“உன் பேச்சுக் கா” என்றேன் பொய்யாக
உளமொடிந்து உண்ண மறுத்தாள் மகள்
“உன் பேச்சுப் பழம்” என்றேன் மெய்யாக
ஓடிவந்து கட்டிக்கொண்டாள் அவள்
திரும்பிப் படுத்தேன் பஞ்சணையில் நடிப்பாக...
தேம்பினாள் மனைவி என்னென்று தெரியாமல்
விரும்பிப் புரண்டேன் அவள்முகம் பார்த்து
வெட்கப்பட்டது மெல்லிருள் அறைக்குள் விழிமூடி
ரோஜாவின் பனியிதழைக் கிள்ளிப் பார்த்தேன்
ரோஷம் பொங்கிச் சிவந்தது மலர்
பூஜை அறையில் அதைவைத்துப் பார்த்தேன்
புன்னகையில் நன்றி சொன்னது அதே மலர்
பிரம்பை எடுத்து ஓங்கினார் ஆசிரியர்
பிஞ்சுக்கை அடிவாங்கும் முன்பே வலித்தது
மேசையில் அடித்துப் பிரம்பை ஒடித்தார்
மேதை ஆசிரியரின் அன்பு பிணைத்தது
கூண்டுக் கிளியைக் குச்சியால் சீண்டினேன்
கோபம்கொண்டு கொத்த வந்தது என்விரலை
கொய்யாப் பழத்தைத் தின்னக் கொடுத்தேன்
கொஞ்சியது கிளி என்விரலை முத்தமிட்டு
ரொட்டி போடும் பாவனை செய்தேன்
குட்டி நாய் எக்கி எக்கி ஏமாந்தது
பிரியாணி பொட்டலம் பிரித்து வைத்தேன்
பின்வால் ஆட்டத்தில் கொஞ்சல் புரிந்தது
-கோ. மன்றவாணன்
அன்பைக் கூடச் சற்று சீண்டித்தான் காட்ட வேண்டும்
ReplyDelete