பார்க்க
முடியாத தெய்வத்தை...
--கோ.
மன்றவாணன்—
பழைய
திரைப்படங்களில் பார்க்கலாம். மருத்துவர்கள் கூரைமுகடு வைத்த தோலாலான தம் கைப்பைகளுடன்
நோயாளிகளின் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதை. அந்தப் படங்களைக் கவனித்துப் பார்த்தால்
அந்த நோயாளி வீட்டினர் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
தொலைதூரக்
கிராமங்களில் உள்ள ஏழை வீட்டிற்கும் வந்து மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் இருந்தார்கள்
என்று என் சிறுவயதில் கேள்விபட்டிருக்கிறேன்.
கோவை
மாவட்டம் மதுக்கரையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மிதிவண்டியில் சென்று மருத்துவம்
பார்த்த மருத்துவர் இருந்ததாகக் குரும்பப்பாளையத்தில் வசிக்கும் நாராயணசாமி என்னிடம்
தெரிவித்தார்.
என்
சிறுவயதில் ஆஸ்துமா என்ற மூச்சிரைப்பு வந்து அவதிபட்டிருக்கிறேன். என்னைவிட என் அம்மாதான்
என் வேதனையைப் பார்த்து அதிகம் அவதிபட்டிருப்பார்கள். அதை இழுப்பு என்றும் இசிவு என்றும்
என் அம்மா சொல்வார்கள். பொதுவாக அது இரவில்தான் வரும். அந்த நேரத்தில் மருந்துக்கடையும்
இருக்காது. பக்கத்தில் மருத்துவர் வீடும் இல்லை. மருத்துவர் வரவும் வாய்ப்பில்லை. மருத்துவமனையும்
அருகில் இல்லை. இருந்தாலும் உடனடியாகச் செல்ல வண்டி வசதியும் இல்லை. பல வீடுகளில் பத்துப்
பாத்திரம் தேய்க்கும் என் தாய்க்குப் பணவசதியும்
இல்லை. யாரோ சொன்னார்கள் என்று வேப்பெண்ணெய்யைக் காய்ச்சி என் உடல் முழுவதும் தேய்ப்பார்கள்.
ஒரு பாலாடை அளவுக்குக் குடிக்கவும் வைப்பார்கள். எதிர்வீட்டுத் திண்ணையில்தான் பொத்தல்
விழுந்த கித்தான் சாக்கு விரித்துப் படுத்திருப்போம். இழுத்துக்கொண்டிருக்கும் என்னையும்-
என் சிரமத்தைப் போக்கத் துடித்துக்கொண்டிருக்கும் என் தாயையும் அக்கம் பக்கத்தினர்
பார்த்துப் பரிதாபப்படுவார்கள். அப்படி அவர்கள் பரிதாபப்படும்போது அவர்கள் நினைவில்
நாம் இருக்கிறோமே என்று ஆறுதல் பெறுவதும் உண்டு. அது எப்படியோ இழுப்பு சரியாகி அடுத்தநாள்
காலையில் பள்ளிக்குச் சென்றுவிடுவேன்.
பள்ளிக்குச்
செல்லும்போது பார்த்திருக்கிறேன். ஒரு வீட்டில் விளம்பரப் பலகை ஒன்றிருக்கும். பரம்பரை
செம்மண்டல வைத்தியசாலை என்று அதில் எழுதப்பட்டிருக்கும். அதன் இடது பக்கத்தில் எலும்பும்
தோலுமாக ஒரு குழந்தைப்படம் வரையப்பட்டிருக்கும். அதைப் பார்க்கும்போது நோஞ்சானாக இருந்த
நான்தான் அது என்று நினைத்துக்கொள்வேன். அதன் வலது பக்கத்தில் ஒரு கொழுகொழு குழந்தைப்படம்
வரையப்பட்டிருக்கும். அந்தக் குழந்தையின் கையில் செம்மண்டல வைத்திய சாலையின் மருந்துப்புட்டி
இருக்கும். ஆகப் பரம்பரை செம்மண்டல வைத்திய சாலையில் மருந்து சாப்பிட்டால் நோய் தீரும்.
நாமும் கொழுகொழு என்று இருக்கலாம் என ஆசைப்பட்டிருக்கிறேன். ஆசை நிறைவேறியதே இல்லை.
இந்தியா
வளர்ந்துவிட்டதாகவே நம் அரசியல் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். அவர்கள் வளர்ந்துவிட்டதால்
இந்தியாவே வளர்ந்துவிட்டதாகக் கருதிக்கொள்கிறார்களோ என்னவோ. ஆகத் தங்கள் வளர்ச்சியே
நாட்டின் வளர்ச்சி என்ற நிலையில்தான் நம் தலைவர்கள் இருக்கிறார்கள்.
இன்னமும்
அருகில் மருத்துவ மனை, பள்ளிக்கூடம் இல்லாத கிராமங்கள் நம் நாட்டில் ஏராளமாக உள்ளன.
சில தூரத்து மலைக்கிராமங்களில் பள்ளிகள் இருந்தாலும் ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை
என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதைக் கண்காணிக்க அவ்வளவு தூரம் எந்த மேலதிகாரியும் அங்கு
வரப்போவதும் இல்லை.
ஏழைகளுக்காக
மட்டும்தான் அரசு மருத்துவ மனைகள் உள்ளன. அங்கு வந்து பாருங்கள். நூற்றுக்கணக்கான நோயாளிகளை
சில நிமிடங்களில் சிகிச்சை அளித்து அந்தப் பெருங்கூட்டத்தைக் கலைத்துவிடுகிறார் ஒரே
மருத்துவர். அப்படியானால் சிகிச்சையின் தரம் எப்படி இருக்கும். அரசு மருத்துவ மனையில்
தரமான சிகிச்சை வழங்குவதாக அதிகாரிகளும் அமைச்சர்களும் சொல்கிறார்கள். அவர்களுக்குச்
சாதாரணமான காய்ச்சல் வந்தாலே தனியார் நடத்தும் மிகப்பெரும் மருத்துவ மனைக்குச் சென்றுதான்
சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். அப்படியானால் அரசு மருத்துவ மனையின் நிலையை அறிந்துகொள்ளலாம்.
உயர்மருத்துவமும்
கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அதுவே நல்லரசாகும். ஆனால் கல்வியும் மருத்துவமும்
கோடிகள் புரளும் தொழிலாக மாறிவிட்டது.
கோடி
ரூபாய் செலவிட்டு மருத்துவம் படித்து வருபவர், அதை மீட்க அனைத்துப் பணவசூல் முயற்சிகளும்
செய்ய வேண்டியதாகிறது என நியாயப்படுத்துகிறார்.... தன் மகனை மருத்துவம் படிக்க வைத்துக்கொண்டிருக்கும்
ஒரு தந்தை.
இப்போதெல்லாம்
எந்தத் திரைப்படத்திலும் மருத்துவர்கள் நோயாளிகள் வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிப்பதாகக்
கனவுக் காட்சியில்கூடக் காட்டப்படுவதில்லை.
மருத்துவத்துறை
மிகவும் வளர்ந்துவிட்டது. மருத்துவ உபகரணங்கள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் நோயாளிகள்
வீட்டுக்குக் கொண்டுபோய் சிகிச்சை செய்ய முடியாது என்று சொல்லக்கூடும். ஆனால் மிகு
அவசரத்துக்காகவாவது அல்லது முதலுதவி முயற்சியாகவாவது மருத்துவர்கள் நோயாளியின் வீட்டுக்கு
வந்தால் என்ன?
என்னதான்
முடியாமல் இருந்தாலும் எந்த மருத்துவரும் நம் வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிப்பதில்லை.
அப்படிச் செய்தால் அது டாக்டரின் கம்பீரம் போய்விடுமாம். மரியாதை இருக்காதாம்.
என்
அண்ணன் ஜவஹர் மிகவும் சுறுசுறுப்பானவர். நோயென்று டாக்டரிடம் சென்றவரில்லை. அவருக்கு
ஒருநாள் இரவு முடியாமல் போய்விட்டது. பேச்சு, நினைவு இல்லாமல் போய்விட்டது. அவருடைய
மகளும் மனைவியும் உடனிருந்தனர். அவர் வாழ்ந்த தெருவில் சுமார் 20 மருத்துவ மனைகள் உள்ளன.
அந்தத் தெருவே டாக்டர்கள் தெரு என்றாகிவிட்டது. என் அண்ணன் வீட்டுக்கு எதிரிலேயே ஒரு பெரிய புகழ்வாய்ந்த மருத்துவமனை உள்ளது. என் அண்ணன்
மகள் ரம்யா அந்த மருத்துவ மனைக்கு ஓடிச் சென்று எதிர்வீட்டில் என் அப்பா பேச்சுமூச்சு
இல்லாமல் இருக்கிறார். சற்று வந்து பாருங்கள் என்று மருத்துவரைக் கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.
மருத்துவரைத் தெய்வம் என்று கருதுகிறோம். ஆனால்
அந்தக் கருணை தெய்வம் வரமுடியாது என்று மென்குரலில் பதில் சொன்னது. “ஒரு நர்சையாவது
அனுப்பி என்னன்னு பார்க்கச் சொல்லுங்க” என்று மன்றாடி இருக்கிறார். நர்சையும் அனுப்ப
முடியாது. வேண்டுமானா பேஷண்ட்ட நீங்க அழைச்சிட்டு வாங்க” என்றார் நவீன மருத்துவர்.
அம்மாவும் மகளும் எப்படித் தூக்கி வரமுடியும். முடிவில் அந்த இரவில் என் அண்ணன் டாக்டரிடம்
செல்லாமலேயே இறந்துவிட்டார். ஆக எதிர்வீட்டுக்கே கூட அவசர அவசியத்துக்கு ஒரு மருத்துவர்
வந்து எட்டிப் பார்க்கவில்லை.
இதுதான்
இன்றைய மருத்துவர்களின் எதார்த்த நிலை. அங்கொன்றும் இங்கொன்றுமாக உதவும் மனப்பான்மையில்
நற்குணம் நிறைந்த தரமான மருத்துவர்கள் இருக்கிறார்கள்தாம்.
இந்நிலையில்
என்னால் நம்ப முடியாத ஒரு செய்தியைப் பார்த்தேன்.
அது கனவா நனவா என்று என்னை நான் கிள்ளிப் பார்த்துக்கொள்ளவில்லை. நல்ல நினைவோடுதான்
இருந்தேன். அந்த அளவுக்கு வியப்பளிக்கும் நற்செய்தி அது.
ஒடிசாவில்
உள்ள மால்கங்காரி பகுதியில் மருத்துவ வசதி இல்லை. அங்குப் போக வர சாலை வசதியும் இல்லை.
அதனால் ஆம்புலன்சும் வர இயலாத நிலை. பிரசவ வலியில் உயிருக்குப் போராடி இருக்கிறாள்
ஓர் இளம்பெண். தகவல் தெரிந்து ஓம்கர் ஹோட்டா மருத்துவமனையைச் சேர்ந்த இளம் மருத்துவர்
ஒருவர் தன் உதவியாளரை அழைத்துக்கொண்டு அந்தக் கிராமத்துக்குப் போய்ப் பிரசவம் பார்த்துள்ளார்.
ஆனால்
பிரசவத்திற்குப் பிறகு
குருதிப் போக்கு
நிற்காததால் தாயையும்
குழந்தையையும் கயிற்று
கட்டிலில் வைத்து
8 கிலோ மீட்டர்
தூரம் தூக்கிச்
சுமந்து சென்று மருத்துவமனையில்
சேர்த்துள்ளார் அந்த மருத்துவர். மருத்துவ மனையில் வைத்துத் தகுந்த
மருத்துவம் கிடைக்கச் செய்துள்ளார். இப்போது
தாயும் சேயும் நலமாக
இருப்பதாக மருத்துவமனை
தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இணையத்தில்
வந்த அந்தச் செய்தியின் ஊடாகவே அந்த மருத்துவர் தாயையும் குழந்தையையும் கயிற்றுக்
கட்டிலில் படுக்க வைத்துத் தூக்கி வரும் காட்சி காணொலியாக இணைக்கப்பட்டிருந்தது.
மேடு பள்ளங்கள்.... முட்கள் கற்கள்... கரடு முரடு நிறைந்த குறுகலான ஒற்றையடிப்
பாதை... சறுக்கிவிடும் ஏற்ற இறக்கங்கள்... குறுக்கிடும் சிற்றாறுகள்... இவற்றைத்
தாண்டி அவர்களை மருத்துவர் சுமந்து ஓடி வருவதைப் பார்க்கும் போது... தெரசாக்கள்
இந்த மருத்துவரைப் போன்ற சிலரின் வடிவில் இருக்கிறார்கள் என்றே தோன்றியது. என்
கணினி வழியாகக் காணொலிக் காட்சியில் தெரிந்த அந்த மருத்துவரைக் கைகூப்பி
வணங்கினேன் என்னையும் அறியாமல் எழுந்து நின்று.
எத்தனையோ
திருக்கோவில்களின் நெடும்படிகளில் ஏறி இறங்கியும் பார்க்க முடியாத தெய்வத்தைப் பார்த்துவிட்டேன்.
-திண்ணை இணைய இதழ் 12-11-2017
-திண்ணை இணைய இதழ் 12-11-2017
No comments:
Post a Comment