Monday, 19 June 2017

நானே... நானே...














எப்படி முயன்றாலும்
புரியவே கூடாதென்று
அகராதிச் சொற்களைக் கலைத்துப்போட்டு
அடுக்கினேன்
நவீன கவியுலகை மிதித்து மேலேறிய
அதிநவீன கவிதை இதுவென்றனர்

மனச்சிதைவு கவிதையைப் படித்துப்
புரிந்ததுபோல் நடித்தேன்
தரநிர்ணய முத்திரை பதித்த
ரசிகன் என்றனர்

போதையில் மனம் சாக்கடையில் விழுந்து
பாரதி
கவிஞனே இல்லை என்றேன்
செவ்விலக்கிய ஏடுகளில் பேட்டி எடுத்துக்
கொண்டாடினர் என்னை

சமஸ்கிருதத்தில் இருந்து
குறளை மொழிபெயர்த்தவர்
வள்ளுவர் என்றேன்
தமிழாய்வுச் செம்மல் என விருது வழங்கித்
தங்கப்பட்டயம் தந்தனர்

சிலரை வாங்கி
விற்காத என் கவிநூலைப்
பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் சேர்த்தேன்
கல்வித்தரம் உயர்ந்ததாய்த்
துணைவேந்தர்கள் சொன்னார்கள்

தேவநாகரி வரிவடிவில்
தமிழெழுத வேண்டும் என்று
கோரிக்கை வைத்தேன்
பத்மபூஷன் விருதுக்குப்
பரிந்துரைத்திருக்கிறார்கள்

தலைமுழுக்க
விருதுகள் நிரப்பி
வீடு திரும்பினேன்
தலைதூக்கி என்னைப் பார்த்த நாய்
திரும்பிப் படுத்துக்கொண்டது

கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment