கோடையைக்
கொடைக்கானல்
ஆக்கும் குளிரறை
மலர்மணம்
மக்கள்திரள்
போற்றும் திருப்புகழ்
மேகத்தைத்
தைத்துப்போட்ட
மென்மெத்தைப்
பரப்பில் படுத்துருள்கிறேன்
மெய்யாக
உறக்கம் மட்டும் வரவில்லையே...
விழிமூடிக்
கிடந்தாலும்
வழிதிறந்து
வந்து மனம் கூச்சலிடுகிறது
தூக்கத்தைத்
துரத்தி
சாளரத்தைத்
திறந்து
சாலையைப்
பார்க்கிறேன்
மாநகராட்சியின்
தூர்வாராத
மகா சாக்கடை ஓரம்
நோய்பரப்பும்
ஙொய்யெனப்
பறக்கும்
சுரீரெனக் கடிக்கும் கொசுக்கள்
சிறுபோதும்
ஓய்வற்ற
செவிப்பறையில் அறையும் வாகன இரைச்சல்
கைத்தடியால்
காவலர்கள் விரட்டி அடிக்கும் அச்சுறுத்தல்
வயிற்றுச்
சோற்றுக்கு
வழியில்லை மறுநாள் காலை
பிள்ளைக்குட்டிகளுடன்
தூங்குது
பிய்ந்த ஆடைகளுடன் ஒரு குடும்பம்
மெய்உறக்கம்
அங்கே கண்டேன்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment