மண்ணுக்கும் விண்ணுக்குமாக
மாளிகை கட்டிவைத்தென்ன
வாழ
யாருமில்லை எனில்...
பெண்ணெனும் உயிரூற்று இல்லெனில்
பிரபஞ்ச அறைகளில் இருந்து
வெளியேறி மரித்துப்போகும் காற்றும்
பிரபஞ்ச மாடத்தில் ஒளியேற்றுவாள்
பெண்,
மதியும் கதிரும் இல்லெனினும்
பெண்ணில்லாத உலகை விரும்புவதில்லை
கவிஞர் மட்டுமல்லர்
கண்ணில்லாதவரும்
பிரபஞ்சத்தின் ருசியைத் தேடி அலைந்தால்
பெண்ணில்தான் முடியும்
பிரபஞ்சத்தின் விதியைப் படிப்பதென்றால்
பெண்ணில்தான் தொடங்கும்
உயிர் ரகசியம் கற்றிருந்தால் போதும்...
பெண்ணுக்குள்ளே
பிரபஞ்சம் காணலாம்
பிரபஞ்சத்துக்குள்ளே
பெண்ணைக் காணலாம்.
பிரபஞ்சத்தின் சக்தி உனக்குள்ளும் சுழலும்...
பெண்ணைக் காதலித்துப்பார்!
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment