நேற்றிருந்த
நீல வானம்
மிரண்டு மறைந்ததுவோ
மேகத்திரள் கண்டு!
இசைத்தாளம் கேட்பதெப்போ என
எட்டிப் பார்த்துவிட்டுப்
போகிறாள் மின்னல்
மின்னலை ஏமாற்றி
மேகக் கலைஞனின்
மிருதங்க வாசிப்பு
இடியென!
மேக தாளம் கேட்டு
உருகி வழிந்து ஓடுகிறாள்
பூமழை!
மேகம் போடும் சந்தத்துக்குப்
பாட்டெழுதிச் செல்கிறது காற்று ;
தலையசைத்து ரசிக்கிறது மரம்!
தூரத்து மலையில் மயிலொன்று
தோகை மலர்த்தி ஆடுகிறது
வானக் கலைநிகழ்ச்சியைப் பார்த்து மகிழ
வெட்ட வெளியில் நிற்கிறாள் என்மகள்
குடையைத் தூக்கி எறிந்துவிட்டு!
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment