Tuesday, 27 March 2018

இரை தேடும் பறவை






                   கொட்டிய தானியத்தைக்
                   கொத்திய பறவைக்குப்
                   பிறகுதான் தெரிந்தது
                   பிளாஸ்டிக் அரிசி அவையென்று

                   வெப்ப வீச்சில் சுருண்ட பறவை
                   வேட்கை தணிக்கக்
                   கருப்பு அலகை நீட்டியது
                   கானல் நீரெனத் தெரியாமல்

                   மணிக்குரலில் கா கா கா எனஅழைத்து
                   மதில்சுவரில் சோறிட்டாள் பெண்
                   திகில்விழிப் பூனையொன்று
                   தின்றுவிட்டு நாக்கைச் சுழற்றுகிறது

                   நெல்களத்தை
                   நெருங்க விடாமல்
                   கல்அம்பு ஏவுகிறார்கள்
                   காவலர்கள்

                   வயல்வெளியில் இரைதேடி
                   வட்டமிடுகிறது பறவை
                   வலைவிரித்துக் காத்திருக்கிறார்கள்....


                   கூட்டுக்குள்
                   குஞ்சுகள் கீச்சிடுகின்றன
                   குறுவயிறுகளில் கொடும்பசி

                   இன்னும் திரும்பவில்லை
                   இரை தேடிச் சென்ற தாய்ப்பறவை

                   
                   -கோ. மன்றவாணன்

Tuesday, 20 March 2018

“பிரபல” என்றோர் அடைமொழி

Image result for thief





“பிரபல” என்றோர் அடைமொழி

கோ. மன்றவாணன்

நாளிதழ்களில் பிரபல ரவுடி, பிரபல கிரிமினல் என்று எழுதுகிறார்கள். அதுபோலவே பிரபல நடிகர், பிரபல எழுத்தாளர் என்றும் குறிப்பிடுகிறார்கள். நற்செயல்கள் அடிப்படையில் அறியப்படும் ஒருவரைப் பிரபல என்ற அடைமொழியிட்டு அழைக்கையில், தீச்செயல்கள் மூலம் அறியப்படும் ஒருவரை அதே “பிரபல” என்ற அடைமொழியிட்டுக் குறிப்பிடுவது சரியாகுமா?

நல்வகையில் புகழ்பெற்றவரை ஆங்கிலத்தில் Famous என்றும்- தீய குணத்தால் ஊரறிந்தவரை Notorious என்றும் குறிப்பிடுகிறார்கள். தமிழிலும் அவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கும் சொல் இருக்கிறதா?

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற அகரமுதலியில் Notorious என்ற சொல்லுக்குக் கீழ்க்கண்ட பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வசைப்பெயர் எடுத்த; தகாவழிப் பேர்போன; இகழார்ந்த; அறிபழியான என்பன அவை. இச்சொற்களை அடிப்படையாகக் கொண்டு வசையுறு, பேரறி, பலரறி, பலரறிந்த, இகழார்ந்த: பழியார்ந்த, இகழுறு ஆகிய சொற்களை Notorious என்பதற்குப் பொருத்தமாக்கலாம். வசையுறு திருடன், பேரறி திருடன், இகழார்ந்த திருடன் என்பன எடுத்துக்காட்டுகள் ஆகும். என்றாலும் இச்சொல்லாக்கங்களில் இயல்பழகு குன்றித்தான் உள்ளது.

நொட்டோரியஸ் என்ற சொல்லோசைக்கு இணங்க கெட்டறி, கெட்டறிந்த சொற்களைக் கையாளலாம். கெட்டறி கள்வன் என்பது எடுத்துக்காட்டு. கெட்டதால் அறியப்பட்ட / அறியப்படும் கள்வன் எனப்பொருள் கொள்ள முடியும். கெட்டறி அல்லது கெட்டறிந்த ஆகிய சொற்கள், பிறரைக் குறிக்கின்றனவா தன்னைக் குறிக்கின்றனவா என ஐயுறவும் வைக்கலாம். இத்தகைய சொல்லாக்கங்களிலும் செயற்கைத் தன்மை, நீள்பல் காட்டி இளிக்கிறது.

பிரபலம் என்பதற்குப் பெரும்பாலும் புகழ் என்றே அகராதியில் பொருள்சொல்லப்பட்டிருக்கிறது. பிரசித்தி என்ற வடமொழிச் சொல்லும் புகழ்ச்செயலுக்கு உரியதாக ஆளப்படுகிறது. பிரபலம் என்பது பலரறிந்த ஒருவரை அல்லது ஒன்றைக் குறிப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் புழக்கத்தில் பிரபலம் என்பது புகழை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகிவிட்டது. அதனால்தான் புகழ்பெற்றவர்களைப் பிரபலங்கள் என்று அழைக்கின்றனர். பிரபலங்கள் என்ற சொல்லுக்கு இணையாகத்  தமிழில் புகழ்மாந்தர்கள், புகழாளர்கள் ஆகிய சொற்களை முன்நிறுத்தலாம்.

பாராட்டுக்குரிய செயல்கள் மூலம் பலரால் அறியப்பட்டால்... அதுதான் புகழ்.

பழிக்குரிய செயல்கள் மூலம் பலரால் அறியப்பட்டால்... அது புகழல்ல. அதன்பேர் பழி.

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் “பழி” என்ற சொல்லுக்குத் தகாத அல்லது முறையற்ற செயலைச் செய்தார் என்று மற்றவர் கேவலமாக நினைக்கும் வகையில் ஒருவர் மீது கூறப்படுவது / அப்படிக் கூறப்படும் நிலை என்று பொருள்சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் – தமிழ் அகராதிகளில் “பழி” என்ற சொல்லுக்குக் குற்றம், நிந்தனை, பொய், விரோதம், வஞ்சம் தீர்த்தல், பொல்லாங்கு ஆகிய பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வேறுபாட்டை விளக்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றுண்டு. அது,

      புகழெனின் உயிரும்  கொடுக்குவர்
      பழியெனின்  உலகுடன் பெறினும் கொள்ளலர்.

ஆக நற்செயல்கள் மூலம் அறியப்பட்டவரை நாம் புகழ்பெற்ற / பிரபல ஆகிய அடைமொழிகளால் குறிப்பிடலாம். இதில் யாரும் மறுப்புரைக்கப் போவதில்லை. எ.கா. புகழ்பெற்ற எழுத்தாளர்.

தீச்செயல்கள் மூலம் அறியப்பட்டவரைப் பழியுறு, பழியுற்ற, பழியார்ந்த, பழிசார் ஆகிய அடைமொழிகளால் குறிப்பிடலாம். எ.கா. பழிசார் திருடன், பழியுற்ற திருடன்.

திருடன் என்றாலே அதில் இழிவு, பழிப்பு ஆகியவை அடங்கி உள்ளன. எனவே தனியாக பழிசார் திருடன் என்று சொல்ல வேண்டியதில்லை.

பேர்போன என்ற அடைமொழிச் சொல்லும் தமிழில் உண்டு. பேர் என்றாலே பெருமை, புகழ் போன்ற பொருள்கள் உண்டு. தீச்செயல்களால் அந்தப் பெருமை போய்விட்டால் பேர்போன என்ற அடைமொழி வந்து சேரும். “அவன் பேர்போன அயோக்கினாச்சே” என்று தமிழில் சொல்வதை இங்கே ஒப்பு நோக்கலாம். ஆக Notorios என்பதைத் தமிழில் “பேர்போன” என்ற அடைமொழிச் சொல்லால் குறித்தாலும் பொருந்துகிறது. ஆனால் பேர்போன என்ற அடைமொழியைப் புகழ்வாய்ந்தவர்களைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார்கள். அறிந்து, ஆழ்ந்து, ஆய்ந்து பார்த்தால் அது தவறான பயன்பாடு.

Notorious என்ற  ஆங்கிலச் சொல்லுக்கு நேரடித் தமிழ்ச்சொல் “தெரிந்த” என்பதுதான்.

“புகழ்பெற்ற” என்ற சொல் famous என்பதைக் குறிக்கும். “ஊரறிந்த” என்ற சொல் Notorious என்பதைக் குறிக்கும்.

நம்பேச்சு வழக்கில் “அவன் ஊரறிந்த திருடன் ஆச்சே” என்கிறோம்.

பள்ளியில் தமிழ்இலக்கணம்  சொல்லித் தரும்போது இடவாகு பெயருக்கு எடுத்துக்காட்டாக “ஊர் சிரித்தது” என்ற சொற்றொடரைத்  தமிழாசிரியர்கள் சொல்வதுண்டு. ஊர் சிரித்தது என்றால், ஊரில் உள்ள மக்கள் சிரித்தனர் என்பதே அதன் பொருள்.

அந்த வகையில் “ஊரறிந்த” என்ற சொல்லில் “ஊரில் உள்ள மக்கள் அறிந்த” என்ற பொருள் பொதிந்துள்ளதை நாம் அறிவோம். ஆக ஊரறிந்த என்றால் “மக்கள் யாவருக்கும் தெரிந்த” என்றே பொருள் வந்துவிடுகிறது.

ஊரறிந்த ரகசியம் என்ற சொற்றொடரையும் பலரும் சொல்லக் கேட்பதுண்டு. இதிலுள்ள ரகசியம் என்பது சமூகத்தால் இழிவாகக் கருதப்படும் செயலின் கசிவே ஆகும். ஊரறிந்த என்ற அடைமொழியை அடுத்துவரும் எந்தச் சொல்லும் இழிமையை உணர்த்துவதாகவே தமிழ்மரபில் உள்ளது.

தமிழ்ச்சூழலுக்கும் தமிழ்வழக்கத்துக்கும் ஏற்ப Notorious என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஊரறிந்த என்ற அடைமொழிச் சொல்லைப் பயன்படுத்தலாம்.

     எ.கா. : ஊரறிந்த திருடன்

திறன் மற்றும் நற்செயல்கள் அடிப்படையில் பிரபல நடிகர் என்றோ புகழ்பெற்ற கலைஞர் என்றோ புகழ்மிகு கவிஞர், புகழ்வாய்ந்த அறிஞர் என்றோ சொல்லுங்கள்.

தீச்செயல்கள் அடிப்படையில் ஊரறிந்த திருடன் என்றே சொல்லுங்கள்.

முடிவாக.... Famous என்ற அடைமொழிப் பயன்பாட்டுக்குப் புகழ்வாய்ந்த, புகழ்பெற்ற, புகழ்மிகு போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். Notorious என்ற அடைமொழிப் பயன்பாட்டுக்கு ஊரறிந்த என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.

ஓர் அறிவுரை :
ஊரறிந்த ரவுடியைக் கண்டால் கொஞ்சம் ஒதுங்கிச் செல்லுங்கள்.

                           -------------------------     
திண்ணை இணைய இதழ்   மார்ச்சு 18, 2018        

Sunday, 18 March 2018

நெருப்பின் தாகம்

Image result for fire in forest



                               
              சாதிக்க மலையேறியவர்கள்
              சாவுக்குள் குடியேறினார்கள்

              இளைய சூரியன்களை
              எரித்தது அந்த
              மலைத்தீ

              இறந்து முடித்த பிறகே
              மலைத்தீயை அணைத்துவிட்டுப் போனது
              மறுநாள் பெய்த மழை

              எந்த இலக்கையும்
              எட்டலாம் என
              மனதுக்குப் பயிற்சி அளிக்கிறது
              மலையேற்றம்

              எம் உறவுகள் இறந்த சோகத்தைத் தாங்க
              யாரளிப்பார் பயிற்சி
              இதயத்துக்கு?

              இளம்பெண்களைத் தழுவி எரித்தது
              காமுகன் போலவே
              காட்டுத் தீ

              கொலைக்கணக்குகளைக்
              கூட்டிப் பார்த்தால்
              நீதிமன்றங்கள் போதாது
              நெருப்புக்குத் தண்டனையிட!

              அடங்காத கொடுந்தாகம்
              மரங்களைத் தின்ற தீயின் நாவுக்கு
              மனிதரை ருசிக்க

              சிவனிடம் வேண்டி நிற்கிறேன்
              நெற்றிக்கண் கொடு
              நெருப்பைச் சுட

              -கோ. மன்றவாணன்

தற்கொலை செய்யும் கனவுகள்



Image result for suicide



வந்து வந்து அழைக்கிறாள்
நல்ல தங்காள்
நாள்தோறும் கனவில்

மாயும் வழிகாட்டி
வரவேற்புத் தருகின்றன
தீயும் நெய்யும் சேர்ந்து வந்து

சுருக்கு வளையம் இட்டுத்
தொங்குகிறது
அறுபடாத நைலான் கயிறு

முட்டித் தள்ளவும்
முடிவு சொல்லவும் வருகிறது
அதிவிரைவு ரயில் தடதடத்தபடி

மேனியை மூழ்கடிக்கும் கிணறு
மிதக்கவும் வைக்கும் மறுநாளே என்று
ரகசியத் தொழில்நுட்பத்தைச் சொல்கிறது
என்னைக் கடந்துபோகும் பெண்பிணம்

மொத்த கவலைகளுக்கும்
முழு நிவாரணம் தருவது நிச்சயம்
இல்லையேல் பணம் வாபஸ் என்கின்றன
விதவிதமான
விஷப்புட்டிகளின் விளம்பரங்கள்


தற்கொலை செய்துகொள்வதில்லை
வான் பறவை எதுவும்
கான் உயிர் எதுவும்

அவையாவும் பழிக்கின்றன
மனிதர்களைக் குனிந்து பார்த்து

தூக்கத்தில் புதைந்து
தற்கொலை செய்து கொள்கிறேன் தினமும்
கனவில்

மறுபிறப்பு உண்டென்கிறது
ஒவ்வொரு காலை
உதயமும் 

-கோ. மன்றவாணன்

Friday, 9 March 2018

கொஞ்சி விளையாடும் கோபம்








          “உன் பேச்சுக் கா” என்றேன் பொய்யாக
          உளமொடிந்து உண்ண மறுத்தாள் மகள்
          “உன் பேச்சுப் பழம்” என்றேன் மெய்யாக
          ஓடிவந்து கட்டிக்கொண்டாள் அவள்

          திரும்பிப் படுத்தேன் பஞ்சணையில் நடிப்பாக...
          தேம்பினாள் மனைவி என்னென்று தெரியாமல்
          விரும்பிப் புரண்டேன் அவள்முகம் பார்த்து
          வெட்கப்பட்டது மெல்லிருள் அறைக்குள் விழிமூடி

          ரோஜாவின் பனியிதழைக் கிள்ளிப் பார்த்தேன்
          ரோஷம் பொங்கிச் சிவந்தது மலர்
          பூஜை அறையில் அதைவைத்துப் பார்த்தேன்
          புன்னகையில் நன்றி சொன்னது அதே மலர்

          பிரம்பை எடுத்து ஓங்கினார் ஆசிரியர்
          பிஞ்சுக்கை அடிவாங்கும் முன்பே வலித்தது
          மேசையில் அடித்துப் பிரம்பை ஒடித்தார்
          மேதை ஆசிரியரின் அன்பு பிணைத்தது

          கூண்டுக் கிளியைக் குச்சியால் சீண்டினேன்
          கோபம்கொண்டு கொத்த வந்தது என்விரலை
          கொய்யாப் பழத்தைத் தின்னக் கொடுத்தேன்
          கொஞ்சியது கிளி என்விரலை முத்தமிட்டு

          ரொட்டி போடும் பாவனை செய்தேன்
          குட்டி நாய் எக்கி எக்கி ஏமாந்தது
          பிரியாணி பொட்டலம் பிரித்து வைத்தேன்
          பின்வால் ஆட்டத்தில் கொஞ்சல் புரிந்தது


          -கோ. மன்றவாணன்