Wednesday, 15 November 2017

உன் குரல் கேட்டால்...





              நள்ளிரவைக் கடந்து வெகுதூரம் 
              நடந்து வந்த பொழுதுக்கும்
              நாள்விடியலுக்கும் இடையே உள்ள
              நேரத்துளிகளில்
              தோட்டத்து மாமரத்தில் இருந்து
              தொடர்ந்து கேட்கிறது
              குருவிகளின் முணுகலோசை...

              அதைக்கேட்டுத்தான் விழித்துக்கொள்கிறதோ
              செம்மஞ்சள் பூசிய சூரியன்

              தலையாட்டிப் பேசும் பூவின் குரல்
              கருவண்டுகளுக்கும் கேட்கிறது
              கவிஞர்களுக்கும் கேட்கிறது

              நிலா பேசுவதை
              மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் கவிஞர்கள்
              அவரவர் தாய்மொழிகளில்

              ஊமைகளும் பேசுகிறார்கள்
              விரல் மொழியில்
              விழி வழியில்

              மொழிபெயர்ப்புத் தேவையில்லாத
              அழியாத மொழியொன்று உண்டு
              அது காதல்மொழி


              தாயின் குரல்கேட்பதே
              குழந்தையின் மனசை வார்ப்பிக்கும்
              இசை


              தாயே... தமிழே....
              உயிர்எரியும் வருத்தம் உண்டு
              உன்குரலைக் கேட்க முடியவில்லையே
              எங்கள் மழலையர் பள்ளிகளில்....

              இறந்து கிடக்கும் நான்
              எழுந்துவர முடியும்
              உன் குரலைக் கேட்டால் !

              -கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment