வந்து வந்து அழைக்கிறாள்
நல்ல தங்காள்
நாள்தோறும் கனவில்
மாயும் வழிகாட்டி
வரவேற்புத் தருகின்றன
தீயும் நெய்யும் சேர்ந்து வந்து
சுருக்கு வளையம் இட்டுத்
தொங்குகிறது
அறுபடாத நைலான் கயிறு
முட்டித் தள்ளவும்
முடிவு சொல்லவும் வருகிறது
அதிவிரைவு ரயில் தடதடத்தபடி
மேனியை மூழ்கடிக்கும் கிணறு
மிதக்கவும் வைக்கும் மறுநாளே என்று
ரகசியத் தொழில்நுட்பத்தைச் சொல்கிறது
என்னைக் கடந்துபோகும் பெண்பிணம்
மொத்த கவலைகளுக்கும்
முழு நிவாரணம் தருவது நிச்சயம்
இல்லையேல் பணம் வாபஸ் என்கின்றன
விதவிதமான
விஷப்புட்டிகளின் விளம்பரங்கள்
தற்கொலை செய்துகொள்வதில்லை
வான் பறவை எதுவும்
கான் உயிர் எதுவும்
அவையாவும் பழிக்கின்றன
மனிதர்களைக் குனிந்து பார்த்து
தூக்கத்தில் புதைந்து
தற்கொலை செய்து கொள்கிறேன் தினமும்
கனவில்
மறுபிறப்பு உண்டென்கிறது
ஒவ்வொரு காலை
உதயமும்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment