கொட்டிய தானியத்தைக்
கொத்திய பறவைக்குப்
பிறகுதான் தெரிந்தது
பிளாஸ்டிக் அரிசி அவையென்று
வெப்ப வீச்சில் சுருண்ட பறவை
வேட்கை தணிக்கக்
கருப்பு அலகை நீட்டியது
கானல் நீரெனத் தெரியாமல்
மணிக்குரலில் கா கா கா எனஅழைத்து
மதில்சுவரில் சோறிட்டாள் பெண்
திகில்விழிப் பூனையொன்று
தின்றுவிட்டு நாக்கைச் சுழற்றுகிறது
நெல்களத்தை
நெருங்க விடாமல்
கல்அம்பு ஏவுகிறார்கள்
காவலர்கள்
வயல்வெளியில் இரைதேடி
வட்டமிடுகிறது பறவை
வலைவிரித்துக் காத்திருக்கிறார்கள்....
கூட்டுக்குள்
குஞ்சுகள் கீச்சிடுகின்றன
குறுவயிறுகளில் கொடும்பசி
இன்னும் திரும்பவில்லை
இரை தேடிச் சென்ற தாய்ப்பறவை
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment