விழுதாயிரம் விட்ட
கவிப்பூமரம்
நீதான்
உன் கவியில்
அமுதள்ளி உண்டதால்
புதுஉயிர் மலர்ந்தது எமக்கு
ஆகாய எல்லையை
அறிவியல் அறியலாம்
உன்
கவிதை எல்லையைக்
காண முடியவில்லை
படிக்கப் படிக்க
விரிந்துகொண்டே செல்கிறதே.....
சுட்டுவிரல் நீட்டி
நீ சொன்ன அரசியல்
கவிதைகள்
கருசுமந்து காத்துள்ளன
புதுதேசம் படைக்க!
எல்லா மதங்களும்
எப்படி ஒற்றுமையாக உள்ளன
உன்னை மட்டும்
ஏற்றுக்கொள்வதில்!
உன்
வெண்ணிறத் தாடியொழுங்கில்
மரபுக்கவிதையின் இலக்கணம் கற்பித்தாய்
உன்
விழிப்பார்வையில்
புதுக்கவியின் நுட்பங்களைப் படரவிட்டாய்
பனிநீரில் நனைந்த
ரோஜாவுக்கு இப்போதும் ஏக்கம் இருக்கிறது
ரகுமான் கவிதையின்
கவர்ச்சியை வெல்ல வேண்டுமென்று
கண்ணீரில் நனைந்த
தமிழ்த்தாய்க்கும் ஏக்கம் இருக்கிறது :
அப்துல் ரகுமானைப் போல்
இன்னொரு கவிஞனைக் காண
எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்
என்று!
கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment