ஓலைக்கும் எழுத்தாணிக்கும்
உறவு கூட்டிய வள்ளுவன்
இன்று
தமிழனின் முகவரியை
எழுதிக்கொண்டிருக்கிறான்
கணினியின் அலைவெளியில்
செந்தமிழின்
செவ்விலக்கியங்களைக் காத்து
இரண்டாயிரம் ஆண்டுகளைத் தாண்டி
இணையத்தில் ஒப்படைத்து
ஓய்வெடுக்கிறது
ஓலைச்சுவடி
இலக்கியக் கடலில்
பன்னூறு ஆண்டுகள்
பயணம் செய்த
காகிதக் கப்பல்களும்
தமிழ்ச்செல்வக் குவியலைக்
கொண்டு சேர்த்தன
மின்னூல் துறைமுகத்தில்
எழுத்தாணி
அச்செழுத்து
எழுதுகோல் விடைபெற்றன
கணினி மேடையில்
கைநீட்டி
நாளைய புதுமையும் வரவேற்கிறது
நம் தமிழை
மூப்பறியாதது எதுவெனக் கேட்டேன்
காலக் கிழவன் சொன்ன பதில் :
“கன்னித்தமிழ்”
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment