் ஏறிப் பயணிக்கின்றன
                ஆறு கண்டங்களும்

                நேற்றைய சாதனையைத் தாண்டி
                நாளைய புகழைத் தொடுகிறது
                புதிய ஓட்டம்

                வழக்கமான
                வட்டப் பாதையை விட்டகன்று ஓடுகிறது
                காலம்

                அடுத்தவர் போட்ட பாதையில் செல்வது
                கிமு நோக்கிய பயணம் நிகர்த்தது
                எனப் பழிக்கிறது ரோபோ கிளி

                உச்சி சூரியன் சொல்லட்டும்
                உன் புதிய ஓட்டத்தில்
                உனக்கு முன்னே சுவடேதும் இல்லையென!



                -கோ. மன்றவாணன்