Saturday, 11 November 2017



மேதாவிகள் சிலர் நடத்தும் மேல்சபை

---கோ. மன்றவாணன்---

எனக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார்களோ இல்லையோ... எங்கே இலக்கியக் கூட்டம் நடந்தாலும் அங்கே சென்று தமிழ்கேட்பது எனக்கு வழக்கமாகிவிட்டது. மழைவர எத்தனிக்கும் ஒரு மாலை வேளையில் ஓர் இலக்கியக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன்.
சுற்றுவட்டாரப் பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து புகழ்பெற்ற ஒருவர் பாவேந்தரின் நூலைப்படி என்ற பாடலை வரிபிசகாமல் சுவைபடச் சொன்னார். காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் நீண்ட நேரம் அவர் பேசியது கூட்டத்தை நெளிய வைத்தது என்னவோ மெய்தான்.
அடுத்து இன்னொருவர் எழுந்தார். அவர் தன்னை நவீன இலக்கியவாதியாகவும்- சங்கத்தமிழ் அறிந்தவராகவும் வெளிப்படுத்திக்கொள்பவர் அல்லது அறியப்படுபவர். உண்மையிலேயே நவீன இலக்கியத்தில் மிகுஅறிவு கொண்டவர். அந்தக் கூட்டத்தை நடத்தும் அமைப்பாளர்களுக்கு மேலாக இருந்து கட்டளை பிறப்பிக்கும் நிலையிலும் இருப்பவர். நாள்தோறும் படிப்பவர். நான் மதிக்கின்ற நல்லவரும்கூட.
எது பேசுவதென்றாலும் ஆழ்ந்து படித்துவிட்டுப் பேச வேண்டும் என்று அறிவுரையோடு அவர் பேசத் தொடங்கினார்.
சங்கத்தமிழ் நூலைப்படி என்றெழுதிய பாரதிதாசன், சங்க இலக்கியத்துக்காக என்ன செய்தார்? சங்கத் தமிழ் பற்றி அவருக்கு என்ன தெரியும் என்றவாறு கேட்டு அதற்குப் பதில்களும் சொன்னார். சங்க இலக்கியத்துக்காக எதுவும் செய்யவில்லை; சங்கத் தமிழ் இலக்கியம் பற்றி எதுவும் எழுதவில்லை; சங்க இலக்கியம் அறிந்திருக்கவில்லை என்றார். ஓரிடத்தில்கூடக் கைதட்டல் கிடைக்கவில்லை என்றோ என்னவோ சோர்ந்துபோய் நன்றி வணக்கம் சொன்னார்.
அவரைப் பார்த்துக் கேட்டேன். பாவேந்தர் தமிழ்படித்தவர்; தமிழாசிரியராக இருந்தவர்; கண்ணகி புரட்சிக் காப்பியம் படைத்தவர்; மணிமேகலை வெண்பா பாடியவர்; பிசிராந்தையார் நாடகம் எழுதியவர்; திருக்குறளுக்கு உரை எழுதியவர் என்றேன். பிரெய்லி எழுத்தில் தமிழ்படித்த பேராசிரியர் ஒருவர் என் கருத்துக்கு ஒத்திசைந்து, பாவேந்தர் சேரத்தாண்டவம் என்றொரு நூலெழுதி உள்ளார் என்றார். அதைக் கேட்ட அவர், “அப்படியா” என்றபடி சற்றும் நாணாமல் மிடுக்கோடு அவர் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
அன்று அந்த அவையில் பாவேந்தரை வம்புக்கு இழுக்க வேண்டிய அவசியமே இல்லை. பாவேந்தர் பெயரை உச்சரிப்பதையே நவீன இலக்கியவாதிகள் எனச் சொல்லிக்கொள்வோர் விரும்புவதில்லை. பாவேந்தர் கவிஞரே இல்லை என்று “ஒரே அடி” கொடுத்து ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். திராவிட இயக்கம் சார்ந்த கவிஞர் என்பதாலும் அவரை வெறுக்கிற ஒரு கூட்டம் இருக்கவே செய்கிறது. பாரதிதாசன் கவிதைகளைப் படித்தால் தீட்டுபடும் என்பார்களோ என்னவோ. படிக்காமலேயே பாரதிதாசனை ஒதுக்கும் போக்கு, சில குழுக்களிடம் உண்டு.
பாரதியாரைவிடவும் தொழிலாளர்களுக்காக அதிகமாகப் பாடல்கள் எழுதியவர் பாவேந்தர். அப்படி இருந்தும் பொதுவுடைமைக் கட்சியினர் பாரதியையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையும் மட்டும் தூக்கிப்பிடித்துப் பாரதிதாசனைப் புறக்கணித்த காலமும் இருந்தது. அந்தப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எந்தப் பாடலை எழுதினாலும், பிள்ளையார்ச்சுழி போலத் தலைப்பில் பாரதிதாசன் பெயரை எழுதிவிட்டுத்தான் எழுதத் தொடங்குவார். சில ஆண்டுகளாகத்தான் பொதுவுடைமைக் கட்சியினரும் பாரதிதாசனை ஏற்றுப் போற்றுகிறார்கள்.
சரி! பாவேந்தர் சங்கத் தமிழ் இலக்கியத்துக்காக எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதனால் அவர் தரம் தாழ்ந்துவிடுவாரா? ஒரு கவிஞன் என்ன எழுதி இருக்கிறானோ அதில்தான் அவனின் பெருமை இருக்கிறது. அதற்குள்தான் நாம் ஆய்வு நடத்த வேண்டும். பாரதியோ பாவேந்தரோ தாம் வாழ்ந்த காலத்தின் தேவைக்கேற்ப இயங்கி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாரதிதாசன் இதுபற்றி ஏன் எழுதவில்லை? அதுபற்றி ஏன் எழுதவில்லை என்றெல்லாம் கேள்வி கேட்பது நியாயமா? “இதுபோன்ற தனத்தில்” கேள்வி கேட்டால் எந்த எழுத்தாளரும் எந்த இலக்கியவாதியும் தப்ப முடியாதே. எந்த எழுத்தாளரும் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாதே!
நான் நினைப்பதையெல்லாம் ஓர் எழுத்தாளன் எழுத வேண்டும் என்று நினைப்பதும்-  என் கருத்துக்கு உட்பட்டே எந்த எழுத்தாளனும் எழுத வேண்டும் என்று நினைப்பதும்... அப்படி எழுதாதவர்களை எழுத்தாளர்களே இல்லை என்று இழிவுபடுத்துவதும்... இலக்கியக் கொடுங்கோல் அல்லவா?
தனக்கு வேண்டியவர்கள் தப்பாக எழுதினாலும் அதுவே சரியென்றும்... ஆகா... அருமையென்றும் சாதிக்கிறார்கள். தனக்கு ஆகாதவர்கள் சரியாக எழுதினாலும் அதை முட்டாள்களின் பிதற்றல் என்றும்... இலக்கியமே இல்லை என்றும் சாடுகிறார்கள். இதுவே தற்கால இலக்கிய மேதாவிகள் சிலர் நடத்தும் மேல்சபையின் தீர்ப்பாக உள்ளதே.
இலக்கியப் படைப்பின் நிறை-குறைகளைச் சுட்டி விவாதிப்பது தவறல்ல. ஆனால் அதில் அறம் வெளிப்பட வேண்டும்.
காலத்தின் தேவையையும் காலத்தின் பின்னணியும் அடிப்படையாக வைத்துத்தான் இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் நோக்க வேண்டும். விருப்பு – வெறுப்பு இவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். சாதி, மதம், கட்சி, கொள்கை, மொழி, தனிப்பட்ட நோக்கம் சார்ந்து எடைபோடக் கூடாது.
சுருக்கமாகச் சொன்னால்...
தனக்குப் பிடித்தவர்கள் எழுதுவதே இலக்கியம் என்றும்- பிறயாவும் கழிவுகள் என்றும் கருதும் முன்முடிவுகள் அறமாகாது.
இலக்கியம் மனங்களைப் பண்படுத்தும் என்கிறார்கள். மெத்த இலக்கியம் படித்த பலரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது... அது கேள்விக்குறியாகி விடுகிறது.



No comments:

Post a Comment