Friday, 21 December 2018

கவிதைக்கு மரியாதை... விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது




கவிதைக்கு மரியாதை
விவாத அரங்கிலிருந்து வெளியேறுவது

கோ. மன்றவாணன்

நல்லமனம் படைத்த நண்பர்கள் நடத்தும் நவீன இலக்கியக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். நவீன கவிதை குறித்த கலந்துரையாடல் என்று நிகழ்ச்சியைத் திட்டமிட்டு இருந்தார்கள்.

முதலில் ஒரு நண்பர் எழுந்தார். தலைப்பை உள்வாங்காமல் தன்கருத்துகளை- தன்கொள்கைகளை எல்லாம் ஜெயமோகனின் வெண்முரசு நீளத்துக்கு அவர் பேசினார். எந்தத் தலைப்பு என்றாலும் எல்லா நிகழ்விலும் இதையேதான் இவர் பேசுவார் என்று தோழர் ஒருவர் தோலுரித்துச் சொத்தைப்பழம் இதுவென்று காட்டினார். அவரால் அந்த நிகழ்வு திசைதொலைத்த பயணமாக மாறியது. இதை உணர்ந்து விழித்துக்கொண்ட சிலரால் கவிதை குறித்த விவாதம் சற்று நேரத்தில் மீட்டெடுக்கப்பட்டது.

மரபுக் கவிஞர்கள் மூவேந்தர் காலத்து வாளெடுத்து வீசினர். புதுக்கவிஞர்கள் கதிர்அறுக்கும் அறுவாளைத் தீட்டினார்கள். நவீன கவிஞர்கள் எந்திரன் கைகளில் துப்பாக்கி கொடுத்துச் சுழல விட்டார்கள். விவாதம் போர்க்களம் ஆனது. விழுந்து செத்தது கவிதை மட்டுமே!

பிறகு கவிதை விவாதம் மொழித்தூய்மை நோக்கிப் போனது. நடுக்கடலில் படகு வேறு திசைநோக்கி நகரும்போது உரிய திசைநோக்கி செலுத்த வேண்டியது மாலுமியின் கடமை. அதுபோல் நிகழ்ச்சி நடத்துபவர்கள் நிகழ்வின் போக்கைச் சரியான திசையில் செலுத்த வேண்டும். ஆனால் கூட்டத்தை நெறியுறுத்தப் போனால் இலக்கியவாதிகள் சிலரின் கோபத் தீயில் வெந்து தணிய வேண்டியதாகிவிடும் என்று வாளா இருந்தனர்.

தனித்தமிழை நையாண்டிச் செய்தனர் இலக்கிய மேதைகள் சிலர். ஆறுகளை உள்அணைத்துக்கொள்ளும் வங்கக் கடல்போல், அனைத்து மொழிச் சொற்களையும் தமிழ் உள்வாங்க வேண்டும் என்று  தமிழ்ப்பேராசிரியர் ஒருவரே மடைதிறந்துவிட்டார். தமிழில் அது இல்லை இது இல்லை என்றெல்லாம் அவிழ்த்துவிட்டார் கண்டுபிடிப்பாளர் ஒருவர்.

கலப்புமொழி என்பது கவிதையில் மட்டுமல்ல கட்டுரை, கதை, பேச்சு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உள்ளது. அதை மொழித்தளத்தில் மட்டுமே ஆராய வேண்டும். அதற்காகத் தனித்தமிழ் இயக்கத்தை முற்றிலும் குறைசொல்ல முடியாது. அவர்களின் முயற்சியால்தான் நல்லதமிழ் மீட்டெடுக்கப்பட்டு அது நவீன கவிதையிலும் கொலுவிருக்கிறது. இல்லையேல் தமிழ்சிதைந்து மலையாளம், தெலுங்கு போல மற்றொரு மொழியும் பிறந்திருக்கும். தற்போது மெல்ல மெல்ல தமிங்கிலம் என்றொரு மொழி, நச்சுக்காற்று என நம்வீட்டுக்குள் நுழைந்து நிரம்புகிறது.

கவிதை விவாதம் திசைமாறி மொழித்தூய்மை குறித்து நீ...ண்...ட....நேரம் நீடித்ததை நிறுத்த பெருமுயற்சி தேவைப்பட்டது.

நவீன கவிதைகள் குறித்து பேசப்பட்டதைவிட நவீன கவிஞர்களைப் பற்றியே கவிதை விவாதம் சுழன்று சுழன்று வந்தது. உலகம் பிறந்தது எனக்காக என்று பாடும் கவிஞர்களிடம் குழுமனப்பான்மை கொழுந்துவிட்டு எரிவதைப் பார்க்க முடிந்தது. தங்களுக்கு வேண்டிய கவிஞர்களின் கவிதைகளைத் தூக்கிப் பிடித்தார்கள். வேண்டாதவர்களின் கவிதைகளைக் கவிதைகளே அல்ல என்று தீட்டுத்துணியைக் குச்சியால் தள்ளிவிடுவதுபோல் ஒதுக்கினார்கள். மொத்தத்தில் எதிர்தரப்பினர் பார்வையில் எல்லாக் கவிதைகளும் வெட்டுக் காயங்களோடு மூச்சிரைத்தன. நல்ல கவிதைகளை நாலாபுறமும் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தி அடித்ததுதான் கலந்துரையாடலின் விளைச்சல். கவிதையை யார் எழுதினார் என்று தெரிந்து விமர்சிப்பதில், நடுநிலை மறைந்து கெடுநிலை உதயமாகிறது, கனியிருப்பக் காய்கவரும் இலக்கியர்கள் வருகையால் தமிழ்ச்சபையின் நாற்காலிகள் உடைகின்றன.

விவாதம் முடியும் தறுவாயில் இருந்தபோது வீடு வா... வா... என்றது. அந்த நேரம் பார்த்து முதுஇளைஞர் ஒருவர் எழுந்து, பாரதிதாசன் எழுதியவை கவிதைகளே அல்ல. அவர் கவிஞரே அல்ல என்றார். அப்படிக் கருத்துரைக்க அதற்கான சான்றுகளைச் சொல்ல வேண்டும். முதலில் பாரதிதாசனை முழுமையாகப் படித்திருக்க வேண்டும்.

பாரதி, பாரதிதாசன் குறித்த பல விமர்சனங்களின் பின்னணியில் இலக்கிய நுட்பம் இருப்பதைவிட, அவரவர் அரசியல் கண்ணோட்டங்களே அதிகம். எதிர்தரப்பைத் தகர்த்தெறிய வேண்டும் என்ற வெறியே அவர்களில் பலருக்கு இருந்தது. ஆனால் பாரதியும் பாரதிதாசனும் நிலவும் வானும்போல்... வீரனும் போர்வாளும்போல் ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள்.

கவிதைகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். பாவேந்தரின் கவிதைகளை அவர் காலத்துப் பின்னணியில்தான் அணுக வேண்டும். இன்றைய நவீன கவிதையோடு அவர் கவிதையை ஒப்பிட்டுப் புறந்தள்ளுவது சரியல்ல. அவர் கவிதையைப் படித்துக் கவிஞரானவர்கள் அதிகம். அதில் புதுக்கவிஞர்களும் உண்டு. யாரையும் அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிடக் கூடாது.

இந்த உலகில் எத்தனை விதமான மலர்கள்? அதுபோல்தான் கவிதைகளில் பல ரகங்கள். அவரவருக்குப் பிடித்த ரகங்களை ரசியுங்கள். உணவகத்தில் அவரவர்க்கு எந்த உணவு பிடிக்கிறதோ அதை உண்ணுங்கள். அதற்காக எதிரில் அமர்ந்து உண்பவரின் உணவு சரியில்லை. அது உணவே இல்லை என்று வாதிடாதீர்கள். எல்லாமும் கவிதைகள்தாம். இவை கவிதைகள் அல்ல. கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாராவது சொன்னார்கள் என்றால் அது கவிதைக்கு இலக்கணம் வகுத்ததாகிவிடும். மேலும் நாளைவரும் புதுமையைத் தடுக்கின்ற முயற்சியாகவும் மாறிவிடும். கவிதை என்பது தன்விருப்பம் போல 360 பாகையிலும் சுற்றித் திரியட்டும். கட்டுப்பாடுகள் அதற்குத் தேவையில்லை. கவிதை ஒன்றாவது சுதந்திரமாக இருக்கட்டுமே!

மரபுக் கவிதை காலம் முடிந்து, புதுக்கவிதை காலம் மலர்ந்து தழைத்தபின், நவீன கவிதை அரும்பு விட்டிருக்கிறது. இது கவிதையின் வளர்ச்சிப் போக்கு. கவிதை என்பது காலம்தோறும் ஒரே மாதிரிதான் என்றால் சலிப்படையவே செய்யும். புதுமைகளே நம்மைப் புத்துணர்ச்சியோடு வைத்து அடுத்த நூற்றாண்டை வரவேற்கச் செய்யும்.

அச்சுத்தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் யாப்புக் கவிதைதான் சிறந்த கவிப்பாத்திரம். அதிலுள்ள சீர்கள் அமைப்பு, எதுகை, மோனை ஆகியவை ஒரு கவிதையை நினைவில் நிறுத்திக்கொள்ள ஏற்பட்ட வசதிகளே. அதனால்தான் பள்ளிப்பாடத்தில் அந்தக் கவிதைகளையோ செய்யுள்களையோ மனப்பாடப் பகுதிக்குள் வைத்திருக்கிறார்கள். உரைநடையை எளிதில் மனப்பாடம் செய்ய முடியாது. நவீன கவிதையையும் மனப்பாடம் செய்ய முடியாது. யாப்புக் கட்டமைப்பு மனப்பாடத்துக்கானது. அச்சுத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் யாப்பு என்பது தேவையற்றதாகிவிட்டது. ஆனாலும் யாப்புக் கவிதைக்குள்ளும் கவிஞர்கள் விளையாடி இருக்கிறார்கள். சித்திரக் கவிதையென்றும் சித்துவேலை செய்திருக்கிறார்கள். அதைஅதை அந்த அந்தக் கோணத்தில் மட்டுமே பார்க்க வேண்டும்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம், சர்ரியலிசம் இன்னும் என்னென்னவோ இசங்களையும் பிறநாட்டு இலக்கிய முன்னேற்றங்களையும் நிரம்பப் படித்தவர் ஒருவர் நிறையச் சொன்னார். அதைக் கேட்கக் கேட்கப் பிரமிப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் ஓர் இசத்தை ஆதரிக்கலாம். பிறகு இசங்களுக்குள் இரணகளம் ஏற்படச் சாத்தியக் கூறுகள் உண்டு. இசங்களைப் பேசும் அளவுக்கு நாம் நிசங்களைப் பேசுவதில்லை. இசங்களுக்குள் கவிதை எழுதுவது என்பதும் இலக்கணச் சிறைதான். எழுதுங்கள் விதவிதமாக! எந்த இசமாவது கொலுவிருக்கட்டும்.

கவிதைக்குத் தலைப்புத் தேவையா என்றொரு கேள்வி எழுந்தது. சங்க காலக் கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை. தலைப்பு வைப்பதும் தவிர்ப்பதும் அவரவர் விருப்பமாகட்டும். சில நேரங்களில் தலைப்பு, கவிதையின் வாசலில் இருந்து நம்மை வசீகரித்து வரவேற்றுக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும். அடையாளம் காட்ட ஒவ்வொரு மனிதர்க்கும் பெயர் சூட்டுவதுபோல், கவிதைக்குப் பெயர்ச்சூட்டல்  அமைந்திருக்கலாம். அட... அண்மைக் காலமாகப் புயல்களுக்கும் பெயர்சூட்டும் வழக்கம் வந்துவிட்டதே!

இன்னொருவர் எழுந்து புகழ்வாய்ந்த நவீன கவிஞர்களின் கவிதைகளைப் படித்தார். அவை யாருக்கும் புரியாது என்று நினைத்தாரோ என்னவோ... அந்தக் கவிதைகளின் பொருளழகை.... மேன்மைகளை எல்லாம் விளக்கி விரிவுரை ஆற்றினார்.

சங்க காலக் கவிதைகளுக்கு உரைநூல்கள் தேவைதான். நம் சமகால நவீன கவிதைகளுக்கு நம்மவர்கள் ஏன் உரைவாசிக்கிறார்கள்? நவீன கவிதைக்கும் வாசகருக்கும் இடையில் பாஷ்யக்காரர்களோ பூசாரிகளோ குறுக்கிட வேண்டியதில்லை. அடுத்த நூற்றாண்டில் வேண்டுமானால் இன்றைய நவீன கவிதைக்கு உரைநூல்கள் எழுதட்டும். மிகச்சிறந்த நவீன கவிதை என்று அறிமுகப்படுத்திப் பேசுபவர்கள் அந்தக் கவிதையை அப்படியே வாசித்துவிட்டுப் போகட்டுமே. ஏன் விளக்கமளிக்கிறார்கள்? அவ்வாறு விளக்கமளித்த பிறகே ஓகோ சிறந்த கவிதைதான் என எங்களை “ஆம்” போட வைக்கிறார்கள். அவர்கள் விளக்கத்துக்குள் எங்களைக் கட்டிப்போடுகிறார்கள். கவிதைக்குள் உண்டாகும் வாசகர் பங்கேற்பைத் தடுத்துவிடுகிறார்கள்.

மரபுக் கவிதை என்பது பன்னூறு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்து இன்றும் காட்சி தருகிறது. நூற்றாண்டுதோறும் காலத்துக்கேற்ப வடிவ மாறுதல்களையும் பாடுபொருள்களில் மாற்றங்களையும் சொல்லும் முறையில் புதுப்புது உத்திகளையும் கொண்டு வளர்ந்து வந்துள்ளது. அதுவரை கோலோச்சிவந்த யாப்பதிகாரத்தை வீழ்த்தி, விண்ணுக்கும் மண்ணுக்குமான அவதாரம் எடுத்தது புதுக்கவிதை. அது தமிழுக்குள் நிகழ்த்திய புதுமைகளுக்கு அளவில்லை.  ஐம்புலன்களையும் தாண்டி நுண்திறப்புகள் மூலம் விரியும் பிரபஞ்சப் பேரழகை... பெருவியப்பை நமக்குக் காட்டுகிறது நவீன கவிதை. எனவே, நவீனக் கவிதையாளர்கள் மரபுக் கவிதையை, புதுக்கவிதையை மட்டம் தட்டுவது நல்லதல்ல. அதுபோலவே மரபுக் கவிதையாளர்கள்- புதுக்கவிதையாளர்கள் நவீனக் கவிதையை எதிர்த்துப் போர்தொடுப்பதும் சரியல்ல. எல்லாவற்றிலும் அழகுண்டு. எல்லாவற்றிலும் சிறப்புண்டு.

நடுநிலையோடு இருப்பதுதான் கடினமான ஒன்று. எந்தக் கலந்துரையாடலிலும் மெய்கண்டறியும் நோக்கு இல்லாமல் போய்விடுகிறது. சார்பு எண்ணங்களைச் சற்று நேரம் தள்ளி வைத்துவிட்டு, மெய்தேடல்கள் நடந்தால்தான், கலந்துரையாடல்கள் பயன்தரும்.

நவீன கவிதைக்கும் பிற கவிதைகளுக்கும் இடையிலான சண்டையாகக் கலந்துரையாடல் முடிந்துவிட்டது.

நவீன கவிதையின் அழகியல் போக்கை- நுண்ணியல்பை- புதுவீச்சை வெளிப்படுத்தும் விதமாகக் கலந்துரையாடல் அமைந்திருக்க வேண்டும். அதில் பாதி கிணறு தாண்டிய அனுபவமே... ஆபத்தே மிஞ்சியது.

நம் எதிர்பார்ப்பெல்லாம் நவீன கவிதையையும் தாண்டி, நனிநவீன கவிதை உலகு ஒன்று உருவாக வேண்டும். அது நிறைவேறும். அதற்குமுன் நாம் கவிதையைக் காப்பாற்ற வேண்டும். அதற்காகத் தலைப்பைப் படிக்கவும்.


திண்ணை, 20 நவம்பர்  2018


Friday, 14 December 2018

வனவாசம்




















அன்பு நிரம்பி வழியும் வீட்டைவிட்டு
அம்மா அவிக்கும் இட்டிலியைத் துறந்து
அயல்நாடு சென்று பொருள்குவித்தாலும்
நவீன வனவாசம்தான்

விடுதியில் தங்கிப் படித்தாலும்
வேறு வேறு நண்பர்கள் சூழ்ந்திருந்தாலும்
சிறுபருவத்தில் தோள்உரசி நடந்த தோழனைச்
சிலகாலம் பிரிவதும் வனவாசம்தான்

கடல்பரப்பில் தொடுவானம் தாண்டும் மீன்களைக்
கண்ணாடிப் பேழையில் வைத்துக் கொஞ்சினாலும்
கயல்களுக்கு வனவாசம்தான்

நேற்று மாலை சந்தித்த காதலியை
இன்று காலை சந்திக்கும் வரை
பதினான்கு ஆண்டு வனவாசம்தான்

சம்பளப்பணிக்குச் செல்லும் தாயின் மடிபிரிந்து
சம்பள ஆயாவின் கைசேரும் பிள்ளைகளுக்குச்
சாயுங்காலம்வரை வனவாசம்தான்

வேரைவிட்டு மரம் நடந்து போவது போல்தான்
நீரைவிட்டு மீன்தாண்டிப் போவது போல்தான்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒரு வனவாசம்

-கோ. மன்றவாணன்

Thursday, 29 November 2018

தொலையாத வார்த்தைகள்

















“படிக்க வைக்கப் பணமில்லாத நீ
எதுக்குப் பெத்த?”
ஈட்டியில் நஞ்சுரசி எறிந்தாள் மகள்

“வச்சுக் காப்பாத்த வக்கில்லாத நீ
எதுக்குத் தாலி கட்ன?”
எரிகொல்லி வீசினாள் மனைவி

“ஒனக்குக் கொடுக்கறதெல்லாம் தெண்டச் சம்பளம்”
முகத்தில் உமிழ்ந்தார்
முதலாளி

“ஏன்.. என் உயிர வாங்குறே?”
நெருப்பில் விழுந்த உப்பென வெடித்தார்
நிறைய படித்த ஆசிரியர்

“எத்தன தடவ சொல்றது... அறிவிருக்கா?”
என்று இடித்துத் தள்ளினார்  
நடத்துநர் ஞானப்பிரகாசம்

“ரூபாயை வீசினா கவ்விப் பிடிக்கும்”
என்றார் வாக்காளர்களை
அரசியல் பிரமுகர்

அவமானம் அற்ற வாழ்வு வேண்டி
ஆலயத்துக்குச் சென்றபோது துரத்தினார்கள்
“நடைசாத்தியாச்சு போ.. போ..” என்று

-கோ. மன்றவாணன்

Tuesday, 20 November 2018

மெய் உறக்கம்


















கோடையைக்
கொடைக்கானல் ஆக்கும் குளிரறை
மலர்மணம்
மக்கள்திரள் போற்றும் திருப்புகழ்
மேகத்தைத் தைத்துப்போட்ட
மென்மெத்தைப் பரப்பில் படுத்துருள்கிறேன்
மெய்யாக உறக்கம் மட்டும் வரவில்லையே...

விழிமூடிக் கிடந்தாலும்
வழிதிறந்து வந்து மனம் கூச்சலிடுகிறது
தூக்கத்தைத்
துரத்தி

சாளரத்தைத் திறந்து
சாலையைப் பார்க்கிறேன்

மாநகராட்சியின் தூர்வாராத
மகா சாக்கடை ஓரம்
நோய்பரப்பும்
ஙொய்யெனப் பறக்கும்
சுரீரெனக் கடிக்கும் கொசுக்கள்
சிறுபோதும் ஓய்வற்ற
செவிப்பறையில் அறையும் வாகன இரைச்சல்
கைத்தடியால்
காவலர்கள் விரட்டி அடிக்கும் அச்சுறுத்தல்
வயிற்றுச் சோற்றுக்கு
வழியில்லை மறுநாள் காலை
பிள்ளைக்குட்டிகளுடன் தூங்குது
பிய்ந்த ஆடைகளுடன் ஒரு குடும்பம்
மெய்உறக்கம் அங்கே கண்டேன்

-கோ. மன்றவாணன்

Tuesday, 13 November 2018

இரண்டாவது கோப்பை






















தேநீர்க் கோப்பை வலது கையிலும்
திறந்த புத்தகம் இடது கையிலும்
இருப்பதே
எனது யோகாசனம்

தேநீர்ச் சுவையும்
வாசிப்பின் சுகமும்
மனதை மயக்கும் தேவதைகள்

மனைவி அழைத்த போதும்
மழலை சிரித்த போதும்
தெரிவதில்லை
தேநீர்க் கோப்பையின் அரவணைப்பில்

வாசிப்பில் மெய்மறந்த தருணம்
ஆவி பறந்தோடித் தப்பித்திருக்கும்
கோப்பையில் இருந்து

காலியான தேநீர்க் கோப்பையை
உதடு பொருத்தி உறிஞ்சி ஏமாறுதல்
ஒவ்வொரு நாளும் உண்டு

இரண்டாவது கோப்பை கேட்கையில் மட்டுமே
நிகழ்வுலகுக்குத் திரும்புதல்
நிகழ்கிறது


-கோ. மன்றவாணன்


கட்டண உரை






















கட்டண உரை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் இருநாள் பெருவிழாவாக நடத்தி வருகிறீர்கள். வெளியூர்களில் இருந்து வந்து கோவையில் தங்கி நிகழ்ச்சியில் ஆர்வத்தோடும் அறிவு வேட்கையோடும் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 200 பேரைத் தாண்டுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அந்த எண்ணிக்கை கூடி வருவதும் நன்மாறுதலே. எல்லாருக்கும் விருந்துணவு, தங்குமிடங்கள் ஆகியவற்றைச் சிறப்பான முறையில் செய்து வருகிறீர்கள். ஆனால் அதற்காக யாரிடத்திலிருந்தும் சிறுதொகையைக்கூடப் பெறுவதில்லை. செலவுகள் கூடுவதால் தற்போது பணம்படைத்தவர்களிடமிருந்து மட்டும் நன்கொடை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். ஆனால் நிகழ்வில் கலந்துகொள்ள எந்தச் செலவையும் பங்கேற்பாளரிடம் திணிப்பதில்லை. நவீன இலக்கியம் பரவ வேண்டும் என்றும் மூத்த மற்றும் இளைய படைப்பாளிகள் சிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் பிறமொழிப் படைப்பாளிகளின் உறவுப்பாலம் வலுப்பட வேண்டும் என்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் செவ்விய முறையில் செயல்பட்டு வருகிறது. வேறு எந்த எழுத்தாளரும் இதுபோன்று அமைப்பை நிறுவி இலக்கியம் செழிக்க முயலவில்லை.

இந்நிலையில் இலக்கிய உரை கேட்கக் கட்டணம் விதிக்கும் எண்ணத்துக்கு வந்துள்ளீர்கள்.

தமிழகத்தில் இலக்கிய அமைப்புகள் நடத்துபவர்கள் ஆர்வத்தின் காரணமாகச் சொந்தப் பணத்தைச் செலவழிக்கிறார்கள். ஆனாலும் போதுமான கூட்டம் வராததால் சலிப்படைகிறார்கள். தொடர்ந்து செலவு செய்து இழப்படைவதால் நிகழ்ச்சி நடத்துவதையே நிறுத்தி விடுகிறார்கள்.
அதே நேரத்தில் தமிழகத்தில் இலக்கியவாதிகளாக... தமிழறிஞர்களாக வலம்வரும் பலரும் உரையாற்றப் பல்லாயிரக் கணக்கில் ஊதியம் கேட்கிறார்கள். இந்தத் தொகையை ஊரில் உள்ள பணவேந்தர்களிடம் நன்கொடையாகப் பெற்றுச் சில அமைப்புகள் வழங்குகின்றன.

சில தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக எனஉரைத்து, புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர்களின் குழுவை வரவழைத்து, நிகழ்வை நடத்திப் பணவேட்டையாடுபவர்கள் உண்டு. இவர்கள் இலக்கியத்தையோ அறிவையோ வளர்ப்பவர்கள் இல்லை.

மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க. சார்பில் கட்டணம் செலுத்தி உரைகேட்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.   க. சுப்பு, துரைமுருகன், ரகுமான்கான் ஆகியோர் உரையாற்றினர்.  
.
ஒரு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநில மாநாடுகள் நடத்தப்பட்டன. அந்த மாநாடுகள் இருநாட்கள் நடக்கும். அதற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாநாட்டு நிறைவின் போது நுழைவுக்கட்டணத்தின் மூலம் வசூலான தொகை விவரத்தை அறிவிப்பார்கள். பின்னர் காலப் போக்கில் இரண்டாம் நாளன்று இறுதியில் கலைஞர் பேசுகிற போது மட்டும் நுழைவுவாயிலை அனைவருக்கும் இலவசமாகத் திறந்துவிடுவார்கள். அந்த நேரத்தில்தான் மாநாட்டுப் பந்தலில் அதிகக் கூட்டம் அலைமோதும்.

தெருக்களில் திடல்களில் நடக்கும் அரசியல் கூட்டங்களுக்கு என் சிறுவயதில் சென்றிருக்கிறேன். சிறப்புப் பேச்சாளர் பேசுவதற்கு முன் ஓர் அறிவிப்பை வெளியிடுவார்கள். “நம் கழகத் தோழர்கள் பாண்டியன், பெருமாள், தங்கராசு ஆகியோர் துண்டேந்தி வருகிறார்கள். தங்களால் இயன்ற பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்பார்கள். அந்தத் தோழர்கள் துண்டை முழங்கைகளில் விரித்தபடி கூட்டத்தில் நுழைந்து வருவார்கள். மக்கள் காசோ ரூபாயோ போடுவார்கள். அந்தத் தொகையும்  அதே கூட்டத்தின் நன்றியுரையின் போது அறிவிக்கப்படும். இந்தத் தொகை எல்லாம் கூட்டச் செலவைச் சரிகட்டுவதற்காகத்தான்.

தற்காலத்தில் அரசியல் கூட்டம் நடத்துபவர்கள் பெருந்தொழிலதிபர்களிடம் நிதிபெற்றுவிடுகிறார்கள். அரசியல்வாதிகளே கோடீஸ்வரர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே கூட்டத்தில் பணம் வசூலிப்பதில்லை. ஆனாலும் அரசியல் உரைகேட்க மக்கள் வருவதில்லை. மாறாகக் கூட்டத்துக்கு ஆள்சேர்க்கச் செலவழிக்கிறார்கள். ஆள்ஒருவருக்கு ஐநூறு ரூபாயும் மதுப்புட்டியும் தருகிறார்கள். கூலி வாங்கிக் கொண்டாடுவதற்காகவே அத்தகைய அரசியல் கூட்டத்துக்கு ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் வருகிறார்கள்.

எழுத்தாளர் வளவ. துரையன் அவர்கள் கடலூரில் இலக்கியச் சோலை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதுவரை 180 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தி இருக்கிறார். அந்தக் கூட்டத்துக்கு இருபதுபேர் வருவார்கள். நிகழ்ச்சியின் ஊடே வருகையாளர் கையொப்பப் பதிவேட்டைச் சுற்றுக்கு விடுவார். அதில் முதல் கையொப்பம் இடுபவர், இருபது ரூபாய் அல்லது ஐம்பது ரூபாய் நன்கொடை எழுதி, அந்தத் தொகையைப் பதிவேட்டில் வைத்துவிடுவார். அதன்பின் கையெழுத்து இடுவோர் ஒவ்வொருவரும் பத்து ரூபாய்க்குக் குறையாமல் மொய் வைக்க வேண்டிய வழக்கம் உருவானது. அவர் யாரையும் நிதியளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. எனினும் பலர் பார்க்கும் அந்தப் பதிவேட்டில் நிதி வழங்காவிட்டால் மதிப்புக்குறைவாகிவிடுமோ என்று எண்ணினார்கள். அது குறித்து இலக்கிய அன்பர்கள் குறைகூறினர். கூட்ட வருகையும் குறைந்து போனது. தற்போது வருகையாளரிடமிருந்து அவர் நிதி பெறுவதி்ல்லை.

அதேபோல் கவிஞர் கனிமொழி.ஜி மற்றும் கவிஞர் யாழி அவர்கள் இணைந்து ஆம்பல் இலக்கியக் கூடல் அமைப்பை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் ரூபாய் செலவழித்துக் குளிர்கூடத்தில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். வெளியூர் பேச்சாளர்கள், எழுத்தாளர்களுக்கு தங்குவதற்கு குளிர்அறைகள் ஏற்பாடுகள் உண்டு. நிகழ்ச்சி நிறைவின்போது அனைவருக்கும் “என்றும் நாவிலும் நினைவிலும் நிற்கும்” அசைவ உணவு பரிமாறுகிறார்கள். ஆனாலும் ஆறுதல்தரும் அளவுக்குக் கூடக் கூட்டம் வருவதில்லை.

ஒவ்வோர் நகரத்திலும் ஏராளமான தமிழாசிரியர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள், உள்ளனர். எவ்வளவுதான் சிறப்பான நிகழ்ச்சி என்றாலும் அவர்களில் ஓரிருவரைத் தவிர யாரும் அத்தகைய தமிழ்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. தமிழ்அமைப்புகளும் குழுக்கண்ணோட்டத்துடன் ஆங்காங்கே செயல்படுகின்றன. ஒவ்வோர் ஊரிலும் இலக்கிய ஆர்வலர்கள் எனக் கொஞ்சம்பேர்தான் உள்ளனர். அவர்களுக்குள்ளும் பல குழுக்கள். ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடுத்தவோர் அமைப்பினர் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சிக்குச் செல்வதில்லை. கூட்டத்துக்குப் பத்துப்பேராவது சேரட்டும் என எதிர்பார்த்துக் குறித்த நேரத்தைத் தாண்டியும் நிகழ்ச்சியைத் தொடங்காமல் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அரங்கமும் காத்தாடிக்கொண்டிருக்கிறது.

தற்காலத்தில் கூட்டச் செலவு கூடிவிட்டது. இலக்கியக் கூட்டங்கள் இலாப வேட்டையாடும் வணிகக் கூடாரங்கள் அல்ல. ஆர்வத்தின் காரணமாகவும் அறிவு தாகத்தின் காரணமாகவும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தியவர்கள் இழப்புக்குள்ளாகி ஏளனத்துக்கும் ஏகடியத்துக்கும் ஆளாகி இருக்கிறார்கள். கூட்டச் செலவைப் பங்கேற்பவர்களும் பகிர்ந்துகொண்டால் இழப்புகள் தவிர்க்கப்படும். ஊர்கூடித் தேரிழுப்பதற்கு ஒப்பானதுதான் கூட்டச் செலவைப் பயனாளர்கள் பகிர்ந்துகொள்வது. சிலர் தம் பெருமைகளைத் தம்பட்டம் அடிப்பதற்காக மட்டுமே கூட்டத்தை நடத்துகிறார்கள். பொதுநலம் என்ற போர்வையில் தன்நலம் காக்கும் அத்தகைய கூட்டத்துக்கு நாம் ஏன் காசுபணம் தரவேண்டும்? கைத்தட்டல் மட்டும் போதுமே!

ஒரு பேச்சாளர் தன்பேச்சின் முன்தயாரிப்புப் பணிக்காகப் பலநாட்கள் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கு மதிப்பூதியம் அளிப்பது சமூகத்தின் கடமை. எழுத்தாளர்களின் எழுத்தோவியங்களுக்குச் சன்மானம் கிடைப்பதில்லை. எழுத்தாளர்களின் உரையைக் கட்டணம் செலுத்திக் கேட்க இந்தச் சமூகம் தயாரா என்று தெரியவில்லை. எழுத்தாளர்கள் பலகாலம் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய அறிவார்ந்த புத்தகங்களை வெளியிடப் பதிப்பகங்களுக்குப் பணம்தர வேண்டியதாகிறது.  தாங்கள் அறம் சிறுகதையில் சொன்னதுபோல் ராயல்டி என்பது கெட்ட வார்த்தை ஆகிவிட்டது.

கோமாளிச் சேட்டைகள் நிறைந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமானால் கட்டணம் கொடுத்து உரைகேட்க வரலாம்.  அதற்கும்கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எல்ஐசி முகவர்கள் போல வீட்டுப்படியேறியும் அலுவலகப் படியேறியும் புன்னகையை முகத்தில் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டும் பதமாகப் பேசியும் நுழைவுச் சீட்டை விற்க வேண்டும்.

புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் காந்தி பற்றிய தங்கள் உரையையும் கடந்த மேமாதம் புதுச்சேரி கம்பன் கழகத்தில் தாங்கள் ஆற்றிய உரையையும் நேரில் கேட்டு நான் வியந்திருக்கிறேன். பொற்காசுகள் கொடுத்துக் கேட்க வேண்டிய உரைதான் உங்களுடையது. எனினும் கரும்பு தின்னவும் கூலி கேட்கும் உலகில் நாம் வாழுகிறோம் என நினைக்கிறேன்.

ஜெயமோகன் அவர்கள் இலக்கிய அளவில் அறிமுகமானதைவிட, சினிமா மூலம்தான் அதிகம் அறிமுகம் ஆகியிருக்கிறார் என்பதில் உண்மையுண்டு. ஜெயமோகனுக்காகக் கொஞ்சம் கூட்டம் வரலாம். அதற்காக எல்லாப் பேச்சாளர்களுக்கும் கட்டணம் தந்து உரைகேட்கும் கூட்டம் வந்துவிடாது. இங்குத் தலைப்புக்கோ கருத்துக்கோ முதன்மை தராத நிலைதான் உள்ளது. இன்றைய போக்கில் தத்துவத்துக்கு ஆதரவில்லை. தலைவருக்குத்தான் ஆதரவும் ஆரவாரமும்.

கட்டண உரை என்பதை நான் ஆதரிக்கிறேன். ஆர்வமுள்ள அறிவார்ந்த இலக்கிய அன்பர்கள் சிலர் வேலை இல்லாமல் வறியவர்களாக இருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு வர அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். அவர்கள் ரூபாய் 150 செலவழிப்பார்களா? அந்தத் தொகை இருந்தால் அவர்கள் கூட்டத்துக்கு வருவார்களா? அல்லது மதுக்கூடத்துக்குச் செல்வார்களா?

தங்களின் கட்டண உரை முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறேன்.

அங்கே சர்க்கஸ் நடைபெறுகிறது. கவுண்டர்கள் முன் யாரும் நிற்கவில்லை.

-கோ. மன்றவாணன்

எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வெளியானது

Thursday, 8 November 2018

நாட்குறிப்பு எழுதிய நாட்கள்



கைகளால் புரட்டுகிறேன்
கண்களால் வருடுகிறேன்
நடந்தகதை சொல்கிறது
நாட்குறிப்பு

பக்கம் பார்த்துப் பேசு என்றனர்
பக்கமோ அடுத்த பக்கத்தோடு பேசுவதில்லை
ரகசியங்கள் கசிவதில்லை
ரசனைகள் கரைவதில்லை

இரவின் தனிமையில்
என்னுடன் பேசுவது வழக்கம்
இந்த நாட்குறிப்புக்கு!
இன்னமும்தான்...

எழுதுகோல் சிந்தும் மையில்
எழுந்தது எப்படி
இருவருக்கு மட்டுமான
இன்னொரு தேவ உலகம்

புரட்டப் புரட்ட
விரல்களிலும் தொத்திக் கொள்கிறது
காதலின் தித்திப்பு.

இந்த நாட்குறிப்புக்குப் பெருமிதம்
என்னை அதுதான்
கவிஞன் ஆக்கியதாம்.

-கோ. மன்றவாணன்

Wednesday, 31 October 2018

மன்னிப்பாயா?







“நீ அழகு” எனச் சொல்ல மறந்து
நிலவை அழகென்றேன்

உன் சொல்லமுது இனிதென அருந்தாது
தமிழருந்தினேன்

உன் விழி படபடப்பை ரசிக்காமல்
பட்டாம்பூச்சியின் சிறகசைப்பில்
சிறைபட்டு மகிழ்ந்தேன்

இன்று மலர்ந்த ரோஜாவை
உனக்குச் சூட்டாமல்
அம்மனுக்கு வைத்து அழகு பார்த்தேன்

உன்
பட்டாடையின் வனப்பில் மயங்காது
பஞ்சவர்ணக்கிளியின் நிறத்தில்
மனம்கரைந்து போனேன்.

எல்லாம்
உனக்குள் உள்ளபோது
வெளியில் எட்டிப்பார்த்ததில்
வெளிப்பட்டன மாயைகள்

மன்னிப்பாயா?

-கோ. மன்றவாணன்

Monday, 22 October 2018

காதலின் வானிலை




















மேகம் திரண்டது அந்த வானத்தில்
சோகம் திரண்டது அவள் வதனத்தில்
இடிவிழுந்த போது விண் அதிர்ந்தது
ஏசிய பேச்சில் மண் அதிர்ந்தது
மின்னல் வெட்டிய போது கண்மிரண்டது
விழிவாளால் வெட்டிய போது தலைதுவண்டது
அடைமழை பெய்தபோது நிலம்மூழ்கியது
அழுத கண்ணீரில் உளம்மூழ்கியது
காற்று சுழன்று சூறாவளியாய் மாறியது
காதல் கழன்று புயல்தாண்டவம் அரங்கேறியது

புயல் ஓய்ந்தபின் கணக்கெடுக்கையில்
சேதாரம் ஆனது
இருவர் வாழ்க்கையும்

கோ. மன்றவாணன்

Sunday, 14 October 2018

இடைவெளி























எழுதும் பேசும் சொற்களின்
இடைவெளியை நிரப்பும்
மவுனமாய் மலரும் கவியொன்று

முதுகில் ஒட்டிப் பிறந்தவைதாம்
வடதுருவமும்
தென்துருவமும்

இடைவெளி எனும் சொற்கூட்டில்
வெளியேறிப் போனது
இடைவெளி

என்
தோட்டத்துப் பூவின் பனித்துளியில்
சுடர்ந்தது
தூரத்து மலைக்கோவில்

நிலவுக்கும்
நிலத்துக்கும் பிரிவில்லை
குளத்தில் நீராடுது நிலா

என்னைப் பிரிந்து எங்கோ சென்றாள்
கண்தொலைவுக்கு அப்பாலும்
கடல்தொலைவுக்கு அப்பாலும்

எங்களுக்குள்
இடைவெளியை உருவாக்கவிடாமல்
காவல் புரிகின்றன 
காதல் நினைவுகள்

இடைவெளியின் இருபுறங்களையும் 
இணைத்தபடியே இருக்கும்
கண்ணுக்குத் தெரியாத
காந்தக் கோடுகள்

-கோ. மன்றவாணன்






Tuesday, 9 October 2018

பால்ய வீதியில்





















சிறுபாதங்களின் முத்தத்தால்
சிலிர்த்த
பால்ய வீதி
பள்ளிக்கூடம் ஆனது எங்களுக்கு

பீங்கான் கோப்பையும்
குண்டு பல்புமாக ஒளிசிந்திய
தெருவிளக்குக் கூடுகளில்
சிட்டுக்குருவிகள் குடியிருந்த போதே
தெரிந்துகொண்டோம்
சிற்றறையிலும் வாழ்ந்து களிக்க

கண்ணாமூச்சி ரே...ரே...
காட்டுப்பூச்சி ரே...ரே... என
ஒளிந்து விளையாடிய போதே
உணர்ந்துகொண்டோம்
வெற்றியின் ரகசியத்தைக் கண்டறிய

பால்வேறு பாடின்றி
பால்ய நாட்களில்
ஒருகாலில்
சில்லு விளையாடிய போதே
தெரிந்துகொண்டோம்
ஊனத்தை வெல்லும் உத்தியை

சாட்டையைச் சுற்றிப் பம்பரத்தைச்
சுழல விடும்போதே
அறிந்துகொண்டோம்
ஆட்களை
ஆட்டுவிக்கும் நிர்வாகக் கலையை

மூச்சு விடாமல் பாடியும்
மொத்த நபர்களை ஒருங்கிணைத்தும்
கபடி ஆடிய போதே
கற்றுக்கொண்டோம்
கூட்டுப்பணியின் சூத்திரத்தை

-கோ. மன்றவாணன்

Sunday, 23 September 2018

பொதுஇடங்களும் பொதுஒழுங்கும்





பொது இடங்களும்
பொது ஒழுங்கும்

வழக்கறிஞர் கோ. மன்றவாணன்

அடுத்தவர்க்குத் தொல்லை அளிக்காத வகையில் நம் நடவடிக்கைகள் அமைவதே பொதுஒழுங்கு. தனிஒழுங்கும் இல்லாமல் பொதுஒழுங்கும் இல்லாமல் நம் சமூகம் தன்னல வெறியோடு அலைகிறது.
   
திருமண விழாவுக்குச் சென்றிருந்தேன். மற்ற வாகனத்தை எடுப்பதற்குத் தொந்தரவு தராத வகையில் இடம்விட்டு என்வாகனத்தை வரிசை முறையில் நிறுத்தினேன். திரும்ப வந்து பார்த்த போது என் வாகனத்தை எடுக்க முடியாத வகையில் பல வாகனங்களைக் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி இருந்தார்கள். நான் அவசரமாகச் செல்ல வேண்டி இருந்தது. வாகனத்தை எடுக்க முடியாததால் இரத்த அழுத்தமும் எகிறியது. கடைசியில் என் வாகனத்தை எடுக்க முக்கால் மணிநேரத்துக்கு மேலானது. இதுபோன்ற அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.
     
ஒரு வரிசையில் வாகனங்களை நிறுத்திய பிறகு, அவ்வண்டிகளை எடுக்கும் வகையில் போதுமான பாதைவிட்டு, அடுத்த வரிசையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இவ்வாறே அடுத்தடுத்த வரிசைகளில் வாகனங்களை ஒழுங்கு முறையில் நிறுத்த வேண்டும். ஆனால் இந்த ஒழுங்கைப் பலரும் பின்பற்றுவதில்லை. முதலில் யாரோ ஒருவர் முறைதவறி நிறுத்தும் போது, மொத்த வரிசையும் சிதறிவிடுகிறது. ஒருவர் செய்யும் தவறு, முழுசமூகத்தையும் பாதிக்கிறது.

சில திருமண மண்டபங்களில், சில விழாக்களில் வாகனங்களை வரிசைமுறையில் நிறுத்தவும் எடுக்கவும் ஊழியர்களை அமர்த்துகிறார்கள். அவர்களும் ஒழுங்குபடுத்தத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் பேச்சைக் கேட்காமல் மீறிச் சிலர் நடக்கிற செயல்கள், எல்லா நிகழ்விலும் நடந்தேறுகின்றன.

கடைவீதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டுத் திரும்ப வந்தால், அவ்வளவு சீக்கிரத்தில் வாகனங்களை எடுத்து வெளிவர முடிவதில்லை. மற்றவர்களுக்குப் பாதகம் ஏற்படுவதைப் பொருட்படுத்தாமல், தமக்குச் சாதகமாக வாகனத்தை நிறுத்திவிட்டு வந்துவிடுவோருக்குக்கூட அதே முறையில் பதிலடி கிடைக்கிறது. ஆம். அதன்பின் வருவோர் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தும்போது, முன்னர் ஒழுங்கின்றி நிறுத்தியவர்களின் வண்டிகளையும் எடுக்க முடிவதில்லை. எங்கோ ஓரிடத்தில் தீவைத்தால் அது நாலா புறங்களிலும் பரவி பெரும் தீவிபத்து நடக்கும். அதற்கு ஒப்பானது, வரிசை தவறி வாகனங்களை நிறுத்துவது ஆகும்.

ஆக ஒருவர் செய்யும் இந்தத் தவறு, மற்றவர்களையும் தொற்றிக் கொள்கிறது. உரிய நேரத்தில் வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்ல முடிவதில்லை. இதனால் பல மணி நேர உழைப்பும் வீண்போகிறது. பல முக்கிய பணிகளைச் செய்ய முடியாமல் இழப்புகளும் நேரிடுகின்றன.

பேருந்தில் பயணம் போகும் போது முன்பக்க சன்னல் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களில் சிலர், எச்சில் துப்புவதை வழக்கமாகக் கொண்டிருப்பர். அந்த எச்சில் காற்றின் வேகத்தில் பின்னிருக்கையில் உள்ளவர்கள் மீது தெறிக்கும். ”பேருந்து நிற்கும்போது எட்டத் தள்ளி எச்சில் துப்புங்கள்” என்றால், அவர் சற்று நேரம் துப்பாமல் இருந்துவிட்டு மறுபடியும் துப்புவார். இவ்வனுபவம் பயணம் செய்யும் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

பான்பராக் சாப்பிடுவோர் அக்கம் பக்கம் பார்ப்பதில்லை. பளிச்செனத் துப்பிவிடுகிறார்கள். அவர்கள் குபீர்எனச் சிரிக்கிற நேரத்தில் அருகில் நிற்கிற வெள்ளுடை வேந்தர்கள் செங்கறையோடுதான் செல்ல வேண்டும். பொதுஇடங்களின் சுவர்களில் தரைகளில் பான்பராக் கரைகளை எப்போதம் பார்க்கலாம். புற்றுநோயை உருவாக்கும் பான்பராக்கைப் போடாமல் இருப்பதே அவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும் நலம்பயக்கும்.

பேருந்து நிலையங்களில் நாள்தோறும் நடக்கிற நிகழ்வுதான் இது. பேருந்து ஒன்று பஸ் நிலையத்துக்குள் நுழைகிறபோதே அந்தப் பேருந்துக்காக காத்திருந்த பலர் ஓடி அதில் ஏறுவார்கள். இறங்க வேண்டியவர்கள் இறங்க முடியாத நிலை. உள்ளிருப்பவர்கள் இறங்கினால்தானே வெளியில் நிற்பவர்களுக்கு இடம் கிடைக்கும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் முட்டி மோதி உள்ளே வலுக்கட்டாயமாக ஏறுவார்கள். பலரின் சிரமங்களைப் பொருட்படுத்துவதில்லை. இடத்தைத் தமக்கு ஒதுக்கீடு செய்வதாகக் கருதிக்கொண்டு கைக்குட்டைகள், துண்டுகள் பைகள் போன்றவற்றை வெளியில் நின்றபடியே பஸ் இருக்கையில் எறிவார்கள். சிலர் அதை எடுத்து வேறு இடங்களில் போடுவார்கள். இதனால் வாய்த்தகராறுகள், அடிதடிகள், மோதல்கள் ஏற்பட்டு மனத்துயர்கள்தாம் மிஞ்சும். மேலும் முன்னரே வந்து நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. அப்போதுதான் வந்தவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகின்றன. வலுத்தவனுக்கே இங்கே வாழ்க்கை என்பது சமூக நேர்மைக்கு விடப்பட்ட சவால் அல்லவா?

இதற்கு மாறான நிகழ்வைப் பல ஆண்டுகளுக்கு முன் நான் பெங்களூரு மாநகரப் பேருந்து நிலையத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். பேருந்து வருவதற்கு முன் தாமாகவே வரிசையில் ஆண்கள் பெண்கள் நிற்பார்கள். பேருந்து வந்ததும் அதிலிருப்போர் இறங்கிய பிறகு, வரிசையில் நிற்போர் முறைப்படி ஏறுவார்கள். பஸ் நிரம்பியதும் அடுத்த பேருந்து வரும்வரை காத்திருப்பார்கள். யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

நகரப் பேருந்துகளில், மாநகரப் பேருந்துகளில் கூட்ட நெரிசல்கள் அதிகம். அத்தகைய பேருந்துகளில் சில  இளைஞர்கள் முதுகில் மூட்டை சுமப்பது போல் ஒரு பெரிய பையைச் சுமந்து, அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னும் பின்னும் தம்போக்கில் மற்றவர்களை இடித்துவிட்டு அவசர அவசரமாக நடப்பார்கள். அவர்கள் முதுகில் இருக்கும் பெரிய பைகள் மற்றவர்களை இடிக்கும். சிலர் அணிந்திருக்கும் கண்ணாடிகளை இழுத்துக் கீழே விழச் செய்யும். அந்தப் பையில் துருத்தி இருக்கும் சில பொருட்கள் மற்றவர்களின் ஆடைகளைக் கிழிக்கும். ஏன் சதைகளையும் கிழிக்கும். அத்தோடு மட்டுமில்லாமல் அந்த இளைஞர்கள் அணிந்திருக்கும் கடினமான மூடு காலணிகள் பிறரின் கால்களை நசுக்கும். கால் நசுங்கலில் வயதானவர்கள் அலறுவது அந்த இளைஞர்களின் காதுகளுக்குக் கேட்காது. அந்தக் காதுகளில்தான் கர்ணின் கவச குண்டலம்போல் ஏற்கனவே ஹெட்செட் கருவிகள்  பொருத்தப்பட்டிருக்கின்றனவே. பிறருக்குப் பாதிப்பு இல்லாமல் சற்றுக் கவனமாக அந்த இளைஞர்கள் நடந்துகொண்டால், குறிப்பாக முதியோர்கள் மிகவும் வாழ்த்துவார்கள்.

பேருந்தில் பயணிகளின் நெரிசலைப் பயன்படுத்தி சில இளைஞர்கள், பெண்கள் பகுதியில் முன்னேறிப் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார்கள். இளைஞர்களின் வன்முறைக்கு அஞ்சியும் வெளியில் சொல்ல முடியாமலும் அந்தப் பெண்களின் மனம்படும பாடுகள் யாருக்குத் தெரியப் போகிறது?

பொதுஇடங்களில் எச்சில் துப்புவதும், சுவர்களில் வாகனங்களில் சளியைத் துடைப்பதும், சாப்பாட்டு மிச்சங்களைப் பலர் நடந்து போகும் பாதைகளில் வீசுவதும், அருகில் பெண்கள் இருக்கிறார்கள் என்ற கூச்சமோ வெட்கமோ இல்லாமல் இயற்கைக் கடன்களைத் தீர்ப்பதும், நெடுஞ்சாலைகளில் உள்ள ஊர்காட்டிப் பலகைகளில் சுவரொட்டி ஒட்டி மறைப்பதும் பொது ஒழுங்கைக் கெடுக்கும் செயல்கள்தாம். மக்கள் வாழும் சில தெருக்களைப் மூத்திரச் சந்துகளாகவும் பீ சந்துகளாகவும் மாற்றியவர்கள் நம்மவர்களே! சுத்தம் சுகாதார மேம்பாட்டுக்கு அரசுகளை மட்டுமே நம்ப வேண்டியதில்லை. அந்தக் கடமை நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. சுற்றுப் புறத்தைச் சுத்தமாக வைத்திருப்பது ஆலயப்பணி போன்ற அறப்பணியே என்பதை எப்போது உணரப் போகிறோம்?

பூங்காக்களில் திரையரங்குகளில் கடற்கரைகளில் வணிக வளாகங்களில் அலுவலகங்களில் புகைபிடிப்போர்கள் நிறைந்தே காணப்படுகின்றனர். புகைபிடிப்போரைவிட அவர்களின் அருகில் இருப்பவர்களுக்குத்தாம் பாதிப்புகள் அதிகம். பொதுஇடங்களில் புகைபிடிப்பதை அவர்கள் அறவே தவிர்க்க வேண்டும். அதுவே சமுதாய நலனுக்கு அவர்கள் செய்யும் பேருதவி ஆகும். அதைவிட, அவர்கள் புகைபிடிப்பதையே நிறுத்திக்கொண்டால் உடலுக்கும் நல்லது. ஊருக்கும் நல்லது.

பொதுநலம் விரும்பும் சிலர்கூட, பொதுப்பிரச்சனைகளுக்காக ஊர்வலம் போகும் போது தெருவடைச்சான் போல் சாலையை அடைத்தவாறு செல்கிறார்கள். அதனால் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டு, உரிய இடத்திற்கு உரிய நேரத்தில் மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகிறது.

இவைபோல் இன்னும் பற்பல அன்றாட நிகழ்வுகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. பொதுஒழுங்கு இல்லாமல் போவதற்கு மக்களிடத்தில் உள்ள  தன்நலம். அவசரம், சமூகப் பொறுப்பின்மை போன்றவைதாம் காரணங்கள்.
     
நாகரிக சமுதாயம் என்பது, பொதுஒழுங்கு மேம்படுவதில்தான் உள்ளது. நாம், நாகரிக சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா?

நன்றி :
தினத்தந்தி, 22-09-2018