Monday, 19 June 2017

மேகம் போடும் தாளம்





                  நேற்றிருந்த
                  நீல வானம்
                  மிரண்டு மறைந்ததுவோ
                  மேகத்திரள் கண்டு!

                  இசைத்தாளம் கேட்பதெப்போ என
                  எட்டிப் பார்த்துவிட்டுப்
                  போகிறாள் மின்னல்

                  மின்னலை ஏமாற்றி
                  மேகக் கலைஞனின்
                  மிருதங்க வாசிப்பு
                  இடியென!

                  மேக தாளம் கேட்டு
                  உருகி வழிந்து ஓடுகிறாள்
                  பூமழை!

                  மேகம் போடும் சந்தத்துக்குப்
                  பாட்டெழுதிச் செல்கிறது காற்று ;
                  தலையசைத்து ரசிக்கிறது மரம்!

                  தூரத்து மலையில் மயிலொன்று
                  தோகை மலர்த்தி ஆடுகிறது

                  வானக் கலைநிகழ்ச்சியைப் பார்த்து மகிழ
                  வெட்ட வெளியில் நிற்கிறாள் என்மகள்
                  குடையைத் தூக்கி எறிந்துவிட்டு!



                     -கோ. மன்றவாணன்


அனிச்சப் பூக்களுக்கு மீசை







  






குடும்பங்கள் வாழும்
குடியிருப்புப் பகுதியில்
குடிநீர்க் குழாய் கேட்டுக்
கோரிக்கை வைத்துக்
காத்திருந்ததில்
ஐந்து மாவட்ட ஆட்சியர்கள்
நான்கு வட்டாட்சியர்கள்
மூன்று முதலமைச்சர்கள்
மாறிப் போனார்கள்.

கோஷமும் இல்லை ;
கோரிக்கையும் இல்லை ;
நள்ளிரவில் பெற்ற
சுதந்திரம்போல்
இரவில் சுவரெழுப்பிக்
காலையில் திறந்தார்கள்
மதுக்கடை

எமனுக்குப் போட்டியாய்
நம் தெருவுக்குள்ளேயே
நரகத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள்

தெருவோர அரச மரத்தடியில்
பிள்ளையாருக்கு எதிரே
புஸ்ஸென்று
புட்டியைத் திறந்து குடிக்கிறார்கள்
மறக்காமல்
காலி பாட்டலை
செருகிச் செல்கிறார்கள்
சிறிதே வளைந்த தும்பிக்கையில்

தெரு வாசலில்
கோலம் போடக்கூட வரமுடியவில்லை
பெண்கள்

பருவம் எய்யக் காத்திருக்கும்
சிறுமிகள்
சைக்கிள் ஓட்டிப் பழக முடியவில்லை

எவ்வளவு கோபங்களை அடக்கி வைப்பது
சின்னச் சிமிழுக்குள்?

மயிலிறகுகள்
மாறிப் போயின அம்புகளாய்

மலர்த்தோட்டம்
மாறிப் போனது பாசறையாய்

காந்தள் விரல்களின் விசைபட்டு
மதுப்பாட்டில் ஒவ்வொன்றாய்
உடைந்து நொறுங்குகிறது

மோப்பக் குழையும் அனிச்சங்களின்
முகங்களில்
முறுக்கிய மீசைகள்;
குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கிறான்
மதுஅரக்கன்

வருங்காலத்துக்கு
நற்செய்தி எழுதி நகர்கிறது
நிகழ்காலம்
  
கோ. மன்றவாணன்

Tuesday, 6 June 2017

குழந்தையின் குரல்




Image result for child


       என்னைத்
       தன்குரலால் மயக்க
       எத்தனை குரல்கள்?

       நட்சத்திரப் பூச்சொரியும் நள்ளிரவில்
       கீழிறங்கி...
       பாறையை மீட்டி...
       பூமியைச் சிலிர்க்க வைக்கிறது
       அருவியின் குரல்

       பாரதியின்
       குயில்தோப்பில் இருந்து
       கூவுது குயிலொன்று

       கண்ணதாசன் தமிழில்
       காற்றேறி வருகிறது
       சுசீலாவின் குரல்

       கம்பன் காவியமும்
       கண்மூடிக் கேட்கிறது
       தாயின்
       தாலாட்டுக் குரல்

       வானிலிருந்தும் வரலாம்
       ஒரு தேவ குரல்

       மெல்லிய விரல்படும் யாழும்
       மலரிதழ் முத்தமிடும் குழலும்
       காதுக்குள்
       பேரம் பேசிச் செல்கின்றன

       தீர்ப்பெழுதி
       என்னை முந்திக்கொண்ட
       வள்ளுவன் மீது
       இன்னமும் கோபம் எனக்கு.

       மழலை பேசி
       மடியில் வந்து அமர்ந்தது குழந்தை
       மனதில் வந்து அமர்ந்தது குழந்தையின் குரல்!


      -கோ. மன்றவாணன்







Tuesday, 23 May 2017

சுமைகளும் சுகங்களும்




 


மேனி மின்ன
நிறைமாதக் கருசுமந்து
நடக்கிறாள் என்பதைவிட அசைகிறாள்

தோளில்
துணித்தூளி கட்டி நடக்கிறாள்
கந்தல் விலக்கி
கங்காரு குட்டிபோல் எட்டிப்பார்க்கிறது இவ்வுலகை
குறுகுறு குழந்தை

முள்மர விறகுகளை
முடியில் சுமந்து போகிறாள் பெண்ஏசுவாய்
விற்றபின் கிடைக்கும் பணத்தில்
கனவுகளை உயிர்ப்பிக்க

வெள்ளருவியைப் பானையில் பொத்தி
இடைச்சுமை ஏற்றி வருகிறாள்
சற்றே உடல்நெளிந்து

சுமைகளை அவிழ்க்கும்போது
கொட்டுகின்றன
சுகப்பரல்கள்

உங்கள் துக்கம் மகிழ்ச்சியாக மாறும் எனச்
சொன்னது வேதம்
உங்கள் சுமை சுகமாக மாறும் எனச்
சொல்லிச் செல்கிறாள்
மற்றொரு வேத வாக்காய்

கிளைகள் தோறும்
கனிகள் சுமப்பதால்
எந்த மரமும் முறிந்து விழுவதில்லை


-கோ. மன்றவாணன்





Tuesday, 16 May 2017

ஒற்றைச் சிறகோடு

Image result for single wing bird



                 நடுக்கடலில் தத்தளிப்பவனுக்கு
                 எட்டிப் பிடிக்க
                 மரத்துண்டு அனுப்பும் காற்று

                 இருட்டில் வழிகாட்ட
                 மின்மினி பூச்சி வரும்

                 பசியோடு வந்தவள்முன்
                 மரம் உதிர்க்கும்
                 கனி

                 இயலாதவர்கள் முன்னால்
                 கருணை தெய்வம்
                 அவதரிக்கும்

                 கதியற்றோரை அணைக்க
                 எட்டுத் திசைகளிலும் கைகள் நீட்டி நிற்கிறாள்
                 இயற்கைத் தாய்

                 இதை
                 நம்பத்தான் முடியவில்லை
                 நேற்றுவரை


                 வீட்டு வாசலில்
                 குருவிக்
                 கோலம் போட்டிருந்தாள் என் மனைவி

                 அதில் வந்துவிழுந்தது
                 ஒற்றைச் சிறகோடு ஒரு குருவி

                 அதை
                 மெல்லெனத் தாங்கிச்சென்று
                 மெத்தைமீது வைத்துக் கொஞ்சுகிறாள்
                 என் செல்லக்குட்டி வர்ஷா

                 தக்காளி நறுக்கித் தருகிறாள்
                 தயிர்ச்சோறு ஊட்டுகிறாள்

                 மடியில் வைத்தபடி
                 வீட்டுப் பாடம் எழுதுகிறாள்

                 குருவியோ
                 குழந்தையைப் போல் தத்தி நடந்து
                 ரேஷன் அட்டையில் பெயரெழுதாத
                 உறவானது

                 ஒற்றைச் சிறகு குருவிக்குத்
                 திறந்தது
                 இன்னொரு வானம்           


                   -கோ. மன்றவாணன்

Wednesday, 10 May 2017

நீர்வற்றிய குளம்




Image result for Pond without water




          வால்நெளித்து
          வந்த மீன்கள் கிச்சுக்கிச்சு செய்து
          அலைகளில் கவியெழுதி
          ஆழத்தில் கண்ணாமூச்சி ஆடினவே....

          மீனுக்குப் பொரிபோட்ட
          அருளாளர்கள்
          என்னை மறந்தனரே...

          என்வருத்தம் உணர்ந்த
          கரையோரத்து மரங்கள்
          மலராடை அணிவித்து
          மதிப்பூட்டினவே....

          இன்று
          மழைச்சொட்டு இல்லாமல்
          நா(ன்) வறண்டு கிடக்கிறேனே....

          நான்
          தீர்ந்து போனதால்
          திருக்கோயில் சாமிகளுக்குத்
          தினக்குளியல் இல்லையாமே..

          குடங்களைச் சாய்த்து
          என்னை அள்ளி அணைத்து
          இடையழகில் குழந்தையென அமர்த்தி
          ஊர்வலம் சென்ற மென்மகளிர்கள்
          இனி
          எப்போது திரும்புவார்கள்?

          என் மீது
          அடுக்கு வீடுகள் கட்ட
          நீள அகலம்
          அளந்துவிட்டுப் போனார்களே
          நேற்று.

          குளமாக இருந்த என்னை
          மட்டைப்பந்து களமாக ஆக்கி
          விளாசுகிறார்களே
          ஆறாக !

          ஆறாக ஆசைப்பட்டு-
          குளமாக வாழ்க்கைப்பட்டு-
          களமாக வறுபட்டுக் கிடக்கும் என்னை....

          எந்த இராமன் திருவடி மிதித்துக்
          கங்கையின்
          குழந்தையாக
          உயிர்ப்பிப்பான்?

          

          கோ. மன்றவாணன்





Friday, 5 May 2017

கொத்திச் செல்வேன் வானத்தை...





Image result for self confidence images


இருகை இல்லாத மனிதன்
சொன்னான் :
“இந்த உலகம்
என் மடியில்”

காலில்லாத மனிதன் எழுதினான் :
“இந்த உலகம் சுற்றிவரும்
என்னை”

சிறகில்லாத பறவை சொன்னது :
“குளத்தில் அலகு நுழைத்துக்
கொத்திச் செல்வேன் வானத்தை”

இறுகிய
கல்பாறையில் முளைத்த விதை சொன்னது :
“தடையொன்றும் இல்லை கண்ணா”

நம்பிக்கை சொன்னது :
“எந்த இழப்பையும் தாண்ட முடியும்
மனக்கோல் ஊன்றி”

புதிய பக்கத்தைத் திறந்துவைத்து
வரலாறு சொன்னது :
“வா சாதிக்க”

-கோ. மன்றவாணன்


Monday, 1 May 2017

கோடை மழை




         Image result for rain



             மேகங்கள்
             வெளிநாடு சென்றனவோ
             கோடை விடுமுறைக்கு?

             வருணன்
             தலைமறைவாக இருக்கிறானாமே
             என்ன குற்றம் செய்தான்?

             வெண்பஞ்சு அருவியில் நீராடிய
             எங்களைச் சோதிக்கவா
             வியர்வைக் குளியல்?

             கார்ஓடும் நெடுஞ்சாலைகளில்
             கானல்நீர் ஓடுகிறதே
             கண்ணுக்கு எட்டிய தூரம்

             நிலா இரவில்
             வீட்டுக் குழாயைத் திறந்தால்
             சுட்டு விடுகிறதே வெந்நீர்

             சருகுகளாகி
             விறகுகளாகிக் கிடக்கின்றனவே
             காடுகள்

             மழைதெய்வமாம்
             மாரியம்மனுக்கு ஊர்தோறும் கோயில்கள்

             அம்மனின் வேக்காட்டைத் தணிக்க
             இளநீர்
             சந்தனம்
             தயிர் என அபிஷேகம் நாள்தோறும்

             சாமி வெப்பம் தணிக்கின்றோம் நாங்கள்
             பூமி வெப்பம் தணிக்க
             சாமி நினைக்காதா?

             சுற்றிலும்
             துயர்பெருகிச் சுடும்போது
             உதவும்
             உள்ளத்துக்கு உவமை கேட்டேன்

             பதில் சொல்லும் வகையில்
             கோடையில்
             கொட்டியது மழை!

              
             -  கோ. மன்றவாணன்