Friday, 29 November 2019

தூரத்து உறவுகள்















வெகுதூரத்தில் இருந்தாலும்
ஒவ்வோர் இரவிலும் கதைசொல்லி
என்னை உறங்க வைக்கிறது நிலா

ஆற்றோர நந்தவனத்தில் இருந்தபடி
மலர்கள் எனக்குப் பரிசனுப்புகின்றன
மணத்தை

நிலத்தின் மறுமுனையில் இருந்தாலும்
நித்தமும் வருகிறது
தோழியின் அழைப்பொலி

சிம்லாவில் விளைந்த ஆப்பிள்
என்வீட்டு
ஊண்மேடையில்

உலகின் எல்லா பாகங்களில் இருந்தும்
வந்து குவிகின்றன நட்பஞ்சல்கள்
என்வீட்டுக் கணினியில்

தூரங்கள்
பிரித்துவிடாது
உறவுகளை...

-கோ. மன்றவாணன்


Wednesday, 13 November 2019

பெண்ணென்று சொல்வேன்
















உயிரூட்டும்
ஒவ்வொரு நதியின் பெயர்கேள்...
அலையேறி வந்து
கரையின் காதுகளுக்குச் சொல்லிப் போகும்
பெண்பெயர்களையே.

கனவையும் கற்பனையையும் கவிதையையும்
கலந்து பிசைந்து ஊட்டும்
நிலவின் பெயர்கேள்...
முகில்துணி விரித்து
மூடிக்கொள்வாள் முகத்தை...
அழகி என்றுரைத்து.

அன்பு
அருள்
மன்னித்தல்
வயிற்றுக்குச் சோறிடல்
இந்தச் சொற்களுக்குரிய பால்
எதுவெனக் கேள்...
பெண்பால் எனக்கூறும் வாழ்விலக்கணம்.

வீட்டு
விளக்கு ஒவ்வொன்றும்
ஒளியால் எழுதுகிறது
பெண்ணுக்கு வாழ்த்துப்பா

கோயில் கருவறை
தாயின் கருவறை
எது உயர்ந்தது என்று என்னிடம் கேள்...
பெண்ணென்று சொல்வேன்.       

-கோ. மன்றவாணன்

Wednesday, 6 November 2019

இந்த நாள் இனிய நாள்

















விபத்தில் கால்நசுங்கி
நகர முடியாத
நாய்க்குச் சோறளித்தேன்

தட்டித் தட்டிக்
கம்புக்கண் கொண்டு நடந்தவரைச்
சாலையின் மறுபக்கம் கொண்டுசேர்த்தேன்

ஆலயத்தின்
அன்னதான திட்டத்துக்கு
ஆயிரம் ரூபாய் நிதியளித்தேன்

தெருவோர
ஏழைச் சிறுமிக்குப்
புத்தாடை வாங்கித் தந்தேன்

எனினும்
இந்த நாள்களெல்லாம்
இனிய நாள்களாகுமா.....

விடுதியில் விட்டிருந்த அம்மாவை
வீட்டுக்கு அழைத்துவந்த
இந்த நாளைக் கொண்டாடுகையில்!

கோ. மன்றவாணன்

Friday, 1 November 2019

பின்வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்...


    






பின் வரிசையில்
எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்.

கோ. மன்றவாணன்


பாழடைந்த நூலகக் கட்டடங்களில் பள்ளிக்கூடக் கொட்டகைகளில், யாருடைய மாடியிலோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் என்பது   காலங்காலமாய் இருந்துவந்த நிலைமை. அன்று இலக்கியம் பேசியவர்கள் ஏழைகளாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவில் செலவு குறைவாகவும் சீர்மை நிறைவாகவும் நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார்கள். தம் கைப்பணத்தைச் செலவழித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் நன்றிக்குரியவர்கள்தாம். அவர்கள்தாமே இலக்கியத்தையும் தமிழையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு வழங்கியவர்கள்.

இப்போது இலக்கிய விழாக்கள் மிகுபொருள் செலவில் நடத்தப்படுகின்றன. இவற்றிலும் நூல் வெளியீட்டு விழாக்களுக்குக் கூடுதல் கவுரவம். இருப்பினும் எளிமையாக விழா நடத்தும் அமைப்புகளே தொடர்ந்து இயங்குகின்றன.

சரியோ... தவறோ... தற்காலத்தில் நூல் வெளியீட்டு விழாக்கள் செல்வச் செழிப்போடு நிகழ்கின்றன. நவ நாகரிகமாக வடிவமைக்கப்பட்ட உணவகங்களில்- குளிரும் கூடங்களில் நூற்புகழ் பேசப்படுகிறது. மிகச்சில நவீன இலக்கியச் சந்திப்புகளில் கோப்பைகள் மலர்ந்து வழிகின்றனவாம். இதுவும் இலக்கிய வளர்ச்சிதானோ?

புகழ்பெற்ற சில எழுத்தாளர்களைத் தவிர, புத்தகங்களை விற்றுப் பணம்சேர்க்க வேண்டும் என்று எந்த எழுத்தாளரும் நினைப்பதில்லை. அட்டை வடிவமைப்புக்கும் அழகான அச்சிடலுக்கும் அதிகம் பணம்செலவிட அவர்கள் தயங்குவதில்லை. புத்தக அச்சீட்டுக்கு ஆகும் செலவைவிடப் பன்மடங்கு செலவில் வெளியீட்டு விழாவை நடத்துகிறார்கள். இவ்விழாக்கள் புகழுக்காகவா புத்தகத்துக்காகவா என்று புரியாமல் போய்விடுகின்றன.

புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஆகும் செலவில் பத்துவகை புத்தகங்கள் அச்சிடலாம் என்கிறார் பதிப்பக நண்பர். விழாச்செலவைத் தவிர்த்துப் புத்தகங்களையே அன்பளிப்பாக அள்ளித் தந்துவிடலாம் என்கிறார் இன்னொரு நண்பர். ஆடம்பரத் திருமணமும் ஆடம்பர நூல்வெளியீட்டு விழாவும் தற்கவுரவம் காட்டத்தான் என்கிறார் மற்றொரு தோழர். “பணம் படைத்தவர்கள் விழா கொண்டாடுகிறார்கள். உனக்கு ஏன் பற்றி எரிகிறது” என்று என்னை நான் கேட்டுக்கொண்டேன்.

கவிஞர் ஒருவரின் கவிதைநூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பரவலாகப் புகழ்வாய்ந்த எழுத்தாளர் ஒருவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். விழாவுக்குப் பத்து நாள்கள் முன்பே புத்தகத்தை அனுப்பி வைத்திருந்தார்களாம். ஆனால் அவரோ புத்தகத்தைப் படிக்கவே இல்லை போலும். புத்தகத்தைப் பற்றிப் பேசவும் இல்லை. நூலாசிரியரைப் போற்றவும் இல்லை. அந்த எழுத்தாளர் தம் புத்தகங்களைப் பற்றியும் தம் பெருமைகளைப் பற்றியும் பேசிவிட்டுச் சென்றார். அவ்வாறு பேசியதற்காக அந்தப் பெருந்தகை பெற்றதோ பெருந்தொகை.

புத்தக வெளியீட்டு விழாக்களில் பொன்னாடை போர்த்துகிறார்கள். பொன்னாடைக்குப் பதிலாகப் புத்தகங்கள் வழங்கினால் என்ன என்று பலரைக் கேட்டிருக்கிறேன். பொன்னாடையைப் போர்த்தியபடி போட்டோவுக்குப் புன்னகைத்தால்தான் கவுரவம் என்று கருதிக்கொள்கிறார்கள். அந்தப் பொன்னாடைகள் பயன்படுத்தத் தோதானவை அல்ல. அவற்றை மடித்து வைத்து, மற்றொருவருக்குப் போர்த்துகின்றனர் என்பது இலக்கிய உலகில் சர்வ சாதாரணமப்பா.  தனக்குப் போர்த்திய பொன்னாடை எத்தனைத் தோள்மாறி வந்தது என்று எந்தப் பெருமகனாலும் கணிக்க முடியாது. சூடிய பூ சூடற்க என்பதுபோல், போர்த்திய சால்வை போர்த்தற்க என்றொரு புதுமொழி இனி உலவலாம்.
     
மதிப்புணர்வின் அடையாளமாக மனங்கவர்ந்த புத்தகங்களை வழங்குவதுதான் நூல்வெளியீட்டு விழாவுக்குப் பெருமை சேர்ப்பதாகும். புத்தக வெளியீட்டு விழாவிலேயே நூல் வழங்கும் வழக்கம் வரவில்லை என்றால் பொதுவிழாக்களில் யார் நூல்வழங்கிச் சிறப்பிப்பார்கள்?
  
திருமண விழாக்களில் மொய்வைப்பது போலவே புத்தக வெளியீட்டு விழாக்களில் எழுத்தாளர்களின் தீவிர நண்பர்கள் சிலர் பணம்கொடுத்து நூல் வாங்குவார்கள். ஆனால் அவர்கள் அதைப் படிக்க மாட்டார்கள் என்பது பரவலாகிவிட்ட புதுப்பழக்கம். நூல் வெளியீட்டு விழாவுக்கு வரும் பிரமுகர்கள், நானூறு ரூபாய்க்கு பொன்னாடை வாங்கிவந்து போர்த்திவிட்டு, நூறு ரூபாய் கொடுத்து நூல்வாங்காமல் போய்விடுகிறார்கள்.
     
பொதுநூலகத் துறை பொதுவாகப் புத்தகங்களை வாங்குவதில்லை என்ற முறையீடு இருந்தாலும், கண்டிப்பாகக் கவிதைப் புத்தகங்களை வாங்குவதில்லை. தேநீர் குடிக்கும் நேரப் பொழுதில் கவிதை நூல்களைப் படித்து முடித்துவிட முடிகிறது. பத்துப் பதினைந்து நிமிடப் பேருந்து பயணத்தில் கவிதைகளைப் புரட்டிப்போட்டுவிட முடிகிறது. நானும் கவிதை நூல்களை வாங்குவதில்லை. புத்தகச் சந்தையில் புத்தகம் வாங்குவதுபோல் நடித்துவிட்டு, அங்குள்ள கவிதைப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்துவிட்டு வந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. சில பதிப்பாளர்கள், கண்ணாடித் தாளில் புத்தகத்தைப் பொதிந்து வைத்துவிடுகிறார்கள். பணம் கொடுத்தால்தான் இந்த மாதிரியான புத்தகங்கள் திறக்கும். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்பது புத்தகக் கடைக்காரர்களுக்கு மிகவும் பொருந்தும். இதனாலோ எதனாலோ கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தும் தீராததால் வற்புறுத்தித் திணிக்கிறார்கள் நம் கவிஞர்கள்.
     
அச்சகத்தில் இருந்து வந்த புத்தகக் கட்டுகளை வீட்டில் வைக்க இடமில்லாமலும்- விற்காத புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருக்க மனம் பொறுக்காமலும்- அப்படியே தூக்கிச் சென்று எடைக்குப் போட்ட அவல நிகழ்வுகளைக் கேள்விபட்டிருக்கிறேன்.
     
கவிதைநூல் அறிமுகங்களைத் தம் நண்பர்கள் மூலம் பிற ஊர்களில் நடத்தச் செய்கிறார்கள்.  அதற்கு மறுபயனாக அந்த நண்பர்களின் நூல்களுக்குத் தங்கள் ஊர்களில் அறிமுக நிகழ்வுகள் நடத்துகிறார்கள். பண்டமாற்று முறைபோல் இவ்விழாக்கள் நடக்கின்றன. என் பெருமையை நீ பேசினால் உன் பெருமையை நான் பேசுகிறேன் என்று ஒப்பந்தம் போட்டதுபோல் இத்தகைய விழாக்கள் உள்ளன. எனினும் இதன்மூலமும் இலக்கியம் பேசப்படுகிறது; தமிழ் உயர்த்தப்படுகிறது என்பதில் எல்லையிலாத மகிழ்ச்சி.
     
சிறப்பான நூல்களை எழுதிவைத்தும், வெளியிட வசதி வாய்ப்பற்ற தரமான ஒன்றிரண்டு எழுத்தாளர்கள், இதுபோன்ற விழாக்களில் பின்வரிசையில் எங்கேனும் உட்கார்ந்து இருக்கலாம்.

திண்ணை 27-10-2019