கிழிந்து தொங்கும்
கால்சட்டைப் பருவத்தில்
புகைகக்கித் தொடர்வண்டி வரும்
அறிவிப்பைத்
தூரத்தில் இருந்தே நான் கேட்டேன்
தண்டவாளத்தில் காது சாய்த்து
மீன்வலையில் சிக்கிய
வெண்சங்கு எடுத்துக் காதுகொடுத்தேன்
கடலூரைத் தாண்டிவந்து
வடவள்ளியில் ஆர்ப்பரித்தது
வங்கக்கடல்
ஆலமரம் தாண்டிவரும்
அவளின் சைக்கிள் மணியோசைத் தன்னைக்
காதில் கேட்டேன்
காதல் கேட்டேன்
அரச மரத்தடியில் காத்திருந்து
தூக்கிவந்த பாரத்தைச்
சுமைதாங்கியில் சாய்த்ததுபோல்
இளைப்பாறியது மனம்,
தூரத்தில் இருக்கும்
மாதா கோயில்
மணியோசை சங்கீதத்தில்!
மலையின்
அடிவாரத்தில் நின்று
திருக்குறள் சொன்னேன்
உச்சிமலை
ஒப்பித்தது திருக்குறளை!
குளிர் இரவில்
குடிலுக்குள் படுத்திருந்தேன்
பலஇசை மேதைகளைப் பின்னுக்குத் தள்ளித்
தூரத்தில் கேட்டது
தோப்புக் கிளிகளின்
தொடர்இசை
குழிவிழுந்த
கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த
ஏழை உழவனைத் தாலாட்டியது...
தென்றலில் நடமிடும்
தென்னங்கீற்றுகளின் ஓசை
இப்போதெல்லாம்
நித்தமும் ஒரேகனவு
நேர்நிற்குது ;
அதில்-
ஊழல் இல்லாத
ஓர் இந்தியாவை உருவாக்கத்
தூய தலைவனின் காலடிச் சத்தம்
தூரத்தில் கேட்குது...
-கோ. மன்றவாணன்