இறந்துவிட்டால் என்னவாம்
இன்னொரு பிறவி இருக்கிறதே
என ஆற்றுகிறது
மறுஜென்ம நம்பிக்கை
பிறவா வரம்வேண்டும் எனக் கோவில்
பிரகாரம் சுற்றிவருகிறது
துயர்சூழ் மனது
யாராலும் விடைகாண முடியாதது
கால தேவன்
கணக்கு
ஜோதிடம்
தோற்றுப் போகிறது
நாளைய பொழுது யாரறிவார்?
உன்தோட்டத்தில் அன்றலர்ந்த மலர்
உணர்த்திச் சிரிக்கிறது
“நீ வாழ்வதற்காகத்தான்
இன்றைய பொழுது”
சருகாகி விடுவோம் என நினைத்தால்
எந்த மலர் புன்னகைக்கும்?
மரணத்தை நினைத்து
வாழ்வைத் தொலைப்பவர்கள் பட்டியலில்
இடம்பெற வேண்டாம் உன்பெயர்
வாழும் ஒவ்வொரு நிமிடமும்
நல்லதை விதை
விதை....
மலர்ந்து குலுங்கும்
மறுஜென்ம விருட்சமாகி
காந்தி இறந்தது மெய்தான்
மக்கள் மனங்களில் வாழ்கிறாரே
மறுஜென்மம் ஆகி
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment